ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

இந்த ஐந்தாண்டுகளில் பா.ச.க அரசின் செயல்பாடுகள் தோல்வியை தழுவியிருக்கிறதா?

சுசிலா

Feb 15, 2019

Siragu mega team1

கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் மோடியின் தலைமையிலான பா.ச.க அரசு, தோல்வியை கண்டிருக்கிறதா, வெற்றி பெற்றிருக்கிறதா என்ற கேள்வி எழுமானால், நிச்சயம் தோல்வியைத்தான் தழுவியிருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஏனென்றால், இவர்களின் செயல் திட்டங்கள் அனைத்தும் தோல்வியைத்தான் கண்டிருக்கின்றன. அது சமூக ரீதியான வகையிலும் சரி, பொருளாதார ரீதியான வகையிலும் சரி,  கல்வி ரீதியிலான வகையிலும் சரி, நிர்வாக ரீதியிலான வகையிலும் சரி, அனைத்திலுமே மக்கள் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.!

2014-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் வாக்குறுதிகள் என்று சொன்னவைகளில்எதுவுமே, இந்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை!

100 நாட்களில் சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப்பணம் மீட்கப்படும் என்று சொல்லப்பட்டது. மீட்கப்பட்ட அந்த  பணம் நாட்டின் ஒவ்வொருவரின் பெயரிலும் 15 லட்சம் வங்கியில் போடப்படும் என்றும் கூறப்பட்டது. அது மீட்கப்படவில்லை, மக்களின் பெயரில் போடப்படவும் இல்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அடுத்து பார்த்தோமானால், அமெரிக்க டாலரை 30 ரூபாய்க்கு கொண்டுவந்து, இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்துவோம் என்றும் சொன்னார்கள். ஆனால், அது ரூ. 70 யை தாண்டிவிட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாயில் கிடைக்கும் என்று சொன்ன பா.ச.க, ஆட்சிக்கு வந்ததும், 80 ரூபாய் வரை கொண்டு சென்றுவிட்டது.  எரிவாயு உருளையின் விலை, 350 ரூபாயாக இருந்தது. அது தற்போது பா.ச.க-வின் ஆட்சியில், ரூ.900 வரை சென்றுவிட்டது. மக்களின் அனைத்து வாழ்வாதார தேவைகளான, உணவுப்பொருட்கள், மருந்து விலை, பேருந்து கட்டணங்கள், கல்வி கட்டணங்கள் என அனைத்தையுமே உயர்த்திவிட்டு, மக்கள் வாழவே முடியாதபடிக்கு வழியை குறுக்கிவிட்டது.

ஆண்டு ஒன்றிற்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் அவர்களே, படித்த இளைஞர்கள், வேலை கேட்டு நிற்காமல், பகோடா கடை போட்டு நாளொன்றிற்கு 250 ரூபாய் சம்பாதியுங்கள் என்று சொன்ன அவலங்கள் எல்லாம் நடந்தேறின!

GDP growth slow indiaகடந்த காங்கிரசு மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சியின் போது, ஜிடிபி யின் வளர்ச்சி  இரட்டை இலக்கம் வரை அதிகரித்திருந்தது. அப்போது  ஜிடிபி (GDP) வளர்ச்சி அதிகபட்சமாக 10.3 விழுக்காடு இருந்தது. சராசரியாக என்று பார்த்தோமானால் கூட 8 விழுக்காட்டிற்கு கீழே போகவில்லை. உலகின் பல வளர்ந்த நாடுகளில் கூட அப்போதைய ஜிடிபி குறைந்திருந்த நேரத்தில் இந்திய அரசு 8 விழுக்காடிற்கு கீழே போகாமல் பார்த்துக்கொண்டது. ஆனால், தற்போதைய பா.ச.க-வின் மோடி ஆட்சியில், ஒற்றை இலக்கத்தில் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், 6.67 விழுக்காடு என்ற நிலையில்  குறைத்துவிட்டது. நாட்டின் உற்பத்தித்திறன் முழுவதும் சீரழிந்ததால் தான் வேலைவாய்ப்பும் படுபாதாளத்தில் விழுந்துவிட்டது. அரசின் பல நிறுவனங்கள் வருவாய் இழப்பில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

பா.ச.க-வின் மிகப்பெரிய தவறு என்று எடுத்துக்கொண்டால், முதலில் இருப்பது பண மதிப்பிழப்பு தான். இதனால் நாடு முழுவதும் 400 பேருக்கு மேல் உயிரிழந்த கொடுமை நடந்தேறியது. மக்கள் எல்லோரும், தங்கள் சேமித்த பணத்தைக்கூட, தங்களின் தேவைகளுக்கு எடுக்கமுடியாமல், நடுத்தெருவில் நிற்கவைக்கப்பட்டனர். கறுப்புப்பணம் மீட்பு என்று சொல்லி ஒரே நாளில், அதுவும் ஒரே இரவில் கொண்டுவந்த திட்டம் மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டது. இறுதியில் கருப்புப்பணமும் மீட்கப்படவில்லைஎன ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது என்பது தான்  இந்த ஆட்சியின் உச்சகட்ட கொடுமை.!

Siragu GST1

அடுத்து, ஜிஎஸ்டி என்ற பெயரில், சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப்போட்டது பா.ச.க அரசு. சிறு, குறு வியாபாரிகள் இந்த வரிசுமையால்,  தங்களின் வணிகத்தை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் நிலையை ஏற்படுத்திவிட்டது. இதில், தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டது என்று சொல்லவேண்டும். திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள பல வணிகர்கள் தங்கள் தொழிலை விட்டுவிட்டு இன்னமும் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், ஒடிசாவில் வாணிபம் செய்வதற்கு சென்றுவிட்டார்கள். இதனால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய வருமானம் வேறு ஒரு மாநிலத்திற்கு சென்றுவிட்டது. சராசரி மக்களும், தங்களின் அன்றாட தேவைகளுக்கு, தங்களின் சக்திக்கு மீறிய அளவிற்கு அதிக வரிகளை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். மேலும், இருமடங்கு வருமானம் கிடைக்கும் என விவசாயிகளுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதுவும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அவர்களின் விவசாயம் அழியும் நிலையைத்தான் இன்று எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கடன் தள்ளுபடி கோரிக்கை, போராட்டங்கள் கூட பிரதமர் மோடியின் செவிகளில் கேட்கவில்லை என்பது தான் வேதனையான  ஒன்று.

நதிகளை இணைத்தல், கங்கை நதியை சுத்தப்படுத்துதல் என்று பல கோடிகள் நிதியாக ஒதுக்கப்பட்டன. அதெல்லாம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை. 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியும் பொய்யானது. டிஜிட்டல் இந்தியா, மேக் இன்  இந்தியா, என்று சொல்லி அனைத்தும் மக்களுக்கான எதிர்ப்பு அரசியலைத்தான் பா.ச.க செய்துகொண்டிருக்கிறது. சொன்னவற்றை எல்லாம் சரிவர செய்யாமல், சொல்லாத பல இன்னல்களை மக்களுக்கு இழைத்துக்கொண்டிருக்கிறது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பா.ச.க ஆளாத மாநிலங்களை விரோதப்போக்குடன் அணுகுகிறது.

கல்வியில் பார்த்தோமானால், கல்வியை மாநிலபட்டியலிலிருந்து நீக்கி பொது பட்டியலுக்குக் கொண்டு சென்றுவிட்டது. மருத்துவம் படிக்க நீட் என்ற தகுதித்தேர்வை கொண்டுவந்து, ஏழை  எளிய, கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாமல் செய்துவிட்டது. நாடு முழுக்க பல்வேறு கல்வித்திட்டங்கள் இருக்கும் நிலையில், ஒரே பொது தகுதித்தேர்வு எப்படி சாத்தியப்படும் என்ற சிந்தனையே இல்லாமல்நம் மாணவர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. மேலும், பா.ச.க அரசில், வங்கிக்கடன் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெரு முதலாளிகள் வாங்கிய கடனை செலுத்தமுடியாமல்ரத்தான தொகையேஒன்பது லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஏழை, எளிய மக்களின் கடன்கள், கல்விக்கடன், விவசாயக்கடன்கள் ரத்து செய்ய முடியாது என கைவிரித்து விட்டது பா.ச.க அரசு.

Siragu ida odhukkeedu1

சாதி, மத கலவரங்கள், பசுமாடு பாதுகாப்பு என்ற முறையில் நடந்த பல படுகொலைகள் என சமூகத்தை அச்சுறுத்தி வைத்திருக்கிறது. இந்துத்துவ வெறியை கட்டவிழ்த்துவிட்டு, வேற்று மதத்தை சேர்ந்த சிறுபான்மையினர், தாழ்த்தப்படுத்தப்பட்டோர் போன்றவர்கள் பாதுகாப்பு உணர்வின்றி, ஒருவித அச்சத்துடனே வாழும் நிலையினை உண்டாக்கி இருக்கிறது. மேலும், பா.ச.க அரசு சமூகநீதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில்,  10% இடஒதுக்கீடு என சட்டமியற்றி, இடஒதுக்கீடு என்ற ஒரு முறையை நீர்த்துப்போக்க வழி செய்கிறது. ஒதுக்கீடு என்பதுஈராயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்படுத்தப்பட்ட மக்களுக்காக, அவர்களை கல்விரீதியாக, வேலைவாய்ய்பு ரீதியாக உயர்த்துவதற்கு உருவாக்கப்பட்டது. அதில் பொருளாதாரம் என்ற ஒரு நிலையை உள்ளே புகுத்தி, இடஒதுக்கீடு என்ற ஒரு ஏற்பாட்டை குலைக்கப் பார்கிறது.

Siragu rafele 1

அடுத்து, ரபேல் ஊழல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. பா.ச.க அரசின் ஊழலிலேயே முதன்மையான ஊழல் இதுவாகத்தான் இருக்க முடியும். பிரான்ஸ் நாட்டுடன் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட குளறுபடிகள், முறைகேடுகள் என அதில் ஊழல் நடந்திருக்கிறது. ஆனால், அதனைதேச பாதுகாப்பு என்ற பெயரில் மூடிமறைக்கப் பார்க்கிறது மத்திய பா.ச.க அரசு.  பிறகு, தன்னாட்சி அமைப்புகளான, சிபிஐ, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் என அனைத்திலும்  தன்னுடைய அதிகாரத்தை செலுத்தி, தன்னிச்சையாக இயங்க விடாமல் தனக்கு ஏற்றாற்போல் இயக்குவதற்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளே, சனநாயகத்திற்கு ஆபத்து என ஊடகங்களுக்கு பேட்டியளித்ததை நாம் மறந்துவிடத்தான் இயலுமா!

சமீபத்திய முக்கிய இரு செய்திகள் என்னவென்றால், ஒன்று, அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படும் என்ற செய்தி கசிந்திருந்தது. முப்பத்தியோராயிரம் கோடி நஷ்டத்தில் இருக்கிறது எனவும், இதற்கு மேல் நிர்வாகம் நடத்துவது சிரமம் என்றும் 67,000 பேருக்கு விருப்ப ஓய்வு தரப்போவதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அரசு வங்கிகள் முதற்கொண்டு, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் வரை அனைத்தும் கடனில் மூழ்கி தோல்வியைக் கண்டிருக்கின்றன. இரண்டாவது என்னவென்றால், நம் நாட்டை பாதுகாக்கும் படைவீரர்கள் சிபிஆர்எப் வீரர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் தீவிரவாதத் தாக்குதலில் உள்ளாகி பலியாகியிருக்கின்றனர். என்ன ஒரு கொடுமையான செய்தி இது, காஷ்மீர் மாநிலபுல்வாமா என்ற பகுதியில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு  தேசிய நெடுஞ்சாலையில், 300 கிலோவிற்கும் மேற்பட்ட வெடிப்பொருட்களுடன் வந்த வாகனம் ஒன்று வீரர்களின் வாகனத்தின் மீது மோதி தாக்குதலை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் என்னவொரு வேதனையான விசயம் என்றால், ஆறு நாட்களுக்கு முன்பேஉளவுத்துறை தாக்குதல் நடைபெற வாய்ப்பிருக்கிறது என எச்சரித்திருக்கிறது. அப்படி இருந்தும் அரசின் மெத்தனப்போக்கால், இன்று 42 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பணமதிப்பிழப்பால் தீவிரவாதம் ஒழிந்துவிடும் என்றும், தீவிரவாதத்தை ஒழித்துவிட்டோம் என்று கொக்கரித்தது பா.ச.க. இன்று, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில், பல செக்போஸ்ட் இருக்கக்கூடிய ஒரு சாலையில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.!

இவையனைத்தும் பா.ச.க அரசின் தோல்விகள் என்று தானே எடுத்துக்கொள்ள முடியும். இந்த ஐந்தாண்டு கால ஆட்சி என்பது அனைத்து தளங்களிலும் பா.ச.க-வின் தோல்வியைத்தான் குறிக்கிறது. இது தோல்வியைத் தழுவிய ஒரு அரசாங்கம். இது மக்களுக்கான அரசாங்கம் அல்ல. கார்ப்பரேட்டுகளுக்கும், பெரு பணமுதலாளிகளுக்கும் ஆன ஒரு அரசு. ஏழைகளை மேலும் ஏழைகளாக ஆக்கும் அரசு. பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்கும் ஒரு அரசு. வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் மிகுந்த கவனத்துடன்இதையெல்லாம் அலசி ஆராய்ந்து, வாக்களிக்க வேண்டும். பா.ச.க-வை புறக்கணித்தால் மட்டுமே மீண்டும் நம் நாடு வளர்ச்சியை நோக்கி செல்லும் என்பது உறுதியான ஒன்று.


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்த ஐந்தாண்டுகளில் பா.ச.க அரசின் செயல்பாடுகள் தோல்வியை தழுவியிருக்கிறதா?”

அதிகம் படித்தது