நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

இயற்கை விவசாயியான திருநங்கை!

நிகில்

Nov 5, 2016

devi

இயற்கை விவசாயமும், நாட்டு மாடுகள் வளர்ப்பு தான் என்னுடைய உயிர் நாடி. விவசாயம் இல்லாமல் கிராமம் இல்லை. அதுவே நம் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் தேவி சேலத்தைச் சேர்ந்த திருநங்கை. விவசாயி, சமூக சேவகி, அரசியல்வாதி என பல பாதைகளில் பயணிப்பவர்.

“சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகேயுள்ள அரண்மனைக்காடு கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர். ஏழைக்குடும்பம். நான் 11 மாத கைக்குழந்தையாக இருக்கும் போதே அப்பா காலமாகிவிட்டார். உடன் பிறந்தது அக்கா, அண்ணன். அக்காவிற்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். அண்ணன் சிறு வயதிலேயே வீட்டை விட்டு சென்றுவிட்டார். பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்த நான், என்னுடைய 17 வயதில் பாலின மாறுபாடு காரணமாக அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறிவிட்டேன். சிறிது தயங்கினாலும் அம்மா ஏற்றுக்கொண்டார்.

என்னுடைய 7 வயதில் ஏர் ஒட்டும் களப்பையைப் பிடிக்க ஆரம்பித்தேன். விவசாயத்தில் எல்லா தொழிலும் எனக்கு அத்துப்படி. எங்களுக்குச் சொந்தமாக மூன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. அதில் இயற்கை விவசாய முறையில் நாட்டு தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், சோளம், கம்பு, நிலக்கடலை, மொச்சை, காராமணி, பாசிப்பயறு, உளுந்து என விளைவிக்கிறேன். மேற்கண்ட பயிர்களை தினமும் பராமரிக்கவேண்டும் என்ற தேவையில்லை. வாரத்திற்கு இரண்டு தடவை சென்று கவனித்தாலே போதுமானது. எங்கள் வீட்டு அடுப்பு சாம்பல், பஞ்சகவி தான் பயிருக்கு தெளிக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகள். செயற்கை மருந்துகள் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக மண்ணை மலடாக்கும் விசயங்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவேன். பசு சாணம், ஆட்டுச் சாணம் தான் பயன்படுத்தும் முக்கிய உரங்கள். இயற்கை விவசாயி நம்மாழ்வார்தான் எங்களின் வழிகாட்டி.

img-20160819-wa0003

எங்களுடைய நிலத்தில விளையும் பொருட்கள் அத்தனையும் நான் தொடங்கியுள்ள ‘தாய்மடி’ சேவை இல்லத்திற்கு மட்டும் தான். இதில் தற்போது சில நபர்களை வைத்து பராமரித்து வருகிறேன். எங்களின் தேவைக்குப் போக மீதமாகும் நிலக்கடலையை மட்டும் தான் விற்பனை செய்வோம். கூடுமானவரை எங்களுக்குத் தேவையான விசயங்களை அனைத்தும் விளைவித்துக் கொள்வோம்.

எப்படி இத்தனை வயதானவர்களை வைத்துப் பார்க்கிறாய்? உனக்கு பண வசதி இருக்கிறதா? என்று கேட்பார்கள். என்னுடைய நிலமும், அதில் விளையும் பொருட்களும் தான் என்னையும், என்னைச் சார்ந்த வயதானவர்களையும் காப்பாற்றுகிறது. என்னுடைய இந்த இயற்கை விவசாயத்திற்கு தாய்மடியிலுள்ள சிலரும் உறுதுணை புரிகிறார்கள். நம்முடைய நிலத்தில் நாமே விளைவித்து சாப்பிடுவது என்பது தான் ஆத்ம திருப்தியைத் தருகிறது. அதனை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது. என்னை திருநங்கை விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் சந்தோசப்படுகிறேன்.”

நாட்டு மாடு வளர்ப்பு பற்றி சொல்லுங்கள்?

“தற்போது மூன்று நாட்டு மாடுகள் என்னிடம் உள்ளன. இதனை ஒரு பண்ணையாக மாற்ற முயற்சித்து வருகிறேன். 20 மாடுகள் சேர்ந்துவிட்டால் அதில் கிடைக்கும் பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளேன். குறிப்பாக தற்போது நாட்டு மாடுகளுக்கு கிராக்கி அதிமாகி விட்டது. 70 ஆயிரம் வரை ஒரு மாடு விலை போகிறது. ஜெர்சி மாட்டிற்காக மதிப்பு தற்போது குறைந்துவிட்டது. வீட்டிற்கு ஒரு நாட்டு மாடு வளர்ந்தால் போதும், பால், தயிர், மோர் இவற்றிற்கு பஞ்சம் இருக்காது.”

உங்களுடைய சமூக சேவை பற்றி?

விவசாயம் என்பது என்னுடைய உயிர்மூச்சு. முதலில் அந்தப்பணி தான். மீதி நேரங்களில் மற்றவைகள் எல்லாம். 2005 ஆம் ஆண்டிலிருந்து என்னுடைய சமூக சேவை செய்து வருகிறேன். ஆரம்பத்தில் அரசின் தாய் திட்டத்தில் இணைந்து பணியாற்றினேன். 2007ஆம் ஆண்டு காவல்துறையிலும், பொதுமக்கள் பயிற்சியாளராகவும் பணியாற்றினேன். தையல் கற்றுக்கொண்டு அதனையும் ஒரு தொழிலாக செய்கிறேன். 2014 ஆம் ஆண்டு ‘தாய்மடி’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறேன். திருநங்கை என்பதால் ஆரம்ப காலத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்டேன். என்னை உலகம் முழுக்க அடையாளம் காட்டியது அரசியல் களம் தான். நாம் தமிழர் கட்சி சார்பாக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டேன். மக்களுக்கு சேவை தான் என்னுடைய அடிப்படைப் பணி. 94 வயதுள்ள பாட்டி என்னை அம்மா என்று அழைக்கிறார். இதை விட எனக்கு இந்த உலகத்தில் எனக்கு என்ன அங்கீகாரம் வேண்டும்.

வருங்கால லட்சியம் என்ன?

நான் ஆரம்பத்தில் என்னவாக விரும்பினேனோ, அந்த நிலையை ஒரளவு எட்டிவிட்டேன். தமிழ்நாட்டில் ஆதரவற்ற நிலையைப் போக்க வேண்டும். பசி பட்டினி இருக்கக்கூடாது. படித்தவர்களும் விவசாய பணியாக எடுத்துசெய்ய வேண்டும். அதுவே இந்தியாவை எதிர்காலத்தில் வளமுள்ள நாடாக்கும்.


நிகில்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இயற்கை விவசாயியான திருநங்கை!”

அதிகம் படித்தது