மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தி எதிர்ப்பால் தமிழகம் இழந்தது என்ன? – மீள்பதிவு

சாகுல் அமீது

Sep 12, 2015

http://www.dreamstime.com/stock-images-hindi-alphabet-texture-background-high-resolution-image38459934ஏப்ரல் 15, 2012 அன்று வெளிவந்த இக்கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகிறது.

சமீப காலங்களில் சென்னை விமான நிலையத்திற்குச் சென்றிருப்பவர்கள்  மேலே படத்தில் இருக்கும் அறிவிப்புப் பலகையை பார்த்திருப்பீர்கள். இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து ஏறத்தாழ  ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்ட  நிலையில் நடுவண் அரசு  இந்தியை தமிழகத்தில் மென்மையாக பரப்புரை செய்வதைத்தான் இந்தப் பதாகை உணர்த்துகிறது. எத்தனை ஆண்டுகளாயினும் இந்தியை ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்பதில் நடுவண் அரசு உறுதியாகத்தான் இருக்கின்றது. இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதை தமிழர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தனர் அன்று. இன்று?

இன்று இந்தி எதிர்ப்பைப் பற்றி பேசும்பொழுது தமிழர்களில் பெரும்பாலானோர்  கூறுவது “ஆமாம், இந்தியைப் படிக்காதே என்று ஊருக்கு சொல்லிவிட்டு, தன் வாரிசுகளை எல்லாம் இந்தியைப் படிக்க வைத்து  நடுவண் அரசில் அமைச்சர்களாக்கி விட்டனர் அரசியல்வாதிகள், நாம்தான் அவர்கள் பேச்சைக் கேட்டு மோசம் போனோம்!”. மக்களின் இந்த விரக்தியில் உண்மையில்லாமல் இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியை கடுமையாக எதிர்த்த திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) பின்னர் படிப்படியாக இந்தியை ஏற்றுக் கொண்டுவிட்டது. தமிழகத்தில் இந்தி பேசுபவர்களின் வாக்குகளைக் கவர சென்னையிலேயே இந்தியில் பதாகைகள் வைக்கும் அளவிற்கு அவர்களின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

தி.மு.க.வின் இந்த மாற்றத்தால் மக்கள் அடைந்திருக்கும் விரக்தியில் தமிழர்கள் இந்தியை இன்று எளிதாக ஏற்றுக்கொள்வார்கள் என்பது போன்ற தோற்றம் உருவாகியிருக்கிறது. கடந்த கால இந்தி எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தி.மு.க.வை மட்டுமே சார்ந்திருந்திருந்தால், இன்றைய சூழ்நிலையில் தி.மு.க.வுடன் சேர்ந்து இந்தி எதிர்ப்பும் பலவீனமடைந்த நிலையில்தான் இருக்கவேண்டும். ஆனால் வரலாற்றைப் பார்க்கையில், இந்தி எதிர்ப்பு போராட்டம் தி.மு.க.வின் கட்சிப் போராட்டம் போன்றல்லாமல் ஓட்டுமொத்த தமிழினத்தின் போராட்டமாகத்தான் இருந்திருக்கிறது.

அனைத்து இந்தி எதிர்ப்பு போராட்டங்களிலும் பெரியார் முன்னின்றிருக்கிறார். ஆயினும் இந்தி எதிர்ப்பு போராட்டங் களுக்குகான முதல் அமைப்பு (Anti Hindi Command) 1938 இல் தொடங்கப்பட்டபொழுது அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்  சோமசுந்தர பாரதியார். அதேபோன்று முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு கோடம்பாக்கத்தில் நடத்தப்பட்டபொழுது அதன் தலைவராக இருந்தவர் மறைமலை அடிகளார். அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல்  சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் போன்ற சான்றோர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் போராடியே இந்தித் திணிப்பைத் தடுத்திருக்கின்றனர்.  கட்சி, மதம், சாதி அனைத்தையும் கடந்து தமிழர்கள் ஒரே குரலில் இந்தியை எதிர்த்ததாகத்தான் வரலாறு காட்டுகிறது. ஆகவே தி.மு.க.வின் மீதான விரக்தியில் தமிழர்கள் இந்தியை ஏற்றுக்கொள்வார்கள் என்பது நடைமுறையில் உண்மையாகாது.

தமிழர்கள் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தி ஆதரவாளர்களால் பல காரணங்கள் முன்வைக்கப் படுகின்றன. அவற்றில் முதலாவது  இந்தி நமது தேசிய மொழி, ஆகவே இந்தியர்கள் அனைவரும் இந்தி கற்கவேண்டும் என்பது. நமது அரசியலமைப்புப்படி நமக்கு தேசிய மொழி ஏதும் இல்லை. 2009 ஆம் ஆண்டு சுரேஷ் கச்சாடியா என்பவர் தொடர்ந்த வழக்கில் குஜராத் உயர் நீதி மன்றம் இந்தியாவிற்கு தேசிய மொழி ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கின்றது. இருப்பினும் பெரும்பாலானோர்  இந்தியை தேசிய மொழியாகத்தான் பார்க்கிறார்கள். நடுவண் அரசும் மிகக் கவனமாக “ராஜ பாஷா” என்றே இந்தியை பரப்புரை செய்கின்றது.

இந்தியா முழுவதும் மக்கள் ஒரே மொழியில் உரையாடினால் மக்களுக்குள் ஒற்றுமை வளரும், இந்தியா வலுப்படும் என்ற கருத்தின் அடிப்படையில் பலர் இந்தியை ஏற்றுக்கொள்வது பயன்தரும் என்கின்றனர். ஒரு நாடு ஒரு மொழி என்ற கருத்தில் இவர்கள் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளனர். ஒரு நாடு ஒரு மொழி என்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் ஆபத்தான கருத்தாகும். ஒரு நாடு ஒரு மொழி என்றிருப்பது, பின்னர் ஒரு நாடு ஒரு இனம் என்று மாறினால், இட்லரின் ஜெர்மனியைப் போன்று ராஜபக்சேயின் இலங்கையைப் போன்று இந்தியாவை மாற்றிவிடும். மொழியைத் திணிப்பதன் மூலம் எதிர்கருத்துக்களும், வன்முறையும், தீவிரவாதமும், பிரிவினையும் வளரும். இந்தியாவின் தனிச் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமைதான். ஒரு நாடு ஒரு மொழி என்பது வேற்றுமையில் ஒற்றுமைக்கு முற்றிலும் எதிர்ப்பானதாகும். ஒரு நாடு ஒரு மொழி என்பவர்கள் தங்களை அறியாமலே இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க துணை போகின்றனர்.

இந்தி கற்றுக்கொள்வதால் தமிழர்கள் பொருளாதார மேன்மை அடைய முடியும், தமிழகம் சிறந்த மாநிலமாக முன்னேற்றம் அடைய முடியும் என்ற கருத்துக்களும்  முன்வைக்கப்பட்டன. இக்கருத்தை பரிசோதித்து பார்க்க தமிழகத்தையும் இந்தி பேசும் மாநிலமான உத்திரப் பிரதேசத்தையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

மனிதர்களின் வாழ்க்கைத்தரத்தை காட்டும் மனித வளர்ச்சி குறியீடு (Human Development Index – HDI) தமிழகத்தில் 0.675 ஆக உள்ளது (இந்திய மாநிலங்களில் பத்தாவது இடம்). இதே குறியீடு உத்திரப் பிரதேசத்தில் 0.490 ஆக உள்ளது (இந்திய மாநிலங்களில் 25 ஆவது இடம்).

தனிநபர் உற்பத்தித் திறன் (GDP Per Capita) தமிழகத்தில் 66,000 ரூபாயாக இந்தியாவில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதே தனிநபர் உற்பத்தித் திறன் உத்திர பிரதேசத்தில் 24500 ரூபாயாக இந்தியாவில் 26 ஆவது இடத்தில் உள்ளது.

கல்வியறிவிலும் தமிழகம் 80.3 விழுக்காட்டுடன் இந்தியாவில் ஏழாவது இடத்திலும், உத்திரப்பிரதேசம் 69.7 விழுக் காட்டுடன் இந்தியாவில் 22 ஆவது இடத்திலும் இருக்கின்றது.

இவை தவிர்த்தும் மேலும் பல புள்ளி விவரங்களைப் பார்க்கையில், தமிழகம் இந்தியாவின் முதல் சில மாநிலங் களுக்குள்ளும், உத்திரப்பிரதேசம் கடைசி சில மாநிலங்களுக்குள்ளும் இருப்பது தெளிவாகிறது. இந்த விவரங்களைப் பார்க்கையில் உத்திரப்பிரதேசம் இந்தியால் எதையும் பெரிதாக பெற்றுவிடவில்லை என்பதையும், தமிழகம் இந்தி எதிர்ப்பால் எதையும் இழந்து விடவில்லை என்பதையும் காண முடிகிறது.

இந்தி தெரியாததால் வட மாநிலங்களில் தமிழர்கள் வேலைக்குச் செல்வது சிரமமாக உள்ளது என்றும் அவ்வாறு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும் இந்திக்கு ஆதரவான கருத்து பரவலாக முன்வைக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் தமிழர்கள் பெருமளவில் வடமாநிலங்களுக்கு சென்றனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாய் இருக்கின்றது. பெருமளவில் இந்தி பேசும் மக்கள் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். வட மாநிலத்திற்குச் சென்று குடியேறும் தமிழர்கள் அவசியம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மிகக் குறைந்த செலவில் இந்தியை கற்றுக்கொள்ள பல வழிகள் இருக்கின்றன. வடமாநிலத்திற்கு சென்று குடியேறும் தமிழர்கள் மிகக் குறைந்த விழுக்காட்டிலானவர்களே. இவர்களுக்காக இந்தியை பள்ளியில் பாடமாக்க வேண்டும் என்பது, அரபு நாட்டிற்கு அதைவிட அதிகமானோர் வேலைக்கு செல்வதால் அரபு மொழியை பள்ளியில் பாடமாக்க வேண்டும் என்பதைப் போன்றது. வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் வட்டிக்கடைக்காரர்களும், உழைப்பாளர்களும் அவர்களது பள்ளிகளில் தமிழைப் படித்து விட்டு வருவதில்லை. யாராயினும் வாழும் இடத்திற்கேற்ப மொழியைக் கற்றுக்கொள்வது அவசியம். அது பள்ளி வாயிலாக இருக்க வேண்டும் என்பது பொதுவான தீர்வாகாது.

கூடுதலாக ஒரு மொழி கற்றுக்கொள்வது நல்லது தானே, அதை எதற்கு எதிர்க்க வேண்டும் என்றும் இந்தி பரப்புரைக்கு ஆதரவான வாதங்கள் வைக்கப்படுகின்றன. கூடுதலாக மொழி கற்பது மிகவும் பலனானது. பல மொழிகள் கற்கும் குழந்தைகளுக்கு சிந்தனை திறன் கூடுதலாக உள்ளதை ஆராய்ச்சியில் நிரூபித்திருக்கின்றனர். ஆகவே கூடுதல் மொழி கற்பதை அவசியம் ஊக்குவிக்க வேண்டும். இந்தியா முழுவதும் மூன்று மொழிக் கல்வியைக் கொள்கையாக வைப்பதை வரவேற்கலாம். முதல் மொழி உள்ளூர் மொழியாகவும், இரண்டாவது மொழி ஆங்கிலமாகவும் இருக்கும் பட்சத்தில் மூன்றாவது மொழியாக இந்தியாவின் அனைத்து மாநில ஆட்சி மொழிகளையும் கற்க வாய்ப்பளிக்க வேண்டும். இத்திட்டம் அனைத்து மொழி பேசுபவர்களுக்கும் பெரும்பயனளிக்கும். இடம் பெயர்ந்தாலும் அவரவர் மொழிகளை கற்றுக்கொள்ள இத்திட்டம் உதவிடும். ஆனால்  மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை மட்டும் அனைவரும் கற்க வேண்டும் என்பது நியாயமற்றது, சர்வாதிகாரமானது.

இந்தியை எதிர்ப்பவர்கள் அந்நிய மொழி ஆங்கிலத்தை வரவேற்கிறார்கள், நம் தேசிய மொழியை எதிர்க்கிறார்கள், இவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற கருத்தும் சில நேரம் தமிழர்களைப் பார்த்து வீசப்படுகிறது. இது அறிவு பூர்வமான வாதமல்ல, உணர்ச்சி வேகத்தில் இந்தி ஆதரவாளர்கள் அள்ளித் தெளிக்கும் வார்த்தைகளே. அந்நிய மொழியை தமிழர்கள் மட்டும் ஆதரிக்கவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவும் தான் ஆங்கிலத்தை ஆதரித்து கற்றுவருகின்றது. வட மாநிலங்களில் இந்தி படிக்கும் குழந்தைகள் அனைத்தும் ஆங்கிலத்தையும் பள்ளியில் படிக்கின்றனர். தமிழ்க் குழந்தைகள் தமிழையும் ஆங்கிலத்தையும் பள்ளியில் படிக்கின்றனர். இப்படி இந்தியா முழுவதும் குழந்தைகள் பொதுவாக ஆங்கிலம் படிக்கையில் இன்னொரு பொது மொழி தேவையற்றதாகின்றது. ஒருவளை இந்தி பேசுபவர்கள் அனைவரும் முடிவெடுத்து ஆங்கிலத்தை முற்றிலும் கைவிட்டால், பின்னர் ஒரு பொது மொழிக்கான தேவை உருவாகலாம். இந்தியை பொது மொழியாக்க முயல்பவர்கள் தங்களது கோரிக்கையை வலிமையாக்க முதலில் வடமாநிலத்தினரை ஆங்கிலத்தை துறக்க வைக்க வேண்டும்.

இந்தியை எதிர்த்ததால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழர்கள் இழந்ததேதும் இல்லை என்பது இந்தியை ஏற்றுக்கொள்வதால் தமிழர்களுக்கு எந்த சிறப்பும் பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை நிரூபித்துவிட்டது (Modus tollens தத்துவம்). தமிழர்கள் இந்தியை ஏற்றுக்கொள்வதால் இந்தி பேசும் மாநில மக்களுக்கும் எந்த பயனும் ஏற்படப்போவதாக தெரியவில்லை. இருப்பினும் நடுவண் அரசு தொடர்ந்து இந்தியை பல கோடி ரூபாய்கள் செலவழித்து பரப்பி வருவது யாருக்காக?


சாகுல் அமீது

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

20 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “இந்தி எதிர்ப்பால் தமிழகம் இழந்தது என்ன? – மீள்பதிவு”
  1. நவநீதன் says:

    ஹிந்தி தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் வாய்ப்புகளே இல்லை. இப்போது நேரடியாக ஹிந்தி புகுத்தப்பட்டாலும் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஹிந்தியின் தாய் தந்தையான உருது, சமஸ்கிருதம் இரண்டுமே தமிழுக்கு சம்மந்தமில்லாதது. இந்தியாவையே ஒரு குடையின் கீழ் ஆண்ட இஸ்லாமியர்கள் இந்தியாவெங்கும் ஹிந்திக்கான அஸ்திவாரத்தை விதைத்து விட்டார்கள். ஆனால், அவர்கள் வெகுகாலம் தமிழ் நாட்டை ஆளாததை கவனியுங்கள். அக்பரின் ஆட்சிக்காலத்தில் இந்திய வரைபடத்தைப் பார்த்தால் தமிழ்நாடு மட்டும் விடுபட்டிருக்கும். நாயக்கர்கள், நவாப்புகள், டச்சுக்காரர்கள் போன்றவர்கள் சிற்சில பகுதிகளை சிற்சில காலமே ஆண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் தமிழகத்தை ஆண்ட முதல் அயல் மொழி ஆங்கிலம்தான். ஹிந்தி அல்ல. 350 வருடம் நம்மோடு கலந்து விட்ட ஆங்கிலம் மீது நமக்கொரு பாசமும், ஹிந்தி மீது அன்னிய உணர்வும் ஏற்படுவது இயல்பு.

  2. ஆர்.அபிலாஷ் says:

    நாற்பதுகளில் சிதறுண்ட பல மாகாணங்களை இணைக்க மத்திய அரசு ராணுவத்தை எல்லாம் அனுப்ப வேண்டி இருந்தது. அப்போதில் இருந்து இப்போது வரை ஆந்திர-தெலுங்கானா பிரச்சனை தொடர்கிறது. சென்னையை ஆந்திராவுக்கு தலைநகராக்க ஒருவர் சென்னையில் உண்ணாவிரமிருந்து செத்தார் என்பது மற்றொரு கூடுதல் சேதி. முன்பு நேருவின் காலத்தில் காங்கிரசில் இந்தி திணிப்பது அவசியமில்லை என்று கருதியவர் அவர் மட்டும் தான், ராஜேந்திர பிரசாத் இவ்விசயத்தில் நேருவிடம் கடுமையாக மோதிக் கொண்டார். ஒரு சமரசம் ஏற்பட்டது, இப்போதைக்கு திணிக்க மாட்டோம் என்றார் நேரு. இது மொழிப்பிரச்சனை அல்ல. ஒருமித்த தேசிய அடையாளம் வேண்டும் என்பது சுதந்திரம் கிடைத்த போதில் இருந்தே காங்கிரசின் நோக்கமாக இருந்துள்ளது. நேரு (மாகாண) பிரிவினைகளை எதிர்க்க எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பிரச்சாரம் செய்திருக்கிறார். ஆக நடுவண் அரசுக்கு மாநிலங்கள் தன்னிறைவுடன் தனித்தன்மையுடன் இருப்பது என்பது மிகவும் பதற்றமேற்படுத்தும் காரியம். இன்று இவ்விசயங்கள் பின்னிருக்கையை அடைந்து விட்டன. ராஜ பாஷா என்பதெல்லாம் ஒரு தொல் எச்சமாக தான் பார்க்க வேண்டும். என் கல்லூரியில் உள்ள இந்தி பேராசிரியர் கூட வாய்ப்பு கிடைத்தால் ஆங்கிலத்தில் பேசத்தான் முயல்கிறார்.

  3. Narasimhan says:

    யென்ன கொடுமை சரவன இது……..டாஇ ஹிந்தி இந்திஅன் ராஅஜபாஷ. அவனொ விலம்பரதுகு தமிழ காப்பட்ருஙகல் நு சொன்ன நிஙக யென்ட இன்னும் அந்த கனதுலயெ இருகஏங? வெலிய வந்து வுலகத பருங ட…..உஙல உசுபெதுர பொலிடிசிஅன்ச் சந்தொஷமதன் இருகங…மனிங தான் இந்த மதிரி இருகிங.

  4. Kannan says:

    ஒரு குருகிய வட்டத்துக்குள் எழுதப்பட்ட கட்டுரை. இந்தி தினிப்பை எதிர்க்கலாமே ஒழிய இந்தியை அல்ல. எதை தினித்தாலும் எதிர்க்க வேண்டும்.

  5. vasan iyer says:

    ஒரு முக்கியமான கருத்து விடுபட்டது என்று நினைக்கிறேன். இந்தியை விரும்பி படிப்பதற்கும் கட்டயாமாக கற்பிக்க முயன்றதற்கான இடைவெளியே இந்தி எதிர்ப்பின் அடிப்படை. அதை தெளிவாக சுட்டி காட்டி கட்டயாய திணிப்பின் எதிரியாக முன் நின்ற ராஜாஜியை எவருமே குறிப்பிடாதது வியப்பில்லாவிட்டாலும் வருந்ததக்கது. அது போலவே இந்தி அரக்கி, வளம் இல்லாத வாய்க்கால் மொழி என்றெல்லாம் பேசுபவர்களும் பரிதாபத்துக்குரியவர்கள். நுகர்வோர் வணிகத் துறையில் தற்போது இந்தியின் முக்கியத்துவம் அபரிதமாக வளர்ந்து வருகிறது. சென்னயின் மொத்த வணிக சந்தையில் இந்தி தெரியாதவர்கள் அடையும் நட்டம் வியாபரிகளுக்கு மட்டுமே புரியும். தமிழை என் உயிரினும் மேலாக நேசிக்கும் நான் இந்தி மராட்டி குஜராத்தி மொழிகளிலும் மேடை ஏறி பேசும் ஆற்றலும் அந்த மொழிகளின் கவித்துவத்துவத்தை உணரும் மன நிலையும் பெற்றிருப்பது என் நல் வாய்ப்பு. தமிழின் தொண்மையையும் தனிச்சிறப்பையும் இந்தியில் இந்தி மட்டுமே தெரிந்தவர்களிடம் சொல்லுவது எனது பல வருட பொழுதுப்போக்கு. கட்டாயம் இன்றி அனைவரும் இந்தி கற்கும் சூழல் தமிழ் நாட்டில் மீன்டும் வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

  6. ஜாபர் பாட்சா says:

    மிகவும் நல்ல கட்டுரை…. அவசியம் ஏற்பட்டால் ஒரு மொழியை கற்பது தவறில்லை. ஆனால் அது கட்டாய படுத்த படும்போழுது எதிர்ப்பு உணர்வு ஏற்படுவது இயல்பு… ஆங்கில பள்ளிகளில் ஹிந்தி ஒரு பாடமாக கற்பிக்கபடுகிறது. ஹிந்தி பிரசார சபை வெகுகாலமாக தமிழ் நாட்டில் இயங்கி வருகிறது… வேலை நிமித்தம் வெளி மாநிலங்களுக்கு செல்லும் எல்லா தமிழர்களும் ஹிந்தி பேசுகிறார்கள்… திராவிட இயக்கங்களை குறை சொல்லவே இன்னும் பலர் இதை குறையாக சொல்லி வருகிறார்கள்… நம் எதையும் இழக்கவில்லை… பெற்றதே அதிகம்… அதை இந்த குறை சொல்லிகள் ஏற்கவே போவதில்லை… அவர்களை பற்றி யாரும் கவலை பட போவதும் இல்லை… உங்கள் பணி தொடரட்டும்…

  7. நாணற்காடன் says:

    மிக நல்ல கட்டுரை. சமச்சீர்க் கல்வியில் பத்தாம் வகுப்பில் இந்தியை இந்த ஆரசு கொண்டுவந்துவிட்டது. இதற்கு முன் உருது, சமற்கிருதம் போன்ற மொழிகளே இருந்தன. இந்த அரசு இந்தியை பள்ளிகளில் கொண்டு வர தயாராகிவிட்டதாகவே படுகிறது.

  8. சாகுல் அமீது says:

    வணக்கம் நண்பர் ஜெயக்குமார்,

    ஒரு மொழியை ஏற்றுக்கொள்வதற்கு அந்த மொழியால் பயனிருக்க வேண்டும்.
    இன்று ஆங்கிலத்தை உலகமெங்கும் மக்கள் விரும்புவதற்கு காரணம், ஆங்கில மொழி பேசும் நாடுகள் முன்னேறிய நிலையில் இருப்பது தான். அதனால் ஆங்கிலம் கற்றுக் கொள்வதால் அவர்களும் ஆங்கில நாடுகளுடன் பொருளாதார தொடர்புகள் கொண்டு முன்னேற முடியும் என்ற நம்பிக்கையில் ஆங்கிலத்தை அனைத்து நாடுகளும் ஏற்று வருகின்றன. ஆங்கில மொழியை விட அதிக மக்கள் பேசும் மாண்டரின் அல்லது ஸ்பானிஷ் மொழியை உலகநாடுகள் விரும்பி படிப்பதில்லை.

    அதே போன்று இந்தி பேசும் மாநிலங்கள் மிகவும் முன்னேறிய நிலையில் இருந்தால், பொருளாதார காரணத்தினால் மற்ற மாநிலங்கள் இந்தியை ஏற்றுக்கொண்டிருக்கலாம். இந்தி பேசும் மாநிலங்களே பொருளாதாரத்தில் பிந்தங்கி இருக்கையில், இந்தியை மற்றவர்களும் படிப்பதால் என்ன பயன்? அந்த நோக்கில் தான் உத்திர பிரதேசத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

    மற்ற தென் மாநிலங்கள் இந்தியை தமிழத்தைப் போன்று கடுமையாக எதிர்க்க வில்லை தான். ஆனால் அவர்கள் இந்தியை முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் என்று நாம் முடிவு செய்ய இயலாது. அவர்களில் பலரும் இந்தியை புறக்கணித்தே வந்திருகின்றனர். இதற்கு பல உதாரணங்களை காட்ட இயலும். 2004 ஜனவரியில் உத்திர பிரதேச முதல்வர் முலாம் சிங் யாதவ் (இவர் தீவிர இந்தி பரப்பாளர்) அனைத்து மாநில முதல்வர்களுக்கும் இந்தியை பரப்பும் படி இந்தியிலே ஒரு கடித்ததை அனுப்பினார். அதற்கு கேரள முதலவர் நாயனார் மறுப்பு தெரிவித்து மலையாளத்தில் அவருக்கு பதில் கடிதம் அனுப்பினார். இது போன்ற பல செய்திகளின் அடிப்படையில் நாம் மற்ற தென் மாநிலங்கள் இந்தியை முழுமையாக ஏற்றுக்கொண்டனர் என்று முடிவு செய்து ஒப்பிட இயலாது.

    சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் படி இது தொடர்பாக மேலும் சில கட்டுரைகளை எழுத முயற்சி செய்கிறேன்.

    தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

    இதே போன்ற கருத்தை வலியுறித்தி பின்னூட்டம் எழுதிய பாலாஜி என்பவருக்கும் நன்றி.

  9. SAM says:

    மிகவும் மட்டமான கட்டுரை !!

    குறுகிய மனப்பான்மை கொண்ட கட்டுரை !!

    தமிழை கண்டிப்பாக படியுங்கள் …. மற்ற மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள்.

    இது போன்ற பிரிவினைவாதிகளை ஆதரிக்காதீர்கள்.

    • arun says:

      தன்னுடய மொழியை காப்பது குறுகிய மனப்பான்மை என்றால் அப்படியெ இருந்து விட்டு பொகிறொம்.

    • kalaiselvan says:

      சும்மா மட்டமான கட்டுரை , குறுகிய மனப்பான்மை கொண்ட கட்டுரைன்னு சொல்லக்கூடாது …. அதற்கான எதிர் கருத்தை வைக்க வேண்டும் …… கட்டாய இந்தி திணிப்பு ஆதரவாளர்கள் போன்று பேசக்கூடாது ……

  10. Ram says:

    Good article Sahul. I disagree with the title – it implies that Thamizhnadu lost something agreed that it hooked us with your title but point being – Thamizhandu didn’t lose anything at all and like your analogies.

  11. kondrai vendhan says:

    குஜராத்திகள் இந்தியை சட்ட வடிவமாக தெள்ளத்தெளிவாக எதிர்த்தால் அது தேச துரோகம் கிடையாது. தமிழர்கள் இந்தி வேண்டாம் என்று வாய் திறந்தாலே ராஜ துரோகம். இது இந்திய அரசியல் அமைப்பில் பொறித்து வைக்கப்பட்டுள்ளதா ??? இல்லை சனாதன ஸ்மிருதிகள் எங்காவது முக்கல் முனகலாக உளருகின்றதா ???
    குஜராத்திகள் சட்டவடிவமாக எதிர்ப்பது வருணாசிரம தருமத்தின்படி ரட்சிக்கப்படுகிறதா?? இல்லை நீச்ச பாஷையின் புதல்வர்களான தமிழர்கள் இந்தி வேண்டாம் என்று வாய் திறப்பதனாலேயே ஈரேழு லோகங்களிலும் சபிக்கப்படுகிறார்களா ???
    குஅஜராத்திகளின் தாய் மொழி சமஸ்கிருதத்தின் பேரப்பிள்ளை என்பதானால் சட்ட ஓட்டைகளில் சில சலுகைகள் மணு மகத்மாவால் கோடி காட்டப்பட்டுள்ளதா ??? இல்லை பஞ்சம சூத்திர சண்டாளப் பிறவிகளான, நீச்சத் தமிழர்கள் என்றுமே சாகக் கடவார்கள் என்று எந்த துரோனரும் திருவாய் மொழிந்தனரா ???
    சண்டாள பாக்கியம் பெற்ற சிலருக்கு மட்டுமே, திரி சங்கு யோக்யதை உண்டு எனும் போது, இங்கு நீச்ச எச்சங்களான எங்கள் விளிம்பு நிலை மீனவர்களை மட்டும் பாராத வேத வித்துக்களின் ஞானக் கண்ணில் தெரிவது தான் என்ன ????

  12. arun sathya says:

    One of the best articles i had read in recent times. I feel that every student must be given a chance to learn Hindi in school. If the student is not interested, it must not be thrust on him. I wud also like to ask if Centre will be ready to implement 3 language policy of Hindi + English + A South Indian Language in UP/Bihar /Hindi heartland????

  13. மு.ஜெயக்குமார் says:

    நல்ல கட்டுரை திரு. சாகுல் அவர்களே. எனினும், நண்பர் ஒருவர் மேலே சொன்னதுபோல, தமிழகம் மற்றும் UP ஒப்பீடு சரியா என்பதில் சிறு குழப்பம் உள்ளது. இந்தியை ஏற்றுக்கொண்ட மற்ற தென்னிந்திய மாநிலங்கள்,அதனால் இழந்தது என்ன என்பதனையும் அலசினால் நன்றாக இருக்கும். எதனையும் அதிகார கர்வத்தோடு, ஆணவமாக செயல்படுத்த நினைத்தால் அதனை நாம் ஏற்றுக் கொள்வதில்லை, நம் வட இந்திய அரசியல் வாதிகளின் இந்தப் போக்குதான் நமக்குள் இந்திமீது ஒரு வெறுப்பை உண்டாக்கி இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    நல்ல முயற்சி, இது பற்றி மேலும் சில தகவல்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    அன்புடன்,
    மு.ஜெயக்குமார்.

  14. balaji says:

    என்ன கருத்து சார்… இது…. உத்திரப் பிரதேசம் தாய் மொழி – ஹிந்தி. தமிழ்நாட்டின் தாய் மொழி தமிழ். இந்தியாவின் பொது மொழி ஹிந்தி. நீங்கள் ஒற்றுமை படுத்தி பார்க்க. தமிழ்நாடு-கேரளா அல்லது கர்நாடக பார்க்கவும். உத்திரப் பிரதேசம் மிக தவறான ஒற்றுமை படுத்துதல்…..

    • kondrai vendhan says:

      இந்தி இந்தியாவின் பொது மொழியாக முன்னெடுக்கப்படும் போது, அதன் ஊற்றுப்பகுதியான உத்திரபிரதேசம் என்பது தவிர்க்கமுடியாத எடுத்துக்காட்டாக அமைந்து விடுகிறது. மேலும் தென் இந்திய மொழிகளுடன் ஒப்புமை என்பதும் ஒரு திசை திருப்பல் தான். ஏன் என்றால், த்ன் இந்தியாவில் தோன்றிய திராவிட மொழிகளான் கன்னடம்,தெலுகு,மலையாளம் ஆகியவை தங்களை சமஸ்கிருத மயமாக்கி தங்களைப் புனிதப்படுத்திக்கொள்ளவே விரும்புகின்றன. தானகள் பிராகிருதத்தில் இருந்தும், ஸ்மஸ்கிருதத்திலிருந்தும் வந்த மொழியாகத்தான் இருக்கிறோம், திராவிடம் என்ர நீச்ச பாஷையை எங்கள வாழ்வியலோடு ஒப்புமையோ, உறவோ கொள்ளச் செய்யாதீர்கள் என்று அனைவருமே கருதும் போது, இந்தியாவில் தனித்து இயங்கும், சமஸ்கிருதத்தின் பேர(ரா)ப்பிள்ளைகளான மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்ற தமிழை அதன் நேர் எதிர் மொழியின் ஊற்றுப்பகுதியான உ.பி யில் இருந்து தானே ஒப்பிட முடியும். கேள்வியும் வன்மமும், பரப்புரையும் எல்லாமே இந்தி தெரிந்தால் நீங்கள இந்தியனாகவும் இக பர லோக ப்ராப்த்திக்கு உரியவர்களாகவும் இருக்கக் கடவீர்கள் என்பதாகத்தானே செய்யப்படுகிறது. என்ன செய்வது..???

  15. பழனி says:

    இந்தியா முழுதும் வர்த்தகம் செய்யும் வணிகர்களும், முதலாளிகளும் தமது வசதிக்காக இந்தி மொழியை முயல்கின்றனர்.
    தமிழகம் பின்னடைந்தால் தான் இந்த நிலை மாறும், இன்று இருக்கும் மின்வெட்டு இன்னும் அதிகரிக்க வேண்டும். தொழில்கள்
    ,பணம் குறைய வேண்டும்.அப்போது தான் விவசாயம் பிழைக்கும்.

  16. நாகராசன் says:

    நல்ல கட்டுரை!!!

  17. தியாகு says:

    மிக நல்ல கட்டுரை . ஆனால் மும்மொழி கொள்கை என்பது சாத்தியப்பட வாய்ப்பில்ல்லை

அதிகம் படித்தது