நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்

தேமொழி

Jul 23, 2022

பழந்தமிழர் ஆவணித் திங்களையே ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தனர்.

முன்னுரை:

சித்திரை ஆண்டின் முதல் மாதமாக இன்றைய வழக்கத்தில் இருப்பது பிற்காலத்தில் நிகழ்ந்த ஒரு மாற்றமாகும். அது வைதீக சமயம் தமிழக மண்ணில் ஆணித்தரமாகக் காலூன்றியதன் காரணமாக ஏற்பட்ட ஆரியப் பண்பாட்டுத் தாக்கத்தின் விளைவு. அதனால் வியாழவட்ட 60 ஆண்டுகள் ‘சுழற்சி முறைக் கணக்கிடல்’ அடிப்படையில், வடமொழி ஆண்டுப் பெயர்கள் கொண்ட காலக்கணிப்பு முறை அரசு ஆதரவுடன் தமிழகத்தில் நடைமுறைக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டது எனலாம். வைதீகத்தின் தாக்கம் கொண்டுவந்த விளைவே சித்திரைத் திங்கள் புத்தாண்டு வழக்கமாகும்.

தமிழக அரசின் முயற்சியாக, 60 ஆண்டு சுழற்சி முறையைக் கைவிட்டு, திருவள்ளுவர் பிறப்பைத் தொடக்கமாகக் கணக்கில் கொண்ட தொடர் ‘வளர்ச்சி முறைக் கணக்கிடலில்’ தைத்திங்கள் புத்தாண்டின் தொடக்கமாக 1971ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதை ஏற்காத பிரிவினர் அதை மறுதலித்தார்கள். அதுமட்டுமின்றித் தொடர்ந்து வடமொழி பெயர் கொண்ட ஆண்டுகளின் பெயர்களை வலிந்து தமிழ்ப்படுத்திப் புழக்கத்திற்கு விட்டார்கள். இருப்பினும் தமிழ்ப் புத்தாண்டு இது என்று தொடர்ந்து ஒரு வடமொழி ஆண்டுப் பெயரை அறிவிக்கும் அவல நிலை இன்றும் தொடர்ந்தே வருகிறது.

புத்தாண்டு குறித்த சர்ச்சைகள்:

ஒவ்வொரு தைத்திங்களும் பொங்கல் பொங்குவதுடன் பொங்கல் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக ‘எது தமிழ்ப் புத்தாண்டு?’ என்ற பட்டிமன்றம் போன்ற விவாதங்களும் வழக்கத்திற்கு வந்தது. அது அத்துடன் நிற்காது மீண்டும் சித்திரைத் திங்கள் தொடக்கத்தில் மீண்டும் ஒரு பாட்டம் விவாதங்கள் தொடங்கிவிடும். ஆனால் இரு பிரிவினரிடமுமே ‘தைதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்’ என்பதற்கோ, அல்லது ‘சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்’ என்பதற்கோ உறுதியான சான்றுகள் எதுவுமே இல்லை. இந்த மாதம்தான் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்று உறுதியாக அறுதியிட்டு நேரடியாகக் கூறாத கல்வெட்டுப் பதிவுகள், இலக்கிய வரிகள் போன்றவற்றை எல்லாம் இயன்றவரை மேற்கோள் கொடுத்து வாதிடுவார்கள்.

சொல்லப் போனால் தமிழ்த் திங்களின் கால அளவீட்டு முறையை இன்று வழக்கத்தில் பின்பற்றுவோர் பொதுமக்களில் எவரும் இல்லை என்பதுதான் உண்மை. அது இறைவழிபாட்டுடன் தொடர்புடையதாக, அதாவது வைதீகத்துடன் தொடர்புடையதாகக் கோவில்களில் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. இன்று என்ன தமிழ் மாதம் அல்லது நாள் என்று ஒரு நூறு பேரிடம் கேள்வி கேட்டால் ஒரு 3 விழுக்காட்டினர் கூட சரியான விடை அளிக்க இயலாத நிலைதான் இன்றைய நடைமுறை. இருப்பினும் இது ஒரு தன்மானப் பிரச்சனையாகத் தமிழர் இடையே தொடர்கிறது. இந்த விவாதக் களத்தில் இந்த இருபிரிவினர் மட்டுமல்ல, மற்றொரு பிரிவினரும் உள்ளனர். அவர்கள் ஆவணிதான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம், தொல்காப்பியம் மூலம் அவ்வாறு பொருள் கொள்ள இயலும் என்று கூறும் பிரிவினர். இவர்கள் பலநாள் படுக்கையில் இருக்கும் நோயாளி போல வலுவிழந்த நிலையில் இடையில் வந்து, நலிவுற்ற குரலில் முடிந்தவரை முனகிப் பார்த்துவிட்டு தங்கள் வாதங்கள் எடுபடாது என்று காணாமல் போய்விடுவார்கள். ஆனால், தை, சித்திரை போன்ற மற்ற பிரிவினருக்கு தங்கள் கருத்து அடிப்படைக்கு வலுவான சான்றுகள் ஏதும் இல்லாவிடினும் வாதக் களமிறங்கி வன்மையாக ஆடுவார்கள். எத்திரணியைப் பலமாகச் சொற்களால் தாக்குவார்கள்.

இன்றைய வழக்காறுகள், இலக்கண, இலக்கிய, நிகண்டுகள் மற்றும் கல்வெட்டுகள் தரும் காலக்குறிப்புகள்:

ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்குச் சான்றுகளாக அமையும் இன்றைய 1. வழக்காறுகள், 2. இலக்கண, 3. இலக்கிய, 4. நிகண்டுகள் மற்றும் 5. கல்வெட்டுகள் தரும் காலக்குறிப்புகளை அடுத்துக் காணலாம் …

1. கொல்லம் ஆண்டு வழக்காறு:

தமிழரிடம் இருந்து பிரிந்த சென்ற பழந்தமிழ் மலையாள உறவுகள் தங்களுக்கென பொ.ஆ. 825ஆம் ஆண்டு முதல் புதியதாகக் கட்டமைத்துக்கொண்ட ‘கொல்லம் ஆண்டு’ என்ற வளர்ச்சி முறைக் காலக் கணக்கிடல் முறையில் ஆவணியைத் தொடக்கமாகக் கொண்டிருக்கும் வழக்கம் ஒரு சான்று.[1] இவ்வழக்கம் பழந்தமிழர் பண்பாட்டின் எச்சம் எனலாம். கேரளத்தில் ஆகஸ்ட் 17ஆம் நாள் வாக்கில் புத்தாண்டு தொடங்கும்.

2. தொல்காப்பிய நூற்பா:

தொன்மையான தமிழ் நூலான தொல்காப்பியத்தில் அகத்திணை இயலில் ஐவகை நிலங்களுக்குரிய பொழுதுகளை வகுத்துரைக்கும் பொழுது, கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் (தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல்: 6 — 10) என்னும் பெரும் பொழுதுகளை கார் காலத்தினைத் தொடக்கமாகக் கொண்டு குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர்.

siragu Tholkappiyar

இத் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியரும் (இவரது காலம் பொ.ஆ.14-ஆம் நூற்றாண்டு) இதன் பொருளைத் தெளிவாக விளக்கிக் கீழ்க்காணும் உரை தந்துள்ளார்.

“காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டுமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார்.”

சிங்கவோரை = ஆவணித்திங்கள், கற்கடகவோரை = ஆடித் திங்கள்; அதாவது ஆவணி முதலாக ஆடி இறுதியாக உள்ள காலம் ஓர் ஆண்டாம், ஆதலினால் அவற்றை இரண்டிரண்டு மாதங்கள் கொண்ட கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறுவகைப் பருவங்கள் கொண்டதாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது[2].

3. சிலப்பதிகாரம்:

சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 — 25),  பகுதியில் இளங்கோவடிகள் கார் முதலிய ஆறு வகைப் பருவங்களையும் முறையே வரிசைப்படுத்தியே எழுதியுள்ளார். மதுரை மாநகரத்து மகளிர் இளநிலா முற்றத்தில் தம் காதலருடன் படுக்கையில் கிடந்து பழைய நினைவுகளில் மனம் செலுத்தினராம். தங்களின் நினைவோட்டத்தில் அப்பெண்கள் கார்காலம், கூதிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் என வரிசையாக ஒவ்வொரு கால நிகழ்வுகளையும் நினைவு கூர்வதாக இளங்கோவடிகள் சொல்லிச் செல்கிறார் [3].

siragu Ellango

‘கார்’ அரசாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும் (96)

குறுங்கண் அடைக்குங் ‘கூதிர்’க்காலையும் (101)

வெண் மழை அரிதில் தோன்றும் ‘அச்சிரக்காலையும்’ (105)

‘பங்குனி’ முயக்கத்துப் ‘பனியரசி’ யாண்டுளன் (112)

‘இன்னிள வேனில்’ யாண்டுளன் கொல் (117)

‘கோடையொடு’ புகுந்து கூடலாண்ட வேனில் வேந்தன்(124)

[அச்சிரக்காலையும்=முன்பனிக் காலமும்; பங்குனி, பனியரசு =பின்பனிக் காலமும்]

இக்கால வரிசை தொல்காப்பியம் குறிப்பிடும் அதே வரிசையில் அமைவதைக் காணலாம்.

4. நிகண்டுகள்:

I.  திவாகர நிகண்டு:

ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு மற்றொரு உறுதியாக, எழுத்தில் பதியப்பட்ட சான்றைச் சேந்தன் திவாகரம் என்னும் திவாகர நிகண்டு கொடுக்கிறது [4].

     அறு வகைப் பருவமாவன

     காரே, கூதிர், முன் பனி, பின் பனி,

     (சீர்) இள வேனில், முது வேனில் (என்று ஆங்கு)

     இரு மூன்று வகைப் பருவம்; (அவை தாம்

     ஆவணி முதலா இரண்டு இரண்டாக

     மேவின திங்கள் எண்ணினர் கொளலே).

     (6 பெயர்கள்)     [சேந்தன் திவாகரம்-தெய்வப் பெயர் தொகுதி-134]

siragu Divakara_Nikandu

இருதிங்கள் சேர்ந்த காலப்பகுதி பருவம் எனப்படும். ஆவணி தொடங்கி இரண்டிரண்டு மாதங்களாக முறையே கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என ஆறு பருவங்களைக் கொண்டது ஓர் ஆண்டு என்பதாகவும், கார் பருவத்தை முதன்மையாக வைத்து அது தொடங்கும் ஆவணி முதலாக வைத்துப் பிற மாதங்களை எண்ணியுள்ளனர் என்பதை இப்பாடல் கூறுகிறது.

சேந்தன் திவாகரம் என்னும் திவாகர நிகண்டும் அதன் காலமும்: சேந்தன் திவாகரம் நிகண்டு என்றால் என்ன? அது எந்தக் காலத்து நூல்? யார் எழுதியது? போன்ற விவரங்கள் அறிந்திருப்பவர் எண்ணிக்கை சராசரி தமிழரில் குறைவே. சேந்தன் திவாகரம் என்பது ஒரு நிகண்டு, இது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல்.  அதாவது இக்கால வழக்கில் அரிய சொற்களின் பொருளை அறிய உதவும் அகராதி நூல் என்பதற்கு நிகரானது. ஒரு சொல்லுக்கு நிகரான சொற்களைக் கொடுப்பதால் நிகண்டு என்று அழைக்கப்பட்டது என்றும் பொருள் தரப்படுகிறது, நிகண்டு ஒரு வடமொழிச் சொல் என்றும் கூறுவாருண்டு. நிகண்டு என்ற சொல் பிற்காலச் சொல், முன்னர் இத்தகைய பொருள் விளக்கம் தரும் நூல்கள் ‘உரிச்சொற் பனுவல்’ என்று தொல்காப்பியர் அடியொற்றி சொற்களுக்கு விளக்கம் தரும் நூல்களாக அறியப்பட்டன. நிகண்டு என்னும் நூல்வகைக்கு முன்னோடி போல் அமைந்தது அருஞ்சொற்களுக்கு பொருள்கூறும் தொல்காப்பியமே. நிகண்டுகளை மனனம் செய்து முற்றிலும் அறிந்திருப்பது முற்காலத் தமிழ்க் கற்றலுக்கும் மொழிப்புலமை பெறுவதற்கும் அடிப்படையாக இருந்தது[5].

சேந்தன் திவாகரம், நாகப்பட்டினம் அருகே உள்ள அம்பல் என்னும் சிற்றூரில் வாழ்ந்த சேந்தன் என்ற சிற்றரசன் அல்லது வள்ளலின் ஆதரவில் திவாகரன் என்ற சமண முனிவரால் தொகுக்கப்பட்டதற்குச் சேந்தன் திவாகரம் நூலில் சான்றுகள் உள்ளன.[6] திவாகர முனிவரை சைவர் என்று குறிப்பிடுவதைப் பிழை என்று பேராசிரியர் வையாபுரி பிள்ளை தனது ‘தமிழிலக்கிய சரித்திரத்தில் காவிய காலம்’ என்ற நூலில் (பக்கம் 164) மறுத்துள்ளார்.[7]

நிகண்டுகளில் பழமையானது திவாகர நிகண்டு. இதன் காலம் ஏழாம் அல்லது எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப் பட்டதாகப் பல ஆய்வாளர்களால் வெவ்வேறுவகையில் கணிக்கப்படுகிறது. இருப்பினும் இதன் காலம் 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.[7] இந்த நிகண்டே முதல் நிகண்டு என்று ஆய்வாளர் பலரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்நூல் ஆதி திவாகரம் என்னும் நூலைத் தழுவி எழுதியதாகக் கருதப்படும் கூற்றுக்குச் சான்று இல்லை என்று மறுக்கப்படுவதுடன், சேந்தன் திவாகரம் நூலின் மற்றொரு பெயரே ஆதி திவாகரம் என்று கூறப்படுகிறது.[8]  திவாகர நிகண்டின் 12 தொகுதிகளில், 2180 நூற்பாக்களால் 9500 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. இதில் தமிழ்ச் சொல்லுக்கு நிகரான பொருள் தரும் பல வடமொழிச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பல நிகண்டுகள் பிற்காலத்தில் வீரமாமுனிவரின் சதுரகராதி வரையும் அதற்குப் பின்னரும் கூட தோன்றியுள்ளன. சேந்தன் திவாகரம் நூலைத் தழுவி இருபதாம் நூற்றாண்டு வரை சுமார் இருபது நிகண்டுகள் வந்திருப்பது தமிழின் சிறப்பாகக் கூறப்படுகிறது.[7]

அவற்றில் குறிப்பிடத்தக்கவை பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு போன்ற நிகண்டுகளாக்கும்.

திவாகர நிகண்டு (திவாகர முனிவர் இயற்றியது) (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு)

பிங்கல நிகண்டு (பிங்கல முனிவர் இயற்றியது)

சூடாமணி நிகண்டு (மண்டல புருடர் இயற்றியது)

முழுமையான ‘சேந்தன் திவாகரம்’ 1923ஆம் ஆண்டில் முதன் முதலில் அச்சுவடிவம் பெற்றது, பின்னர் 1958-ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டது. சேந்தன் திவாகரம் பிங்கலம் சூடாமணி, ஆகிய நிகண்டுகளின் தொகுதி சாந்தி சாதனா பதிப்பாக 2004ஆம் ஆண்டு வெளியானது.[4]

siragu Nigandu_listஆய்வாளர்களின் குறிப்புகளிலிருந்து பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதே காலத்தால் முற்பட்ட நிகண்டு நூலான சேந்தன் திவாகரம் என்பது தெளிவாகிறது. இந்த நூல் இக்காலத்திற்கு முற்பட்ட தமிழக இலக்கிய வழக்காறுகளைப் பதிவு செய்யும் ஆவணமாகத் திகழ்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இருப்பதற்கு வழியில்லை.

ஆண்டின்‌ தொடக்கத்தைக்‌ கார்ப்பருவத்தினை முதலாகக் கொண்டு, ஆவணி மாதத்திலிருந்து தொடங்கினர்‌ பழந்தமிழர். கார்காலம்‌ தொடங்கும்‌ காலமான ஆவணித்திங்கள், தொல்காப்பியம்‌ அகப்பொருள்‌ விளக்கம் பகுதியில் இடம் பெற்றுள்ளது போலவே திவாகர நிகண்டிலும் இடம்‌ பெற்றுள்ளது. ஒவ்வொரு பருவத்திற்கும்‌ இரண்டிரண்டு திங்களாகக் காலத்தைப் பகுத்த முறையை “ஆவணி முதலா இரண்டிரண்‌டாக மேவின திங்கள்‌ எண்ணினர்‌ கொளலே” என்றுதான் திவாகரப்‌ பாடல்‌ குறிப்பிடுகிறது.

மேலும், குறிப்பிடத்தக்க வகையில் சித்திரையைத் துவக்கமாகக் கொள்ளும் வசந்தம் என்ற சொல்லே திவாகர நிகண்டில் கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி காலத்தை வகைப்படுத்தும் முறையான வசந்தம், கிரீடம், வருடம், சரம், ஏமந்தம், சிசிரம் என ‘இருதுகள்’ அல்லது பருவ வகைப்பாடும் [6 Ritu (season): Vasant Ritu (Spring), Grishma Ritu (Summer), Varsha Ritu (Rain), Sharad Ritu (Autumn), Hemant Ritu (Pre-winter), and Shishir or Shita Ritu (Winter)] திவாகர நிகண்டில் கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகண்டு உருவான காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகளால் ஆட்சிகளும் சமயக் காட்சிகளும் மாறியதும், அவற்றின் எதிரொலியாகத் தமிழரின் காலக்கணக்கிடலில் மாற்றம் நிகழ்ந்துள்ளதும் இக்குறிப்பிலிருந்து தெளிவாகிறது.

- தொடரும்


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்”

அதிகம் படித்தது