ஆகஸ்டு 1, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

இனியது கேட்கின்… இனிது இனிது இனியவை நாற்பது

தேமொழி

Sep 7, 2019

siragu inidhu inidhu1

 ‘நானாற்பது’ என அறியப்படும், பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ‘நாற்பது’ எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களுள் இரண்டாவது நூல், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எழுதிய ‘இனியவை நாற்பது’ என்ற நூல். ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு ‘நன்மை தருவனவற்றை’ அல்லது ‘இன்பம் தருவனவற்றை’, ‘இனியவை’ எனக் கூறும் 40 பாடல்கள் கொண்ட தொகுதி என்பதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது. ‘இனிது நாற்பது’, ‘இனியது நாற்பது’, ‘இனிய நாற்பது’ என்ற பெயர்களும் இந்த நூலையே குறிக்கும்.

இனியவை நாற்பதின் கடவுள் வாழ்த்துப் பாடல் மும்மூர்த்திகளான சிவன், திருமால், பிரம்மா ஆகியோரை வணங்குதல் இனிது எனக் கூறுகிறது. பிரம்மாவைக் குறித்துக் குறிப்பிடுவதாலும், இன்னா நாற்பது கருத்துகளினை அடியொட்டி எழுதப்பட்டுள்ள கருத்துகளாலும் இந்த நூல் இன்னா நாற்பது நூலுக்குப் பிறகு தோன்றியது என்றும் எட்டாம் நூற்றாண்டு காலத்தது எனவும் கணிக்கப்படுகிறது.

கடவுள் வாழ்த்து தவிர்த்து 40 பாடல்கள் இனியவை நாற்பது நூலில் உள்ளன. பஃறொடை வெண்பா வடிவில் அமைந்த ஒரு பாடல் (‘ஊரும் கலிமா’ எனத் தொடங்கும் 8 ஆம் பாடல்) தவிர்த்து ஏனைய பாடல்கள் இன்னிசை வெண்பா வடிவில் அமைந்த பாடல்கள். ஒவ்வொரு பாடலும் வாழ்க்கைக்கு நன்மை தருவனவற்றை இனியவை எனக் கூறிச் செல்கின்றன. இன்னா நாற்பது பாடலின் நான்கு வரிகளில், வரிகளுக்கு ஒன்றாக ஒவ்வொரு பாடலும் நான்கு துன்பம் தருவனவற்றைக் கூறியதால் கடவுள் வாழ்த்தும் ஏனைய நாற்பது பாடல்களும் மொத்தம் 164 இன்னாதவற்றைக் கூறின. ஆனால், இனியவை நாற்பது நூல் முழுவதும் அது போன்ற சீரான முறையில் அமைந்திருக்கவில்லை. அதனால் மொத்தம் 127 இனியவையாகக் கூறப்பட்டுள்ளன. நான்கு பாடல்கள் (1, 3, 4, 5) வரிக்கு ஒன்றாக 4 இனியவற்றைக் கூறினாலும், மற்ற 37 பாடல்களில் முதல் இரு வரிகளும் கடைசி வரியும் இனியவை என 3 இனியனவற்றைக் குறிப்பிடுகின்றன. இன்னா நாற்பது போலவே இனியவை நாற்பதிலும் கடவுள் வாழ்த்து மட்டுமே கடவுளைக் குறிப்பிடும் பாடல். மற்ற பாடல்களில் சமயக் குறிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

இனியவை நாற்பது அறவழியில் ஆற்றுப்படுத்தும் பாடல்களில் ஆகச் சிறந்தவை எனக் கீழ்க்காணும் இரு பாடல்களையும் கூறலாம்.

     “கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே

     மிக்காரை சேர்தல் மிக மாண முன் இனிதே

     எள் துணையானும் இரவாது தான் ஈதல்

     எத்துணையும் ஆற்ற இனிது” [பாடல்: 16]

பாடலின் பொருள் – எவை நன்மை தரும்:

கற்றோர் முன் தனது கல்வித் திறமையைக் காட்டுவது,

அறிவிற் சிறந்தோரைத் துணையாகக் கொள்வது,

எள்ளளவும் பிறரிடம் பொருள் பெறாது தான் பிறருக்குக் கொடையளிப்பது,

ஆகியன நன்மை தருவனவாம்.

     “கயவரை கை இகந்து வாழ்தல் இனிதே

     உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே

     எளியர் இவர் என்று இகழ்ந்து உரையாராகி

     ஒளி பட வாழ்தல் இனிது” [பாடல்: 29]

பாடலின் பொருள் – எவை நன்மை தரும்:

தீயவர்களை விட்டு விலகி வாழ்வது,

வாழ்வில் உயரவேண்டும் என்ற முனைப்பு தோன்றுவது,

இல்லாதவரை ஏளனம் செய்யாதவர் இவரென்று போற்றப்படும் நிலையில் வாழ்வது,

ஆகியன நன்மை தருவனவாம்.

அனைத்துப் பாடல்களையும் ஒரு பொதுவான கோணத்தில் படிக்க இயலும் என்றாலும் 35 ஆவது பாடல் அரசரைக் குறித்தே எழுதப்பட்டிருக்கிறது.

     ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல்முன்இனிதே

     முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே

     பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப்பாங்கறிதல்

     வெற்வேறில் வேந்தர்க்கு இனிது. [பாடல்: 35]

பாடலின் பொருள் – எவை அரசுக்கு நன்மை தரும்:

ஒற்றரைக் குறித்தும் மற்ற ஒற்றரால் ஒற்று அறிந்து உண்மையறிவது,

வழக்கை ஆராய்ந்து நீதி வழங்குவது,

பற்றின்றி, அனைத்து உயிர்களையும் சமமாக மதிக்கும் பண்பைக் கொண்டிருப்பது, ஆகியன அரசுக்கு நன்மை தருவனவாம்.

குறளும் – இனியவை நாற்பதும்:

அறம் அறிவுறுத்த எழுதப்பட்ட பாடல்கள் என்பதால் பல அறவுரைகள் ஏதேனும் ஒரு திருக்குறளை நினைவுபடுத்திச் செல்கிறது. அவ்வாறான சில அறவுரைகளைக் குறளுடன் ஒப்பியல் நோக்கில் சுட்ட விரும்பினால், வள்ளுவர் அதற்காக ஒரு அதிகாரமே எழுதியுள்ளார் என்பதால் ஒரு குறளை நேரடியாகவும் பல குறள்கள் அறிவுறுத்தும் கருத்துக்களை மேலதிகத் தகவல் என்ற முறையிலும் பாடலின் விளக்கத்திற்காகக் கொடுக்கலாம்.

கடவுள் வாழ்த்து தவிர்த்த 40 பாடல்களுள், பாதிக்கும் மேலாக 23 பாடல்களில் குறள் கருத்துக்களுக்கு நிகரான கருத்துகள் உள்ளன. ஒரு சில பாடல்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குறள் கருத்துகளையும் அடையாளம் காட்டுவதால், 33 குறள் சொல்லும் பொருட்களை அடையாளம் காண இயல்கிறது.

இவை கீழ்க்காணும் அதிகாரங்களின் குறள்களாகும்:

1. அறன் வலியுறுத்தல், 2. மானம், 3. இரவு, 4. இன்னா செய்யாமை, 5. ஒழுக்கமுடைமை, 6. ஒற்றாடல், 7. தெரிந்து தெளிதல், 8. தெரிந்துவினையாடல், 9. பிறனில் விழையாமை, 10. புதல்வரைப் பெறுதல், 11. அரண், 12. அவை அஞ்சாமை, 13. அழுக்காறாமை, 14. அன்புடைமை, 15. ஆள்வினை உடைமை, 16. இல்வாழ்க்கை, 17. ஊக்கமுடைமை, 18. கல்லாமை, 19. கல்வி, 20. நிலையாமை, 21. புலால் மறுத்தல், 22. பேதைமை, 23. பொருள் செயல் வகை, 24. மடியின்மை, 25. விருந்தோம்பல், 26. வினைசெயல்வகை, 27. வெஃகாமை.

இன்னா நாற்பதும் – இனியவை நாற்பதும்:

இன்னா நாற்பது பாடல்களுக்கும் இனியவை நாற்பது பாடல்களுக்கும் கருத்தொற்றுமை மிகுதி. இன்னா நாற்பது இவையிவை துன்பம் தரும் என்று கூறினால், இனியவை நாற்பது அவை இல்லாதிருத்தல் இனிமை என்று கூறும் வகையில் எதிர்மொழியாக அமைந்துள்ளது. அந்தவகையில் கருத்தொற்றுமை உள்ள வரிகளுள் ஒரு பத்து எடுத்துக்காட்டுகள் இங்கு ஒப்பிடும் நோக்கில் தரப்பட்டுள்ளது.

பிற உயிர்களின் உடலை உண்டு தன் உடலை வளர்த்துக் கொள்வது:

ஊனை தின்று ஊனை பெருக்காமை முன் இனிதே (இனியவை பாடல் – 4)

ஊனை தின்று ஊனை பெருக்குதல் முன் இன்னா (இன்னா பாடல் – 22)

பிறன்மனை நோக்கா பேராண்மை:

பிறன் மனை பின் நோக்கா பீடு இனிது (இனியவை பாடல் – 5)

பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா (இன்னா பாடல் – 38)

குழந்தைகள் நோய் வாய்ப்படுவது:

குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே (இனியவை பாடல் – 12)

குழவிகள் உற்ற பிணி இன்னா (இன்னா பாடல் – 35)

உயிர்க்கொலை தவிர்ப்பது:

கொல்லாமை முன்இனிது (இனியவை பாடல் – 5)

புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா (இன்னா பாடல் – 12)

இருளில் வெளியில் செல்லாதிருப்பது:

எல்லி பொழுது வழங்காமை முன் இனிதே (இனியவை பாடல் – 34)

இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா (இன்னா பாடல் – 10)

உறவுகள் இல்லாத ஊரில் வாழாதிருப்பது:

பத்து கொடுத்தும் பதி இருந்து வாழ்வு இனிதே (இனியவை பாடல் – 40)

கட்டு இலா மூதூர் உறைவு இன்னா (இன்னா பாடல் – 25)

நன்னெறி நூல்களை விரும்பிக் கற்பது:

பற்பல நாளும் பழுது இன்றி பாங்கு உடைய கற்றலின் காழ் இனியது இல் (இனியவை பாடல் – 40)

விழுத்தகு நூலும் விழையாதார்க் கின்னா (இன்னா பாடல் – 34)

அரசர் யானைப்படையைக் கொண்டிருப்பது:

மற மன்னர் தம் கடையுள் மா மலை போல் யானை மத முழக்கம் கேட்டல் இனிது (இனியவை பாடல் – 15)

யானை இல் மன்னரை காண்டல் நனி இன்னா (இன்னா பாடல் – 22)

பெரியோர் துணையைச் சேர்ந்திருத்தல்:

இனிதே தெற்றவும் மேலாயார் சேர்வு (இனியவை பாடல் – 1)

பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா (இன்னா பாடல் – 26)

தீயவர்களை விட்டு விலகி வாழ்வது:

கயவரை கை இகந்து வாழ்தல் இனிதே (இனியவை பாடல் – 29)

தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா (இன்னா பாடல் – 24)

இன்னா நாற்பது பாடல்களில் காணப்படுவது போலவே;

“யானையுடை படை காண்டல் மிக இனிதே” [பாடல் - 4]

என்று யானைப்படை கொண்டிருப்பதன் சிறப்பு போன்ற காலத்திற்குப் பொருந்திடாத கருத்தும்,

“ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே” [பாடல் - 23]

என்று பார்ப்பனருக்குக் கொடை அளிப்பது நன்மை தரும் என்ற காலத்திற்கு ஒவ்வாத கருத்தும்,

“தட மென் பணை தோள் தளிர் இயலாரை விடம் என்று உணர்தல் இனிது” [பாடல் - 37]

என்று பெண்மையைப் போற்றாது பெண்களை நஞ்சுடன் ஒப்பிடும் கருத்தும்,

தவிர்த்தால் அறநெறி வழி நடக்க நூற்றுக்கும் குறையாத அறிவுரைகள் இனியவை நாற்பது பாடல்களில் உள்ளன.

உதவிய நூல்:

பூதஞ்சேந்தனார் இயற்றிய ‘இனியவை நாற்பது’—

திரு. வா. மகாதேவ முதலியாரவர்கள் உரை, 1922,

திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.

தமிழ் இணையக் கல்விக்கழகம் – பதிப்பு:

http://www.tamilvu.org/library/l2500/html/l2500bod.htm

_____________________________________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இனியது கேட்கின்… இனிது இனிது இனியவை நாற்பது”

அதிகம் படித்தது