சனவரி 16, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை – அண்மைக்காலச் சூழல்

பேரா.அன்பழகன்

Sep 26, 2020

 siragu unemployment1

சீனாவின் ஹூபே மாகாணத்தின் ஊகான் நகரில் உருவான கரோனா வைரஸ் இன்று உலகஅளவில் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப் பெரிய தொற்று நோயாக உள்ளது. இத்தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இது போன்றே இந்த நோயினால் இறப்பவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஒன்பது மாதங்களாக உலகப் பொருளாதாரம் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி வீழ்ச்சிகண்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் இழந்து பெரும் துன்பத்தில் உள்ளனர்.

இந்த கரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இந்திய அரசு கடந்த ஐந்தரை மாதங்களாகப் பொதுமுடக்கம், பகுதி முடக்கம், போக்குவரத்துக் கட்டுப்பாடு, சமூக இடைவெளி போன்ற பல்வேறு நெறிமுறைகளைக் கையாண்டு வருகின்றது. தற்போது ஏழாவது கட்ட (செப்டம்பர் 2020) நடைமுறையில் முழுகட்டுப்பாட்டிலிருந்து பெருமளவு தளர்வுகளை மத்திய-மாநில அரசுகள் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. அரசின் இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடக்க மாதங்களில் (மார்ச், ஏப்ரல், மே 2020) மிகக்கடுமையான பாதிப்புகளை பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தியது. பெருமளவு உற்பத்தி முடக்கம், அதிகமான வேலை இழப்பு, தொடர் வருமான இழப்பு, உற்பத்தி பொருட்களின் தேக்கம், சந்தைத் தேவை மற்றும் அளிப்பில் சரிவு, பெருமளவில் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்புதல் போன்ற தாக்கங்கள் அதிக அளவில் ஏற்பட்டன. பொதுவாக, பொருளாதாரத் தளத்தில் வேலைவாய்ப்பு மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. வேலைஇழப்பு பிரச்சினையின் தொடர் நிகழ்வாக வருமான இழப்பு, வாங்கும் திறன் குறைதல், தேவையில் வீழ்ச்சி, உற்பத்தி குறைப்பு, வறுமை அதிகரிப்பு போன்று சுழற்சி வட்டம் ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையினை அடையும். 1930களில் உலகஅளவில் ஏற்பட்ட பெருமந்தமும் இந்தவகையைச் சார்நததுதான். தற்போது உலகநாடுகள் இந்த நிலையை மீண்டும் எதிர்கொண்டுள்ளன.

இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்புக்கு கரோனாவை மட்டுமே காரணமாகக் கூற முடியாது. 2008ஆம் ஆண்டு உலகில் ஏற்பட்ட நிதிச்சிக்கல்களால் ஏற்றுமதி நிறுவனங்கள் முடங்கி, தொழிலாளர்கள் பெரும் வேலை இழப்பினைச் சந்தித்தனர், இந்தியாவில் நவம்பர் 2016ஆம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜூலை 2017ல் நடைமுறைபடுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (புளுவு)) போன்றவைகளால் பல சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டும், வாணிபம் பெருமளவு பாதிக்ப்பட்டும் பெரும் வேலை இழப்பு போக்கும் ஏற்பட்டது. இந்தியாவில் 1993-94ஆம் ஆண்டு 7.6 மில்லியன் வேலையின்மையின் எண்ணிக்கையானது 2004-05ஆம் ஆண்டு 11.2மில்லியனாக உயர்ந்தது பின்பு 2011-12ஆம் ஆண்டு 10.8மில்லியனாகக் குறைந்தது 2017-18ஆம் ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு 28.5மில்லியனாக உயர்ந்தது. இவ்வதிக வேலையின்மை ஏற்படுவதற்கு மேற்கண்ட காரணங்களுடன் வேலைவாய்பினை நோக்கிப் புதிதாக தொழிலாளர்கள் கூடுதலாக வேலைதேடி இணைவது, கிரமப்புறங்களிலிருந்து நகர்புறங்களை நோக்கி பல்வேறு கராணங்களுக்காக வேலைதேடி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போன்றவைகளைக் குறிப்பிடலாம்

இந்தியாவின் வேலையின்மையின் போக்கு (வழக்கமான நிலை-Usual status) தேசிய மாதிரி புள்ளிவிவரங்களின் (NSS) அடிப்படையிலும் குறிப்பிட்ட கால இடைவெளியிலான தொழிலாளர் கணக்கெடுப்பின்படியும் கிராமப்புற மற்றும் நகர்புற பெண்களின் வேலையின்மை ஆண்களைவிட மிகவும் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக 2011-12ஆம் ஆண்டிற்குபின் ஆண்-பெண் வேலையின்மை மிகவும் அதிகரித்துள்ளது. இதன் பொருள் வேலை தேடுபவர்களுக்கு ஏற்ப வேலைவாய்ப்பினை உருவாக்கித்தரவில்லை என்பது வெளிப்படுகிறது. பெண்கள் ஆண்களைவிட அதிக அளவில் வேளாண்மையைச் சார்;ந்து வாழ்கின்றனர். கடந்த காலங்களில் வேளாண் தொழிலில் நிலையற்ற போக்கும் அதிக இழப்பினை சந்திக்கும் துறையாகவும் இருந்தது. இதனால் பெருமளவில் பெண்கள் வேலை இழப்பினை எதிர் கொண்டுள்ளனர் (மொத்த பெண்தொழிலாளர்களில் வேளாண்மையில் 1977-78 ஆம் ஆண்டு 88.1 விழுக்காடாக இருந்தது 2018-19ஆம் ஆண்டு 71.1விழுக்காடாகக் குறைந்துள்ளது). ஆண்களைப் பொருத்த வரையில் வேளாண்மைச்சாரா தொழிலில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக இத்துறையானது குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை அடைய முடியாமல் தேக்கநிலை உள்ளதால் இவர்களை இத்தொழில் அரவணைத்துக் கொள்ள தவறியதால் ஆண்களின் வேலையின்மையின் அளவு அதிகரித்துள்ளது (வரைபடம் பார்க்க). வேலையின்மை, கல்வியுறிவு பெற்றவர்களிடையே அதிக அளவில் உள்ளதாக 2018-19ஆம் ஆண்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குறிப்பாக பட்டதாரிகள் (16.9 விழுக்காடு), முதுநிலைப் பட்டதாரி மற்றும் அதற்க்கு மேல் படித்தவர்கள் (14.4 விழுக்காடு), பட்டயப்படிப்பு படித்தவர்கள் (17.2 விழுக்காடு) போன்றோர்களிடையே அதிக வேலையற்ற நிலை காணப்படுகிறது. குறைந்து வரும் வளர்ச்சிக்கான முதலீடுகள், அந்நிய முதலீட்டில் வீழ்ச்சி, உற்பத்திச் சார முதலீடுகள் அதிகரிப்பு மற்றும் அதிஅளவிலான உயர்கல்வியில் படித்து முடித்து ஒவ்வொரு ஆண்டும் வெளியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு போன்றவைகளை இற்கான முதன்மைக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.

2019ஆம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கரோனா தொற்றானது முறைசாரா தொழிலாளர்களுக்கு (மொத்த தொழிலாளர்களில் 91விழுக்காடு) அதிக அளவு வேலைவாய்ப்பை உருவாக்கும் கட்டுமானம் -50விழுக்காடு,வாணிபம், உணவகம், தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்புச் சேவைகள் -47விழுக்காடு,உற்பத்தி -39விழுக்காடு மற்றும் சுரங்கதொழில் – 23விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளது இதனால் அதிக வேலையின்மை உருவாவதற்கு காணமானது. அதே சமயம் வேளாண்மையில் தற்போது சாதகமான சூழல் காணப்படுவதால் நேர்மறை வளர்ச்சி கண்டுள்ளது ஆனால் வேளாண்மைப் பொருள்களுக்கு சந்தையில் குறைவான தேவை உள்ளதாலும் விநியோகச் சங்கிலி சீரடையாததாலும் சரியான விலைகிடைபதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

siragu chat1

மார்ச் 24, 2020இல் நாடு முழுவதும் பொது முடக்கம் நான்கு மணி நேர இடைவெளியில் மத்திய அரசு அவசரமாக அறிவித்தவுடன் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். குறிப்பாக வேலை அமைப்பில் கடை நிலையில் இருக்கும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் பெருமபாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளானார்கள். இந்த நெருக்கடியினால் வேலையிழப்பு, அன்றாட செலவுகளுக்கு கையில் பணம் இல்லாத நிலை, வீட்டு வாடகை கொடுப்பதற்கு இயலாத நிலை, கூலியில் நிலுவை, தங்குவதற்கு இடமில்லை, உணவில்லை, போக்குவரத்து கட்டுப்பாடு போன்ற இன்னல்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்டனர். இவர்கள் பெரும்பாலும் உத்திரப்பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் சில வடகிழக்கு மாநிங்களைச் சார்நதவர்கள் ஆவார்கள். இவர்கள் அதிகமாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், பஞ்சாப், ஹரியானா, டில்லி போன்ற மாநிலங்களுக்கு அதிக அளவில் வேலை தேடி புலம்பெயர்கின்றனர். இவர்களில் பெரும்பாலும் கல்வி அறிவு அற்றோர், திறன் குறைந்த தொழிலாளர்கள், வேளாண் கூலித் தொழிலாளர்கள் போன்றவர்கள் ஆவார்கள்.

நிலமற்றநிலை, வேளாண்மையில் தொடர் தோல்வி (குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள்), குறைவான கல்விஅறிவு, உள்ளூரில் தொடர் வேலைவாய்ப்பின்மை, குறைவான கூலி, பாரம்பரிய தொழில் இழப்பு போன்றவைகள் இவர்கள் புலம்பெயர்வதற்கான அடிப்படைக் காரணங்களாக அறியப்படுகிறது. இவர்கள் அதிக அளவில் கிராமப்புறங்களிலிருந்து நகர்புறங்களை நோக்கி புலம்பெயர்கின்றனர் இத்தொழிலாளர்களில் பெரும்பாலும் குறுகியகாலத்திற்கு (60-65 மில்லியன்) புலம் பெயர்கின்றனர். புலம்பெயரும் தொழிலாளர்களில் அதிக அளவில் கட்டுமான தொழிலிலும் (45 விழுக்காடு), வேளாண் கூலித் தொழிலிலும் (15 விழுக்காடு), தொழிற்சாலைகளிலும் ஈடுபட்டுவந்தனர். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கின்படி 454 மில்லியன் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்துள்ளனர். இதில் 24.3 விழுக்காடு வேலைக்காக புலம்பெயாந்தவர்களாக உள்ளனர். ஆண்கள் பெரும்பாலும் வேலைவாய்பினை நோக்கிப் புலம்பெயர்கின்றனர். தற்போதுவரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் புள்ளிவிரங்கள் சரியாக சேகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது (தற்போது மொத்தமாக சுமார் 140மில்லியன் மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்துள்ளனர்). கரோனாவின் காரணமாக பல்வேறு இன்னலுக்கு ஆளான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கால்நடையாகவும், மிதிவண்டிகள், சிறப்பு ரயில்கள், சாலைப் போக்குவரத்து மூலமாகவும் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதற்காக ரூ.8000வரை ஒரு நபருக்கு செலவிட்டதாக அறியப்படுகிறது. செல்லும் வழியில் உயிரிழப்பு, உடல்நலமின்மை, விபத்து, உணவற்ற நிலை, காவல்துறையின் அத்துமீறல் என எண்ணற்றத் துயரங்களை இவர்கள் சந்திக்க நேர்ந்தது.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் பெரும்பாலும் முதலாளிகளுடன் எந்தவித வேலைக்கான ஒப்பந்தமும் இன்றி இடைத்தரகர்கள் மூலம் பணிக்கு அமர்கின்ற காரணத்தினால், தொழிலாளர் சட்டங்கள் நடைமுறையில் செல்லாமல் ஆகின்றது. இந்தியவில் மூன்றில்-இரண்டு பங்கு கூலி மற்றும் ஊதியம் பெறும் தொழிலாளர்களும், 68.4 விழுக்காடு ஒப்பந்த தொழிலாளர்களும், 92.5 விழுக்காடு தினக் கூலிபெறுபவர்கள் எந்தவித வேலைஒப்பந்த நடைமுறையுமின்றி பணிசெய்கின்றனர். மேலும் மொத்த தொழிலாளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் எந்த விதமான சமூக பாதுகாப்பும் இன்றியுள்ளனர். பணிபாதுகாப்பின்றி சுமார் 90 விழுக்காடுக்கு தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பற்ற நிலை நகர்புறங்களைவிட அதிகஅளவில் காணப்படுகிறது. உலக தொழிலாளர் அமைப்பின் கணிப்பின்படி இந்தியாவில் நான்கில் ஒருபங்கு தொழிலாளர்கள் கீழ்மட்ட வேலைவாய்பினை பெற்றுள்ளனர்

கரோனாவிற்கான முதல்கட்ட முடக்கத்தின்போது 121.5 மில்லியன் வேலை இழப்பினை ஏப்ரல் 2020 எதிர்கொண்ட நிலையில், இதில் அதிக அளவாகக் கூலித் தொழிலாளர்கள், சிறு வாணிகம் செய்பவர்கள் பெரும் பாதிப்பிற்கு (91.2 மில்லியன்) உள்ளானர்கள். மேலும் இப்பாதிப்பு கிராமப்புறங்களைவிட நகர்புறங்களில் அதிக அளவிற்கு பாதிக்கப்பட்டது என்பது குறிப்பித்தக்கது. சிறுதொழில்கள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் பெருமளவில் நகர்புறங்களை சார்ந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. மே 2020இல் வேலை இழப்பு 100.3 மில்லியனாக குறையத்தொடங்கியது பல்வேறு தளர்வுகளின் காரணமாக மீண்டும் வேலைகள் புத்துயிர் பெற்றத் துவங்கியதன் விளைவாக ஜூன் 2020இல் 29.9 மில்லியன் வேலைஇழப்பானது ஜூலை 2020இல் 11 மில்லியன் வேலைஇழப்பாகக் குறைந்தது. குறிப்பாக இக்காலகட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நகர்புறங்களில் வேலை இழந்து தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை தந்து உதவியது. ஆனால் இது ஒரு நிரந்தர தீர்வாகக் குறிப்பிட முடியாது. இந்திய பொருளாதார கண்கானிப்பு மையத்தின் வேலையின்மை கணக்கின்படி பொது முடக்கம் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் வேலையின்மையின் அளவு இந்தியா இதுவரை கண்டிராதா அளவிற்கு உச்சத்தை 23.52 விழுக்காடு மற்றும் 21.73 விழுக்காடு என்று முறையே எட்டியது. பின்னர் அரசு பல தளர்வுகளை தொழிற்சாலைகளுக்கும் சேவைத் தொழிலுக்கும் அறிவித்ததன் விளைவாக வேலையின்மையின் தீவிரம் குறைத்தொடங்கியது.

வேளாண்மை, சிறுவாணிகம் போன்றவற்றில் வேலை புத்துயிர் பெறத் துவங்கியது ஆனால் மாத ஊதியம் பெரும் தொழிலாளார்களின் வேலை இழப்பு ஆகஸ்ட் முடிய 21 மில்லின் என்று அதிகரித்து மீண்டும் புத்துயிர் பெறாத நிலையில் உள்ளது, இவர்கள் பெரும்பாலும் தனியார் அமைப்புக்களில் அல்லது வீடுகளில் பணியாட்களாக வேலைபார்ப்பவர்களாக உள்ளனர். ஆகஸ்ட் 2020ஆம் மாதத்தில் மொத்தம் 8.5விழுக்காடாக வேலையின்மை பதிவாகியுள்ளது (வரைபடம் பார்க்க). இந்த வேலையற்றநிலை புள்ளிவிவரத்தை முழுஅளவிற்கு எடுத்துக்கொள்ளமுடியாது காரணம் மாதத்தில் ஒருநாள் வேலை செய்திருந்தாலே அவர் வேலை பெற்றவராகிவிடுவார். மேலும் புத்துயிர் பெற்ற வேலைகள் பெரும்பாலும் சுய வேலைவாய்பினைச் சார்ந்ததாகும், இத்தொழிலாளர்கள் தங்களின் பணியினைத் தொடர்ந்தாலும் மிகக் குறைவான வருமானமே பெறுகிற நிலைஉள்ளது காரணம் மக்களின் வாங்கும் திரன் வெகுவாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உண்மையான நிலையில் தொடர் வேலையற்றோர் அளவு மிகவும் அதிக அளவில் இருக்கும். மாhச்சு-ஜூன் 2020 மாதங்களில் சராசரியாக வேலைஇழப்பினைச் சந்தித்த மாநிலங்களின் பட்டியலில் உச்ச அளவாக 34.4 விழுக்காடு ஹரியான மாநிலத்திலும், 33.8 விழுக்காடு ஜார்கண்ட் மாநிலத்திலும், 31.93 விழுக்காடு பிஹார் மாநிலத்திலும் 25.68 விழுக்காடு தமிழ் நாட்டிலும் காணப்பட்டது (வரைபடம் பார்க்க). இதில் குறிப்பிடவேண்டிய அம்சம் என்னவென்றால் இம்மாநிலங்கள் உற்பதிசார்ந்த மற்றும் தொழிலாளர் நிரைவுடைய மாநிலங்களாகும்.

siragu chat2

siragu chat3

இந்தியாவில் மொத்தம் 47 மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களும் மாநிலங்களில் 200 சட்டங்களும் உள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, மாநிலங்களுக்கிடையான புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டம் 1979, முறைசாராத் தொழிலாளர் சமூக பாதுகாப்பு சட்டம் 2008 மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சட்டம் 1970 போன்றவைகள் இருந்தாலும்இவற்றால் எந்த குறிப்பிடத்தக்க பலனும் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. மாநிலங்களுக்கிடையே புலம்பெயரும் தொழிலாளர்களின் புள்ளிவிவரங்கள் சரியாக எடுக்கப்படுவதில்லை என்ற நிலையும் உள்ளது. தற்போது கரோனா வைரஸ் பரவலைக் கணக்கில் கொண்டு சீனாவில் இருந்து வெளியேறும் தொழிற்சாலைகளை ஈர்கும் பொருட்டும் அந்நிய நாட்டு முதலீடுகளைப் பெறுவதற்கு 11 மாநிலங்கள் தங்களின் தொழிலாளர் சட்டங்களை பெருமளவிற்கு தளர்த்தியுள்ளது. குறிப்பாக வேலைநேரம் நீடிப்பு (பொதுவாக ஒருநாளைக்கு 8லிருந்து 10மணி நோம்), சுழற்சி பணியினைக் கொண்டு வருதல், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியினை 12லிருந்து 10விழுக்காடாக குறைத்தல் போன்ற பல்வேறு தொழிலாளர் உரிமைகளை பாதிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் தொழிலாளர் சட்டங்கள் நீர்த்துப்போக செய்யக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையினால் வேலைஇழப்பு, கூலியில் வீழ்ச்சி, தனிநபர் கடன் அதிகரிப்பு, வாழ்வாதாரம் இழத்தல், பொருளாதார வளர்ச்சியில் பெரும் வீழ்ச்சி, வெளிநாட்டு ஏற்றுமதி-இறக்குமதி பாதிப்பு, தொழிற்சாலை உற்பத்தி நிறுத்தம், விநியோகச் சங்கிலி கட்டுப்பாடு போன்ற பாதிப்புகள் உணரப்படுகிறது. வேலை இழப்பினால் வேலைஅமைப்பில் அடிமட்டத்தில் உள்ள தினக்கூலிகள், சிறுவணிகர்கள், தனியார் நிறுவன தொழிலாளர்கள் அதிகஅளவில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். பெருமளவு தொழிலாளர்கள் வறுமைநிலைக்கு (40மில்லியன் புதியதாக வறுமை நிலைக்கு சென்றுள்ளனர்) தள்ளபட்டுள்ளனர் என்று புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மிக மோசமான வறுமைக்கு 4விழுக்காடு அளவிற்கு சென்றுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே கரோனா தொற்றின் பயம், நீண்ட தூர இடங்களில் பணியிடம், மீண்டும் வேலை கிடைக்குமா என்ற அச்சம், வருமானமற்ற நிலை போன்றவைகள் மிகப் பெரிய சவலாக உள்ளது. எனவே இவர்கள் பெரும்பாலும் சிறிய அளவிலான நிலங்களில் பயிரிடத் தொடங்கியுள்ளனர், நிலமற்றவர்கள் குறைவான கூலிக்கு வேளாண்மையும் அதைச்சார்ந்த தொழிலுக்கு செல்லத்தொடங்கியுள்ளனர். அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்கள் இத்தொழிலாளர்களின் துயர்துடைக்க போதுமான அளவில் இல்லை. நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமர்த்தியா சென் அவர்கள் இந்தியத் தொழிலாளர்களைப் பற்றி குறிப்பிடும் போது, இந்தியாவில் மிக அதிகமான ஏழைத் தொழிலாளர்கள் நல்ல வேலையை நோக்கி செல்பவர்களுக்கு மிகவும் குறைவான வாய்புகளே இருக்கின்றன என்றார்.

அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் வேலைவாய்பினை உருவாக்கி இருந்தலும் அது தற்போதைய தேவைக்கு ஏற்ற அளவிற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. மேலும் இதற்கு வழங்கப்படும் கூலி மிகவும் குறைவாகவும், குறைந்த பட்ச கூலியைக்கூட அடைய முடியாத நிலையில் உள்ளது. இதுபோல ஆண்டுக்கு 100நாட்கள் வேலை என்பது போதுமானது இல்லை. உற்பத்தித்துறை, சேவைத்துறை இரண்டும் தற்போதும் முழுஅளவிற்கு இயல்பு நிலையினை அடையாத காரணத்தினால் வேலைகள் புத்துயிர் அடைதல் இன்றி இந்தியப் பொருளாதாரம் காணப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான தேவை சந்தையில் உயிர்பெறவில்லை. காரணம், அதிக அளவிலான தொழிலாளர்கள் முறைசார (91 விழுக்காடு) பணிகளில் ஈடுபட்டுள்ளனர் இவர்களின் வேலை தற்போதும் மீண்டு எழவில்லை என்பதால் வாங்கும் சக்தி இழந்துள்ளனர் இதனால் சந்தை தேவை குறைந்து காணப்படுகிறது. இது ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் வெகுவாக பாதித்துள்ளது. இதன் விளைவு 2020இரண்டாவது காலாண்டில் சுமார் 24 விழுக்காட்டிற்கு வீழ்ச்சியினை இந்திய பொருளாதாரம் எதிர் கொண்டுள்ளது. தற்போது வேலைவாய்பினை உருவாக்குவது மட்டும் முக்கியமல்ல, 12ஆம் ஐந்தாண்டு திட்டத்தில் குறிப்பிட்டவாறு கண்ணிமான வேலைவாய்பை உருவாக்கி வெகுஜனமக்களின் வாழ்கைத்தரத்தினையும் உறுதிபடுத்தவேண்டும்.

இந்தியப்பொருளாதாரம் புத்துயிர்பெறவும் வேலைவாய்பினை அதிகரிக்க பொது முதலீடு அதிகரிக்கப்படவேண்டும், நகர்புறங்களில் வேலைவாய்பினை பெருக்க உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒன்றிணைந்து அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் வகுக்கவேண்டும், சிறு மற்றும் குறு தொழில் மேம்பாட்டினை உறுதி செய்ய வேண்டும், சமூதாயத்தில் ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கு நேரடியான பண மாற்றம் செய்து தரவேண்டும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மதிக்கதக்க வருமானம் பெரும் தொடர் வேலைவாய்பினை உருவாக்க வேண்டும், சமூக பாதுகாப்பினை அனைவருக்கும் உறுதி செய்ய வேண்டும், தொழிலாளர் சட்டங்களை தீவிரமாக நடைமுறைபடுத்த வேண்டும். உள்கட்டமைப்புகள் மீதான முதலீடுகளை அதிகரிப்பதினால் புதிய வேலைவாய்புகளை உருவாக்க முடியும் கட்டமைப்புகளை வலுபடுத்த முடியும். இவற்றை நடைமுறைபடுத்த மாநிலங்களில் நிதி சுயசார்பினை மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும்.

——————————-

இக்கட்டுரையின் ஆசிரியர், திரு.ந.பாலசுந்தரம் அவர்களுக்கு இக்கட்டுரை முழுவடிவம் பெற உதவியதற்கு தனது நன்றியினை பதிவுசெய்துள்ளார்.


பேரா.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை – அண்மைக்காலச் சூழல்”

அதிகம் படித்தது