மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியாவின் மிகப்பெரும் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்

தேமொழி

Nov 21, 2020

siragu Arunthathi Roy

இந்திய எழுத்தாளர்களில் முதலாவதாக புக்கர் பரிசு வென்ற முற்போக்கு எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய “வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்” (Walking with the comrades) என்ற நூல் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்புக்குரிய நூலாக 2017 ஆம் ஆண்டு முதல் பாடத்திட்டத்திலிருந்தது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணை அமைப்பான ஏ.பி.வி.பி. என்கிற மாணவர் அமைப்பு, இந்த நூலில் நக்சலைட்கள் தொடர்பான கருத்துகள் இருப்பதற்காக எதிர்ப்பு தெரிவித்துக் கொடுத்த புகாரின் பேரில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிச்சுமணி தன்னிச்சையாக நூலை அந்தப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கி விட்டு, அந்த நீக்கத்தை முறைப்படி உறுதிப்படுத்த, பாடத்திட்டக் குழுவினரைக் கூட்டி இருக்கும் செய்தி நவம்பர் 12, 2020 அன்று ஊடகங்களில் வெளியானது.

இவ்வாறு இந்தநூல் நீக்கப்பட்டது பல்கலைக்கழகச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல், அதை அனுமதிக்க முடியாது என்றும், மீண்டும் பாடத்திட்டத்தில் அந்நூலைச் சேர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உட்பட, கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

நூலின் ஆசிரியர் அருந்ததி ராய் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சியையோ வியப்பையோ அளிக்கவில்லை என்று கூறினார். மேலும், எழுதுவது மட்டுமே எழுத்தாளர் ஒருவரின் கடமை. ஒரு நூலைத் தடை செய்வதாலோ அல்லது நீக்கப்படுவதாலோ அது மக்களால் படிக்கப்படாமல் இருக்கப் போவதில்லை என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். அருந்ததி ராய் எழுத்துப் பணியுடன் ஒரு சமூக சேவகராகவும் அறியப்படுபவர். இவரது ‘காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ இன்றளவும் விறுவிறுப்பான விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நூல்களைத் தடை செய்வது ஒருவகையில் நூல்களுக்குக் கொடுக்கப்படும் செலவில்லாத விளம்பரமாக மாறிவிடுகிறது என்பதுதான் உண்மை. அதுவரை அந்த நூல் குறித்து அக்கறை காட்டாதவரும் கூட, அவ்வாறு தடை செய்யும் அளவிற்கு அந்த நூலில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆர்வத்துடன் படிப்பர். அது போன்றதொரு ஆர்வத்தில் படிக்கப்பட்டதுதான் இந்த நூலும்.

இந்தியாவின் மத்திய கிழக்குப் பகுதி மாநிலங்களில் பரவியிருக்கும் தண்டகாரண்யா என்ற காட்டுப் பகுதியின் பழங்குடியினர் தங்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதையும், உரிமைகள் மறுக்கப்படுவதையும் எதிர்த்து மாவோயிஸ்ட் கொள்கையை ஆதரிப்பவர்களாக மாறியதுடன் அவர்களது உரிமையை நிலைநாட்ட அரசை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இது குறித்து பழங்குடியினருக்கு எதிரான ஒருபக்கச் சார்பான பார்வை நாட்டில் நிலவிய நேரத்தில், நேரடியாக அவர்கள் வாழும் காட்டிற்குள் பயணம் சென்று, கள ஆய்வு மேற்கொண்டு அவர்கள் தரப்பு நியாயத்தை இந்த நூல் மூலம் வெளிக்கொண்டு வந்தார் அருந்ததி ராய்.

அருந்ததி ராய் பலமாதங்கள் காத்திருந்து, பழங்குடியினர் தந்த ஒப்புதல் பேரில் சத்தீஸ்கர் மாநிலத்தின் தந்தேவாடா பகுதிக்கு வருமாறு கிடைத்த அவர்களது அழைப்பை ஏற்று அங்கு சென்று அவர்களைச் சந்திக்கிறார். காடுமேடெல்லாம் அவர்களுடன் பயணித்து, அவர்களது “பூம்கால்” விழாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்திலும், இரவு முழுவதும் நடைபெறும் பழங்குடியினர் கொண்டாட்டத்தின் கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, அவர்களில் ஒருவராக அவர்களது உணவை உண்டு, அவர்களுடன் உறவாடி, இரவில் காட்டில் வெட்டவெளியில் உள்ள அவர்களது முகாம்களில் உறங்கி, களப்பயணம் செய்து, அவர்களை நேர்காணல்கள் செய்து பழங்குடியினர் குறித்து தாம் கண்டறிந்தவற்றை இந்த நூலில் பதிவு செய்துள்ளார் அருந்ததி ராய்.siragu Dandakaranya region

தண்டகாரண்யா பகுதி மாவோயிஸ்ட்கள் 1980 ஆண்டு முதற்கொண்டு, அரசின் வனத்துறையால் பழங்குடியினருக்கு நிகழ்ந்த அநீதிகளை எதிர்த்துப் போராடியவர்கள். பழங்குடியினரை அடிமைகளாக நடத்திய வனத் துறையினரை மாவோயிஸ்ட்கள் எதிர்த்தனர். பழங்குடியினரின் விளை பொருட்களைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்துவந்த ஒப்பந்தக்காரர்களிடம் பேரம் பேசி பழங்குடி மக்களுக்கு நல்ல விலை பெற்றுத் தந்தனர். அதனால் அவர்கள் பழங்குடியினரிடம் பெற்ற நன்மதிப்பு, நட்புறவு ஆகியன காம்ரேட் வேணு என்பவரால் அருந்ததி ராய்க்கு ஒரு விரிவான வரலாற்றுப் பாடம் போலச் சொல்லப்படுகிறது. ‘ஜனாதன சர்க்கார்’ என்ற பழங்குடி மக்களால் நடத்தப்படும் அரசியல் நிர்வாகம் மாவோயிஸ்ட்டுகள் உதவியுடன் பழங்குடியினரால் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த வட்டார ஆட்சிமுறை அருந்ததி ராய்க்குப் பழங்குடி மக்களால் விளக்கப்படுகிறது. ‘ஜனாதன சர்க்கார்’ ஆட்சி என்ற மக்கள் அரசு முறையில், இந்தப் பகுதி ஏறத்தாழ ஒரு தனி நாடாக இயங்குகிறது (இது ஸ்ரீலங்காவில் ஈழப் புலிகள் அமைத்த ஆட்சிமுறையை நினைவிற்குக் கொண்டு வருகிறது). வேளாண்மை, வணிகம், தொழில், பொருளாதாரம், நீதி, பாதுகாப்பு, மருத்துவம், மக்கள் தொடர்பு, கல்வி-கலாச்சாரம், மற்றும் காடுகள் என்ற ஒன்பது துறைகளின் கீழ் இந்த மக்கள் அரசு இயங்குகிறது. பழங்குடியினரின் இது போன்ற தன்னாட்சி அமைப்புமுறை இந்திய அரசுக்கு அச்சமூட்டுகிறது என்பதுவும் பழங்குடியினரின் கருத்து.

எனவே, அரசு சொல்லி வருவது போல மாவோயிஸ்ட்டுகளிடம் சிக்கிக் கொண்ட பழங்குடியினரை மீட்பது, மாவோயிஸ்ட்டுகளை அழிப்பது என்பது சரியல்ல; பாதிக்கப்பட்ட பழங்குடியினரில் பலரே மாவோயிஸ்ட்டுகளாக மாறி, பயிற்சி பெற்று தங்கள் மக்களுக்கான அரசை நடத்துகிறார்கள் என்பதைத்தான் நூல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. பழங்குடியினரிடம் நூலின் பெரும்பகுதி மாவோயிஸ்ட்டுகளுடன் அருந்ததி ராய் பல பகுதிகளுக்கு நடைப்பயணம் சென்ற அறிந்தவை நிரம்பியுள்ளது, ஆகவே “வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்” என்ற தலைப்பு நூலுக்கு மிகப் பொருத்தமே. அருந்ததி ராயின் இத்தகைய அரிய, துணிகர முயற்சியால் தண்டகாரணிய பகுதியில் வாழும் பழங்குடியினர் எதிர் கொள்ளும் துயர வாழ்வு பொதுமக்களுக்கு இந்த நூல் மூலம் கிடைத்துள்ளது.

இந்த நூல் ‘தோழர்களுடன் ஒரு பயணம்’ என்ற தலைப்பில் தமிழில் சமூக செயல்பாட்டாளர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது. அது குறித்த மதிப்புரையே இக்கட்டுரை. படிக்கப்பட்ட முதல் பதிப்பு நூலின் துவக்கத்தில், முதல் வரியின் முதற்சொல்லே (‘சொற்ச்செறிவுடைய’ ???!!!) பிழையுடன் தொடங்கி நூல் முழுவதும் சொற்பிழைகள் மலிந்து கிடக்கின்றன. அடுத்துத் தொடர்ந்து வெளி வந்த பதிப்பிலாவது மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் நல்லது. இந்த நூலின் மூலம் நாம் அறிந்து கொள்ளக்கூடிய பழங்குடியினர் வரலாறு சுருக்கமாக அடுத்து இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

தண்டகாரண்யா காட்டுப் பகுதியானது, ஆந்திரம், தெலுங்கானா, ஒரிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் எல்லைப்புறங்களை ஒட்டியிருக்கும் பகுதியாகும். கான்கேர், பஸ்தர், தந்தேவாடா, நாராயண்பூர், பிஜாப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களை அடக்கியது இந்த தண்டகாரண்யா காட்டுப் பகுதி. சுமார் 80,000 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இப்பகுதியில், சட்டப்பூர்வமாக 40,000 சதுர கி.மீ. பரப்பளவுள்ள பகுதி காடுகளுக்காக ஒதுக்கப்பட்டது, மீதியுள்ள பகுதியில் பல பழங்குடிப் பிரிவினர் வாழ்கின்றனர். இவர்கள் ஹல்பா, கோண்ட், மூடியா, மாடியா என பற்பல பிரிவுகளை உள்ளடக்கிய பழங்குடியினர். இவர்கள் வாழும் காட்டுப் பகுதியானது, குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தின் பகுதியானது பாக்சைட், நிலக்கரி, இரும்புத் தாது, சுண்ணாம்புக் கல், தங்கம், வைரம் உட்பட 28 கனிம வளங்களைக் கொண்டது.

சற்றொப்ப 2005 ஆண்டையொட்டி மத்திய மற்றும் மாநில அரசுகள் பல பெருவணிக நிறுவனங்களுடன் நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டு பழங்குடியினர் பகுதிகளை பெருவணிக நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடத் திட்டங்கள் வரைந்தன. இரும்பாலைகள், மின் திட்டங்கள், அலுமினிய சுத்திகரிப்பு நிலையங்கள், அணைகள், கனிமச் சுரங்கங்கள் என அத்திட்டங்கள் யாவும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மதிப்புடையவை. அவற்றை நடைமுறைப்படுத்தப் பழங்குடியினரை அவர்கள் வாழும் பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இதையொட்டி அரசை எதிர்க்கும் பழங்குடியினர் எதிர்ப்பும் அக்காலத்திலிருந்து உச்சக் கட்ட நிலையை எட்டத் துவங்கியது.siragu RED-CORRIDOR

2005 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியிலிருந்த சத்தீஸ்கர் மாநில அரசு டாட்டா, எஸ்சார் ஆகிய இரு பெரும் நிறுவனங்களுடன் இப்பகுதியில் பல ஆயிரம் கோடி பெறுமானமுள்ள இரும்பு ஆலைகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அதே 2005 ஆம் ஆண்டில் அனைத்து மாநில காவல் துறைத் தலைவர்களின் கூட்டத்தை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு கூட்டிய பொழுது, ‘நாட்டின் கனிம வளம் மிகுந்திருக்கும் பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தலைதூக்குவது என்பது முதலீட்டுச் சூழலைப் பாதிக்கும்’ என்றும், ‘நம் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு முதன்மையான மிகப்பெரும் அச்சுறுத்தல், மாவோயிஸ்ட்டுகள்தான். ஆனால், அவர்களுக்கு, பழங்குடியினர் மற்றும் அறிஞர்கள் சிலரின் ஆதரவு உள்ளது. எனவே, இந்தப் பிரச்சினையை மிக நுட்பமாகக் கையாள வேண்டும்’ என்றார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் பிறகு, தீவிர நடவடிக்கை மத்திய அரசால் துவக்கப்பட்டது. இதற்கு “பச்சை வேட்டை” (‘ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’ திட்டம்) என்று அரசு பெயர் சூட்டியது. ஏற்கனவே இருந்த துணை ராணுவப் படையினருடன், மேலும் பல ஆயிரக் கணக்கில் துணை ராணுவப் படையினர் பஸ்தர் பகுதியில் மத்திய அரசால் குவிக்கப்பட்டனர்.

தனியார் நிறுவனம் ஒரு டன் இரும்புத் தாதுக்கு அரசுக்கு 27 ரூபாய் வழங்குகிறது, ஆனால் அதற்கு அவர்களுக்குக் கிடைப்பது ஒரு டன்னுக்கு 5000 ரூபாய் என்ற கொள்ளை லாபம் என்பதை லோகாயிதா அறிக்கை கூறுகிறது. கனிமவளங்கள் நிறைந்த அந்தப் பகுதியைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், டாட்டா, அம்பானி, மிட்டல், எஸ்சார், வேதாந்தா போன்ற பெரு வணிக நிறுவனங்களுக்கும் சொந்தமாக்கும் நோக்கத்தில் இந்திய அரசு செயல்படுவதையும்; அவர்கள் வாழும் காட்டுப் பகுதியின் வளங்கள் சுரண்டப்படுவதையும், அதற்காக இப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களை விரட்டி வெளியேற்றுவதையும் பழங்குடியினர் விரும்புவதில்லை.

சுவைகண்ட பூனைகளான அரசும் முதலாளித்துவ அமைப்புகளும் விட்டுக் கொடுப்பதாகவும் இல்லை. இதன் விளைவு அரசின் அடக்குமுறையும், அதை எதிர்த்து மாவோயிஸ்ட் வழியைப் பின்பற்றி கொரில்லாப் போரில் இறங்கும் பழங்குடியினரின் போராட்டமும்தான். அவர்களின் போராட்டம் நிறைந்த நிம்மதியற்ற வாழ்வினால் உடைமை உயிர் இழப்புகளும் பழங்குடியினருக்குத் தொடர்கதையாகிறது. பெருவணிக நிறுவனங்கள் சிலவற்றில் இயக்குநராகவும், மேலும் சில பெரு வணிக நிறுவனங்களுக்கு வழக்கறிஞராகவும் இருந்தவர் ப.சிதம்பரம். அவர் அப்பொழுது உள்துறை அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலம். அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் துணை ராணுவப்படைகளை ஒரு கூலிப்படை போல, பெருவணிக நிறுவனங்களுக்கு ஆதரவாக, பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தக் காரணமாக இருந்தார் என்பது அரசியல் கவனிப்பார்களின் கருத்து. ஆனால் பழங்குடியினருக்கு எதிரான இந்த விஷயத்தில் மட்டும் நாட்டின் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரேநிலைப்பாடு இருந்து வருகிறது.

“மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கை” என்ற பெயரில், இந்தப் பழங்குடி மக்களின் உடைமைகள் மற்றும் உரிமைகள் மீதும் ஒரு உள்நாட்டுப் போரை மத்திய அரசு தொடுத்திருக்கிறது. இது ஒரு அரசு தனது மக்களுடனே தொடுத்த போர் (தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை). பார்க்கப்போனால் மாவோயிஸ்ட்டுகள் சென்ற நூற்றாண்டு முதல்தான், அதாவது மேற்கு வங்க நக்சல்பாரி இயக்கத்திற்கு பிறகுதான் இந்த நாடகத்தில் இடம் பெறுபவர்கள். பிறகு, மாவோயிஸ்ட் யார் என்றும் பழங்குடியினர் யார் என்றும் பிரித்தறிய முடியாமல் போனது பிற்கால இன்றைய நிலை. ஆனால், பழங்குடியினர் தங்கள் உரிமைக்காக அரசை எதிர்க்கும் போராட்டமோ ஒரு நெடிய வரலாற்றைக் கொண்டது. ஆங்கிலேயர் காலத்திலும், 1910 ஆம் ஆண்டிலும் கூட அரசுக்கு எதிராக பழங்குடியினரின் கிளர்ச்சிகள் நடந்துள்ளன (அந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவான ‘பூம்கால்’ விழா கொண்டாட்டத்தில்தான் அருந்ததி ராய் பங்கு கொண்டது இந்த நூலிலும் இடம் பெறுகிறது).

பழங்குடியினரை ஒடுக்க அல்லது மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க இந்திய அரசின் ராணுவம், அவர்களால் பயிற்சி அளிக்கப்படும் மாநில காவல் துறையினர் களம் இறங்கினர். அப்பகுதி பழங்குடியினரை இந்துக்களாக மாற்றும் முயற்சியும் முன்னரே துவங்கி இருந்தது. இந்துக்களாக மாற மறுத்தவர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர் என அறிவிக்கப்பட்டனர். இவ்வாறு ஒதுக்கப்பட்ட இவர்களே பின்னர் மாவோயிஸ்ட் தொகுதியாக மாறினர் என்கிறார் அருந்ததி ராய்(பக்கம்-33). இது ஒரு வழக்கமான மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிதான். நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் பழங்குடிகள் எவரும் இந்துக்கள் அல்ல என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் (நவம்பர் 2020) ஜார்கண்ட் அரசின் சட்டசபையும் பழங்குடியினர் இந்துக்கள் அல்ல என்று அதிகாரப்பூர்வமான தீர்மானத்தை வெளியிட்டது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

இந்துக்களாக மாற்றப்பட்டவர்கள் ‘சல்வா ஜுதும்’ (சுத்திகரிப்பு வேட்டை) என்ற இயக்கத்தை 2004 ஆண்டு துவக்கினர். பழங்குடி மக்களைக் கொண்டே பழங்குடி மக்களை ஒடுக்கும் முயற்சி இது. இவர்களால் பழங்குடி மக்கள், அவர்கள் வாழும் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சாலையோர அரசு முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர். அவ்வாறு அரசு முகாமில் தங்காதவர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டு கொல்லப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டார்கள். இதனால், பழங்குடி மக்களுக்கு, அவர்கள் எந்த ஒரு வம்புக்கும் போகாமல் தங்கள் வீட்டில் தங்கியிருந்தாலே அவர்கள் மாவோயிஸ்ட் என்ற பயங்கரவாதிகளுக்கு இணையானவர்கள் என்ற நிலை ஏற்படுகிறது. பழங்குடி மக்கள் இதனால் வேறு வழியின்றி அரசு முகாம்களுக்குத் தாங்களே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது மக்களை அச்சுறுத்தி தங்கள் கட்டுக்குள் கொண்டுவரும் ஒரு முயற்சி. ஆணையின்படி முகாமுக்கு வாராத பழங்குடியினர் கிராமங்களை சல்வா ஜுதும் எரிக்கத் துவங்கியது.

சல்வா ஜுதும் மற்றும் துணை இராணுவம், மாநில காவல்துறை ஆகியோருக்கு மாநில அரசின் ஆதரவு, ஆயுதங்கள், சட்டப் பாதுகாப்பு போன்ற உதவிகள் உண்டு. இதனால் ஆறு மாதங்களில் தந்தேவாடா, பிஜாப்பூர் மாவட்டங்களில், 644 கிராமங்கள் சூறையாடப்பட்டன. 60,000 பழங்குடியினர் அகதிகளாக அரசு முகாம்களில் அடைக்கப்பட்டனர். அப்பகுதியை விட்டுத் தப்பியோடி இடம் பெயர்ந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த சரியான எண்ணிக்கை எதுவும் இல்லை. நிகழ்வுகளைப் பார்த்த உச்ச நீதிமன்றம், சல்வா ஜுதும் இயக்கத்தையும், மாநில அரசையும் கண்டித்தது. ஆனால், பழங்குடியினரை ஒடுக்கும் மாநில அரசுகளின் போக்கில் மாறுதல் எதுவும் ஏற்படவில்லை.

மாறாக, சத்தீஸ்கர் மாநிலம் ஒரு படி மேலே சென்று ‘சிறப்பு பொதுப் பாதுகாப்பு சட்டம்’ ஒன்றைக் கொண்டு வந்தது. அதன் மூலம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, நீதிமன்ற ஆணை இல்லாமலே எவரையும் சிறையில் தள்ள முடியும். காவல் துறையினர் தங்களுக்குத் தேவைப்படும்பொழுது பழங்குடியினர் கிராமத்தில் நுழைந்து வேண்டும் பெண்களைப் பலாத்காரம் செய்வதும், கோழிகளை கொள்ளையிட்டுச் செல்வதும், கிராமத்தையே தீயிட்டுக் கொளுத்துவதும் வாடிக்கையானது. எதிர்க்கவோ தடுக்கவோ வழியின்றிப் போனது. தாங்கமுடியாத பழங்குடியினரே சில சமயங்களில் நக்சலைட்டுகளே, வாருங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள் சுவர்களில் எழுதி வேண்டுகோள் வைக்கும் நிலையும் உருவானது.

மாவோயிஸ்ட் பயிற்சி பெற்ற பழங்குடியினர் இராணுவம், மாநில காவல்துறை அனைவரையும் எதிர்த்துப் போராடிய வண்ணமே இருந்தனர். பழங்குடியினர் பலர் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கொரில்லாப் போர்ப் பயிற்சி பெற்றனர். அரசை எதிர்க்கும் பயிற்சி பெற்ற ‘குடிமக்கள் படை’ உருவாகிறது. இது எண்ணிக்கையிலும், பயிற்சியிலும், ஆயுத பலத்திலும், தாக்குதல் முறையிலும் இந்திய இராணுவத்திற்கு இணையாகவே இருந்து வந்துள்ளது. இதனால், ‘மாவோயிஸ்ட்டுகளின் அச்சுறுத்தலால் பஸ்தர் பகுதியில், கனிம நிறுவனங்களின் திட்டங்களைத் துவக்க முடியவில்லை’ என சத்தீஸ்கர் மாநில முதன்மைச் செயலர் வெளிப்படையாகவே கூறினார்.

ஒவ்வொருமுறையும் பெரிய அணைக்கான திட்டங்கள், கனிமச் சுரங்கங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு திட்டமிடுகையில் ‘பழங்குடியினரை மைய நீரோட்டத்தில் இணைப்பது’, ‘பழங்குடியினரை வளர்ச்சிப் பாதையில் அழைப்பது’ போன்ற சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டு பழங்குடியினர் அவர்களுக்கான வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள் என்பதுதான் வரலாறு. அரசு பழங்குடியினர் நலன் குறித்து அக்கறையுடன் பேசத் தொடங்கினால், அது கவலை கொள்ள வேண்டிய நேரம் என்கிறார் அருந்ததி ராய் (பக்கம் – 11).

நிறைவாக, இதுவரை நூல் சொன்ன கருத்துக்களின் அடிப்படையில் மேலும் சில குறிப்புகள்; பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவதிலும், நாட்டின் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் பழங்குடியினரை அவர்கள் வாழ்விடத்திலிருந்து இராணுவத்தின் உதவியுடன் விரட்டுவதிலும், எதிர்க்கும் போராளிகளை ஒடுக்குவதிலும் அனைத்து இந்தியக் கட்சிகளும் ஒரே கொள்கை கொண்டனவாக உள்ளன.

இந்நேரத்தில் இங்கு நினைவுகூரத்தக்கச் செய்தி ஒன்றும் உண்டு. விடுதலைப் பெற்ற இந்தியாவில் நேருவின் ஆட்சிக் காலத்தில் மக்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகத் திட்டங்கள் பல உருவாக்கப் பட்டன. அவற்றில் பழங்குடியினர் வாழ்வை மேம்படுத்த அவர்களைப் பொது நீரோட்டத்தில் இணைப்பது என்ற ஒரு குறிக்கோளும் இருந்தது. இதற்காக ஆய்வு மற்றும் திட்டக் குழு ஒன்றும் அன்றைய அரசால் உருவாக்கப் பட்டது. அதன் முக்கியப் பொறுப்பை ஏற்றவர் இங்கிலாந்தில் பிறந்த இந்திய மானுடவியல் ஆய்வாளர் வெரியர் எல்வின் (Verrier Elwin,1902 – 1964) என்பவராவார். இவர் நேருவின் நண்பராகவும் அறியப்படுகிறார். பழங்குடியினர் மானுடவியல் குறித்த இவரது கருத்துகளை இன்றைய ஆய்வாளர்களும் மேற்கோள் காட்டுவதுண்டு.

தனித்துவம் மிக்க வளமான பழங்குடி மக்களின் பண்பாடு சிறப்பானது. அதைப் பொருட்படுத்தாது பொது நீரோட்டத்துடன் பழங்குடி மக்களை இணைக்கும் திட்டங்கள் ஏற்புடையதல்ல, என்பது இவர் இந்தியப் பழங்குடிகள் குறித்த நேருவின் மத்திய அரசுக்கு வழங்கிய ஆய்வறிக்கை. மேலும், பழங்குடி சமூகத்தின் மேதைகளின் கருத்துகளின் படியும் அவர்களின் விருப்பப்படியுமே பழங்குடியினர் வளர்ச்சி இருக்க வேண்டும், அவர்கள் மீது எதுவும் திணிக்கப்படக்கூடாது என்பதையும் இவரது அறிக்கை குறிப்பிட்டது (வெரியர் எல்வின் கமிட்டி, 1960).

ஆனால் இந்த அறிக்கை குறித்து அரசு பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பத்தாம் பாகத்தின் கீழ் உள்ள பிரிவு 244-இன் படி, ஐந்தாவது அட்டவணையில் பழங்குடிகளுக்குச் சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அதையும் அரசு பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அதாவது சென்ற ஆண்டுவரை இதுதான் நிலைமை.

அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதை எதிர்த்த பழங்குடியினர், அவர்கள் வாழும் பல பகுதிகளில் ‘பதல்காடி இயக்கம்’ (Pathalgadi Movement) என்பதைத் தொடங்கினர். சென்ற ஆண்டு (2019) ஜார்கண்ட் பழங்குடி மக்கள் அரசியலமைப்பு தங்களுக்கு வழங்கியுள்ள சிறப்புரிமையை ஊரின் நடுவில் கல்வெட்டாக அமைத்தனர். அதற்காக 10,000 பேர் மீது தேசத்துரோக வழக்குப் போட்டுள்ளது அரசு.

மேற்கொண்டு என்ன நடக்கலாம் என்ற கோணத்தில் சிந்தித்த பொழுது; காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்ட 370வது பிரிவை ரத்து செய்வதற்கு இந்திய அரசு எடுத்த முடிவு மனத்தில் நிழலாடுகிறது.

தண்டகாரணிய பகுதி கனிம வளங்களைப் பெருநிறுவனங்களிடம் குத்தகைக்கு விட அரசு எடுக்கும் முடிவுகளுக்கு எதிர்ப்பாக எப்பொழுதும் தங்களது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உள்ள உரிமையைப் பழங்குடியினர் முன்னெடுப்பதால், அடுத்த நடவடிக்கையாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பத்தாம் பாகத்தின் கீழ் உள்ள பிரிவு 244-இன் படி, ஐந்தாவது அட்டவணையில் பழங்குடிகளுக்குச் சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளவற்றை ரத்து செய்யக்கூடிய நடவடிக்கையை எடுக்க அரசு அடுத்துத் திட்டமிடும் என்பதையும் நாம் எதிர்பார்க்கலாம். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் போலப் பழங்குடியினரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு உரிமைகளை இழக்கலாம். இந்த திருத்தத்திற்கு உள்நாட்டு பாதுகாப்பு என்ற காரணம் காட்டப்பட்டு, மாவோயிஸ்ட், நக்சலைட் தீவிரவாதங்களை ஒடுக்க அரசு எடுக்கும் திட்டங்களாக அவை காட்டப்படலாம். ஒருவகையில், இந்த நூலுக்காக வைக்கப்படும் அண்மைய எதிர்ப்பு அதற்கான ஒரு கவனயீர்ப்பு துவக்கப் புள்ளியாகக் கூட இருக்கலாம்.

நூல் குறித்து:

தோழர்களுடன் ஒரு பயணம், அருந்ததி ராய்

(தமிழ் மொழிபெயர்ப்பு – அ.முத்துக்கிருஷ்ணன்)

பயணி வெளியீடு – முதல் பதிப்பு – 2010

(Walking with the Comrades, by Arundhati Roy, New Delhi: Penguin, 2011. ISBN 978-0-670-08553-8)

 தமிழ்ப் பதிப்பு கிடைக்குமிடம்: https://www.discoverybookpalace.com/தோழர்களுடன்-ஒரு-பயணம்-1

References:

[1]

The essence of this policy is that Tribal Development should be along the lines of the genius of the tribal community and nothing should be imposed upon them. i) Verrier Elwin Committee – 1960, (to report on Special Multi –Purpose blocks).

International Journal of Academic Research; ISSN: 2348-7666 Vol.1 Issue.1, June, 2014 [http://ijar.org.in/stuff/issues/v1-i1/v1-i1-a001.pdf]

[2]

The special autonomy granted to Adivasi areas under the Fifth Schedule of the Indian Constitution;

FIFTH SCHEDULE – [Article 244(1)]- Provisions as to the Administration and Control of Scheduled Areas and Scheduled Tribes (https://www.mea.gov.in/Images/pdf1/S5.pdf)

&

[https://tribal.nic.in/declarationof5thSchedule.aspx#:~:text=As%20per%20the%20Constitutional%20provision,of%20the%20Constitution%20of%20India.]

[3]

பத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிரகடனம் !

https://www.vinavu.com/2019/12/25/indian-democracy-in-crisis-what-is-people-opinion-2/

_________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவின் மிகப்பெரும் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்”

அதிகம் படித்தது