செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

இங்கேயே இருக்கிறது

செல்வக்குமார் சங்கரநாராயணன்

Jul 30, 2016

Siragu positive thinking3

நீங்கள் தேடும் ஒவ்வொன்றும் உங்கள் அருகில் தான் இருக்கிறது, ஆனால் என்ன, நீங்கள் அதை உணர மறுத்திடும் பொழுது அவற்றை விட்டு நீங்கள் விலகி வந்துவிட்டு, அவை விலகிப் போய்விட்டதென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். எது வேண்டும் என்பதில் உள்ள தெளிவின்மையே இதற்குக் காரணம் என்று சொல்வதும் உண்டு. நேர்மறை எண்ணங்கள் எவ்வளவு அதிகமாக உங்களுக்குள் இருக்கிறதோ அவ்வளவு அதிகமான நல்ல செயல்கள் உங்கள் வாழ்வைச் சுற்றி நடக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதைத்தான் சிக்மண்ட் பிராய்ட் என்ற உளவியல் மேதை கூறுகிறார். ஆகவே இது எங்கிருக்கிறதோ? எப்பொழுது கிடைக்குமோ? என்றில்லாமல், இங்கேதான் இருக்கிறது இப்பொழுதிருந்தே அது எனக்கு வந்துவிட்டது என்பதை நீங்கள் நினைக்கும் பொழுது அதை  நிச்சயம் நீங்கள் அடைந்து அனுபவிப்பீர்கள் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

காசு பணம் எல்லாமும் இருந்தாலும் நீங்கள் எதை அடைய வேண்டுமோ அவற்றின் மீதான ஆவலே உங்களை அதைப் பெற வைக்கிறது. காசு பணம் இருக்கிறது என்பதற்காக நீங்கள் எதையும் வாங்கிவிடுவதில்லை என்பதும் நிதர்சனமான உண்மை. அந்த ஆவலை நேர்மறையான எண்ணங்கள் மூலமாக வரவழைத்துக்கொண்டு செயல்படும் பொழுதுகளில் அது கிடைக்கும் தன்மை என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக மாறுகிறது. ஆனால் பலரும் சந்திக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று இந்த நேர்மறைச் சிந்தனையை தொடர்ந்து சிந்தித்துக்கொண்டே இருப்பதில் ஏற்படும் தொய்வு. அதை மாற்றினால் அனைத்துமே மாறும்.

Siragu-positive-thinking3

எனக்கு இது கிடைக்காது, நான் இதைப் பெறப்போவது இல்லை, வாகனத்தை ஓட்டும் பொழுது நான் விபத்தை ஏற்படுத்திவிடுவேன், என் மகன் மிதிவண்டி ஓட்ட அனுமதித்தால் கை கால்களில் சிராய்ப்புடன் வருவான் என்பதான எண்ணங்கள் வாயிலாக அவற்றைத் தான் நீங்கள் நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆகையால் அவ்வித எண்ணங்கள் உங்களுக்கு அடிக்கடி தோன்றுவதால் அவற்றை நீங்கள் மறைமுகமாக நடப்பதற்கு சாவி கொடுக்கிறீர்கள் என்பது தான் அப்பட்டமான உண்மை. இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. மனித மனங்கள் பொதுவாகவே எதிர்மறை எண்ணங்களால் நிரம்பியது. அதை ஒரே அடியாக விரட்டி நேர்மறை எண்ணங்களை புகுத்திவிட முடியாது. ஏனென்றால் அப்படிச் செய்வதென்பது பிறந்த குழந்தைக்கு சாதத்தை ஊட்டுவதற்கு ஒப்பானது. முதலில் குழந்தை ஆறு மாத காலம் வரை கட்டாயமாக தாய்ப்பால் தான் அருந்தவேண்டும், பிறகுதான் திட ஆகாரத்திற்குப் படிப்படியாக மாற வேண்டும். இது தான் நம் மனதிற்கும் பொருந்தும், நம் மனதும் ஒரு பிறந்த குழந்தையைப் போன்றதுதான். எனவே சிறுகச் சிறுக நேர்மறை எண்ணங்களை விதைக்கும் பழக்கத்தை வரவழைக்க வேண்டும்.

Idea

நியூட்டன் கண்டறியும் வரை புவி ஈர்ப்பு விசை என்பது அங்கேயே தான் இருந்தது. அட! பூமியில் அவருக்கு முன்பே அது இருந்தது தானே? ஆனால் அவருக்கு முன்பிருந்தவர்கள் அதைக் கண்டறியவில்லை என்பதுவே உண்மை. அதற்காக நியூட்டன் கண்டறிந்த பிறகு தான் புவியில் ஈர்ப்பு விசை என்ற ஒன்று தோன்றியதா என உங்களை யாரேனும் கேட்டால் நீங்கள் அவரைப் பார்த்துச் சிரிப்பீர்கள். இப்படித்தான் தான் நேர்மறைச் சிந்தனையை வளர்த்துக் கொள்ளாத உங்களைப் பார்த்து இந்த வாழ்க்கை சிரிக்கிறது. உங்களை அது பகடைக் காயாக மாற்றி விளையாடுகிறது. இதை நீங்கள் உணர்ந்து கொண்டு நேர்மறை எண்ணங்களை வளர்க்க வளர்க்கத்தான் நீங்கள் இந்த இரகசியத்தை உணர்ந்து கொள்வீர்கள். அதை இரகசியத்தை உணர்ந்து கொண்ட பிறகு நீங்கள் நிஜமாகவே நினைத்தால் எதுவும் உங்களைத் தேடி வரும். ஏனென்றால் அது இங்கேயே இருக்கிறது.


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இங்கேயே இருக்கிறது”

அதிகம் படித்தது