மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆவணப்படுத்தல் பயனும், அதில் தமிழர்களின் சிறப்பும் – பகுதி 1

காசி விசுவநாதன்

Jan 1, 2012

ஆவணப்படுத்தல் என்பது தனி ஒருவர் வாழ்விலும் சரி, ஒரு சமூக அளவிலும் சரி, ஒரு அரசாங்கத்தாலும் சரி, ஒட்டு மொத்த இனத்தின், அடையாளத்தின் எதிர் காலத்தை, உறுதி செய்வது : – ஆவணங்களும், ஆவணப்படுத்தலுமே. அப்படியானால் ஆவணம் என்பது என்ன ? ஆவணப்படுத்தல் என்பது என்ன ?

ஆவணம்என்பது அன்றாட நடைமுறை வாழ்வில் நம்மால் பயன்படுத்தப்படும் மிக எளிமையான கடிதங்கள், குறிப்பேடுகள், கையேட்டுக் குறிப்புகள் மற்றும் நாம் நமது கல்வி குறித்த தரவு மற்றும் தகுதிச்சான்றிதழ்கள், வீட்டு மனை மற்றும் சொத்துக்களின் உரிமைப் பத்திரங்கள் என்பனவாக, நாம் எளிமையாக புரிந்து கொள்ளலாம். இதுவன்றி அரசாங்கம் அன்றாடம் வெளியிடும் குறிப்புகள் அனைத்தும் ஆவணங்களே. மேற்சொன்னவைகளில் நாம் பலவற்றைத் தவிர்க்க இயலாத ஆவணங்களாக பாதுகாக்கின்றோம். இவைகளின் அப்போதைய தேவை நீங்கும் போது, அதனை நாமும் மறந்து விடுகின்றோம். அதன் இன்றியமையாத் தன்மையை உணர பல சமயங்களில் நாம் உயிருடன் கூட இருப்பது இல்லை. அதன் தேவை குறித்து நம் வழித்தோன்றல்கள் தேடும் போது, கிடைக்காமலேயே போய்விடும். இதற்குப் பெரும்பாலும், பொதுவில் சில பல குறிப்புகளும், தரவுகளும் இனி தேவைப்படாது என்று நாமே ஒரு வழக்கமான முடிவிற்கு வந்து விடுகின்றோம்.

ஆவணப்படுத்தல்என்பது விழிப்புணர்வுடன், நாம் நடைமுறையில் பயன்படுத்தும் ஒவ்வொரு சான்றிதழ்கள், தரவுக்குறிப்புகள்,கடிதங்கள், அரசாணைகள், உரிமைப் பத்திரங்கள்,நாம் படித்த புத்தகங்கள்

( கல்வி,கலை மற்றும் இலக்கிய வடிவங்கள் உட்பட ), நாள் தோறும் பயன்படுத்தும் பொருட்களும் கூட, கைவிடப்படாமல் அதன் கால நிலையின் அவசியம் குறித்த அலட்சியம் இல்லாமல், இவைகளை தொகுத்துப் பாதுகாத்தல் என்பதேஆவணப்படுத்தல்.

 

மேற்சொன்னவைகள் எல்லாம் ஒரு சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும்  மிக இன்றியமையா கடமையாகக் குறிப்பிடுகிறேன். இதன் காரணம் குறித்து மிக அவசியமாக, விரிவாக நாம் பொருள் உணர்ந்து கொள்வது, காலத்தின் கட்டாயம். இந்த வகையில் ஆவணப்படுத்தல் என்பது பல தளங்களில்  ( அரசு, மக்கள் இயக்கங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், இலக்கியவாதிகள், அறிவியலார், தொழில்சார் நிறுவனங்கள், தனி ஒருவர், தனி ஒரு குடும்பம் சார்ந்த, என பல தரப்பட்ட அங்கத்தினர்கள் )   இயங்கும் சமூகம், தம் பொறுப்பில் அவைகளை இடைவிடாது, தொய்வில்லாது

அவ்வப்போது தங்களின் தடயங்களை, ஆவணங்களை, நிகழ்வுகளை குறிப்புகளாகவோ அல்லது பொருள் படும் குறியீடுகளாகவோ பாதுகாத்தல் என்பதே ஆவணப்படுத்தல். ஆக, ஆவணப்படுத்தல்என்றசெயல்பாடுஒருசமூகத்தின்தொடர்வினையாகப்பின்பற்றி வருவதாகும். இதில் தொய்வு ஏற்பட்டால்; அது, நாம் நம் எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் நிலைக்குக் கொண்டுவந்து விடும்.

இனிஆவணங்களைஇனம்காண்பது எவ்வாறு என்று பார்ப்போம்.

நம் வீட்டில் மாடத்தில், சாளரத்தின் இடுக்குகளில், பரணில், இருக்கும் எந்த ஒரு அவசியமில்லாக் குறிப்புகளும், பொருட்களுமே எதிர்பாராமல் ஆவணங்களாக மாறும். சான்று : காரைக்குடியை அடுத்த கோட்டையூர் என்ற சிற்றூரில் வாழ்ந்த ரோஜாமுத்தையாஎன்பவர் தன் வாழ் நாள் முழுதும் ஆவணங்களாக அவர் காலத்திலும், அதற்குச் சற்று முந்தைய காலங்களிலும் வெளிவந்த விளம்பர குறிப்புச்சீட்டுகள் ( Bit notices for social events ) வார இதழ்கள், மாத இதழ்கள், இந்திய விடுதலைப்போராட்ட காலங்களில் விடப்பட்ட துண்டறிக்கைகள், அண்டை அயலார், மற்றும் நண்பர்களிடம் பெற்ற புத்தகங்கள், கைவிடப்பட்ட பொருட்கள், அன்றைய நாட்களில் கடல் கடந்த வாணிபம் செய்த தமிழர்களின் தெற்கு ஆசிய நாட்டு ஆவணங்கள் அதன் ஊடாக கிடைக்கப்பெற்ற ஐரோப்பிய இதழ்கள், பயன்படு பொருட்கள் என பாகுபாடின்றி தேடுவதும், அவைகளை காலவரிசைப்படி தானே தொகுத்து பாதுகாத்தும் வந்தார்.

அவர் வாழும் காலங்களிலேயே, பல்கலைக்கழகங்களும் மாணவர்களும் அவரது சிற்றூர் நோக்கி தங்களது ஆய்விற்குப் படையெடுத்தனர். அவர் வைத்திருந்த பல கைவிடப்பட்ட துண்டறிக்கைகள்,விளம்பர குறிப்புச்சீட்டுகள் போன்றவையும் கூட ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. அது மட்டும் அல்ல, அது வெள்ளை அரசாட்சியின் இரண்டு நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலத்தின் கண்ணாடியாக இருந்தது, இருந்து வருகிறது. அவர் வாழ் நாள் முழுவதும் தமது வீட்டில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக போற்றி செப்பமிட்டு பாதுகாத்து வந்ததன் விளைவு, ஒரு  சமுதாயத்திற்கு மட்டுமல்ல, ஒரு கால நிலையினை ஆராய வேண்டி உலகில் பல கண்டங்களில் இருந்தும் சென்னை வந்து ” ரோஜா முத்தையா ”      ( சென்னை தரமணி ) ஆய்வு நிலையத்தில் தங்களது நாட்டின் கடந்த காலத்தை தெரிந்து கொள்கின்றனர். அதுமட்டுமல்ல எதிர் காலத்தையும் உறுதி செய்து கொள்கின்றனர்.

இப்போது நாம் மேலே கண்ட சான்றுகளில், இரண்டு செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.

  1. “தனி ஒருவர் திரட்டு” என்பது குடும்ப ஆவணங்கள் என்ற நிலை கடந்து, ஒரு காலத்தின் பதிவுகளை ஒரு அரசு செய்ய வேண்டிய ஒன்றினை தனி ஒருவரே செய்து, அதுவே பின் நாளில் தேசிய ஆவணமாக உருப்பெறுவது. (National Archive).
  2. கழிக்கப்பட்ட துண்டறிக்கைகள் உட்பட, பயன்படுபொருட்களாக இருந்து கைவிடப்பட்டவை (பேனா, நாட்குறிப்பேடு, மூக்குகண்ணாடி, பீங்கான் குவளைகள், எழுதும் மைக் குடுவைகள், மரப்பாவைகள் ) என்று சமூகத்தில் விரும்பப்படாதவைகள் எல்லாம், பிற்கால ஆவணங்களாக மாறும் என்பதும், அது காலத்தின் பதிவுகளாய் நின்று பல விளக்கங்கள் தரும் என்பதே.
  3. இவற்றை நாம் ஏன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றால் ? இவையெல்லாம் ஒரு குடும்ப ஆவணமாக இருக்க முழுதும் தகுதியானவை. அதாவது நாம் நமது குடும்பத்தில் உள்ள பல ஆவணங்கள், வீட்டு உரிமைப்பத்திரம் உட்பட பாதுகாக்கப்படவேண்டியவை. அவற்றில் நம் குடும்ப உறுப்பினர்களின் கல்விச்சான்றிதழ்கள், கடிதங்கள், நாட்குறிப்பேடுகள், நினைவுக்குறிப்பேடுகள் (Auto Graph ) ஆகியவையும் ஆவணங்களே.

இவற்றைக் கூடவா நாம் பாதுகாக்க வேண்டும் என்றால் ? ஆம், வேண்டும் என்பதே பதில். ஆவணங்கள் என்பது ஊமையாக இருந்து, உண்மையை தக்க சமயத்தில் விளக்கம் கூறி நிற்கும். தனி ஒருவரின் குடும்ப ஆவணம், தேசிய ஆவணத்திற்கு ஒப்பானதே. இதனை நாம் உணர்ந்து விட்டால், பின் அந்த சமூகம் ஒரு சீரிய நெறியுடன் முன்னோக்கிச்செல்லும்.

ஆவணப்படுத்தலைநம்குழந்தைகளுக்கு கற்பிப்போம் அஞ்சல் தலைகள் சேகரிப்பதன் வாயிலாக வழக்கப்படுத்தலாம். அதுதான் ஒரு குடிமகனின் முதல் ஆவணப்படுத்தல் குறித்த விழிப்புணர்வாகும். இத்துடன், நாம் நமது குழந்தைகளுக்கு நமது பண்பாட்டின் தொடர் நிகழ்வினை அவர்கள் வயது முதிர்ச்சிக்கு ஏற்ப செவி வழியாக கூறிவரும் போது, நமது கடந்த மற்றும் எதிர்கால தன்னுணர்வினை செப்பம் செய்யலாம். அதுவே ஒரு ஆவணப்படுத்தல் தான். இந்த விழிப்புத்தன்மை பின்னர் தன் குடும்பத்து தகவல்களில் இருந்து ஒரு இனத்தின், நாட்டின் பதிவுகளை பாதுகாக்கும் சீரிய கடமைக்கு இட்டுச்செல்லும். மேலும் ஒரு சான்று.

இருபதாம் நூற்றாண்டு தொடக்க காலத்தில் ருஷ்ய நாட்டின் சமூக அரசியல் போராட்டங்கள் நடைபெற்றன. அதன் தொடர் நிகழ்வாக சோவியத் புரட்சி நிகழ்ந்து அதன் தலைமைப் பொறுப்பிற்கு வந்த    திரு. விளாடிமிர் உல்யானவ் லெனின், தமது நாட்டு மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். அது ” மக்கள் யாவரும் தங்களிடம் உள்ள சிறு சிறு குறிப்புகள், கைப்பிரதிகள், கையேடுகள், கடிதங்கள், எழுத்துக்குறிப்புகள் அனைத்தையும் சேகரித்துத் தாருங்கள், நாம் நமது போராட்டங்களை ஆவணப்படுத்தி காலவரிசையுடன் பகுத்து, தொகுத்து பின்னர் வரும் நம் வழித்தோன்றல்களுக்கு வைக்க வேண்டும். அதுவே நாம் அவர்களுக்கு நமது உழைப்பின் வலியினை உணரவும், அவர்களின் எதிர்காலத்திற்கு உந்துதலாகவும் இருக்கச் செய்யும். இது காலத்தால் செய்ய வேண்டிய அவசியம் “. என்றார்.

தேசியஆவணங்கள் : தேசிய ஆவணங்கள் என்பது ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தன் கடந்த கால,நிகழ் கால அரசு நடவடிக்கைகள், நிகழ்வுகள், நீதிமன்ற ஆவணத்தொகுப்புகள், சட்ட மன்ற, பாராளுமன்ற குறிப்புகள், அவை நடவடிக்கைகள், தொல்லியல் முனைப்பு வாய்ந்த, தொடர்புடைய குறிப்புகள், அரசியல் தலைவர்கள், கவிஞர்கள் மற்றும் பல்துறை அறிஞர்கள் ஆகியவர்களின் எழுத்துக்குறிப்புகள் ஆகியவற்றைத் தொகுத்து பாதுகாத்தலே, ஒரு தேசிய ஆவணக்காப்பகமாகும் ( National Archive ). இது அரசாங்கத்தால் நிலையான, ஒரு குழு அமைத்து செயல் படுத்தப்படும். அந்த நாட்டின் குடிமக்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், ஆய்வு மேற்கொள்வோர் இங்கே தங்களை முறையாகப் பதிவு செய்து தங்களுக்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்ளலாம். குடியுரிமை இல்லாத பிற நாட்டினரும் தங்கள் நாடுகளின் பரிந்துரைக் கடிதத்துடன் முறையாகப் பதிவு செய்து ஆய்வுகள் மேற்கொள்ளலாம். இங்கு ஆய்வுகள் மேற்கொண்டவர்களின் புத்தகங்களும் மற்றும் ஏனைய வேளியீடுகளும் கொண்ட ஒரு நூலகமும் செயல்படும். இது தவிர ஆவணங்களைப் பாதுகாக்கும் பணியும் உலகளாவிய தரப்படி பாதுகாக்கும் பிரிவு ஒன்றும் இயங்கி வரும். பொதுவாக ஆவணக் காப்பகங்கள் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பங்குபெற முடியாது. அது தேவையும் இல்லை. இது ஆய்வுகள் செய்பவர்களுக்கு மட்டுமே உதவும்.

அருங்காட்சியகங்கள் : பொதுமக்கள் எளிதில் கண்டு பயன்பெரும் வகையில் அமையப்பெற்றது அருங்காட்சியகங்களே. இதுவே எளிய மக்கள்  புரிந்து கொள்ளும் வகையில் தொல்லியல் சான்றுகள், உருவச்சிலைகள், ஓவியங்கள், பழங்கால பயன்படு பொருட்கள், காலம் தோறும் அகழ்வாய்வில் வெளிப்படும் கற்படிவங்கள் ஆகியவற்றை அழகிய கண்ணாடி காட்சிப் பேழைகளில் வைத்து, பாமரரும் உணரும் வண்ணம் நமது தொன்மச் சான்றுகளை பொதுமக்களுக்கு அறியத் தருவார்கள். அருங்காட்சியகங்கள், ஒரு நாட்டில் தலைமையாக ஒரு இடத்திலும், மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் உள்ள பெரு நகரங்களில் சிறிய அளவிலும் அமைப்பார்கள். ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பு தொல்லியல் சான்றுகள் அங்கு வைக்கப்பட்டிருக்கும். மிக உன்னத தொல்லியல் வடிவங்கள் தலைமை அருங்காட்சியகம் சென்று விட்டால் அதனை புகைப்படம் அல்லது, மாதிரி வடிவம் எடுத்து குறிப்புகளுடன் அந்த மாவட்ட காட்சியகத்தில் வைப்பார்கள். குழந்தைகளை ஒவ்வொரு அருங்காட்சியகங்களுக்கும் அழைத்துச்செல்வது உன்னதமான கடமை. அவர்களுக்கு இளம் வயதிலேயே தொன்மை வரலாறுகளும், தொல்லியல் வடிவங்களையும், அதனை பாதுகாப்பது குறித்த  விழிப்புணர்வும், பிற்கால தலைமுறையினர் வாழையடி வாழையாக பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வழி வகை செய்யும்.

 

தொடரும்


காசி விசுவநாதன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

7 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “ஆவணப்படுத்தல் பயனும், அதில் தமிழர்களின் சிறப்பும் – பகுதி 1”
  1. ramanathan says:

    அன்பு காசிக்கு,
    அருமையான கட்டுரை.
    ராமனாதன்

  2. இளங்குமரன் says:

    நான்கூட பழைய பேருந்து சீட்டுகளையும் துண்டறிக்கைகளையும் சேமித்து வைத்துள்ளேன்…

    நன்றி

  3. rajkumar says:

    அருமையான பதிவு. ஆவணப்படுத்தல் என்பது தேவையான ஒன்று. யார் யார் பேச்சையோ கேட்டு தான் நம் ஓலை சுவடிகளை தீயில் போட்டு பொசுக்கினோம். அது போன்ற தவறை இனிமேல் செய்யாமல் நம்மையும் நம் ஆவணங்களையும் பாதுகாப்போம். நம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து கொடுப்போம்.

  4. thiagarajan says:

    மிக எளிமையான நடையில் பாராட்ட,கடைபிடிக்க வேண்டிய பதிவு.

  5. Rajkumar Palaniswamy says:

    அருமையான கட்டுரை தந்தமைக்கு என் நன்றிகள் காசி

  6. prabu says:

    அருமையான பதிவு.

  7. Pathumuthu says:

    ஆவணபடுத்துதல் என்பது எல்லோரும் வாழ்க்கையிலே கடைபிடிக்க வேண்டிய ஒன்று. நம் வழக்காடுமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும், அரசு அலுவலகங்களிலும், பதிவாளர் அலுவலகங்களிலும் கட்டாயம் கடைபிடிக்கபட வேண்டிய ஒன்று.

அதிகம் படித்தது