சூன் 15, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியாவின் பிறமாநிலங்களைப் போல் தமிழகத்துக்கும் வருமா நவோதயா பள்ளிகள்?

சு.நாகராஜன்

Aug 27, 2016

Siragu Navodaya School1

கிராமப்புற, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் இலவச கல்வி பயில வாய்ப்பு.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள நவோதயா பள்ளி கல்வித்திட்டம் இதுவரை தமிழகத்தில் இல்லை. புதிய கல்விக் கொள்கை விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், நவோதயா பள்ளி கல்வித்திட்டம் தமிழகத்துக்கும் வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மத்திய அரசால் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தின் கீழ், 1986ம் ஆண்டு மஹாராட்டிர மாநிலத்தில் அமராவரி என்ற இடத்தில் முதல் பள்ளிதொடங்கப்பட்டது. படிப்பில் திறமை வாய்ந்த கிராமப்புற, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக, தரமான படிப்பினை விடுதிகளில் தங்கி படிக்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தற்போது தமிழ்நாடு தவிர இதர மாநிலங்களில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பள்ளி என்ற விகிதத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் இதுவரை அமைக்கப்படவில்லை.

இந்த பள்ளிக்கூடங்களை அமைக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஏனென்றால் இந்த பள்ளிகளில் இந்தி ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தக் காரணத்தால்தான் இந்த பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் இல்லை. இந்த பள்ளிக்கூடங்கள் முதலில் மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் நிறுவப்படவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்குவங்காளம் இந்த பள்ளிகளை  நிறுவ அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Siragu Navodaya School4

தமிழ்நாடு அரசு, இந்தி பாடத்திட்டம் உள்ள மத்திய கல்வி வாரியத்தின் கீழ் உள்ள 37 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க ஒப்புதல் கொடுத்து தமிழகத்தில் இந்த பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கும் போது, ஏன் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது? என்ற விவாதமும் முன்வைக்கப்படுகின்றது.

மத்திய பாடதிட்ட தனியார் பள்ளிகள்

Siragu Navodaya School6

தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியார் என மொத்தம் 580 மத்திய கல்விவாரியத்தின் கீழ் உள்ள பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிக் கூடங்கள் இயங்கிவருகிறது. இதில் அதிக அளவு தனியார் பள்ளிக்கூடங்கள் ஆகும். தமிழகத்தில் 2010-ம் ஆண்டில் மத்திய கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் வெறும் 250 மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது கடந்த ஐந்து வருடங்களில் இது அதிக அளவு அதிகரித்து 580 ஆக உள்ளது. தற்போது சுமார் 300-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் மத்திய கல்விவாரியத்தின் பாடதிட்டத்தை பின்பற்ற வேண்டி விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகள் ஆகும். இந்த பள்ளிகள் அமைக்க தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் கொடுத்து அனுமதி அளித்துள்ளது.  தனியார் பள்ளிகள் இந்தி மொழிபயிற்றுவிக்கும் பள்ளிகள் கணக்கில்லாமல் துவங்க  அனுமதி அளிக்கும் தமிழக அரசு, மத்திய அரசின் 32 நவோதயா பள்ளிகள் துவங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நம்மிடம் சற்றே விரிவாக பேசிய கல்வியாளர் ஒருவர் கூறும் போது, ’’தற்போது தமிழக அரசு தமிழகத்தில் உள்ள 37 கேந்திர வித்தியாலையா பள்ளிகளைத் தவிர அனைத்து பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளிலும்  தமிழ் கண்டிப்பாக ஒரு மொழிப்பாடமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று  சட்டம் இயற்றி அமுல்படுத்தி செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழ்மொழி எந்த ஒருவிதத்திலும் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்தியை முன் நகர்த்தும் அலுவல்மொழி சட்டம் 1976 தமிழகத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலத்துக்கும் பொருந்தும். தமிழகத்துக்கு இந்த சட்டம் செல்லுபடி ஆகாது. ஆகவே மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் தமிழகத்துக்கு என சிறப்பு அந்தஸ்து இந்த சட்டம் மூலமாக உள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போன்று மத்திய கல்விவாரியத்தின் கீழ் உள்ள பாடதிட்டங்களை தமிழகத்தில் பயன்படுத்த முடியாது. தமிழகத்துக்கு என தனியாக இந்தி மொழி இல்லாத மத்திய கல்விவாரியத்தின் கீழ் உள்ள பாடதிட்டங்களை அமுல்படுத்தலாம். தமிழக அரசு இந்தச் சட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இந்தி பயிற்றுவிப்பதை தடைசெய்யலாம். இவ்வாறு இந்த அலுவல் மொழிச்சட்டத்தை பயன்படுத்தி இந்தி மொழி இல்லாத மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தில் துவங்க அனுமதி அளிக்கலாம். இவ்வாறு செய்வதை விட்டுவிட்டு அந்தப் பள்ளிகளை துவங்க தடை செய்வது ஏழை மாணவ மாணவிகளை மிகவும் பாதிக்கும் செயல்..

நவோதயா பள்ளிகளின் சிறப்பு அம்சங்கள்

Siragu Navodaya School7

இந்த நவோதயா பள்ளிகள் அந்த அந்த மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவதுடன், மாவட்டத்தின் மாதிரி பள்ளிகளாகவும் செயல்படும். மாணவ, மாணவிகள் இரு பாலரும் தனி, தனி விடுதிகளில் தங்கி பயிலும் மத்திய கல்வி வாரிய (CBSE Syllabus) முறையில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது. படிப்பில் திறமை வாய்ந்த கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இலவச கல்வியுடன் உணவு, உடை, உறைவிடம், சீருடை, காலணிகள், புத்தகங்கள், எழுது பொருட்கள், எல்லா பொருட்களும் வழங்குவதுடன் மருத்துவமும் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றது.

மாணவ, மாணவியர்கள் பொது நுழைவுத் தேர்வு மூலம், அவர்கள் படித்த தாய்மொழியிலே, 6ம் வகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  இந்த பள்ளிகளில் இந்தி மும்மொழித் திட்டத்தில் பயிலும்  வாய்ப்புகளும் உண்டு. ஆனால் 10ம் வகுப்பு இறுதி பரிட்சைக்கு இந்தி கட்டாயம் இல்லை. தேசிய அளவு அனுபவம் பெற விரும்பும் சில மாணவ, மாணவியர்கள் வேறு மாநிலத்திலும் ஒரு வருடம் தங்கி பயிலும் வாய்ப்புகள் உண்டு. இத்திட்டத்தால் தமிழ்மொழி  அனைத்து மாநிலத்தில் பரவ வழிவகை ஏற்படும். இப்பள்ளிகளில் கல்வியுடன், விளையாட்டு, கலை, கைவினை, கணினி கல்வி, நாட்டுப்புறக் கலைகள் போன்ற நுண்கலைகளும் தினசரி பிற்பகல், மாலை வேளைகளில் நன்கு கற்பிக்கப்படுவதால் மாணவ, மாணவிகள் அனைத்துத் துறைகளிலும் முழு பரிமாணம் பெற்று சிறந்த மாணவர்களாக மாறி வருகின்றனர்.

Siragu Navodaya School2

ஒரு மாவட்டத்தில் ஒரு பள்ளி கட்ட மத்திய அரசு ரூ 20 கோடி வீதம் ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள கட்டுமான பணிக்கும், ரூ.2.5 கோடி  பள்ளிக் கல்வி ஒரு ஆண்டு செலவிற்கும் திட்ட மதிப்பீடு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தேசிய ஒருமைப்பாடு, சமூக ஒற்றுமை, நவீன கல்விமயமாக்குதல், இயல், இசை, நாடகம், கலைகள், போட்டித்தன்மை வளர்த்தல், சமூகசேவை, புதுமைக்கு பயிற்சி போன்றவைகளில் நவோதயா பள்ளிகள் இந்தியாவிலே மிகவும் தலை சிறந்த பள்ளியாக உள்ளது.  இந்த பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர் கொண்ட 2 பிரிவுகளாக, வகுப்பிற்கு 80 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இவர்களில் 33% மகளிர், தாழ்த்தப்பட்டோர் 15%, மலைசாதியினர் 7.5% ஆகும். அது போன்று கிராமப்புற மாணவ, மாணவியர் 75%, இதர பிரிவினர் 24% மாணவ, மாணவிகளாக இந்த பள்ளிகளில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

நாட்டின் சில பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர் வெளிநாட்டில் மாற்று பயிற்சிக்குச் சென்று கல்வி பயில வாய்ப்பு உள்ளது. இந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அகிய இந்திய தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுவதால் திறனும், அனுபவமும், ஆற்றலும் உடைய நாடு தழுவிய அனுபவம் நிறைந்த ஆசிரியர்கள். பள்ளி முதல்வரின் நேரடி கண்காணிப்பில் நல்ல தரமான கல்வியும், பயிற்சியும் மாணவர்களுக்கு கிடைக்கும். தமிழ்நாட்டில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அனுமதி வழங்கியது போன்று உடனடியாக, மத்திய அரசின் நிதிஉதவியுடன் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா வித்யாலயா பள்ளி உடன்  துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்றார் அவர்.

கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கும் இலவசமாக தரமான கல்வி கிடைக்க நவோதயா பள்ளிகள் ஒரு வரம். அந்த வரம் தமிழக மாணாக்கர்களுக்கு கிடைக்குமா?

Peters and ceci essaydragon.com/ offer evidence from a cleverly designed and executed investigation that rejections are often the result of differences in judgment on the part of editors rather than lack of merit in a proposed article

சு.நாகராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவின் பிறமாநிலங்களைப் போல் தமிழகத்துக்கும் வருமா நவோதயா பள்ளிகள்?”

அதிகம் படித்தது