மார்ச் 28, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி -4

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Aug 13, 2016

கட்டம் 3: நவதாராளமயமாக்கம், 1991 முதல்
(தொடர்ச்சி)

இப்படிப் பொருளாதாரத்துக்குச் சக்தியை அளித்தாலும், 1996 தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றது. பின்னர் குறுகிய கால அரசாங்கங்கள் சில அமைந்ததன் பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) முதன்மைக் கட்சித்தலைவரான அடல் பிஹாரி வாஜ்பேயி, 1999 அக்டோபர் 13 அன்று பிரதமர் ஆனார்.

பி ஜே பி அரசு

Siragu Economic - India1

சுதேசி, ஒருங்கிணைந்த மானிடம் என்ற மூன்றாவது வழி ஆகியவற்றின்மீது விசுவாசம் கொண்டதாகக் காட்டிக் கொண்டாலும், பிஜேபி தலைமை தாங்கிய என்டிஏ அரசாங்கம், 1991இல் காங்கிரஸ் அரசாங்கம் இயக்கிவிட்ட நவதாராளமயச் சீர்திருத்தங்களை மிகுந்த உற்சாகத்தோடு முன்னெடுத்துச் சென்றது.

அதிகாரத்தில் இல்லாத காலத்தில், பிஜேபி, உள்நாட்டு தாராளமயமாக்கல் (அதாவது, தனியார்மயமாக்கல்) என்பதைத் தான் ஆதரிப்பதாகவும், அயல்நாட்டுப் போட்டியிலிருந்து இந்தியப் பெருவணிகங்களைக் காப்பாற்றும் நோக்கில் அயல்நாட்டு தாராளமயமாக்கலை (அதாவது, உலகமயமாக்கலை) எதிர்ப்பதாகவும் விளக்கம் கூறியது.

ஆனால் அதிகாரத்துக்கு வந்துவிட்ட நிலையில், தனது இந்தியத் தொழில் பாதுகாப்புக்கொள்கையை அது கைவிட்டது, பொருளாதாரத்தின் முக்கியப் பகுதிகளான நுகர்வோர் பொருட்கள், மின் உற்பத்தி, தகவல்தொழில்நுட்பம், காப்பீட்டுத் தொழில்துறை ஆகியவற்றையும் அயல்நாடுகளுக்குத் திறந்துவிட்டது, அறிவுத்துறை உரிமைச் சட்டங்களையும் தாராளப்படுத்தியது. எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக, பிஜேபி அரசாங்கம், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட, கல்வித்துறைத் தனியார்மயமாக்கலை எல்லாத் தளங்களுக்கும் கொண்டுசென்றது.

உயர் கல்வியை மதத்துறை உள்ளிட்ட தனியார் துறைக்குத் திறந்துவிட்டமை, மிகப் பெரிய ஊழல் நிகழ்வதற்கும், மக்களை பெரிய அளவில் சுரண்டுவதற்கும் ஏற்ற நிலையை உருவாக்கியது என்பதை நாம் விரிவாகப் பின்னர் ஆராய்வோம்.

நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக, 1991இல் பொதுத்துறை நிறுவனங்களை அரசாங்கம் விற்கத் தொடங்கியது. ஆனால் மெதுவாக, மூலதனநீக்கம் தனக்கென ஓர் உயிர்கொண்டது. பிஜேபி தலைமை தாங்கிய என்டிஏ அரசு, “இனிமேல் மூலதன நீக்கம் ஒரு தேர்ந்தெடுப்பு அல்ல, அது ஒரு கட்டாயம்” என்று அறிவித்தது. மூலதன நீக்கத்திற்கெனவே ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கி, நன்கறியப்பட்ட ஒரு பத்திரிகையாளரும், இந்து ஆதரவாளருமான அருண் ஷோரியிடம் அதன் பொறுப்பை விட்டது. மொத்தத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மேலும் மேலும் அரசுத் துறைகளின் பெரும்பகுதிகளை, இந்தியாவைச் சேர்ந்தவையோ, அயல்நாட்டவையோ, தனியார் நிறுவனங்களுக்கு விற்பதை எளிமையாக்கியது. அணுசக்தி, இராணுவம், இரயில்வே தவிரப் பிற அனைத்தும் போர்த்திறம் சாராதவை, எனவே தனியார் மயமாக்கத்திற்குத் தகுதியானவை என விடப்பட்டன.

மீண்டும் காங்கிரஸ்

Siragu Economic - India2

“இந்தியா ஒளிர்கிறது” என்று கூறிக் கொண்டபோதும், 2004 தேர்தலில் தேசியஜனநாயகக் கூட்டணி தோற்றது. காங்கிரஸ் தலைமை தாங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தலைமை ஏற்றது. நவதாராளவாதத்தின் சிற்பியாகிய மன்மோகன் சிங்கை கட்சி, புதிய பிரதமராகத் தேர்ந்தெடுத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 1991இன் பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றியது. அதன் விளைவுகள்

அதிக ஜிடிபி (உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி,

சமமின்மைகள் ஆழமாதல்,

ஐ.நா.வின் மனித வளர்ச்சிக் குறியீட்டின் அளவையில் இந்தியா, ஏற்கெனவே தானிருந்த பரிதாபகரமான 127ஆம் நிலையிலிருந்து 132க்கு நழுவியமை எனப் பலதரமாக இருந்தன

2009 பொதுத்தேர்தல்கள், உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியின் இடையில் நிகழ்ந்தது. 1929இன் பெருஞ்சரிவுக்குப் பிறகு பார்த்திராத அளவு இது. இவ்வளவு காலம் வரை அமெரிக்கர்கள், உலகின் பிறபகுதிகளிலிருந்து சரக்குகளையும் சேவைகளையும் வாங்கும் பெருநுகர்வோராக நடத்தப்பட்டு வந்தவர்கள், கடனில் மூழ்கத் தொடங்கினர். இதனால் அமெரிக்கச் சந்தை நொறுங்கியது. தன்னுடன் அது அமெரிக்க அடமானச் சந்தையில் முதலீடு செய்திருந்த பெரிய பன்னாட்டு நிறுவனங்களையும் வங்கிகளையும் இழுத்துக்கொண்டு போயிற்று. அதன் அலைகளின் தாக்கத்தை உலக முழுவதிலும் உணரமுடிகிறது. உலக நுகர்வோர் தேவை குறைந்ததனால், பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்; வங்கிக் கடன்கள் உறைகின்றன; புதிய முதலீடுகள் வருவதாகத் தெரியவில்லை.

நவதாராளமய சித்தாந்தத்தின் ஒவ்வொரு விதியும், அதாவது தடையற்ற சந்தைகள் நல்லவை, அரசாங்க ஒழுங்குமுறைகள் தீயவை, தேசிய நலன்கள் தீயவை என்பவை இப்போது கேள்விக்குள்ளாகியுள்ளன.

Illustration of a graph where the figures suddenly fall through the floor

இந்தியப் பொருளாதாரமும் இந்த நெருக்கடிக்கு விலக்கல்ல. சமீபத்திய பொருளாதாரத் தரவுகள் மோசமாக உள்ளன. அரசாங்கத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2007இன் இறுதிக் கால்பகுதியில் 8.9ஆக இருந்தது, 2008இன் அதே காலப்பகுதியில் 5.3ஆகக் குறைந்துபோயிற்று. 2008இன் கடைசி நான்கு மாதங்களில் பொருளாதாரம் 5 லட்சம் வேலைகளை இழந்தது. ஏற்றுமதிப் பகுதியில், மரபுசார்ந்த உடைகள், வைரங்கள், பிற கற்கள், ஆபரணத்துறை முதலாக நவீன தகவல் தொழில் நுட்பம் மற்றும் நிதித்துறை வரை, மிகுதியான பணிக்குறைப்புகளைச் சந்தித்தன. ஏற்றுமதி சாராத துறைகளான வீடு-மனைத் துறை, கட்டுமானம், தானியங்கித் தொழில் ஆகியவற்றையும் சரிவு விட்டுவைக்கவில்லை. அண்மையில் வெளிவந்த நியூயார்க் டைம்ஸின் ஓர் அறிக்கைப்படி, சமீபத்தில் பத்து லட்சம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள தனியார் பாதுகாப்புத்துறையில் மட்டுமே வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்தியாவின் பெருவணிக வளாகங்கள், கூட்டுக்குழும அலுவலகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஏன், நகர்ப்புறப்பகுதிகளின் அரசுப் போக்குவரத்துத் துறையிலும் தகராறுகளைச் சமாளிக்க இவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே ஆழமாக இருக்கும் வகுப்புப் பிரிவினைகள் மேலும் ஆழமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தும், காங்கிரஸ் தலைமை தாங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2009 தேர்தல்களில் வெற்றிபெற்றது. ‘ஆம் ஆத்மி’க்கு (சாதாரண மனிதனுக்கு) அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும், வாக்காளர்கள் நிலையான ஆட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்று தோன்றியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வெற்றி, மேலும் சந்தைக்கு ஆதரவான சீர்திருத்தங்களை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவதாராளமயம் நிலைத்து நின்றுவிட்டது.

2014 தேர்தல்களில் நிலைமை மாறி, தனிப்பெரும்பான்மை பலத்தோடு பிஜேபி அரசு மோடியின் தலைமையில் பதவி ஏற்றிருக்கிறது. தாராளமயம் மேலும் தாராளமாகியுள்ளது.

வளரும் ஏற்றத்தாழ்வு

ஏறத்தாழக் கால்நூற்றாண்டின் ‘புகழ்பெற்ற’ சீர்திருத்தங்களுக்குப் பிறகும், கீழ்நோக்கிச் செல்வம் பெருமளவு செல்லவுமில்லை. நல்ல வேலைவாய்ப்புகளின் வாயிலாக ஏழைகளை மேல்நோக்கி ஈர்ப்பதும் நிகழவில்லை. ஏதாவது வளர்ச்சி என இருப்பின், அது நடுத்தர வர்க்க, உயர்வருமானக் குழுக்களின் செல்வ வளர்ச்சி தான். அது பிறரின் ஏழ்மை வளர்வதால் நிகழ்கிறது.

நன்கறியப்பட்ட இந்தியப் பொருளாதார வல்லுநர் அமித் பாதுரியின் கூற்றுப்படி, “ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு, வளர்ச்சியை ஊக்குவிக்கிறது; வளர்ச்சி அதிகரிப்பு மேலும் ஏற்றத்தாழ்வை ஊக்குவிக்கிறது”.
கீழ்வரும் இருவித ஆதாரங்களை நோக்குவோம்.

ஃபோர்ப்ஸ் நிறுவன உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியா உயர்ந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் ஐ.நா.வின் மனித நல்வாழ்வின் உலகவரிசையில் சரிந்து வருகிறது. 2008இல் இந்தியாவில் 53 டாலர் கோடீஸ்வரர்கள் (அதாவது அமெரிக்க ஐக்கிய நாட்டு அளவில் 1,000,000,000 டாலர்களுக்கு மேல் ரூபாய் மதிப்பில் சொத்துள்ளவர்கள்) இருந்தனர். இதற்குமுன் 2007இல் இப்படிப்பட்டவர்கள் 40 பேர் இருந்தனர்; 2004இலோ 9 பேர்தான் இருந்தனர். வேறெந்த ஆசிய நாட்டையும் விட-சீனாவை விட, ஜப்பானை விட, இந்தியாவில்தான் பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். அடுத்த அளவில் சிறுகோடீஸ்வரர்கள் உள்ளனர்.

Siragu Economic - India8

மெரில் லிஞ்ச்/ கேப் ஜெமினி அறிக்கை, இந்தியாவில் சிறு கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2007 இல் ஒரு லட்சம் பேர். அது ஆண்டுதோறும் 20 சதவீத அளவு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இப்படிப்பட்ட செல்வர்கள் பெருக்கத்தைவிட இது இருமடங்காகும். இந்தச் செல்வ வளர்ச்சியின் பெரும்பகுதி ஏற்கெனவே அயல்நாட்டு இரகசிய வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுவிட்டது. சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இரகசியப்பணமான 2.2 டிரில்லியன் டாலரில் (220 இலட்சம்கோடி டாலரில்) 1.45 டிரில்லியன் டாலர் (145 இலட்சம் கோடி டாலர்) இந்தியர்களுக்குச் சொந்தமானது என்று அண்மைக்கால அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தக் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதாகத் தேர்தல் வாக்குறுதி அளித்த பிரதமர் மோடியால் ஒன்றும் செய்ய இயலாத நிலையையே காண்கிறோம். சுவிஸ் வங்கிகளில் மிக அதிக அளவில் இரகசியக் கணக்கு வைத்திருக்கும் (ரஷ்யா, பிரிட்டன், உக்ரேய்ன், சீனா, இந்தியா) ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியா தலைமை வகிக்கிறது.

இப்படிப் பெருஞ்செல்வம் குவிந்து கொண்டிருக்கும் அதே வேளையில், இந்தியா மனித வளர்ச்சி அளவுகோலின் புள்ளியில் (எச்டிஐ) வீழ்ந்து கொண்டிருக்கிறது. உடல் நலம், கல்வி, வருவாய் ஆகிய மூன்று பரிமாணங்களில் மனித நல்வாழ்வை அளக்கும் புள்ளி இது. அனுபவமிக்க இதழியலாளரான பி.சாய்நாத் தொகுத்த புள்ளிவிவரத்தின்படி, 177 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா, ஏற்கெனவே 2000இல் தானிருந்த பரிதாபகரமான 124ஆம் இடத்திலிருந்து 2001இல் 127ஆம் இடத்துக்கும், 2008இல் 132ஆம் இடத்துக்கும் சரிந்தது. இவை மனச்சோர்வை அளிக்கும் தகவல்கள்.

இவை, இந்தியாவைத் தான் விரும்பும் வல்லரசுகளின் பட்டியலில் சேரவிடவில்லை. மாறாக, உலகத்தின் மிக ஏழ்மையான நாடுகள் சிலவற்றின் குழுவில் சேர்க்கிறது. 128 புள்ளியாக இருந்தபோது, இந்தியா, நிலநடுக்கோட்டு கினி தீவை (127)விடப் பின்தங்கியும், சாலமோன் தீவுகளை (129) விடச் சற்றே மேலும் இருந்தது. தனது நெருங்கிய போட்டியாளர்களைவிடவும் இந்தியா மிக மோசமாகப் பின்னடைந்துள்ளது. 2007இன் மனித வளர்ச்சி அறிக்கையின்படி, பிரேசில் 70ஆம் இடத்திலும், ரஷ்யா 67ஆம் இடத்திலும், சீனா 81 ஆம் இடத்திலும் உள்ளன. (2000இல் 99ஆம் இடத்திலிருந்த சீனா, வியத்தகு வளர்ச்சியைப் பெற்று முன்னேறியுள்ளது.)

இந்தியாவின் வறுமையை அளக்கப் பலவித மேலாய்வுகள் உள்ளன என்றாலும், அவை முறையியல் சார்ந்த விவாதங்களுக்குள் மூழ்கிப்போயின. ஆனாலும், ஆங்கஸ் டீடன், ழான் ட்ரெஸி ஆகியவர்களின் மிக மதிப்புக்குரிய ஆய்வுகளில் ஒன்றை மேற்கோள் காட்டலாம்.

“நமக்குக் கிடைக்கும் பரந்த நோக்கில், பல மாநிலங்களிலும், முழு இந்தியாவிலும்கூட, தொடர்ந்து வறுமை இறக்கம் காண்பதாக இருக்கிறது….ஆனால் ஏழைகள், ‘மிகதீவிர ஏழ்மை’ அல்லது ‘ஏழ்மை’ நிலையிலிருந்து பொருளாதாரத்தின் அமைப்புறாத பகுதியை உருவமைக்கும் ஏழை உழைப்பாளிகளின் சமுத்திரத்தில்தான் கலக்க முடியும் என்று தோன்றுகிறது.”

அதிகாரப்பூர்வமான வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பினும், இந்திய மக்கள் தொகையின் இந்தப் பிரிவினர்-2004-2005இல், ஏறத்தாழ 83.6 கோடி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஒரு நாளுக்கு இருபது ரூபாய் வருமானத்தில், அதுவும் எவ்விதச் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் நிழலும் இன்றி, வாழ்பவர்கள் [இது அப்போதைய டாலர் மதிப்பில் அரை டாலர், இப்போது மூன்றில் ஒரு டாலருக்கும் குறைவு].

Siragu Economic - India4இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏழைகளுக்கு இறங்கி வரவில்லை, அண்மைக்காலத்தில் வரவும் வராது என்பதற்கு அதற்குள்ளாகவே அமைந்துள்ள காரணங்கள் உள்ளன. தகவல் தொழில் நுட்பம் இயலச் செய்துள்ள சேவைப் பகுதியில்தான் பெரும்பாலான வளர்ச்சி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்கு, ஆங்கிலத்தில் பேச்சுச் சரளம், மேற்கத்திய பெருவணிகத் தொழில்களிலும், கலாச்சார முறைமைகளிலும் பரிச்சயம் ஆகியவை தேவை. இவை சாதாராண வெகுமக்களுக்குக் கிடைப்பதில்லை. இந்திய உற்பத்தித்துறை கல்லூரிக்குச் சென்று கல்விபெறாத, தனித்திறனற்ற உழைப்பாளர்களை மரபாக ஏற்றுக்கொண்டு, மத்தியதர வகுப்பினரின் ஊதியப் பாதையில் செல்ல வைத்தது. அது இந்தியாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியில் 16 சதவீதப் பங்குதான் வகிக்கிறது. (சீனாவில் இது 35 சதவீதம்). இந்தப் பகுதி, (கணினி போன்ற) தானியங்கி எந்திரங்களின் வருகையாலும், அண்மைக்கால பொருளாதார இறக்கத்தினாலும், மக்களுக்கு வேலைதரமுடியாத ஒரு வளர்ச்சியையே கொண்டுள்ளது.

இந்த விவரங்கள், நிலைமையின் ஒருபுறத்தையே நமக்குக் காட்டுகின்றன. தனியார் துறை மிகப்பேரளவிலான நிலங்களைக் கவர்ந்துகொண்டமை இன்றைய நிலைமையாக உள்ளது. இதற்கு அரசும், வளர்ச்சி என்ற பெயரால் உதவிசெய்துள்ளது. இதற்கு “வளர்ச்சிசார் பயங்கரவாதம்” என்றே பெயரிட்டுள்ளனர்.

-தொடரும்


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி -4”

அதிகம் படித்தது