மார்ச் 28, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 2

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Jul 30, 2016

இரண்டாவது பகுதி-சுதந்திராக் கட்சி

நேருவின் அரசு வலிமை கொண்ட சமதர்மத்திற்கு சுதேசி என்பது மட்டுமே ஒரே எதிர்ப்பாக முன்வைக்கப்படவில்லை. 1950களின் பிற்பகுதி முதல் 1960கள் முழுவதும், நேருவின் பொருளாதாரத்திற்கு சுதந்திராக் கட்சியும் சவாலாக இருந்தது. அக்கட்சி குறைந்தபட்ச அரசாங்கக் கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரச் சந்தைகளுக்குச் சார்பான பழைய தாராளவாத நிலைப்பாட்டைக் கொண்டதாகும். (நாராயணமூர்த்தி, குர்ச்சரண் தாஸ் போன்ற பிரபலங்கள் பின்னர் பழைய சுதந்திராக் கட்சியை உயிர்ப்பிக்க முயன்றார்கள் என்பதால், அதன் வரலாற்றைச் சற்றே கவனிப்பது பயனுடையதாக இருக்கும்.)

Siragu Economy2

தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியின் ஒரு காலக் கூட்டாளியுமான (இராஜாஜி எனப்பட்ட) சி. இராஜகோபாலாச்சாரி (இவருடைய மகள் காந்தியின் மகனை மணந்தார்) 1959இல் சுதந்திராக் கட்சியைத் தொடங்கினார். மிக உறுதியான சமூகப் பிற்போக்குவாதி அவர். இந்துமத மற்றும் கலாச்சார விசயங்களில் ஊக்கத்தோடு இயங்கியவரும், பாரதிய வித்யா பவனை ஏற்படுத்தியவருமான கே. எம். முன்ஷி, சமதர்ம எதிர்ப்புவாதியாக மாறுவதற்கு முன்பு காங்கிரஸ் சமதர்மக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான மீனு மசானி என்னும் பொருளாதார வல்லுநர், ஆங்கிலவாதியான பார்சிப், பெருந்தொழிலதிபர் சர் ஹோமி மோடி, பிரிட்டிஷ் ஆட்சியில் உயர்நிலையில் பணிபுரிந்த அரசு அதிகாரிகள் பலர், சுதந்திராக் கட்சியின் மையக் குழுவில் இருந்தனர். (அண்மையில் மறைந்தவரும், இந்தியாவின் முன்னணி வலதுசாரி நூல் வெளியீட்டகமான வாய்ஸ் ஆஃப் இந்தியா என்பதை நிறுவியவரும், இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்மீது தீவிர எதிர்ப்புக் காட்டியவருமான சீதாராம் கோயல் என்பவரும் சுதந்திராக் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.)

சுதந்திராக் கட்சியின் உறுப்பினர்களில் பாரம்பரிய அதிகாரசக்திகளான பெருநிலக்கிழார்கள், புதிய இந்தியக் குடியரசில் தங்கள் அரியணைகளை இழந்த ராஜாக்களும் அவர்களின் குடும்பத்தினர் போன்றவர்களும் அடங்குவர். தாராள வாதத்தில் உறுதிபூண்டிருந்த போதிலும், அந்தக் கட்சி, தாராளமயத்துக்கு எதிராக இருந்த, பிற்போக்குவாதக் குழுக்களான ராம் ராஜ்ய பரிஷத், இந்து மகாசபை, ஜனசங்கம் போன்றவர்களுடன் தேர்தல் கூட்டு வைத்திருந்தது.

சுதந்திராக் கட்சியை மிகவும் வெறுத்தவரான நேரு, அதை, “பழைய இடைக் காலத்தைச் சேர்ந்த பிரபுக்கள், கோட்டை கொத்தளங்கள், ஜமீன்தார்களைக் கொண்ட கட்சி, மேலும் மேலும் பாசிசக் கொள்கைக்கு மாறிவருவது” என்று வருணித்தார்.

நன்கு படித்த தாராளவாதிகள், பிரதேச ராஜாக்கள், ராணிகள், பெருநிலக்கிழார்கள் போன்றோரை இணைத்த விசயம், நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி இந்தியாவில் சோவியத் பாணியிலான திட்டமிட்ட பொருளாதாரத்தைப் புகுத்திவிடுமோ என்ற பயத்தினால் எழுந்த கடும் எதிர்ப்புதான். சுதந்திராக் கட்சி, சுதந்திரத்தின் வாயிலாக வளம் என்பதற்கு வாக்குறுதி அளித்தது. அதன் 21 அம்ச அறிக்கை,

தனிமனிதருக்கு உச்சபட்ச சுதந்திரம்,

அரசின் மிகக்குறைந்த குறுக்கீடு

என்பதற்குப் பொறுப்பேற்பதாக உறுதியளித்தது.

நடைமுறைச் சொற்களில், அரசின் மிகக்குறைந்த குறுக்கீடு என்பது: நிலச்சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு,

பெருந்தொழில் உற்பத்தியில் அரசுத்துறை ஈடுபடுவதற்கு எதிர்ப்பு,

குறைந்த வரிகளுக்கு ஆதரவு,

குறைந்த அரசுச் செலவினங்கள்,

எல்லையற்ற தனிமனிதர் சொத்துரிமை,

அரசாங்க அதிகாரத்தை எல்லைக்குள் வைத்தல்

என்பதாகும். அரசியல் தளத்தில், அக்கட்சி காந்தியின் தர்மகர்த்தா முறையை ஆதரித்தது. அதன்படி பணக்காரர்களும் வசதியாகப் பிறந்தவர்களும் தங்கள் பணத்தை ஏழைகளின் சேவைக்குப் பயன்படுத்தவேண்டும். இவை யாவும் சுதந்திரச் சந்தைக் கொள்கையோடு சேர்ந்து, செல்வத்தை மறுவிநியோகம் செய்வதில் அரசின் பங்கை இல்லாததாக்கி, வெறும் காவல்காரன் என்ற நிலைக்கு அதைக் குறைத்தது.

இந்தச் செவ்வியல் தாராளவாதக் கொள்கைகளுக்கு இன்று புத்துயிர் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திராக் கட்சி முதலில் இவற்றை முன்மொழிந்தபோதும், அவற்றின் அளவில் எந்தத் தவறும் இல்லை என அமெரிக்கப் பொருளாதாரம் சார்ந்தோர் நம்பினர். [ரஷ்யாவின் சோஷலிசச் சோதனைகளின் தோல்வியில் நாம் கற்றுக்கொண்டது, சந்தைகளுக்கு எதிர்வினை புரியும் எவ்வித அமைப்பும் இல்லாவிட்டால், தடைகளும் சமநிலைப்படுத்தலும் இல்லாவிட்டால், அரசுத்துறை நிறுவனங்கள் தாமாகவே திறனற்றவையாக, ஊழல் நிறைந்தவையாக, ஆதிக்கம் செய்பவையாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது என்பதைத்தான்.]

சுதந்திராக் கட்சி, இந்தியாவின் சமூக, கலாச்சார யதார்த்தங்களுக்குத் தொடர் பற்ற பொருளாதார தாராளவாதத்தின் எல்லைகளைத் தெளிவாகக் காட்டுகிறது. சாதி, வர்க்க அமைப்புகள், சமத்துவமின்மை, சுரண்டல், ஆகிய பிரச்சினைகளைச் சந்திக்க நேரும்போது அவை லோகாயதரீதியாகத் தீர்க்கப்படாமல், கடமை, ஒருங்கிசைவு, தர்மகர்த்தாத் தன்மை போன்ற ஆகாயக் கனவுகளால் தீர்க்கப்பட முடியும் என்று நம்புகின்ற பிற்போக்குப் பாரம்பரிய வாதத்தில்தான் தாராள வாதம் முடிவடையும் என்பதை சுதந்திராக் கட்சி காட்டுகிறது.

தனது காலத்திலேயே சுதந்திராக் கட்சி, வகுப்புவாத, பாசிஸப் போக்குகளை வளர்ப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இன்று அதைப் பின்னோக்கிப் பார்த்து, “சுதந்திராக் கட்சித் தலைவர்கள் இந்து தேசியவாதக் கருத்தியல்மீது பரிவுடையவர்கள், இந்து மத, கலாச்சார நிறுவனங்களில் ஊக்கத்தோடு செயல்பட்டவர்கள்” என்று சிலர் வருணிக்கின்றனர். ஆனால் உண்மையில் இது தவறு.

சுதந்திராக் கட்சியைப் பற்றிய மிகச் சிறந்த ஆய்வின் ஆசிரியரான ஹோவர்ட் எர்ட்மன், “அந்தக் கட்சியின் தலைவர்கள் முழுஅளவில் பிற்போக்காளர்களாகவோ, தீவிர தேசியவாதிகளாகவோ இல்லை. அது எவ்வித வகுப்புவாத அல்லது குறுகிய இலட்சியங்களையும் முன்வைக்கவில்லை. அதை ஒரு ‘வகுப்புவாதக்’ கட்சி என்று சொல்வது தவறு. பாகிஸ்தானுடன் சமாதானமாகச் செல்லவேண்டும், முஸ்லிம்களின் காரணங்களுக்காக ஆதரவு வேண்டும் என்று அதன் தலைவர்கள் விரும்பினர். சுதந்திராக் கட்சி மதச்சார்பற்ற தன்மையிலும், அரசியல் அமைப்பின் செயல்பாடுகளைக் கடைப்பிடிப்பதிலும் உறுதியாக இருந்தது” என்று கூறுகிறார்.

Mr.Munshi/June,50,A32(m) The Hon'ble Shri K.M. Munshi.சி. இராஜகோபாலாச்சாரியும், கே. எம். முன்ஷியும் தீவிர இந்துக்கள் என்பதும், அரசியல் கூட்டங்களில் அவர்கள் பிரார்த்தனைகளையும், வேதம், பகவக்கீதை பற்றிய உரைகளையும் அறிமுகப்படுத்தினர் என்பதும் உண்மை. ஆனால் மதத் தன்மையை இவ்விதம் வெளிப்படுத்துவதைக் கட்சியின் பிற உறுப்பினர்கள் விரும்பவில்லை. அவர்களில் பெரும்பான்மையினர், மதச்சார்பு அற்றவர்களாகவும், பொதுவாழ்வு-தனிப்பட்ட வாழ்வு என்பதைப் பிரித்துநோக்கும் கொள்கையை மதிப்பவர்களாகவும் இருந்தனர். இந்து தேசியவாதிகள் வழக்கமாகச் செய்வது போல, இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக நிறுத்தி, நாட்டை மத அடிப்படையில் அவர்கள் வரையறுக்கவில்லை. யாவற்றுக்கும் மேலாக, காந்தியப் பொருளாதார திட்டமான கைத்தொழில் முன்னேற்றம், பாரம்பரியத் தொழில்நுட்ப முன்னேற்றம் என்பதை அவர்கள் ஆதரிக்கவில்லை. மாறாக, நவீனமாகிய பெருந்தொழில், விவசாயப் பகுதிகளில் தொழில்களின் சுதந்திரம் என்பதற்கு ஆதரவாக நின்றனர். அவர்களுடைய சமூக, அரசியல் நிலைப்பாடுகளில் அவர்களை ‘மிதவாதிகள்’ என்றழைப்பதே பொருத்தமாகும்.

இருப்பினும், சுதந்திராக் கட்சி, தன் காலத்தில் மிகப் பழமைவாத, பிற்போக்குக் கட்சிகளான ராம் ராஜ்ய பரிஷத், இந்து மகாசபை, ஜனசங்கம் போன்றவற்றோடு அரசியல் கூட்டு வைத்திருந்தது. ஏன் இப்படிப்பட்ட தாராளவாதத்திற்கெதிரான குழுக்களுடன் அது சேரவேண்டும்?

இன்றைய பெரும்பாலான நவதாராளவாதிகளைப்போல, சுதந்திராக் கட்சியினரும் அரசுக் குறுக்கீட்டினால் ஏற்படும் தீமைகள், திறனின்மைகள் மீது தங்கள் வெறுப்பினைக் கொட்டினர். ஆனால், நமது கலாச்சார மரபுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தாராளத் தன்மையின்மை, அநீதி ஆகியவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டனர். அவற்றின்மீது சிறிதளவு கவனத்தையும் செலுத்தவில்லை. அரசு சார்ந்த சமதர்மத்தை எதிர்ப்பதில் ஒரே குறியாக இருந்த காரணத்தினால், சுதந்திராக்கட்சியின் தாராளவாதிகள், “பழைய சமூக முறைமையின் மூச்சடைக்கும் தீமைகள் பலவற்றை அவர்கள் எதிர்த்துப் பேசவில்லை. வலதுசாரியின் பக்கமுள்ள சுதந்திரத்தின் அபாயங்களை எதிர்த்தும் பேசவில்லை.”

மிகவும் கொடிய ஏழ்மையில் ஆழ்ந்திருந்த, தாங்கள் தேர்ந்தெடுத்த அரசின் உதவிக்கரத்தை வரவேற்ற, பெரும்பாலான வெகுமக்கள் மத்தியில் தங்கள் சுதந்திரச் சந்தை பற்றிய நம்பிக்கை எடுபடவில்லை என்பதை சுதந்திரா உறுப்பினர்களே புரிந்து கொண்டனர். வெகுமக்களைத் துன்புறுத்திய பலவிதமான சமமின்மைகளுக்கு நிஜமான தீர்வுகளை வழங்காமல், அவர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு சுதந்திராக் கட்சி, மதத்தில் புகுந்துகொள்வதையும், காந்தியின் பழைய தர்மகர்த்தாக் கொள்கையைச் சற்றே மாற்றி ஏற்றுக்கொள்வதையும் தவிர வேறு வழி தரவில்லை.

இந்தியாவிலுள்ள சாதி மதம் சார்ந்த அநீதிகளுக்கான மூலங்களைத் தேடமுடியாமல் அல்லது விரும்பாமல் சுதந்திராக் கட்சி அவற்றை ஆன்மிகத் தளத்தில் தீர்க்கமுயன்றது. ஏழைகளாக இருந்தாலும், மரபான இந்துச் சமூகம் அவர்களின் ஆன்மிகத்தை மதிக்கிறது என்றார்கள் அக்கட்சியினர்.

கொடுமையான அரசாங்கக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்ட தனியார் தொழில்கள், உயர்ந்த ஆன்மிக மதிப்புகளால் வழிநடத்தப்படும், தங்களுடைய செல்வத்தைப் பொதுநன்மைக்கு அவை பயன்படுத்தும் என்று கூறியது சுதந்திராக் கட்சி.

Siragu-indhiya-porulaadhaaram-fi

பொருளாதாரம் பற்றிய நம் வரலாற்றை மறுபடியும் தொடரலாம்.

சுதந்திராக் கட்சி, 1960களில் ஜனசங்கத்துடன் தேர்தல் கூட்டு வைத்துக் கொண்டது. தனது சுதந்திரச் சந்தைக் கருத்தை வெற்றியின்றி மேடையேற்றியது. இதனால் ஜனசங்கத்துக்கு ஏழைகளுக்கு எதிரான பணக்காரர்களின் கட்சி என்ற பெயர் கிட்டியது. சுதந்திராக் கட்சியுடன் ஏற்பட்ட தொடர்பினால், சங்கப் பரிவாரத்தின் இன்றைய தலைமை சுதேசி பற்றியதான காந்திய மொழியில், தான் ஆதரவளிக்கும் உலகமயத்திற்கான ஆதரவை ஒரு பகுதியளவேனும் மறைத்துக்கொள்கிறது.

சுதந்திராக் கட்சியின் புது அவதாரமாக, 2005இல் புதிதாக நிறுவப்பட்ட இந்திய லிபரல் கட்சியும் அதன் முன்னோடி சந்தித்த அதே எதிர்ப்புநிலைகளை எதிர்கொண்டது. இந்தியாவிலிருந்து ‘சமதர்மத்தையும் குருட்டுப் பிடிவாதத்தையும் ஒழிக்க வேண்டும்’ என்று அப்புதிய கட்சி விரும்பியது. இந்தக் கட்சிக்காரர்களுக்கும் பாகிஸ்தான், இஸ்லாம், அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக எந்த வெறுப்பும் கிடையாது. எவ்வித இனவாதக் கோரிக்கைகளையும் அவர்கள் முன் வைக்கவில்லை. தனிப்பட்ட ஆதாயத்துக்கான இந்தியத் தொழில் முனைவுக்கு ஆதரவளிக்கவும், ஆசீர்வதிக்கவும் அவ்வப்போது இந்துப் புனித நூல்களான மனுஸ்மிருதியையும், அர்த்த சாஸ்திரத்தையும் மேற்கோள்காட்டினாலும், நவதாராளச் சந்தைச் சீர்திருத்தங்கள்மீது அவர்களின் ஈடுபாடு ஒரு மதவாத நோக்கு அற்ற தன்மையையே கொண்டுள்ளது.

இந்த முதல்கால கட்டத்திலேயே சுப்பிரமணிய சுவாமியைப் பற்றியும் குறிப்பிடவேண்டும். இந்து மறுமலர்ச்சி, சுதந்திரச்சந்தை இவைகளுக்கென ஒற்றை ஆளாகப் போராடுபவர் அவர். ஹார்வர்டில் படித்த பொருளாதாரவாதி. சுப்பிரமணிய சுவாமி (பி. 1939) 1960களில் முதல்முதலாக ஜனசங்கத்தில் சேர்ந்தார். பிறகு ஜனதாக் கட்சியை உருவாக்க அதிலிருந்து வெளியேறினார். புதுதில்லியில் தேசிய மறுமலர்ச்சிக்கான மையம் என்ற ஒரு சிந்தனை அமைப்பை இயக்கினார். ஆர்எஸ்எஸ்ஸின் வார இதழான ‘தி ஆர்கனைசர்’ என்பற்குத் தொடர்ச்சியாகப் பத்திகள் எழுதி வருபவர்.

பொருளாதார வளர்ச்சியை இந்து மறுமலர்ச்சியோடு இணைப்பதுதான் சுவாமியின் திட்டம். தன் சகாக்களைப் போலவே, பகவத் கீதையிலும் வேதங்களிலும் மூழ்கும் கட்டாயப் பணியை அவரும் செய்தார். இந்து மேதைமை ஒன்றிணைப்புக்கு உதவுவது என்று கூறிய உபாத்யாயாவைப் போல அல்லாமல் அவர், இந்து அறிவுச்சூழல் தனிமனிதருக்கானது, சுதந்திரச் சந்தைகளையும் குறைந்தபட்ச அரசையும் வரவேற்கக்கூடியது என்று அறிவித்தார்.

1960களின் பிற்பகுதியிலும், 1970களின் தொடக்கத்திலும், இந்து மறுமலர்ச்சியுடன் கூடிய சுதந்திரச் சந்தைகளுக்கான அவருடைய பெரிய திட்டங்கள் எங்கும் செல்லுபடி ஆகவில்லை. 2005இல் அவர் எழுதிய ‘இந்திய மறுமலர்ச்சியின் புதிய அடிப்படைகள்’ என்ற நூல், அவருடைய தோல்வியுற்ற ‘இந்து மறுமலர்ச்சித் திட்டம்’ என்பதை உயிர்ப்பிப்பதுபோலத் தோன்றுகிறது. இந்தத் திட்டத்தை, இந்திரா காந்தி 1969இல் ஒரு ‘கோமாளி எழுதியது’ என்று கூறினாராம். இவரைப் பற்றிப் பின்னரும் காண்போம்.

சுயசார்பும் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியும் கொண்ட நேரு காலத்தை அதன் சொந்த வெற்றிகளும் தோல்விகளுமே முடிவுக்குக் கொண்டுவந்தன.

நவதாராளமயமாக்கல் (நியோலிபரலிசம்) என்றால் என்ன?

Siragu Economy1

நவதாராளமயம் என்பது, நவசெவ்வியல் தாராளவாதம் என்பதன் சுருக்கம். தாராளவாதம் (லிபரலிசம்) என்ற மரபு நவீன பொருளாதாரத்தின் பல நூற்றாண்டுச் சிந்தனைகளிலிருந்து வருவதாகும். இது ஜான் லாக் (1632-1704), ஆடம் ஸ்மித் (1732-90), டேவிட் ரிக்கார்டோ (1722-1823) ஆகியவர்களின் எழுத்துகளிலிருந்து பெறப்பட்டது. தடையற்ற வணிகச் சக்திகள் ‘இயற்கையாகவே’ சமூகத்திற்கு வளத்தையும் சமாதானத்தையும் அளிக்கும் என்ற உறுதியை இக்கொள்கை வழங்கியது. தாராளவாதத்தின் அடிப்படைக் கொள்கை, தலையிடாக் கொள்கை (Laisses’ Faire Policy அல்லது ‘தங்கள் விருப்பப்படி மக்கள் செய்வாராக’ என்ற கொள்கை). தடையற்ற சந்தை என்ற நோக்கின் ஒரு பகுதி, வணிகத்திற்கு தேசத்தடைகளை நீக்குதல் ஆகும். இத்தடைகள் மூல வளங்களைத் திறம்பட முதலாளிகளுக்குள் ஒதுக்கிக்கொள்வதில் குறுக்கிடு கின்றன என்று மேற்கண்ட பொருளாதாரவாதிகள் கருதினர்.

தாராளவாதம் தோன்றிய பதினெட்டாம் நூற்றாண்டில், சிறுமுதலாளிகள் நிர்வகித்த சிறிய தொழில்கள்தான் இருந்தன, பணியாளர்களும் நுகர்வோரும் ஒரே சமுதாயத்தில், பிரதேசத்தில், நாட்டில் வாழ்ந்தனர். ஏறத்தாழப் பழங்கால வணிக அமைப்புதான் இருந்தது. நவதாராளவாதிகள் (நியோலிபரல்கள்) என்போர், இந்தப் பதினெட்டாம் நூற்றாண்டுச் சிந்தனையை மிக வேறுபட்ட இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப்பெரிய உலக முதலாளித்துவத்திற்குப் பொருத்துகின்றனர். ஆனால் இப்போது, தொழிலுக்குச் சொந்தக்காரராக இருத்தல், உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றுக்கான உள்ளூர், உள்நாட்டுத் தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிட்டன என்பதை இவர்கள் கவனத்தில் வைக்கவில்லை.

(தொடரும்)


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி – 2”

அதிகம் படித்தது