அக்டோபர் 1, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

இனபேத நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் அமெரிக்க கறுப்பின மக்கள்

தேமொழி

Jan 24, 2015

inapedham1கடந்த இரு ஆண்டுகளில் அமெரிக்க இனக்கலவரங்கள் சென்ற நூற்றாண்டில், குறிப்பாக 1960-களில் இருந்த நிலையை எட்டியுள்ளது. ட்ரேவார் மார்ட்டின் (Trayvon Martin) என்ற மயாமி, ஃப்ளோரிடா மாணவனின் 2012 ஆம் ஆண்டு உயிரிழப்பில் தொடங்கி, கறுப்பர்கள் அமெரிக்க காவல்துறையினரின் கடுமையான நடவடிக்கைகளினால் உயிரிழக்கும் நிகழ்வானது, ஃபெர்குசான், மிஸ்ஸெளரியைச் சேர்ந்த மற்றொரு மாணவன் மைக்கேல் பிரவுன் (Michael Brown) உயிரிழப்பிலும், நியூயார்க்கைச் சேர்ந்த எரிக் கார்னர் (Eric Garner) என்ற கறுப்பரின் உயிரிழப்பிலும் தொடர்ந்தது. காவல்துறையின் இந்த நடவடிக்கைகளுக்குக் காரணம், அவர்கள் கறுப்பின மக்கள் என்றாலே குற்றவாளிகள் என்று அவர்களை நடத்த முற்படுவதால் நிகழ்கிறது, சிறு சிறு குற்றங்களுக்கும் தேவையின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது கறுப்பர்களின் உயிரிழப்பில் முடிவடைகிறது என்று கறுப்பின மக்களும், பொதுமக்கள் பலரும் ஆர்ப்பாட்டம் நடத்தி நீதி கேட்கும் நிலை ஏற்பட்டது. செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் இச்செய்திகளே மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசப்பட்டும் வந்தது.

சென்ற நூற்றாண்டில் கறுப்பினத்தலைவர் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் எழுச்சியூட்டும் “எனது கனவு” (I have a Dream) என்ற உரையும், அவரது தலைமையில் அமைதி வழியில் நடத்தப்பட்ட மக்களின் போராட்டமும் கறுப்பின மக்களுக்கு அமெரிக்க அரசியல் சட்டப்படி சமஉரிமைகளுக்கு வழி வகுத்தது. ஆனால் அவர் மறைந்து சற்றொப்ப அரைநூற்றாண்டு கழிந்தும், இக்காலத்தில் இனபேதக் கலவரங்கள் நின்றபாடில்லை. குறிப்பாக அவர் தனது கனவு என்று அவர் உரையில் குறிப்பிட்ட…

“I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character.

I have a dream today!”

inapedham2என்ற கனவு இன்று பொய்யாகிப்போனது போன்ற நிலைமை, மக்கள் இந்நாளிலும் கறுப்பின மக்களை அவர்களது தோற்றம் கண்டுதான் எடைபோடுகிறார்கள், இனபேதம் காட்டுகிறார்கள் என்பது தெளிவாகியுள்ளது. எனவே இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் நாளான டாக்டர் கிங் அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் பொருட்டு ‘நியூயார்க்கர்’ (New Yorker) பத்திரிக்கை அதன் அட்டைப்படத்தில் சமீபத்தில் இனபேத நடவடிக்கைகளால் உயிரிழந்தோருடன் கைகோர்த்து டாக்டர் கிங் அமைதிப் போராட்டம் தொடர்வதாகவும், இது அவருடைய “நல்லிணக்க கனவு” (The Dream of Reconciliation) என்ற கருத்தைத் தாங்கிய ஓவியம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்னர் மக்களிடம் நடத்தப்பட்ட கருத்தாய்வுகளில், இனபேதம் (Racial Bias) என்பது இக்கால அமெரிக்காவில் இல்லை என்ற எண்ணம் பலரின் பொதுவான கருத்தாக இருந்தது. அதிலும் பெரும்பாலான வெள்ளையின அமெரிக்கர்கள் இனபேதம் என்பது கடந்தகாலத்தில் இருந்த ஒன்று என்றும், ஆனால் அத்தகைய எண்ணங்கள் இன்றைய நாளில் நடைமுறை வாழ்க்கையில் இருந்து மறைந்துவிட்டன என்ற எண்ணம் கொண்டிருப்பது வெளியானது.

இவர்கள் இனபேதம் என்பது ஒரு பிரச்சனையே இல்லை, வெள்ளையரைப் போன்றே கறுப்பர்களும் சமஅளவில் வேலை வாய்ப்புகளும், கல்வியும், வாழும் குடியிருப்புகளையும் பெற்றுள்ளார்கள் என்று நம்புகிறார்கள் என்றும், அனைவரும் கறுப்பர்களை நல்ல முறையில்தான் நடத்துகிறார்கள் என்றும் எண்ணி வருகிறார்கள் என்றும், அத்துடன் வேற்றின மக்களை பார்க்கும்பொழுது வெறுப்புணர்வோ, வேறுபட்ட எண்ணங்களோ தங்களுக்கு ஏற்படுவதில்லை என்றும் எண்ணுகிறார்கள் என்றும் கருத்தாய்வு முடிவுகள் தெரிவித்தன.

மேலும் அவர்கள் இனபேதம் பற்றி நினைப்பதும் இல்லை, அமெரிக்காவின் முக்கியமான பிரச்சனைகளில் இனபேதம் என்பது குறிப்பிடத்தக்கப் பிரச்சனையாகவும் இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக இனம் என்ற எண்ணமே தங்களுக்குத் தோன்றுவதும் இல்லை என்றே கருத்தாய்வில் பங்குகொண்ட பல வெள்ளை அமெரிக்கர்கள் பதிலளித்திருந்தார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால் அமெரிக்க வெள்ளையர்கள் இனபேதம் என்பதை பெரிதாக நினைப்பதும் இல்லை அதைப் பொருட்படுத்துவது கூட இல்லை என்பது அவர்களிடம் கருத்தாய்வுகள் நடத்தும் பொழுது கிடைத்த முடிவு. ஆனால் உண்மை வேறுவிதமாக இருப்பதும் இப்பொழுது தெரியவந்துள்ளது.

inapedham3மக்கள் தங்களைப் பற்றி சொல்லும் கருத்துக்களுக்கும், அதே ஆராய்ச்சிக் கேள்விகளை தரவு அடிப்படையில் ஆராயும்பொழுது வரும் முடிவுகளும் பலமுறை ஒத்திருப்பதில்லை என்பது ஆய்வாளர்கள், மற்றும் புள்ளியியல் அறிஞர்கள் ஆகியோர் அனுபவத்தில் அறிந்த ஒன்று. இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் உளவியல் துறை ஆய்வாளரான “ஜென்னிஃபர் எபர்ஹார்ட்” (Stanford University psychologist, Professor Jennifer Eberhardt) அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளும். ஜென்னிஃபர் எபர்ஹார்ட் அவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றவர், சென்ற ஆண்டின் மெக் ஆர்த்தர் ஃபவுண்டேஷனின், ‘மெக் ஆர்த்தர் ஃபெல்லோ’ (2014 MacArthur Fellow) என்ற சிறப்பு விருதும் பெற்றவர். இனபேத நடவடிக்கைகளால் மறுக்கப்படும் சமமற்ற சமூகநீதி பற்றிய ஆய்வினை நடத்தி வருகிறார் ஜென்னிஃபர் எபர்ஹார்ட்.

இவரது ஆராய்ச்சி முடிவுகள் சமூகஉளவியல் ஆய்வாளர்கள் பலர் முன்னர் ஆய்ந்தறிந்ததையே மீண்டும் உறுதி செய்கிறது. கருத்தாய்வுகளில் மக்கள் தங்களைப்பற்றி எண்ணியிருப்பதற்கு மாறாக, இனபேத எண்ணங்கள் அவர்கள் சிந்தையில் தோன்றுவதுண்டு, அவர்களையும் அறியாமல் அவர்கள் அந்தக் கோணத்தில் இனபேத எண்ணங்களின் அடிப்படையில் முடிவெடுப்பதும் உண்டு, அவ்வாறு எடுக்கும் முடிவுகள் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதும் உண்டு என்பது ஜென்னிஃபர் எபர்ஹார்ட் அவர்கள் ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இனபேதம் பற்றி ஆராயும் சமூக உளவியல் ஆய்வாளர்களும் பொதுமக்களும் நடைமுறையில் புழங்கிவரும் இனபேதம் பற்றிய கோணங்களில் எதிரெதிர் கோணங்களையே பெரும்பாலும் கொண்டுள்ளார்கள்.

நாம் காணும் பொருட்கள், இடங்கள் போன்றவை நம்மையறியாமல் நம் ஆழ்மனதில் அவற்றைக் குறிப்பிட்ட ஒரு பிரிவு மக்களுடன் இணைக்கும் வண்ணம், தொடர்புபடுத்தும் வண்ணம் சமுதாயம் நம் சிந்தனையோட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் நாம் நம்மையறியாமலேயே ஒரு சில மக்களைப் பற்றிய அபிப்பிராயங்களையும் வளர்த்துக் கொண்டுவிடுகிறோம். அந்த எண்ணங்களின் அடிப்படையில் மக்களை பொதுமைப்படுத்தவும் செய்கிறோம். இவ்வாறு பொதுமைப்படுத்தும் எண்ணத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று “கறுப்பின மக்கள் குற்றமிழைப்பவர்கள்” என்பதாகும். இது எவ்வாறு மக்களின் ஆழ்மனதில் நிலைபெற்றுள்ளது என்பதை ஜென்னிஃபர் எபர்ஹார்ட் பல சோதனைகள் மூலம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

சிறையில் இருக்கும் கறுப்பர்களின் எண்ணிக்கை, மக்கட்தொகையில் இருக்கும் கறுப்பர்களின் எண்ணிக்கையைவிட அதிக விழுக்காட்டில் அமைந்து குற்றம் என்றாலே அதில் கறுப்பர்களின் கைவரிசை அதிகம் என்று காவல்துறையும் அவர்களை சந்தேகத்துக்குறியவர்களாகக் குறி வைப்பதும் நடைமுறையில் உள்ளது. இது போன்ற தகவல்கள் செய்தித்தாள்களிலும் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதால் அவை மக்களின் ஆழ்மனதில் பதிந்து அவர்களும் தங்களை அறியாமல் பொதுமைப்படுத்த முனைந்து இனபேத முடிவுகளை எடுக்கும் நிலையில் உள்ளார்கள். ஆனால் நடைமுறையோ வேறுவிதம், பொதுமைப்படுத்தும் எண்ணங்கள் கறுப்பர்கள் என்றால் வன்முறை நிறைந்தவர்கள், ஆபத்தானவர்கள், குற்றம் புரிய அவர்கள் தயங்கமாட்டார்கள் என்ற கோணத்திலேயே அவர்கள் அணுகப்படுவதால் அவர்களை கைது செய்வதும், தண்டனை அளிப்பதும் அதிகமாக உள்ளது என்பது நாமறியும் குற்றவியல் புள்ளிவிவரங்களின் மற்றொரு கோணம்.

இருப்பினும் செய்திகளின் அடிப்படையில் முடிவெடுப்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்ட ஆழ்மன எண்ணங்கள் கறுப்பர்களை குற்றவியல் கருவிகளை விரைவில் தொடர்புபடுத்தும் முடிவை எடுக்கிறது என்பது பரிசோதனை மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜென்னிஃபர் எபர்ஹார்ட் நடத்திய ஆய்வில் முதலில் திரையில் பலரின் முகங்களை வெகுவேகமாக ஒன்றன்பின் ஒன்றாக காட்டிய பிறகு, அதைத் தொடர்ந்து தெளிவற்ற பொருள் ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக தெளிவுபெற்று தோன்றும் வகையில் காட்டப்படுகிறது. இப்பொருட்கள் குற்றவியல் கருவிகளான துப்பாக்கி, கத்தி போன்ற கருவிகளாகவும் இருக்கலாம், அல்லது சற்றும் தொடர்பற்ற புகைப்படக்கருவி, பத்திரிக்கைகள் போன்ற பொருட்களாகவும் இருக்கலாம். ஆராய்ச்சியில் பங்கு பெற்றவர்களிடம்(பங்கு பெற்றோர் அனைவரும் வெள்ளையர்கள்) முதலில் கறுப்பர்களைக் காட்டிவிட்டு, குற்றவியல் கருவியைக் காட்டத்துவங்கும் பொழுது, படத்தில் கருவியின் உருவம் சரியாகத் தெளிவடையும் முன்னரே விரைவில் துப்பாக்கி, கத்தி என்று சரியாக அடையாளம் கண்டுவிட்டார்கள். ஆனால் குற்றவியல் தொடர்பற்ற புகைப்படக் கருவி போன்றவற்றை அடையாளம் காண அதிக நேரம் பிடித்தது.

மாறாக வெள்ளையர்களின் முகங்களைக் காட்டியபின்னர் காட்டப்பட்ட குற்றவியல் கருவியோ, குற்றவியல் அல்லாத பொருட்களையோ அடையாளம் காண அதிக நேரம் பிடித்தது. ஜென்னிஃபர் எபர்ஹார்ட் அவர்களின் இந்த ஆய்வுச்சோதனை மக்கள் எவ்வாறு கறுப்பர் என்றாலே அவர்களை குற்றவியல் கருவிகளுடனும், குற்றங்களுடன் பொதுமைப்படுத்தும் மனப்பான்மை கொண்டுள்ளார்கள் என்பதை உளவியல் அடிப்படையில் உறுதிப்படுத்தியது. இதே பரிசோதனையை காவல்துறை அதிகாரிகளிடம் நடத்தியபொழுதும் அதே முடிவே கிடைத்தது. குற்றவியல் கருவிகளுக்கும் கறுப்பர்களுக்கும் காவல்துறையினராலும் விரைவில் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்காவில் கடந்த 1960-களுடன் வெள்ளையர் கறுப்பர் ஆகியோருக்கெனத் தனித்தனியாக இருந்த பள்ளி, குடியிருப்பு, உணவுவிடுதி, குடிநீர்க்குழாய் போன்றவை ஒழிக்கப்பட்டுவிட்டன.   ஆயினும் இன்றும் ஒரு சில இடங்களை ஒவ்வொரு இனத்துடனும் தொடர்புபடுத்தும் வழக்கம் மக்களிடம் இருப்பதை மற்றொரு பரிசோதனை வெளிப்படுத்தியது.   பல்வேறு இடங்களின் படங்களைக் காண்பித்து அப்பகுதி வெள்ளையருடன் அல்லது கறுப்பருடன் தொடர்பு கொண்ட பகுதியா அல்லது இருவருக்கும் பொதுவான இடமா என்று குறிப்பிடும்படி ஆய்வில் பங்கு பெற்றோரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அரசு வழங்கிய பொதுக்குடியிருப்பு, கூடைப்பந்து விளையாட்டு மைதானம், முடிதிருத்தும் நிலையம் போன்றவை கறுப்பர்கள் இடம் என்றும்,அழகிய புறநகர் வீடு, ஐஸ் ஹாக்கி விளையாட்டு மைதானம், வால் ஸ்டீரீட் பொருளாதார மற்றும் பங்குவிற்பனை மையம் போன்றவை வெள்ளையர்களுடனும்; தபால் நிலையம், கார் நிறுத்துமிடம், எண்ணிக்கை சாவடி போன்றவை இருவருக்கும் பொதுவான இடங்கள் என்றும் பரிசோதனையில் பங்கு பெற்றோர் குறிப்பிட்டனர். இது பொருட்களைப் போலவே, இடங்களையும் இனத்துடன் தொடர்புபடுத்தும், பொதுமைப்படுத்தும் எண்ணம் மக்கள் மனதில் உள்ளதைக் காண்பித்தது.

மூளையில் மனிதர்களின் பார்வை வழி தகவல் அறிய உதவும் ‘ஃபியுசிபாஃர்ம் ஃபேஸ் பகுதி’ யை (The fusiform face area (FFA) is a part of the human visual system in brain) முன்னிலைப்படுத்தி செய்த ஆய்வுகளும் குற்றம், கொடூரம் போன்ற பண்புகளுடன் கருப்பர்களை தொடர்புபடுத்தும் எண்ணங்கள் எழுவதை உறுதிப்படுத்தியது. சிறுவயதில் தோன்றாத இது போன்ற எண்ணங்கள் சமூக சூழ்நிலையில் வளரும்பொழுதும், பெரியவர்களாகும் பொழுதும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பர்களை குற்றவாளிகள் என்று பொதுமைப்படுத்தும் நிலைக்கு நம்மை அறியாமல் ஆழ்மனதில் நாம் தயார்படுத்தப்படுவது தெரியவருகிறது. கறுப்பு நிற தோல், சுருண்ட முடி, பரந்த மூக்கு வடிவம், உயரம், பலசாலியான தோற்றம் எனப் பொதுவாகக் காணும் கறுப்பர்களின் வெளித் தோற்றப் பண்புகள் கொண்டு பொதுமைப் படுத்தும் இனபேத முடிவுகள் எடுக்கப்படுகிறது. ஒருவர் தோற்றத்தில் மிகவும் கறுப்பின சாயல் கொண்டவர் என்றால் அவர் கொடூரமானவர், குற்றம் புரிபவர் என்று முடிவு செய்வதும், இதன் அடிப்படையில் தண்டனைகள் வழங்கப்படுவதும் ஆராய்ச்சி வழி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஒரே குற்றத்திற்கு ஒருவர் முற்றலும் கறுப்பின சாயலில் இருந்தால் மரணதண்டனை பெறுவதும், சற்றே ஓரளவு குறைந்த கறுப்பினத் தோற்றம் கொண்டிருந்தால் மரணதண்டண்டனைக்குப் பதில் ஆயுள் தண்டனையும் பெறுவதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

இந்த முடிவுகளின் அடிப்படையில் வீடியோ கேம் விளையாட்டுகளை விளையாடுவோரிடம் அவர்கள் நடவடிக்கையைக் கவனித்த பொழுது, கறுப்பர்கள் என்றால் குறைவான தகவல் இருக்கும் பொழுதே, அவர்கள் கையில் ஆயுதம் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் சுடப்பட்டு விடுவதும், அதே விளையாட்டில் ஆயுதம் தாங்கிய வெள்ளையர்கள் அவ்வளவு விரைவில் சுடப்பட்டு உயிரிழப்பது இல்லை என்பதும் வெளிப்பட்டது. இது போன்ற பொதுமைப்படுத்தும் எண்ணங்கள் மக்களின் ஆழ்மனதில் வேரூரூன்றி இருப்பதைக் காட்டுவதும், அத்துடன் இவை இனபேத நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் முடிவுகளாக இருப்பதைக் காணும்பொழுது டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவு, இன்றைய நாளின் “நல்லிணக்கக் கனவு” என்ற நிலையில் மீண்டும் மறுபிறவி எடுக்க வேண்டிய தேவையும் தெளிவாகிறது.

__________________________________________________________________________________________

கட்டுரைக்கு ஆதாரங்கள்:

Martin Luther King, Jr., “I Have a Dream” delivered 28 August 1963, at the Lincoln Memorial, Washington D.C.

http://www.americanrhetoric.com/speeches/mlkihaveadream.htm

Cover Story: “The Dream of Reconciliation” By The New Yorker

http://www.newyorker.com/culture/culture-desk/cover-story-2015-01-26

‘Dream of Reconciliation’ also includes slain officer Wenjian Liu By David Griner

http://www.adweek.com/news/press/eric-garner-and-michael-brown-join-mlk-civil-rights-martyrs-new-yorkers-cover-162411

Stanford research suggests support for incarceration mirrors whites’ perception of black prison populations

http://news.stanford.edu/news/2014/august/prison-black-laws-080614.html

Police expectations damage black men’s realities

http://www.latimes.com/local/crime/la-me-1206-banks-black-stereotypes-20141206-column.html

Racial Residue: How Race Alters Perception of People, Places, and Things

http://www.ctl1.com/publicaccess/humanecology/hdru-20090424-eng-je/index.htm

How Racial Residue: How Race Alters Perception of People, Places, and Things

http://www.cornell.edu/video/how-race-alters-perception-of-people-places-and-things

Racial Disparities in Incarceration Increase Acceptance of Punitive Policies

http://pss.sagepub.com/content/early/2014/08/05/0956797614540307.abstract

About Dr. Eberhardt:

Associate Professor Jennifer Eberhardt, Stanford University

https://psychology.stanford.edu/jeberhardt

http://web.stanford.edu/~eberhard/index.html

Social Psychologist Jennifer L. Eberhardt, 2014 MacArthur Fellow

http://youtu.be/lsV8kiDtN78

படங்கள்:

Martin Luther King leading march from Selma to Montgomery to protest

http://cdn.history.com/sites/2/2014/01/mlk-1965-selma-montgomery-march-P.jpeg

Cover Story: “The Dream of Reconciliation”, By The New Yorker

http://www.newyorker.com/wp-content/uploads/2015/01/CoverStory-1-26-15-690-942-16132003.jpg

Associate Professor Jennifer Eberhardt, Stanford University

https://psychology.stanford.edu/sites/all/files/imagecache/profile_full/photos/Jennifer2.jpg


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இனபேத நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் அமெரிக்க கறுப்பின மக்கள்”

அதிகம் படித்தது