மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியின் தோற்றம்

வெங்கட் நடராஜன்

Jun 15, 2019

Sanskrit verse from Bhagavad Gita

அரேபிய மொழியை சற்று எளிமையாக்கி உருது உருவானது. எனவே தான் உருது பேசுபவர்களுக்கு அரபு மொழி புரிகிறது. உருது சமஸ்கிருதத்தில் கலந்து இந்தி பிறந்தது. எனவே தான் இந்திக்கும் உருதுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தேவநாகரீ எழுத்துரு கொண்டது இந்தி, அரேபியா எழுத்துரு கொண்டது உருது. மற்றபடி இந்தி சமஸ்கிருதத்தில் இருந்து மட்டுமே பிறந்ததது என்பது தவறான பிரச்சாரம். இதைத் தாண்டி இந்தியின் பூர்விகம் அரபு மொழியாகும். இதன் தாயகம் பாரசீகம் எனப்படும் ஈரான், மெசபடோமியா எனப்படும் ஈராக், சிரியா துருக்கி போன்ற நாடுகளாகும்.

இந்தி இந்தியாவின் அடையாளமா?

முகலாயர் ஆட்சியில் பிறந்த ஒரு மொழி எப்படி இந்தியாவின் அடையாளமாகும்? சுமார் 500 ஆண்டுகள் வரலாறு மட்டுமே கொண்ட இளம் மொழி எப்படி தேசிய மொழியாக முடியும்? முகலாயரின் ஆட்சி மொழியான உருது ஆங்கிலேயர் ஆட்சியில் நவீன இந்தியாக வடிவெடுத்தது. இந்தி எந்த விதத்திலும் மற்ற மொழிகளைவிட உயர்ந்தது அல்ல, அதை மற்றவர்கள் மீது திணிக்க வேண்டிய அவசியமும் அல்ல.

இந்தி தேவையா?

பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தாலும், அது இந்திய மொழிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்ததனால், படித்த ஒரு சிலரைத்தவிர பெரும்பாலான மக்களால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே அவர்களை இணைக்க இருந்த ஒரே வழி இந்தி. அனைவரும் கல்வியறிவு பெற்ற இக்கணினி யுகத்தில் அப்பணியை இந்தியை விட சிறப்பாக செய்ய ஆங்கிலம் காத்திருக்கிறது. எனவே இந்தி தேவையல்ல.

இந்தியினால் ஏற்படும் அபாயம்

ஏற்கனவே ஆங்கிலம் தாய்மொழியை சிதைத்துக் கொண்டிருக்கின்ற இக்காலத்தில், இந்தியை சேர்த்தால், அது முற்றிலுமாக அழித்துவிடும். அலுவலகத்தில் ஆங்கிலம் பேசுவார்கள், தெருவில், இந்தி பேசுவார்கள், பிறகு தாய்மொழி வீட்டிலேயே முடங்கிவிடும் அபாயம் ஏற்படும். உதாரணமாக ஹரியாணி, ராஜஸ்தானி, பிகாரி, மராட்டி போன்ற பல மொழிகளை அழித்தது இந்தி என்றால் அது மிகையாகாது.

ஒரு மொழியை கற்கும்போது, அதன் கலாச்சாரமும் சேர்ந்தே குடிபுகுந்துவிடும். உதாரணமாக இந்தி திரைப்படம் மற்றும் அவர்கள் கலாச்சாரம் நம் பண்பாட்டை அழிக்கும் நிலை ஏற்படும். பிறகு அடையாளம் தெரியாமல் அலையும் அவலநிலைக்குத் தள்ளப்படுவோம்.

மேலும் பள்ளிச்சுமை அதிகமாக உள்ள இக்காலத்தில், தமிழ், ஆங்கிலத்துடன், இந்தியையும் சேர்த்தால், சுமை அளவுக்கதிகமாகிவிடும். மாணவர்கள் மேலும் மனஇறுக்கம் அடைவார்கள். எனவே இந்தி மற்ற மொழிகளையும் கலாச்சாரத்தையும் அழிக்குமே தவிர பயன் ஏதும் இல்லை.

உலக மொழிகள் அழிந்த சான்று

கோபால், ஜாவா போன்ற கணினி மொழியானாலும் சரி, அல்லது மனிதனின் மொழியானாலும் சரி, பயன்பாட்டில் இல்லாவிட்டால், கண்டிப்பாக அழியும் என்பது இயற்கையின் விதி.

சோவியத் யூனியனில் இருந்த பல நாட்டு மொழிகளை அழித்த பெருமை ரஷ்ய மொழிக்கு உண்டு. மத்திய மற்றும் தென் அமெரிக்க கண்டத்தின் ஒட்டு மொத்த மொழிகளையும் கலாச்சாரத்தையும் இருந்த சுவடு தெரியாமல் நிர்மூலம் ஆகியது ஸ்பானீஷ் மற்றும் போர்த்துகீச்சு மொழிகள்.

ஆங்கிலம் கூட, ஸ்காட்லாந்து, அயர்லாந்தில் மற்றும் வேல்ஸ் நாடுகளில் பேசப்பட்ட கெய்லிக் மொழிகளை அழித்துவிட்டது. அதேபோல் சீனத்தின் மேன்டரின் பிலிப்பைன்சின் தகாலக் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதிலிருந்து இந்தி ஆதிக்கம் எந்த வகையில் வேறுபட்டது என்று சற்றே சிந்தியுங்கள்!

இந்தி எதிர்ப்பு?

http://www.dreamstime.com/stock-images-hindi-alphabet-texture-background-high-resolution-image38459934

இந்தி தேசிய மொழியும் அல்ல நமது அடையாளமும் அல்ல, பிறகு ஏன் அதை கற்க வேண்டும். பலகோடி மக்கள் பேசும் ஒரு மொழியாக இந்தியை மதிக்கிறோம். சீனம், அரபி, ரஷ்யன் போல் அதுவும் ஒரு மொழி அவ்வளவு தான். அதன் மீது விறுப்போ வெறுப்போ எங்களுக்கு இல்லை. இந்தி திணிப்பை நிறுத்தி மத்திய அரசு ஆக்கப்பூர்விமான விசயங்களில் கவனத்தை செலுத்த வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் தனியார் மையங்களில் தாராளமாக இந்தியை கற்றுக்கொள்ளலாம். மக்கள் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்து பள்ளிகளில் கற்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதையும் மீறி இந்தி திணிக்கப்பட்டால் தமிழ்நாடு மட்டுமல்ல தென்னிந்தியா முழுதும் தாய்மொழி காக்க போராட வேண்டும். இது இந்தி எதிர்ப்பு அல்ல மாறாக ஒவ்வொரு மொழியையும் பாரம்பரியத்தையும் காக்கும் போர் என்ற ரீதியில் இந்தி பேசும் மாநிலங்கள் உட்பட அனைத்து மக்களும் இதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும்.

இருமொழிக்கொள்கை

இந்தியாவிற்கென்று ஒரு மொழி அவசியம், அது இந்தி என சிலர் வாதிடலாம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில், ஆங்கிலமே முதன்மை ஆட்சி மொழியாக உள்ளது. இந்த நாடுகள் எந்த விதத்திலும் பின் தங்கவில்லை. அதேபோல் நாமும் ஆங்கிலத்தையும், தாய்மொழியையும் கொண்ட இரு மொழி ஆட்சி கொள்கையைப் பயன்படுத்தலாம். இந்தியா செழிப்பாகவே வளரும்.

ஒரு மொழி உருவாக பல ஆண்டுகள் ஆகலாம். அதை சில ஆண்டுகளில் அழித்து விட்டால், திரும்ப மீட்கவே முடியாது. தாய்மொழி ஒரு பொக்கிசம் அதை போற்றி பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.


வெங்கட் நடராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியின் தோற்றம்”

அதிகம் படித்தது