ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

ஆளுநரும், முன்னுக்குப் பின் முரணான செய்திகளும்!

சுசிலா

Oct 13, 2018

Siragu Banwarilal purohit1

கடந்தவாரம் 6-ந்தேதி, நடைபெற்ற உயர்கல்வி கருத்தரங்கம் ஒன்றில், மாண்புமிகு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்கள், உரையாற்றியபோது, “அதிமுக ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறிதான் துணை வேந்தர்களுக்கான நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன” என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இந்த உரைக்குப்பிறகு, தமிழ்நாட்டின் பல அரசியல் தலைவர்கள் தங்கள் சந்தேகங்களை எழுப்பினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களும், இதனை தெளிவாக வெளிக்கொண்டுவர வேண்டும். ஆளும் அதிமுக அரசு இவ்விசயத்தில், பெருமளவில் ஊழல் புரிந்திருக்கிறது. ஆளுநரே குற்றம் சாட்டுமளவிற்கு உள்ள இந்த ஊழலை மக்கள் மத்தியில் என்ன நடந்தது என்ற உண்மையை சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அது மட்டுமல்லாமல், ஆளுநர் உரையின், ஒரு பகுதியில், ‘கோடிக்கணக்கான ரூபாய் கைமாறி, துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டதினால்தான், நியமன முறையில், நான் சில மாறுதல்கள் கொண்டுவர முடிவு செய்தேன்’ என்றும் கூறியிருந்தார். இச்செய்தி, அனைத்து ஊடகங்களிலும், வெளிவந்தது. இதனை அப்படியே விட்டுவிட கூடியளவிற்கான விசயமல்லவே. ஆதலால், பல தலைவர்கள் இதைப்பற்றி பேச ஆரம்பித்தார்கள். குற்றம் சாட்டியவர் யாரோ, ஒரு சாமானிய மனிதன் அல்ல. ஒரு மாநிலத்தின் ஆளுநர், தான் பேசியவற்றிற்கு தார்மிக பொறுப்பேற்று, அதற்கு பதில் தந்திருக்க வேண்டும். மக்களுக்கு விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவரோ, அதன்பிறகு எதுவுமே பேசவில்லை. தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என அனைவரும் இதைப்பற்றி கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். இதற்கிடையில், முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ஆளுநரை சந்தித்தார். அந்த சந்திப்புப்பற்றி எதுவும் வெளிவரவில்லை. அதன்பிறகு டெல்லி சென்று, பிரதமர், திரு. மோடி அவர்களையும் சந்தித்துவிட்டு வந்தார். அதன்பிறகு, ஆளுநரின் பதில் முற்றிலும் வேறாக இருக்கிறது. தான் சொன்னதையே மறுத்து பேசியுள்ளார். அதாவது, ‘நான் தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்லவில்லை. கல்வியாளர்கள் என்னிடம் சொன்னதைத்தான் சொன்னேன்.’ என்கிறார்.

Siragu Banwarilal purohit2

எதற்கு இந்த மாற்று பதில், இது மழுப்பலாகத்தானே தோன்றுகிறது. ஊழல் காரணாமாகத் தான், நானே சில மாறுதல்கள் செய்தேன் என்று சொல்லிவிட்டு, இப்போது, நானாக சொல்லவில்லை. கல்வியாளர்கள் சொன்னதைத்தான் சொன்னேன் என்று எதற்கு ஊழலை மறைக்க வேண்டும், ஊழல் ஆட்சிக்கு துணை போக வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஒலிக்காதா? இந்நாட்டில் எதுவுமே வெளிப்படையாக இல்லையே.! அனைத்திலும் ஊழல் ஆட்சி என்றுதான் இந்த அதிமுக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அதிலும், இந்த குறிப்பிட்ட நியமனங்கள் அதிகளவில், பணம் பெற்றுக்கொண்டு செய்யப்பட்டிருக்கின்றன என்பது தான் சில மாதங்களுக்கு முன்பே தெரிய வந்ததே. அப்படியிருக்கும்போது, இந்த ஆட்சியைக் காப்பற்ற எடுக்கும் முயற்சியாக தானே இருக்கிறது, ஆளுநரின் இந்த மாற்று பதிலும், பின்வாங்கலும்.!

ஒரு பேட்டியோ, அல்லது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலோ இவ்வாறு சொல்லவில்லை. கல்வி தொடர்பான, ஒரு கருத்தரங்க மேடையில் சொல்லியிருக்கிறார். ஆளும் கட்சியினரின் ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறார். அதன்பிறகு, நேர்மையாக செயல்பட வேண்டுமென்றால், செய்யவேண்டிய நடவடிக்கைகளை, ஊழலை கண்டுபிடிக்க, நேர்மையற்ற முறைகேடுகளை களைய துரிதமாக ஆரம்பித்திருக்க வேண்டுமல்லவா. ஆனால், இதை நான் சொல்லவில்லை, கல்வியாளர்கள் என்னிடம் சொன்னதை சொன்னேன் என்று சொல்லிவிட்டு, ஒன்றும் செய்யாமல், ஒரு ஆளுநரால் இருந்துவிட முடியுமா? அப்படியிருந்தால், ஆளுநர் என்ற கண்ணியமான பதவிக்கு, இழுக்கு என்று அவருக்குத் தெரியாதா? ஊழல் ஆட்சிக்கு துணை போவதுதான் மதிப்புமிக்க ஆளுநரின் பதவிக்கு அணி சேர்க்குமா? இத்தனை கேள்விகளும் நம் மனதில் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.

தற்போது என்னவென்றால், இரு நாட்களுக்கு முன்பு, பத்திரிக்கை சுதந்திரத்தைப் பறிக்கும் விதமாக, ஆளுநரும், அதிமுக அரசும் சேர்ந்து, நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் திரு. கோபால் அவர்களை திடீரென்று, எவ்வித அறிவிப்புமில்லாமல், ஒரு குற்றவாளியை கைது செய்வது போல், விமானநிலையத்தில் கைது செய்கின்றது. அதுவும் 5 மாதங்களுக்கு முன்பு எழுதிய ஒரு கட்டுரைக்கு கைது செய்கிறது. நோட்டீஸ், அவதூறு வழக்கு என்று சட்டத்தில் இருக்கும் எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல், கைது செய்கிறது. எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இதற்கு, இந்த கைதிற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என அவரை, அன்று மாலையே விடுதலை செய்தது நாம் எல்லோரும் அறிந்ததே.

மத்திய அரசும், அது ஆட்டுவிக்கும் ஆளுநரும், அதற்கெல்லாம் தலையாட்டும் மாநில அரசும் தமிழ்நாட்டை, தங்கள் கையிற்குள் கொண்டுவந்துவிட வேண்டுமென்று அதி மும்முரமாக செயல்படுகிறார்கள். இதனை தமிழ்நாட்டு மக்கள் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆளுநரும், முன்னுக்குப் பின் முரணான செய்திகளும்!”

அதிகம் படித்தது