நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

இது முன்பனிக்காலம்

சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

Dec 26, 2015

2011-09-07-1417-46(52).jpgநோயற்ற நல்ல உடல் நிலையில் நீங்கள் இருந்தாலும், பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப உடலில் வாதம், பித்தம், கபம் எனும் இயக்கங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

அவைகளுக்கு தக்கபடி உணவு முறைகளையும் மாற்றுவதே ஆரோக்கியமான வாழ்க்கை முறை. ஆண்டு முழுவதும் ஒரே விதமான உணவை உண்ணும் பழக்கம் உடலுக்கு நல்லதல்ல.

சரி, முதலில் ஒரு ஆண்டில் என்னென்ன பருவ மாற்றங்கள் வருகின்றன என பார்ப்போம்.

munpanikaalam2ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்துள்ளோம்.

கார்காலம் – ஆகத்து – செப்டம்பர்

கூதிர் காலம் – அக்டோபர் – நவம்பர்

முன்பனிக்காலம் – திசம்பர் – சனவரி

பின்பனிக்காலம். – பிப்ரவரி – மார்ச்சு

இளவேனில் காலம் – ஏப்ரல் – மே

முதுவேனில் காலம் – சூன் – சூலை

இனி எந்தெந்த காலங்களில் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், அதற்கேற்ப உணவில் என்னென்ன மாற்றங்கள் செய்துகொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.

முதலில் இப்போது நடந்து கொண்டிருக்கும் பனிக்காலத்தை பார்ப்போம்.

முன்பனிக்காலம்:

munpanikaalam3இந்தப் பருவத்தில் கீழ்க்காற்று வீசும். உடல் குளிர்ச்சி அடையும். புறச்சூல்நிலையோடு நேரடி தொடர்பில் உள்ள தோல் சுருங்கும். மயிர் துவாரங்கள் மூடும். எனவே உடல் உட்சூடு மிகுந்து பசி அதிகரிக்கும். இக்காலத்தில் காலையில் வழக்கமாக சாப்பிடும் நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிடலாம்.

இக்காலத்தில் உடலில் வாதம் அதிகரிக்க துவங்கும், எனவே வாதத்தை நீக்கக்கூடிய தைலங்களை தலையிலும் உடலிலும் தேய்த்து வெந்நீரில் குளிப்பது நல்லது.

நெய்பசையுள்ள உணவை இக்காலத்தில் உண்ணவேண்டும்.

இக்காலத்தில் வியர்த்தல் நல்லது. எனவே மாலையில் வெயிலில் நடந்து வியர்வை வரும்படி செய்வது நல்லது.

இக்காலத்தில் தரை குளிர்ச்சியாக இருக்கும், எனவே வீட்டிற்கு உள்ளேயும் செருப்பு அணிந்து நடப்பது நல்லது.

இரவில் உறங்கும் போது தலையை தவிர உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு படுப்பது நல்லது.

(நமக்காக இத்தனை அக்கறை எடுத்துக்கொள்ளும் நாம் இந்த குளிர் காலத்தில் நடைபாதையில் படுத்திருப்பவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதையும் சேர்த்து செயல்படுத்துவதே உண்மையான முழுமையான ஆரோக்கியம்)

பொதுவாக இக்காலத்தில் இனிப்பு, புளிப்பு, உப்பு சுவைகள் நல்லது. நெய் தன்மையும் குளிர்ச்சியும் உள்ளவை நல்லது.

munpanikaalam4பின்பனிக்காலம்:

பின்பனிக்காலத்தில் உடலுள் கபம் அதிகரிக்கும்.

முன்பனிக்காலத்திற்கு சொன்ன அதே உணவும் செயல்முறைகளும் பின்பனிக்காலத்திற்கும் பொருந்தும்.

பொதுவாக இக்காலத்தில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் நல்லது.

இளவேனில் காலம்:

பின்பனிக்காலத்தில் உடலில் அதிகரித்த கபம் இளவேனில் காலத்தில் இன்னும் அதிகரித்து, அதனால் பசி மந்தப்படும். கோழை அதிகரிக்கும்.

இக்காலத்தில் சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் வாந்தி உண்டாக்கும் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இக்காலத்தில் நசிய சிகிச்சை செய்துகொள்வது நல்லது (மூக்கில் மூலிகை சாற்றின் சொட்டுக்களை விடும் சிகிச்சை முறை)

இக்காலத்தில் உடற்பயிற்சி செய்வது அவசியம்.

பகலில் உறங்குவதை இக்காலத்தில் செய்யக்கூடாது. அதேபோல இக்காலங்களில் இரவில் விழித்திருக்க கூடாது.

பொதுவாக இக்காலத்தில் கசப்பு, காரம், துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் நல்லது. வறட்சியான மற்றும் சூடுள்ள உணவு நல்லது.

முதுவேனிற்காலம்:

இக்காலத்தில் வெப்பம் அதிகரிக்கும், எனவே. உடலில் உள்ள கோழை உலர்ந்து வாதம் அதிகரிக்கும். புளிப்பு மற்றும் காரமான உணவுகளை இக்காலத்தில் தவிர்க்க வேண்டும். சம்பா அரிசி வகைகள் உண்பது நல்லது.

நெய்பசையும் நீர்ச்சத்தும் உள்ள உணவுகள் இக்காலத்துக்கு நல்லது. வாழை, மாதுளை, திராட்சை, கரும்புச்சாறு, பனங்கற்கண்டு போன்றவை எடுத்துக்கொள்வது நல்லது.

பொதுவாக இக்காலத்தில் இனிப்பு சுவையுள்ள உணவுப்பொருள் நல்லது. நெய்ப்பசையுள்ள உணவும் குளிர்ச்சியான உணவும் நல்லது.

கார்காலம்:

munpanikaalam6அதாவது மழைக்காலம்.

இக்காலத்தில் உடலில் பித்தம் அதிகரிக்க ஆரம்பிக்கும். மேலும் மற்ற இரண்டு குற்றங்களும் கூடும். நீண்டகாலம் நிலம் சூடாக இருந்து அதைத் தொடர்ந்து மழை பெய்வதால், நீர் புளிப்புத் தன்மை அடைகிறது. அதாவது நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது.

இக்காலத்தில் பேதியை உண்டாகும் மருந்து எடுத்துக்கொள்வது நல்லது. இக்காலத்தில் நெய்பபசையுள்ள உணவுகளை நீக்க வேண்டும்.

உடலில் நீராவி மற்றும் குளிர்ச்சி படுவதை தவிர்க்க வேண்டும். எளிதில் சீரணமாகும் உணவையே உண்ணவேண்டும்.

பொதுவாக இக்காலத்தில் இனிப்பு, புளிப்பு, உப்பு சுவையுள்ள உணவுப்பொருள் நல்லவை.

கூதிர் காலம்:

இக்காலத்தில் தயிர், எண்ணெய், கொழுப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிக உப்புள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும். வயிறு நிறைய உண்ணக்கூடாது.

பொதுவாக இக்காலத்தில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

munpanikaalam5எல்லாக் காலங்களிலும் ஆறுசுவைகளும் உணவில் சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஆனாலும் அந்தந்த காலங்களில் மேற்கூறிய சுவைகளை அதிகமாக எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது.

மருத்துவ ஆலோசனைக்கு:

Dr.Jerome -FI

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D

சித்தமருத்துவ மையம்,

டாக்டர்ஸ் பிளாசா,

சரவணா ஸ்டோர் எதிரில்,

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,

வேளச்சேரி, சென்னை.

அலைபேசி எண்: 9444317293

இணையதள முகவரி:www.doctorjerome.com

மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com

முகநூல் முகவரி: https://www.facebook.com/jerome.xavier.5209?fref=ts


சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இது முன்பனிக்காலம்”

அதிகம் படித்தது