மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய செய்தி நிறுவனங்களின் சாதீய முகம்

தேமொழி

Aug 10, 2019

siragu saadhi1
மக்களாட்சியின் அடிப்படை அதன் பன்முகத்தன்மை கொண்ட மக்களின் உரிமைகளின் மேல் கட்டமைக்கப்படுகிறது. அதனால் மக்கட்தொகையின் உண்மையான பிரதிநிதியாக இருக்க வேண்டியது மக்களாட்சி முறையைப் பின்பற்றும் அரசு ஒன்றின் கடமையாகிறது. பன்முகத்தன்மை கொண்ட மக்களின் விகிதாச்சாரம் மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்படுபவரிடம் இல்லாத பொழுது அதை நீக்க நடவடிக்கை எடுக்க அரசு முயல வேண்டும். சிறுபான்மையினர், விளிம்புநிலை மக்கள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் எனப் பாலின, வர்க்க, வயது, சமயம், இனம், நிற எந்த வேறுபாடாக இருப்பினும் அவர்களது பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் பொழுது அவர்கள் உரிமையைத் தேவையை அரசுக்குத் தெரிவிக்கும் வாய்ப்பும் இல்லாது போகும். அந்த நிலை வாய்ப்பிழந்தவர்களின் முன்னேற்றத்தையும் பெரிதும் பாதிக்கும். மக்களாட்சியின் அரசுத்துறை, நீதித்துறை, சட்டமன்றம் போன்றவற்றில் இன்றுவரை தலித் மற்றும் பழங்குடியினர் தேவையை உரைக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறது. மக்களாட்சியின் நான்காவது தூண் எனப்படும் ஊடகத்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதைத்தான் ஒரு புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.

ஊடகத்துறையில் நாட்டு மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தாலே அது மக்களாட்சிக்குச் சரியான தகவலைத் தந்து கடமையாற்ற முடியும். ஆனால் … பன்னாட்டு ‘சிவில் சொசைட்டி நிறுவனமான’ ஆக்ஸ்ஃபாம் இந்தியாவும் வலைத்தளத்தில் இயங்கி வரும் செய்தி நிறுவனமான நியூஸ் லாண்டரியும் இணைந்து ஆகஸ்ட் 2 ஆம் நாளன்று புது டெல்லியில் நடந்த மீடியா ரம்பிள் (Media Rumble) என்ற ஊடகச் சூழல் பற்றிய கருத்தரங்கில் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று இந்திய ஊடகங்களில் ஒடுக்கப்பட்ட செய்தியாளர்களின் பிரதிநிதித்துவம் என்ன என்பதை விவரிக்கிறது.

“பத்து ஆண்டுகளுக்கும் மேலான தேடலுக்குப்பிறகு நாட்டின் ஆங்கில ஊடகத்துறையில் பணியாற்றுவோராக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த 8 இதழியலாளரையே காண முடிந்தது. அவர்களிலும் இருவர் மட்டுமே வெளிப்படையாகத் தங்களது பின்புலத்தைக் கூறினர்” என்று அல்-ஜசீரா (சுதிப்தோ மண்டல் என்ற தலித் ஊடக செயற்பாட்டாளர் எழுதிய கட்டுரையில்) கூறும் முன்குறிப்புடன் துவங்கும் ஆய்வறிக்கையானது, நாட்டில் ஒடுக்கப்பட்டோர் பங்களிப்பு ஊடகத்துறையில் இல்லாமை என்ற கவலைக்கிடமான செய்தியைத் தருகிறது.

ஒரு சமுதாயத்தின் பல்வேறு சூழலில் இருப்போரின் நிலைகளை அறிந்து கொள்ளவும் அவர்கள் நாட்டு நடப்பு விவகாரங்களில் பங்கெடுத்துக் கொள்வதற்கும் பிரதிநிதித்துவம் முக்கியமானது. உதாரணமாக ஒரு அரசாங்கக் கட்டிடம் அனைவருக்கும் உபயோகமானதாக இருக்க வேண்டுமெனில் அக்கட்டிடத்தைக் கட்டும் பொறியாளர்கள் மாற்றுத்திறனாளிகளைக் கலந்தாலோசிப்பது முக்கியம். மற்றவர்களே மாற்றுத்திறனாளிகள் போலச் சிந்தித்து முடிவு செய்வது மாற்றுத்திறனாளிகளை அலட்சியப்படுத்துவதாகும். அது மட்டுமல்ல அவர்களைச் சமமாகப் பாவிக்க அரசாங்கம் மறுக்கிறது என்பதும் அதில் உள்ள ஒரு செய்தி. இது ஊடகத்துறைக்கும் பொருந்தும். சென்ற நூற்றாண்டில் பல இன மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு பத்திரிகைகள் வெளியாயின என்பதை வரலாறு காட்டுகிறது. நாட்டின் உண்மை நிலையை அறிய, சார்புநிலையற்ற கோணம் வெளிப்பட ஒரு செய்தியைச் சொல்வோர் யார் என்பதும் நமக்கு முக்கியம்.

இந்திய ஊடக நிறுவனங்கள் இன்றளவிலும் சாதியப் போக்குடனே இருந்து வருகிறது, தலித் மற்றும் பழங்குடி இனம் சார்ந்த செய்தியாளர்களை ஓரங்கட்டுகின்றன இந்தியச் செய்தி நிறுவனங்கள் என்பதுதான் நாம் இந்த ஆய்வறிக்கையின் வழி அறியும் முக்கியச் செய்தி. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியினர் போன்றவர்களுக்கு இந்திய ஊடகத்துறைகளின் கதவு மூடியவாறே உள்ளது என்பதை இந்த ஆய்வறிக்கை ஆதாரத்துடன் முன்வைக்கிறது.

siragu piravikkadal1

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது கருத்துகளை வெளியிட வாய்ப்பில்லாத நிலையே தொடர்ந்து இருந்து வருவதையும், மேல் சாதி மக்களே ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகத் தொடர்ந்து இருந்து வருகின்றனர் என்பதையும் கவனத்திற்குக் கொண்டுவருவது இந்த ஆய்வின் சிறப்பு. விளிம்புநிலை மக்கள் தங்கள் நிலைப்பாட்டையும் அரசியலையும் ஊடகப் பொதுவெளியில் வைத்திட வழியற்ற நிலையில், ஆதிக்க வர்க்கத்தினரின் குரல்களே இந்நாட்டின் குரலாகவும் அதுவே நம் அரசியலைத் தீர்மானிக்கும் திறன் உள்ளதாகவும் இருக்கும் சூழ்நிலையை மாற்ற இனியாவது திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.

• நாளேடுகள் (ஆங்கிலம் மற்றும் இந்தி), தொலைக்காட்சி நிறுவன செய்தி நிகழ்ச்சிகள் (ஆங்கிலம் மற்றும் இந்தி), இணையதள செய்தி நிறுவனங்கள் மற்றும் இதழ்கள் என நான்கு செய்தி தரும் ஊடகப் பிரிவுகள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

• இந்த செய்தி ஊடகங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்போர் மற்றும் செய்தியாளர்கள், நிருபர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் சாதி பின்புலம் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

• தொலைக்காட்சி என்றால் பெரும்பான்மையோர் கவனிக்கும் நேரம், பரபரப்புச் செய்தியின் விவாத மேடை நிகழ்வுகள் போன்றவற்றின் நெறியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் சாதிப் பின்னணி ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

சாதி நிர்ணயிக்கப்பட்ட முறை:

ஒருவரின் சாதி அடையாளத்தைக் காண மூன்று வகையான வழிமுறைகளை, இந்த ஆய்வறிக்கை, பின்பற்றியுள்ளது. சாதி சார்ந்த குடும்பப்பெயர், ஒருவரது அரசு சார்ந்த சான்றிதழ் பதிவு செய்யப்பட்ட விதம், மற்றும் நேரடித் தொடர்பு கொண்டு சாதி விவரங்களை உறுதி செய்வது என மூன்று விதமான வழிகளில் இந்திய ஊடகவியலாளர்களின் சாதி அடையாளத்தினை உறுதிப்படுத்தியுள்ளனர். இதையும் மீறி சாதிய அடையாளங்களை முற்றிலுமாக அறிவதில் சிக்கல் உள்ளதையும் இந்த ஆய்வறிக்கை பதிவு செய்துள்ளது.

உதாரணமாக, ஆய்வுக்குள்ளானோரில் பெரும்பாலான ஊடகவியலாளர்களின் இந்து குடும்பப் பெயர்களில் (sur name) வெளிப்படையாகச் சாதிப் பின்னணியைக் காட்டுவதைக் கொண்டே அவர்களின் சாதிய அடையாளம் முடிவு செய்யப்பட்டுள்ளது. அது இயலாத பொழுது வேறு நம்பிக்கைக்குரிய வழிகளில் தரவுகள் சேகரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. சாதி மற்ற மதங்களிலும் உள்ளபடியால், இந்து சமயம் தவிர்த்து வேறு சமயத்தினர்களுக்கு அவர்கள் பெயர் கொண்டு அவர்களது சமூக நிலையை அறியமுடியாமல் போயுள்ளது.

அதே போல, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் 26% செய்தியாளர்களின் பெயர் கொண்டு அவர்களின் பின்னணியை அறிய முடியாமல் போயுள்ளது. நாளிதழ்களின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியின் தரவு சேகரிக்கப்பட்டதாக அறிக்கையின் ஆய்வுமுறை-விளக்கம் பகுதி கூறுவதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்து நாளிதழின் தலைமையகம் சென்னை நகர் என்பதால், தமிழக அலுவலகத்தில் பணியில் இருப்போரும் செய்தியாளர்களும் தமிழக நடைமுறையின் படி சாதிப்பெயரைத் தவிர்த்தமையே செய்தியாளர்களின் சாதியை அறியமுடியாமல் போனதன் காரணம் எனக் கணிக்கவும் முடிகிறது.

ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் ஊடகத்தில் பணியாற்றுவோரின் பன்முகத்தன்மை குறித்த ஆய்வறிக்கையின்படி இந்தியாவின் ….

• செய்தி நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் தலித் மக்களும், பழங்குடிகளும் இல்லை, தலைமைப் பதவிகளில் இருப்போர் பெரும்பான்மையினர் மேல்சாதிப் பிரிவினரே
• முதன்மைச் செய்தியாளர் தகுதியில், முக்கால்வாசி செய்தி தொகுப்பாளர் பணியிடங்களில் மேல்மட்டத்துப் பிரிவினரே நிரம்பி உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்டவர், தலித், பழங்குடி ஆகிய பிரிவுகளில் ஒருவரும் இந்த வாய்ப்பைப் பெறவில்லை
• முக்கியமான விவாத அரங்குகளில் 70% மேலான நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோரும் மேல்மட்டத்துப் பிரிவினரே
• ஆங்கில நாளிதழ்களில் 5% செய்திகள் மட்டுமே பழங்குடி இனத்தினரால் எழுதப்படுகிறது
• செய்தித்தாள்களில் சாதி குறித்த செய்திகள் எழுதுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மேல் சாதியைச் சேர்ந்தவர்களாவார்
• 70% க்கும் மேலான இணைய செய்தித்தளங்களில் எழுதப்படும் செய்திகளை எழுதுவோரும் அவர்களே
• வணிக செய்திகள் எழுதுவோர் அனைவரும் மேல் சாதி எழுத்தாளர்களே
• விளையாட்டு செய்திகள் எழுதுவோரில் சிறுபான்மை சமூகத்தினரே இல்லை
• இதழ்களின் அட்டைப்படச் செய்திகளில் சாதிக்கு மிகமிகக் குறைந்த அளவே இடம் உள்ளது

அட்வோகேசி நிறுவனம் முன்னர் கவனத்திற்குக் கொண்டுவந்ததையே (“Advocacy” – Absent Dalit: the Indian newsroom, March 25, 2016; Indian media wants Dalit news but not Dalit reporters, June 3, 2017) இந்த ஆய்வறிக்கையும் உறுதி செய்கிறது.

தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் இந்திய ஊடகத்துறைகளில் இடமில்லை. பல்வேறு ஊடகங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரும் மேல் சாதி மக்களே என்பதை இந்த ஆய்வறிக்கை மீண்டும் வலியுறுத்துகிறது.

விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதுபவரும் செய்தி தருபவரும் அந்த வாழ்க்கைமுறையில் வாழ்பவர் அல்ல என்பதும் தெரிகிறது. மேல்கல்வி நிலையங்களில் கல்வியைத் தொடரமுடியாமல் உயிரிழந்த மாணவர்களின் இக்கட்டான வாழ்வியல் சூழ்நிலையும், காடுகளில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் உரிமையையும் இழந்து அங்கிருந்து வெளியேற்றப்படும் நிலைமையும் சரியானபடி அரசின் கவனத்தைக் கவர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாத காரணம் அவர்களின் பிரதிநிதித்துவம் ஊடகத்துறையில் இல்லாதது என்பதை நாம் இங்கு நினைவு கூர வேண்டும்.

எழுதுவோர் கருத்தே விளிம்புநிலை மக்களின் கருத்தாக நாம் அறியப்படும் நிலை என்பதுதான் இன்றைய நடைமுறை. ஆய்வின் முடிவில் அறிக்கை சுட்டுவது போல, “தீண்டத்தகாதவர்களுக்குப் பத்திரிகை கிடையாது” என்று அம்பேத்கர் 1938 ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரை இன்றைய சூழலிலும் பொருந்தி இருப்பது நாம் வாழும் சமூகத்தில் சாதியக் கூறுகள் 80 ஆண்டுகள் கழித்தும் மாறவில்லை என்பதையே காட்டுகிறது.

அமெரிக்காவில் 1960களில் வெள்ளையர் பார்வையையே நாட்டின் குரலாகப் பிரதிபலிப்பதாகவும், கறுப்பர்கள் குரல் கேட்கப்படவில்லை என அமெரிக்கச் செய்தித்தாள்கள் விமர்சனத்திற்கு உள்ளாயின. இன்றைய இந்தியச் செய்தி ஊடகங்களின் நடைமுறையும் அந்த நிலையை ஒத்துள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. செய்தி தயாரிப்பில், செய்திகளை முடிவு செய்வதில், ஒரு நிகழ்வில் உள்ள சாதிய சமூக நீதிக்கான அரசியலையும் அறத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களாலேயே முன்வைக்க முடியும்.

எனவே அந்நிலை நடைமுறைக்கு வர, செய்தியாளர்களை பணிக்கு அமர்த்துவதில் நாட்டின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். அதற்குச் செய்தியாளர்களாகப் பல பின்புலம் உள்ளவர்களையும் பணிக்கமர்த்தி தேவையான பயிற்சிகளும் அளித்து ஊக்கப்படுத்தவேண்டும் என்ற அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட உறுதியான நடவடிக்கை தேவை என்றும் ஆலோசனை தருகிறார்கள் ஆய்வாளர்கள்.

“காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற் பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே”
எனப் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் செய்தித்தாளின், ஊடகத்துறையின் வலிமை எத்தகையது என்று குறிப்பிடுவார்.

விடுதலை அடைந்து பல பத்தாண்டுகள் கடந்தும் இந்தியாவில் ஒடுக்கப்பட்டோர் தங்கள் குரலை பொது வெளியில் பதிவு செய்யமுடியாத நிலையும் மேல் சாதியினரின் அனுமானமே ‘பொதுப்புத்தியாக’ அவதானிக்கும் நிலையும் நிலவுகிறது. இந்நிலை என்றுதான் மாறுமோ என்ற எண்ணமே மேலோங்குகிறது. மக்களாட்சியின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகம், சமுதாயத்தில் ஊறியுள்ள சாதியம் சார்ந்த சமூக அநீதியைக் களைவதற்கு உதவ முயலவில்லை என்பது தரவுகள் மூலம் இந்த ஆய்வறிக்கை மீண்டும் உறுதி செய்கிறது.

ஆங்கிலம் மற்றும் இந்தி செய்தி ஊடகங்களை ஆய்வு செய்த இந்த ஆய்வாளர்கள் தமிழ்ச் செய்தி ஊடகங்களை ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை என்றாலும், தமிழ்ச் செய்தி நிறுவனங்களின் நிலை எந்த விதத்திலும் மாறுபட்டு இருக்காது. எனவே இந்த ஆய்வின் முடிவினைக் கருத்தில் கொண்டு தமிழக ஊடகங்களும் தங்கள் நிலையைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

______________________________________

சான்றாதாரங்கள்:
1. “Who Tells Our Stories Matters: Representation of Marginalised Caste Groups in Indian Newsrooms”, OXFAM India, Released on August 2nd 1019.

https://www.oxfamindia.org/sites/default/files/2019-08/Oxfam%20NewsLaundry%20Report_For%20Media%20use.pdf

2. Indian media is an upper-caste fortress, suggests report on caste representation

https://www.newslaundry.com/2019/08/02/caste-representation-indian-newsrooms-report-media-rumble-oxfam-india

___________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய செய்தி நிறுவனங்களின் சாதீய முகம்”

அதிகம் படித்தது