மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியாவின் கொள்கை அமைப்பும், மலச்சிக்கல் கொண்ட நாயும்

ஆச்சாரி

Mar 29, 2014

ஒரு மத்திய அரசு ஊழியர். புதிதாக ஒரு வீட்டில் குடியேறினார். அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒருவர் நாய் வளர்த்தார். இவருக்கு நாய் என்றால் விருப்பம். அதனால் அவர் எப்படியோ அந்த நாயுடன் பழகி நெருக்கமாகிவிட்டார். அந்த நாயும் அவருடன் அதிக பாசத்துடன் இருந்தது. அவர் வீட்டுக்கு வரும் பொழுதெல்லாம் வாலைஆட்டி தன் அன்பை காட்டியது. இப்படி சென்றுகொண்டிருந்தபொழுது திடீரென்று சில நாட்களாக அந்த நாய்க்கு உடம்பு சரியில்லை. அது முன்னை போல் குதூகலமாக இல்லாமல் படுத்த படுக்கையாய் இருந்தது. அதைப் பார்த்த அரசு அதிகாரிக்கு மிகவும் வருத்தம். அவர் பக்கத்து வீட்டுகாரரிடம் நாயின் உடல் நலத்தை பற்றி வினவினார். அவரோ கடந்த ஒரு வாரமாக  நாய் ஒழுங்காக மலம் கழிக்கவில்லை என்றார். மருத்துவரிடம் காண்பித்தும் பயன் இல்லை என்றார். உடனே அலுவலர் அதற்கு என்ன உணவு அளிக்கப்படுகிறது என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் வினவினார். அதற்கு நல்ல மாமிச உணவு மற்றும் கடைகளில் நாய்களுக்காக விற்கப்படும் ரொட்டியைக் காட்டி இதை தான் அளிக்கிறேன் என்றார். அதை வாங்கி பார்த்த அலுவலருக்கு அந்த ரொட்டியின் தயாரிப்பில் சந்தேகம் வந்தது.

அலுவலர் உணவு தரக்கட்டுபாட்டு அலுவலகத்தில் வேலை செய்பவர். அதை உடனே தரக்கட்டுப்பாடு சோதனைக்கு உட்படுத்தினார். அதன் முடிவில் ரொட்டியில் உள்ள ஒரு ரசாயனம் நாய்களுக்கு உகந்தது அல்ல என்று தெரிய வந்தது. உடனே அவர் அன்றே சென்று தன பக்கத்து வீட்டுக்காரரிடம் இந்த ரொட்டியை நாய்க்கு கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். நாயும் உடல் நலன் பெற்றது. இதை அறிந்த அந்த அரசு அதிகாரிக்கு மிக்கமகிழ்ச்சி. ஆனால் அதிகாரிக்கு இந்த ரொட்டியால் சமூகத்தில் மற்ற நாய்கள் பாதிக்கப்படும் என்று நினைத்தார். அதனால் அவர் தன்னுடைய மேலதிகாரியிடம் இது பற்றி முறையிட்டார். மேல் அதிகாரி இவர் மேல் கரிசனம் காட்டினாலும் இந்த ரொட்டியை தடை விதிக்க சரியான வழிகாட்டுதலும் உணவுக் கட்டுப்பாட்டில் கொள்கைகளும் தேவை. ஆனால் இதற்காக வருந்த வேண்டாம் கொள்கையை தீர்மானிக்கும் இடத்தில் நாம் இருக்கிறோம் அடுத்த வாரம் உணவுக் கட்டுப்பாடு அமைச்சகத்துக்கு போகும் கொள்கை பத்தோடு பதினொன்றாக இதையும் இணைத்துவிடுகிறேன் என்றார். ஓரிரு மாதங்களில் அமைச்சகத்தின் ஒப்புதலும் வந்தது. அன்றிலிருந்து நாய்களுக்கு தயாரிக்கும் ரொட்டிகளில் இந்த ரசாயனம் சேர்க்கப்படக் கூடாது என்ற அறிவிப்பையும் உணவுக் கட்டுப்பாடு அலுவலகம் கட்டுப்பாடு விதித்தது. அலுவலருக்கு மீண்டும் மகிழ்ச்சி.

தன்னால் இந்த சமூகத்தில் உள்ள நாய்களுக்கு நலமான வாழ்க்கை கிடைத்தால் மகிழ்ச்சி இருக்காதா பின்ன?

இந்தக் கதை வெறும் கற்பனையே ஆனால் இதுகொடுக்கும் உள்ளர்த்தம் ஒரு ஆழமான உண்மையை கொண்டது. அதாவது மத்தியஅரசு ஊழியனின் பக்கத்து வீட்டு நாய்க்கு மலம் வெளியேராததற்கு கக்கா போகாதற்கு கொள்கை அமைக்க முடியும் நாட்டில் நாம் நலமோடு உண்டுவாழ தன்னையே உருக்கி விவசாயம் செய்யும் ஒரு விவசாயி தற்கொலை செய்தால் அதைத் தடுக்கும் கொள்கையை  உருவாக்க நாதியில்லை.

இப்படி நாய்களுக்கு கொள்கை உருவாக்குவதிலிருந்து மீதம் நேரம் இருந்தால் மனிதனுக்கும் தப்பி தவறி கொள்கைகள் உருவாக்குவார்கள். இப்படி நாட்டுக்கு கொள்கை அமைக்காமல் வீட்டுக்கு அமைத்த கொள்கைகளை பற்றி பார்ப்போம்.

இந்தி ஆட்சி மொழி :

இந்தியாவை நிர்வகிப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு என்றுமே இந்தி தேவைப்பட்டதில்லை. அரசு நிர்வாகத்திற்கும் அது தேவைப்பட்டதில்லை. அரசியல் வாதிகள் குறைந்த பட்சம் பேசிக் கொள்வது பாராளுமன்றத்தில் தான். இங்கு கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் பேசுவது கிடையாது. வெகு சிலர் மட்டுமே அவர்களுக்கும் ஆங்கிலம் நன்றாகவே தெரியும். பாராளுமன்றத்திற்கு மட்டும் மொழிபெயர்ப்பாளரை வைப்பதில் இவ்வளவு பெரிய நாட்டிற்கு பெரிய செலவும் இல்லை. இருந்தும் இந்தி ஒரு ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் அரசியல் அமைப்பை எழுதிய மாமேதை அம்பேத்கரும் இதில் ஒரு முன்னாள் அரசு அதிகாரியாகவே செயல்பட்டார் எனலாம். இருந்தும் இந்தி ஆட்சி மொழியாக இருக்கவேண்டிய அழுத்தம் இந்திய சுதந்திரம் அடையும் முன்னரே அரசு அதிகாரிகளிடம் இருந்தது. இதற்கான முதன்மை காரணம் தங்களுக்கும் தங்கள் வாரிசுக்கும் இந்தியாவின் எந்த மாநிலங்களிலும் வேலை கிடைப்பதற்கான கட்டமைப்பை  (framework) உருவாக்கும் ஒரு முயற்சி என்றும் கூறலாம்.

நடுவண்  அரசு வேலைவாய்ப்பு  கொள்கை :

நடுவண் அரசு அலுவலர்கள் இந்தியாவின் எந்த இடத்திற்கும் சென்று வேலை செய்யும் நிலைமை உள்ளது. உண்மையில் இது நாட்டிற்கோ மக்களுக்கோ தேவையா என்றால் உறுதியாக தேவை இல்லை. ரயில்வேயில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றாலும் ஒரு மாநிலத்தில் வேலை செய்யமுடியும். இதனால் அதிகம் இழந்தது அந்தந்த மாநில மக்களே. உதாரணமாக இன்று தமிழகத்தில் இரயில்வே துறையில் அதிகம் வேலை செய்வது மலையாளிகள். முதலில் அதற்கான தேவை என்ன? தமிழகத்தில் உள்ள பணிகளை தமிழர்களுக்கே நடுவண் அரசு கொடுக்க முடியும் இதனால் எந்தவித நிர்வாக சிக்கலும் இல்லை. இந்த கொள்கையால் தமிழர்கள் வெறும் வேலை வாய்ப்பை மட்டும் இழக்கவில்லை. கூடுதலாக இன்று இரயில்களில் ஊர்களுக்கான இட ஒதுக்கீடு,  இரயிலின் வழித்தடம், கால அட்டவணை, இரயில்வே திட்டங்கள் என அனைத்துமே மலையாளிகளுக்கு சாதகமாகவே இருக்கிறது. நம் மாநிலத்தில் வசூலிக்கப்படும் பணம் கேரளத்துக்கே அதிகம் பயன்படுகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும்.

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE):

மிகப்பெரிய மோசடி இதுதான். இந்திய அரசு அலுவலர்கள் தங்களின் நலனை மட்டுமே பார்க்காமல் தங்களின் தலைமுறையினர் நலனையும் நன்றாகவே பார்த்துகொண்டனர். பல மாநிலங்களுக்கு பணிமாற்றம் செய்யப்படும் இவர்களுக்கு என்று நடுவண் கல்வி முறை இருப்பதில் தவறு இல்லை ஆனால் அந்த கல்வி முறையை மற்ற மாநிலங்களின் கல்வித்திட்டத்துடன் மேம்பட்டதாக வைத்துக்கொண்டதுடன் மேல்படிப்பு படிக்க எழுதும் நுழைவு தேர்வுகளை இந்தக் கல்வி முறையை சார்ந்தே வைத்துகொண்டனர். இன்றும் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி (IIT) போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இந்த கல்வி முறையில் படிப்பவர்கள் மட்டுமே செல்லமுடியும் என்ற நிலை உள்ளது. இந்த நடுவண் கல்வி என்பது இந்தி மொழியையும் முன்னிறுத்தியது. இந்த பள்ளிகளுக்கு அரசு அதிக நிதி உதவியும் கொடுத்து நல்ல ஆசிரியர்களையும் நியமித்தது. அதனால் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு மட்டும் நல்ல கல்வி கிடைக்கக்கூடிய நிலைமை உருவாகியது. அதிக ஊதியம், தங்கள் குழந்தைகளுக்கு மட்டும் தரமான கல்வி இது போன்று ஒரு நாட்டில் கொள்கை இருந்தால் யார் தொழில் செய்ய வருவார்கள் அல்லது விவசாயம் செய்யத்தான் நினைப்பார்களா?

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் :

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை முடிவு செய்ய ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை ஊதிய நிர்ணய ஆணையம் (Pay Commission) தலைவராக நியமிப்பர். அதாவது இந்த நாட்டில் அரசு ஊழியருக்கான சம்பளத்தை அரசு ஊழியர்களே தீர்மானிப்பர். இது இந்த நாட்டின் மிகப்பெரிய மோசடி என்றே கூறலாம். ஆரம்ப காலங்களில் இந்த ஆணையம் அரசு அலுவலர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை தீர்மானித்தது. பிறகு சிறிது சிறிதாக அரசு ஊழியர்களின் அழுத்தத்தால் குறைந்த பட்ச சம்பளம் அவர்களின் சொகுசான சம்பளமாக மாறியது. 1983 இல் அமைக்கப்பட்ட நான்காவது ஊதிய நிர்ணய ஆணையம் தீர்மானித்த அரசு ஊழியர்களின் சம்பளம் நாட்டின் பொருளாதார சுமையை ஏற்றியது. பிறகு 1994ல் அமைந்த ஐந்தாவது ஆணையம் இந்தியாவை திவாலாக்கி என்றும் மீள முடியாத கடனாளி ஆக்கியது.

வங்கியின் வட்டி விகிதம் :

இந்தியாவின் வட்டி விகிதம் என்றுமே குறைந்த பட்சம் 5 சதவீதத்திற்கு மேலாகவே இருந்துள்ளது. உலகில் அதிக வட்டிவிகிதம் கொடுக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. இந்த சதவீதம் பணத்தை போடுபவருக்கு என்றால் கடன் வாங்குபவர்களுக்கு குறைந்தது 10 சதவீதற்கு மேல் தான் வாங்கி தொழில் செய்யவேண்டும். மற்றபடி விவசாயிக்கும் இதே நிலைமைதான். 10 சதவீத வட்டியில் தொழில் செய்பவனுக்கும், விவசாயம் செய்பவனுக்கும் எந்த நிலையிலும் வங்கியின் வட்டி விகிதத்திற்கு மேல் இலாபம் எடுப்பது எளிமையானது அல்ல. இந்தக் கொள்கையால்தான் இன்றுவரை இந்தியத் தொழில் துறை முன்னேறாமல் உள்ளது. அதிலும் நம் மக்களிடம் தொழில்முனையும் (Entrepreneurship) நோக்கங்கள் இந்த அறுபது ஆண்டுகளில் ஏற்படவில்லை. இந்த வட்டிவிகிதத்தை குறைத்திருந்தால் நாம் வெளிநாட்டு முதலீடு இல்லாமலே தொழில்துறையில் சிறந்து விளங்கலாம். ஆனால் இந்த வட்டி விகிதம் குறைப்பதற்கு அதிகம் தடையாய் இருந்தது மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களே. அதிலும் இந்திய நடுவண் வங்கியின் (Reserve Bank of India) கொள்கையையே அதில் வேலை செய்யும் அரசு ஊழியர்களால் வலியுறுத்தும் இடத்தில் இந்த மாற்றம் சாத்திய படவில்லை. அரசு ஊழியர்களின் சம்பளம் வளர்வதற்காகவே இந்த வட்டி விகிதம் இன்றும் நடப்பில் உள்ளது. அதுவே பொருளாதார யுக்தியாகவும் மூடநம்பிக்கையாக மாறியும் விட்டது. இதற்கு நம் இடது சாரிகள் ஆசீர்வாதமும் இருந்தது. ஏனென்றால் அவர்களை பொறுத்தவரை சிறு விவசாயிகள் நில பிரபுக்கள் சிறுதொழில் செய்பவர்கள் முதலாளிகள். அரசு அதிகாரிகள் சிவப்பு சட்டை தொழிலாளர்கள். இந்த வட்டி விகிதத்தால் அதிகம் பயன் அடைந்தவர்கள் அரசு ஊழியர்கள் என்றால் அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள். கடனுக்கு அதிக சதவீத வட்டி அவர்களின் வாழ்க்கையில் அதிக சுமையைக் கொடுத்தது.

இதுவரை கூறியது வேறு சில அரசியல் கொள்கைகள் திட்டங்கள் மட்டுமே. இந்தியாவின் கொள்கைகள் பல மேதைகள் ஒரு இடத்தில் ஒன்று கூடி விவாதித்து கொண்டுவருவது என்பதெல்லாம் வெறும் ஊடக செய்திகள் மட்டுமே. பலமுறை இந்தியாவின் கொள்கைகள் அரசு அலுவலர்களின் கழிப்பறையில் உருவாக்கப்பட்டு பின் பெயரளவில் விவாதித்து கொள்கைகள் தீர்மானிக்கப்படும் என்பதே உண்மை.

இந்த சூழலில் இருந்து நம் நாட்டிற்கு ஒரு மாற்றம் தேவை.

என்ன மாற்றம் தேவை?:

இப்படி அரசுக்கு அருகாமையில் செயல்படும் சக்திகளான அரசு அலுவலர்கள் மட்டுமல்லாது, பணபலம் படைத்த முதலாளிகள், அரசியல் வாதிகள் மட்டுமே நாட்டின் கொள்கை அமைப்பில் எளிமையாக தங்களின் தாக்கத்தை கொடுக்க முடியும். இங்கு கூலி வேலை செய்பவனுக்கோ, விவசாயிக்கோ உயிரை தியாகம் செய்து போராடினால் கூட அவர்களுக்கான கொள்கைகள் உருவாக்கபடுவதில்லை. இந்தியாவின் மோசமான சூழலுக்கு ஊழல் தான் காரணம் என்று கூறுபவர்களுக்கு இந்தியாவின் கொள்கை உருவாக்கும் சூழல் பற்றிய கவலை இல்லை. இந்தக் கொள்கை உருவாக்கல் சமூகத்துக்கு கொடுக்கும் சமமின்மை (imbalance) ஊழலின் ஊற்றாக செயல்படுகிறது என்பதை உணரவேண்டும். அரசின் கொள்கைகள் திட்டங்கள் உருவாக்குவதில் சமூகத்தின் எல்லா நிலைகளில் உள்ள மக்களுக்கும் ஒரு பங்களிப்பை(Inclusiveness) கொடுக்கவேண்டும். இந்த பங்களிப்பில்லாத சூழலின் விளைவுதான் இன்றைய தத்தளிக்கும் இந்தியா.

Thus, when the user enters a restricted area or exits http://besttrackingapps.com a clear area, you get an alert

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “இந்தியாவின் கொள்கை அமைப்பும், மலச்சிக்கல் கொண்ட நாயும்”
  1. சந்திரசேகரன் G.Chandrasekaran says:

    சிறப்பான கட்டுரை இங்கு உள்ள த மிழர்கள் இன்றும் நம் தமிழ்நாட்டில் இந்திமொழி கற்பிக்கபட வேண்டும் என்று கூறுபவரகளுக்கு சரியான புத்திமதி தரும் ஆணித்தரமான கருத்துக்கள், நன்றி ! பாரட்டுக்கள்.

அதிகம் படித்தது