நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் – பகுதி – 2

தேமொழி

Jul 30, 2022

siragu tamil new year

II.  பிங்கல நிகண்டு:

சேந்தன் திவாகரம் நிகண்டின் செய்தியைத் தொடர்ந்து பிங்கல நிகண்டு தரும் செய்திகளையும் காணலாம். சேந்தன் திவாகரம் செய்த திவாகர முனிவரின் மகன் பிங்கல முனிவர் வரையறுத்து விரித்துச்செய்த பிங்கல நிகண்டு சங்க மருவிய காலத்து நிகண்டு என்று குறிப்பிடப்படுகிறது. இதைப் பிங்கல நிகண்டின் சிறப்புப் பாயிரமும், “செங்கதிர் வரத்தாற் றிவாகரன் பயந்த பிங்கல முனிவனெனத் தன் பெயர் நிறீஇ-உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை” என்று குறிப்பிடுகிறது. சூரியன் வரத்தால் வந்த திவாகர முனிவர் பெற்ற பிங்கல முனிவனானவன் பிங்கலம் என்று தன்பெயரைத் தன்நூலுக்குத் தந்து மக்களிடத்தும் அன்பு கூர்ந்து நூல் செய்யுங்காலத்தில், என்பது இதன் பொருள்.

பிங்கல நிகண்டின் சிறப்பை, “செங்கதிர்வரத்திற்றோன்றுந் திவாகரர் சிறப்பின் மிக்க, பிங்கலருரை நூற்பாவிற் பேணினர் செய்தார் சேர, இங்கிவை இரண்டுங் கற்க எளிதலவென்று சூழ்ந்து” எனக் குறிப்பிடும் மண்டல புருடனின் சூடாமணி நிகண்டாலும், ஆதி திவாகரம் இறப்பப் பிங்கலம் நிலைபெற்றுள்ளது என்பது “பிங்கல முதலா நல்லோருரிச்சொலி னயந்தனர் கொளலே” எனவரும் நன்னூலாலும் உணரலாம் எனத் தமிழ்ப்புலவர் வீ. தி. சிவன் பிள்ளை எடுத்துரைக்கிறார்.[9] இந்த வரிகளிலிருந்து மண்டல புருடர் சூடாமணி நிகண்டு எழுதுகையில் முதன்மையான நிகண்டுகளாகக் கருதப்பட்டவை திவாகரரும் அவர் மகன் பிங்கலரும் உருவாக்கிய இரு நிகண்டுகளும் என்பது தெரிகிறது. அத்துடன் பிங்கல நிகண்டு உருவான பின்னர் சேந்தன் திவாகரம் பயன்பாடு குறைந்து பிங்கல நிகண்டு அத்தேவையை நிறைவு செய்ததையும் அறிய முடிகிறது.

சேந்தன் திவாகரம் நிகண்டைத் தொடர்ந்து தோன்றிய பிங்கல முனிவர் செய்த பிங்கலந்தையென்னும் “பிங்கல நிகண்டு” நூலும் ஆவணி முதலாகக் காலம் கணக்கிடப்பட்டதை அறிவிக்கிறது. அத்துடன் ‘இருது’ என்பதும் பருவம் என்ற சொல்லுக்கு நிகரானது (பருவமும் இருதுவுமொருபொருட்கிளவி) என்றும் குறிப்பிடுகிறது.

கார் காலத்தைத் தொடக்கமாகக் கொண்டு கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் எனப் பருவங்கள் இரண்டிரண்டு திங்கள்கள் கொண்டதாக ஆறு பருவங்கள் குறிப்பிடுவது வழக்கம் போல, வசந்த காலத்தைத் தொடக்கமாகக் கொண்டு வசந்தம், கிரீடம், வருடம், சரம், ஏமந்தம், சிசிரம் என இருதுகள் இரண்டிரண்டு திங்கள்கள் கொண்டதாக ஆறு இருதுகள் குறிப்பிடும் வழக்கத்தையும் காட்டுகிறது. [9]

இதில் இருக்கும் வியக்கத்தக்கச் செய்தி என்னவெனில், இந்த இருது வரிசையில் இடம் பெறும் வருடம் என்பதன் பிறப்பும் ஆவணித் திங்கள்தான். ஆக, வருஷப் பிறப்பு என்றாலும் அது மீண்டும் ஆவணி என்றே அமைகிறது. ஆண்டைக் குறிக்கும் வடமொழிச் சொல் ‘வருஷ’ (varSa) என்பதே மழை/கார்காலத்தின் தொடக்கத்தைத்தான் குறிக்கிறது. வடமொழியில் ஆண்டு, மழை ஆகியவற்றுக்கான சொல் (varSa=year; varSA=rain) வருஷ என்றே இருப்பது தற்செயலான ஒற்றுமையாக இருக்க வழியில்லை. கார்காலமே முற்காலத்து இந்திய மண்ணின் பல பகுதிகளில் ஓர் ஆண்டின் தொடக்கமாக இருந்திருக்கக் கூடிய வாய்ப்பிருந்திருக்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ளலாம். பருவகால வகைப்பாடுகள் குறித்து விரிவாகக் கீழ்க்காணும் சூத்திரங்கள் விவரிக்கின்றன.

பிங்கலநிகண்டு:  முதலாவது ‘வான்வகை’ – சூத்திரங்கள்:

     பருவமும்‌ இருதுவும்‌ பகரில்‌ ஒன்றே. (208)

     அறுவகைப்‌ பருவ காலம்‌

     காரே, கூதிர்‌, முன்‌ பனி, பின்‌ பனி,

     சீர்‌ இளவேனில்‌, முதுவேனில்‌ என்று ஆங்கு

     இரு மூன்று வகைப்‌ பருவம்தானே. (6 பெயர்கள்‌) (209)

     அவைதாம்‌ ஆவணி முதலா இரண்டு இரண்டாக

     மேவிய திங்கள்‌ எண்ணினர்‌ கொளலே. (210)

இந்த சூத்திரங்களுக்கு அடுத்து வருவது …

     அறு வகை இருது

     வசந்தம்‌, இரீடம்‌, வருடம்‌, சரமே,

     ஏமந்தம்‌, சிசிரம்‌, என இருது ஆறு ஆகும்‌. (6 பெயர்கள்‌) (211)

     அவை தாம்‌ சித்திரை முதலாச்‌ செல் மாதம்‌

     இரண்டா வைத்தன எண்ணிக்‌ கொள்க என்ப. (212)

பிங்கலநிகண்டு: இரண்டாவது ‘வானவர்’ வகை – சூத்திரங்கள்:

     பருவமும் இருதுவும் ஒருபொருட்கிளவி

     அறுவகைப் பருவகாலப் பெயர் -

     கார்,கூதிர், முன்பனி, பின்பனி,

     இளவேனில், முதுவேனில்.

     அவைதாம் – ஆவணி, புரட்டாதி கார்;

     ஐப்பசி, கார்த்திகை கூதிர்;

     மார்கழி, தை முன்பனி;

     மாசி, பங்குனி பின்பனி;

     சித்திரை, வைகாசி இளவேனில்;

     ஆனி, ஆடி முதுவேனில்.

     அறுவகை இருதுவின் பெயர் -

     வசந்தம், கிரீடம், வருடம், சரம், ஏமந்தம், சிசிரம்.

     அவைதாம் – சித்திரை, வைகாசி வசந்தம்;

     ஆனி, ஆடி கிரீடம்;

     ஆவ‌ணி, புரட்டாதி வருடம்;

     ஐப்பசி, கார்த்திகை சரம்;

     மார்கழி, தை ஏம‌ந்தம்;

     மாசி, பங்குனி சிசிரம்.

III.  சூடாமணி நிகண்டு:

சூடாமணி நிகண்டு இந்த வரிசையில் காலத்தால் பிற்பட்ட நிகண்டு ஆகும். பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது சூடாமணி நிகண்டு. விருத்தப்பாவால் ஆன இந்நூல் 12 பிரிவுகளின் கீழ், 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.[10]

     ஆவணி முதல்‌ இரண்டிரண்டு மாதம்‌

     ஆகிய அறுவகைப்‌ பருவம்‌

     பரவிய காரே, கூதிர்‌,

     முன்‌, பினிற்‌ பனிகளோடு,

     விரவிய இளைய வேனில்‌,

     விரைந்திடு முதிர்ந்த வேனில்‌,

     மருவும் “ஆவணியே ஆதி”

     மற்று இரண்டு இரண்டு மாதம்‌

     பருவம்‌ மூவிரண்டும்‌ ஆய்ந்து

     பார்த்திடின்‌ வாய்த்த பேராம். (6 பெயர்கள்‌) (95)

ஆண்டின் தொடக்கம் என்பதை “ஆவணியே ஆதி” என்ற சொற்றொடரின் மூலம் 16 ஆம் நூற்றாண்டின் சூடாமணி நிகண்டு அறுதியிட்டுக் கூறுவதைக் காணமுடிகிறது.

 5. திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள்:

திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுகளை அவை வெட்டப்பட்ட காலமான 9ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டுவரை காலக்கோட்டில் வரிசைப்படுத்தி ஆராய்ந்ததில், பிரபவ முதல் அட்சய என்று வடமொழியில் பெயரிடப்பட்டுள்ள “அறுபது வியாழ வட்ட ஆண்டுகள்” கொண்ட கணக்கு விஜயநகர மன்னர்கள் ஆட்சியில்தான் தொடங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.[11] இந்தக் காலக் குறிப்பு மாற்றம் விஜயநகர ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் தொடங்கித்தான் திருவல்லிக்கேணி கோயிலில் கிடைக்கிறது. விஜயநகர ஆட்சிக் காலத்திற்கு முன்னர், இந்தப் பேரரசின், இந்த மன்னரின், இத்தனையாவது ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது என்று குறிப்பிடும் முறைதான் கல்வெட்டுகளில் முன்னர் வழக்கமாக இருந்திருப்பது தெரிகிறது.

முடிவுரை:

எனவே ஆரூடம் பார்க்க வழக்கிலிருந்த ஆரியப் பண்பாட்டின் அறுவகை இருது (வசந்தம், கிரீடம், வருடம், சரம், ஏமந்தம், சிசிரம்) என்ற காலக் கணக்கிடல் முறை, தமிழ் நாட்டை ஆண்ட அந்நியர்களான நாயக்கர்கள் ஆட்சிக் கால கட்டத்தில் கோயில் எல்லையைக் கடந்து பொதுமக்களின் வாழ்வுமுறையில் நுழைந்துள்ளது. அதுவரை வழக்கத்திலிருந்த ஆவணிப் புத்தாண்டு முறையை நீக்கி வைதீக சித்திரைப் புத்தாண்டு வழக்க முறைக்கு மாற்றியது என்றுதான் இந்த மூன்று நிகண்டுகளின் செய்திகளையும் ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம் முடிவெடுக்க வேண்டியுள்ளது. மேலும், 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தோன்றிய இலக்கியங்களையும், நிகண்டுகளையும் ஆராய்வதன் மூலம் இதை உறுதி செய்யலாம். இம்மாற்றம் சோதிட நாட்காட்டியின் அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றம் என்பதும் தெளிவாகிறது[12].

அத்துடன் “சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என்பது வரலாற்றில் ஒரு பொய்” என்பதும் தெளிவாகிறது.

(1) பழந்தமிழர் காலக் கணக்கீட்டின் தொடர்ச்சியாக பண்டையத் தமிழ் உறவுகளான கேரள நாட்டில் வழக்கில் இருக்கும் கொல்லம் ஆண்டு கணக்கிடல் முறை,

(2) தொல்காப்பியரின் பொருளதிகாரம் (அகத்திணையியல்: 6 — 10),

(3) சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் (14. ஊர் காண் காதை: 86 — 25)

(4) திவாகர, பிங்கல, சூடாமணி நிகண்டுகள் தரும் செய்திகளின் ஒப்பீடு,

(5) திருவல்லிக்கேணி கோயிலின் தொடர் கல்வெட்டு அறியத் தரும் செய்திகள்,

இவற்றின் மூலம் “ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்” என்று உறுதியாகக் கூறலாம். சரியான தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட விரும்பும் ‘உண்மையான தமிழராய்’ இருந்தால் வரும் ஆவணித் திங்கள் துவக்கத்தைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடலாம், அவ்வாறு மாற்றச் சொல்லி அரசுக்கும் கோரிக்கை அனுப்பலாம். ஆவணிப் புத்தாண்டை அதிகாரப்பூர்வமாக வழக்கத்திற்குக் கொண்டுவர அரசும் முயற்சி மேற்கொள்வதும் வரவேற்கத்தக்கதே.

மேலும், எதிர்காலத் தலைமுறைக்கு எளிதாகப் பழந்தமிழ் வழக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் பாடநூல்களில் தமிழ் மாதங்களின் வரிசையை 1. ஆவணி, 2. புரட்டாசி, 3. ஐப்பசி, 4. கார்த்திகை, 5. மார்கழி, 6. தை, 7. மாசி, 8. பங்குனி, 9. சித்திரை, 10. வைகாசி, 11. ஆனி, 12. ஆடி என்று மாற்றி அமைக்கலாம். பழந்தமிழர் வழக்கம் இடைக்காலத்தில் அரச ஆதரவுடன் மாற்றம் பெற்றிருந்தால், அதே அரச ஆதரவுடன்தான் மாற்றம் செய்வது தேவையாக இருக்கும்.

ஏனெனில், தமிழர் ஒருவர் சித்திரைப் புத்தாண்டு விரும்பியோ அல்லது தைப் புத்தாண்டு விரும்பியோ என்பது ஒரு பொருட்டல்ல. உண்மைதான் முக்கியம். வரலாற்று உண்மை நிலைநாட்டப்படவேண்டும். பிழை சீர் செய்யப்படுதல் தேவை.

இது தவிர்த்து, காலம் முழுவதும், உலகம் முழுவதும் நாட்காட்டிகளை மாற்றியமைத்துக் கொண்டதும் செப்பனிட்டுச் சீர் செய்து கொண்டதும் வரலாறே. மலையாள கொல்லம் ஆண்டு வளர்ச்சி முறைக் கணக்கிடலும் அவ்வாறான ஓர் எடுத்துக்காட்டே. திருவள்ளுவர் பிறப்பைத் தொடக்கமாகக் கணக்கில் கொண்ட தொடர் வளர்ச்சி முறைக் கணக்கிடல் முறையில் தைத்திங்கள் புத்தாண்டின் தொடக்கமாகத் தமிழக அரசால் 1971ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதும் இத்தகைய மாற்றம் என்ற வகையிலேயே அடங்கும். இது ஓர் ஏற்கத்தக்க ஒரு மாற்றமே.

மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண திருவிழாவை, திருமலை நாயக்கர் சித்திரை மாதத்திற்கு மாற்றியதை ஏற்றுக் கொண்டு தமிழர் இன்றும் சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடிக் கொண்டிருப்பது போலத்தான் இம்மாற்றமும்.[13] எனவே, ஆவணியில் இருந்த புத்தாண்டுப் பிறப்பை, இடைக்காலத்தில் சித்திரைக்கு மாற்றிக் கொண்ட தமிழர்களுக்கு, அதே போல இப்பொழுதும் தைத்திங்களைப் புத்தாண்டின் தொடக்கமாக ஏற்றுக் கொள்வதில் மனத்தடைகள் இருக்கத் தேவையில்லை.

சான்றாதாரங்கள்:

[1] ‘Kollam Era,’ K.V.Sarma, Indian Journal of History of Science, 31(1), p.99. 1996.

[https://web.archive.org/web/20150527163650/http://www.new1.dli.ernet.in/data1/upload/insa/INSA_1/20005b5f_93.pdf]

[2] பொருளதிகார மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், (பக்கம் – 21), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2007.

[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZMdluhy.TVA_BOK_0006010/page/20/mode/2up]

[3] சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், 4. ஊர் காண் காதை.

[https://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=16]

[4] சேந்தன் திவாகரம் பிங்கலம் சூடாமணி, சாந்தி சாதனா பதிப்பு, 2004.

[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp7kZUy.TVA_BOK_0002448]

[5] நிகண்டு நூல்கள்.

[https://www.tamilvu.org/courses/degree/a041/a0412/html/a0412554.htm]

[6] உரிச்சொல் நிகண்டு, மு. அருணாசலம், செந்தமிழ், பக்கம்: 1- 12. 1965.

[https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0008294_செந்தமிழ்_April_May_1965.pdf]

[7] திவாகரம் முதல் தொகுதி, சென்னைப் பல்கலைக் கழகம் பதிப்பு, பக்கம்: xii-xv, 1990.

TVA_BOK_0022928_திவாகரம்_தொகுதி_1.pdf

[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0022928_திவாகரம்_தொகுதி_1.pdf]

[8] தமிழ் அகராதிக் கலை, பேரா. சுந்தரசண்முகனார், புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பக வெளியீடு, பக்கம்:80, 1965.

[https://ta.wikisource.org/s/2t33]

[9] பிங்கல முனிவர் செய்த பிங்கலந்தையென்னும் “பிங்கல நிகண்டு” – பாகம் 1. (சூத்திரங்களும் அவற்றின் பெயர்ப்பிரிவும்), வீ. தி. சிவன் பிள்ளை. 1890.

[https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0515_01.html]

[10] சூடாமணி நிகண்டு, சரசுவதி மகால் நூலகம் பதிப்பு, 1999.

[https://www.tamilvu.org/library/nationalized/pdf/05-kovaiilancheran/soodamaninikhandu.pdf]

[11] திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் அறியத் தரும் செய்திகள், தேமொழி, 2021.

[http://siragu.com/திருவல்லிக்கேணி-கோயில்-க/]

[12] TN celebrates new New Year, dumps ‘Brahminical’ tradition, M.R. VenkateshJan, Hindustan Times. Jan 14, 2009.

[https://www.hindustantimes.com/india/tn-celebrates-new-new-year-dumps-brahminical-tradition/story-qCcoJFXhGF91kJR8WAsF9O.html]

[13] மதுரை சித்திரைத் திருவிழா – ஆய்வாளர்கள் சொல்லும் சுவாரஸ்யத் தகவல்கள், ஜோ மகேஸ்வரன், பிபிசி தமிழ், 13 ஏப்ரல் 2022.

https://www.bbc.com/tamil/arts-and-culture-61096773


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் – பகுதி – 2”

அதிகம் படித்தது