இசை புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து மடல்
முனைவர். ந. அரவிந்த்Jan 9, 2021
வீதியில், கூதலில் இறை துதி பாடும் மார்கழி திங்களாம் சனவரி 6 ம் தேதியில்
‘புதிய முகமாய்’ மார்கழி பூவாய் ‘உதய’மான புத்தம் புதிய ‘ரோஜா’வே – உன்
சுதி மீட்டலை கேட்டால் புவி அசைந்தாடும், அந்த இசைக்கு
விதி விலக்கல்ல நானும் என் ஐம்புலன்களும்!
தென் இந்தியாவின் ‘கிழக்குச் சீமையிலே’ சிங்கார
சென்னையில் பிறந்த ‘அழகிய தமிழ் மகனே’!
உன் இசையை கேட்டாலே நவரசம்! மனம் அதை ஆவலுடன்
‘அன்பே! ஆருயிரே’! என திரையில் ‘பார்த்தாலே பரவசம்’!
‘மார்கழி பூவே’ குளிர் தந்தாய் ‘மே மாதம்’தனில்! உலகம் சொல்லும்
‘சர்வம் தாள மயம்’ என்று! சர்வமும் தல மயம் என ‘பவித்ரா’ செவிகளை
‘மெர்சல்’ஆக்கட்டும் (மயக்கட்டும்)! புவியெங்கும் உன் இசை
‘சர்க்கார்’ (ராஜாங்கம்) மாமாங்கமாய் தொடரட்டும்!
வெண்ணிலவே! வெண்ணிலவே! நீ இசை புயலின் பாடலை
வெண் திரையில் புதிய (New) இசையென
‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என ‘பிகில்’ உடன் ஆர்ப்பரிக்க
‘விண்ணைத்தாண்டி வருவாயா’?
பாண்டிய மன்னன் ‘கோச்சடையான்’, ‘பாபா’ மற்றும்
உண்மை ஒரு நாள் வெல்லும் என சொல்லும் ‘லிங்கா’ போன்ற
எண்ணற்ற செவிக்கினிய ஆழ் ‘கடல்’ ‘முத்து’க்கள் ‘படையப்பா’விற்காக!
‘வண்டிச்சோலை சின்ராசு’ கடடப்பாவிற்காக!
அரபிக் கடலோரம் அமைந்துள்ள ‘பம்பாய்’ சென்று ‘24’ ஆண்டுகளுக்கு முன்பாக
நேரடி இந்தி படமான ‘ரங்கீலா’ மூலம் தடம் பதித்தவனே!
வைர வரிகளும், தரமான இசையும் ‘எனக்கு 20 உனக்கு 18′ என்று இசையெனும்
‘வரலாறு’ புத்தகத்தில் மார்க்கண்டேயனாய் இடம் பிடிக்க இசை வடிவம் தந்தவனே!
முஸ்தாபா முஸ்தபா என்ற பாடல் வழியாய் ‘காதல் தேசம்’ மூலம் இளைஞர்களின்
ஆஸ்தான இசைஅமைப்பாளரானாய்! ‘Slumdog Millionaire’ மூலம்
ஆஸ்கார் விருதினை முத்தமிட்டாய்! அதனை தொடர்ந்து
‘மிஸ்டர் ரோமியோ’ என உலகம் சுற்றும் வாலிபனானாய்!
காலையில் தினமும் கண்விழித்தால் நாம் கைதொடும் தேவதை அம்மா! (MOM)
இலங்கை தமிழ் பேசும் ‘தெனாலி’! ‘ராவணன்’ கைகளால்
விலங்கிடப்பட்ட சீதைபோல், இராணுவத்திடம் சிக்கிய சிங்கத் தமிழ்ப் பெண்ணான
இலங்கை தமிழச்சிக்காக ‘கன்னத்தில் முத்தமிட்டால்’! அனைத்தும் அருமை!
‘எந்திரன்’ லோகத்தின் ரம்பை, ஊர்வசியென ‘2.0’ நடன
சுந்தரிகளும் உன் இசையெனும் கலைக்கு முன் தலை வணங்க வேண்டும்!
‘இந்தியன்’ பாடல்கள் இசை மனம் கமழும் மெல்போர்ன் மலர்கள்! அவை
அந்தியில் பூக்கும் ‘அந்தி மந்தாரை’ அல்ல! என்றும் பூக்கும் ‘ரோஜா’ மலர்கள்!
‘இந்திரா’ சொல்லும் ‘அச்சம் என்பது மடமையடா’ (அச்சம் அச்சம் இல்லை) என்று!
அந்நியர்களிடம் இருந்து நாட்டை காக்க தன்னலம் பாராமல், குருதி
சிந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்காக
‘வந்தே மாதரம்’ தந்தாய்!
அண்டத்தினை ஐம்பூதங்களால் இறைவன் படைத்தான்!
தண்ணீர் (Water & Paani), தீ (Fire), புவியெனும் தாய்
மண்ணே வணக்கம், ‘காற்று வெளியிடை’, ‘செக்கச் சிவந்த வானம்’ என
ஆண்டவனின் படைப்பிற்கு இசை வடிவம் தந்தவனே!
‘காதலன்’ ‘சில்லுனு ஒரு காதல்’ வயப்பட்டு, தன் ‘(ஓ) காதல் கண்மணி’ யுடன்
‘காதல் வைரஸ்’ கொண்டு, ‘அல்லி அர்ஜுனா’ ‘ஜோடி’ போல் விண்ணில்
காதல் பறவைகளாக (Love birds) பறந்து ‘தாளம்’ இசைத்து ‘டூயட்’ பாடி
‘காதல் தேசம்’ சென்று ‘தாஜ்மஹால்’கட்டும்வரை ‘ரிதம்’ தந்தவனே!
மெல்லிசை மன்னரை பாட வைத்து இசை ‘சங்கமம்’ தந்தவனே!
வல்லினம், இடையினம், ‘ஆயுத எழுத்து’,
மெல்லினம் மட்டுமின்றி பறக்கும்
புள்ளினங்களுக்கும் இசை தந்தவனே!
கவின் (அழகு) தென்றலாய், ‘கண்களால் கைது செய்தாய்’! ஆற்றலில் இசை புயலாய்
செவிக்கினிய ‘சக்கரகட்டி’ தந்தாய்! கல்கி எழுதிய புனிதமான, தமிழ் புதினமான,
புவியில் என்றும் அழியா காவியம் ‘பொன்னியின் செல்வன்’ படைக்கவிருக்கும்
காவியத் தலைவன் இசை கேட்க என் மனம் ‘அலை பாயுதே’!
நீக்கமற நிறைந்தவன் இறைவன்! அவன் வாரி வழங்கும்
மக்கள் பஞ்சம் தீர்க்கும் மாரி மழைக்கு ‘உழவன்’ ஆக இசை தந்தவனே!
விக்ரமிற்காக ‘I’,Super ‘Star’ க்கு ‘சிவாஜி’, அவர் மருமகனுக்கு ‘மரியான்’,
விக்ரமனிற்காக ‘புதிய மன்னர்கள்’ தந்ததமிழகத்தின் நன்மகனே (Gentle Man)!
‘இருவர்’ இமாலய கூட்டணியில் மணியும் ரத்னங்களும் கலந்த பாடல்கள்
அருளினாய்! ‘ஜீன்ஸ்’ போட்ட ‘பாய்ஸ்’ முதல், பட்டி தொட்டி வரை
‘கருத்தம்மா’ பாடல்கள் மூலம் அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட,
விருதுகள் துரத்தும் ‘திருடா திருடா’! வாழ்க நீ பல்லாண்டு!
உலகின் ‘முதல்வன்’, இசையின் ‘குரு’வாகியஇறைவன் தந்த என் ‘உயிரே’, உடலே,
உள்ளமே, உடலில் உயிர் நிலைக்க உதவும் ‘ என் சுவாச காற்றே’! மற்றும்
உடலின் அனைத்து புலன்களையும் கொண்டு இறைவனை வேண்டுகிறேன்!
உனை, எல்லாம் வல்ல ‘ரட்சகன்’ காக்க வேண்டுமென ‘மின்சார கனவு’ காணும்…….
முனைவர். ந. அரவிந்த்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இசை புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து மடல்”