சனவரி 13 , 2018 இதழ்
தமிழ் வார இதழ்

இயல் 12 – புனைகதைகளை மதிப்பிடுதல்

ஆச்சாரி

Mar 15, 2013

    காரிகை கற்றுக் கவியாவதைவிட பேரிகை கொட் டிப் பிழைப்பது மேல் என்று அந்தக்காலத்திலேயே இலக்கிய இரசனைக் கல்வியும் கவிதைக்கான பயிற்சியும் இழித்துரைக் கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், வாசக இரசனைக்கும் வாசிப்புக்கும் பயிற்சி தேவையாக இருக்கிறது. எழுத்தாளர்களாவதற்கும் பயிற்சி தேவைதான். இன்றும் இவற்றை இழிவாக நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இரசனை ஏற்படும்போது தானாகவே படைப்புத் திறனும் வருகிறது.

    இதற்குப் பல சான்றுகள் கண்கூடாகவே இருக்கின்றன. திருச்சியில் மிகச் சிறப்பாக நடந்துவந்த சினிஃபோரம் என்ற திரைப்படச் சங்கத்தில், கலைத்திரைப்படங்கள் திரையிடப் பட்ட பிறகு நடந்த விவாதங்கள் திரைப்பட இரசனையைச் சிறப்பாக வளர்ப்பனவாக இருந்தன. இந்த விவாதங்களிலிருந்துதான் அம்ஷன்குமார் என்ற இயக்குநர் உருவானார். இவ்வாறே திரைப்படச் சங்கங்கள் வடக்கிலும் சத்யஜித் ராய், மிருணாள் சென் போன்ற எத்தனையோ நல்ல இயக்குநர்களுக்கு ஊக்கமளிப்பவையாக இருந்துள்ளன. கேரளத்திலும் அடூர் கோபாலகிருஷ்ணன், ஜான் ஆபிரகாம் போன்ற இயக்குநர்களுக்கும் திரைப்படச் சங்கங்களுக்கும் நல்ல தொடர்பு உண்டு. மேலும் சில வணிகத் திரைப்பட இயக்குநர்களும் இவற்றால் உருவாகியிருக்கிறார்கள்.

    திருச்சி வாசகர் அரங்கமும் கத்தோலிக்க மையமும் சேர்ந்து நடத்திய எழுத்துப் பட்டறைகளில் பயிற்சி பெற்ற பலர் இன்று மிகச் சிறப்பான எழுத்தாளர்களாகி இருக்கி றார்கள். பலருக்கு நான் உள்ளிட்டு சிலர் இரசனைப் பயிற்சியும் எழுத்துப் பயிற்சியும் அளித்திருக்கிறோம். இவர்களிலிருந்து உருவான இமையம் என்ற எழுத்தாளரைத் தனியே குறிப்பிடலாம். இதேபோல் நாடகச் சங்கங்கள் வாயிலாகப் பயிற்சி பெற்று நாடகாசிரியர்களா கவும் இயக்குநர்களாகவும் ஆன பலர் உண்டு.

    நாடகப்பயிற்சிப் பட்டறைகள் நான் அறிந்து பல நடந்திருக்கின்றன. அவ்வாறே நாடக விழாக்களும். திரைப்பட இரசனைக்கு வகுப்புகள் நடத்துகிறார்கள். நடிப்பு, இயக்கம், படத் தொகுப்பு, பின்னணி இசைத் தொகுப்பு, ஒளிப்பதிவு போன்ற கலைத்துறைகள் எல்லாவற்றிலும் பயிற்சிபெற்ற பிறகே வருகிறார்கள். இதில் சங்கடப்படவோ, அவமானப் படவோ ஏதும் இல்லை. எழுத்தாளர்களுக்குப் பயிற்சிப்பட்டறை என்றால் மட்டும் பலர் சிரிக்கிறார்கள். ஏன், இசைக்குக் கல்லு£ரி, நடனத்துக்குப் பாடசாலை, ஓவியத்துக்குக் கல்லு£ரி, சிற்பத்துக்கு மகாபலிபுரத்தில் பயிற்சி, திரைப்படத்துறைகளுக்குக் கல்லு£ரி என்றால் அவர்கள் சிரிப்பதுதானே? இவையும் நுண்கலைகள்தானே? எழுத்தைவிட மிக நுட்பமானது இசை. இசைப்பள்ளியினால் ஒரு வித்துவானை-பாடகரை, இசையமைப்பாளரை உருவாக்க முடியும் என்றால் எழுத்துப்பயிற்சியினால் ஓர் எழுத்தாளனை உருவாக்க இயலாதா?

    இந்த மௌடீகம்தான் இன்று இலக்கியம் பற்றி நிலவும் விசித்திரமான கருத்துகள் பலவற்றிற்கும் காரணமாக இருக்கிறது. எவனோ இரண்டு மூன்று நு£ற்றாண்டுகளுக்கு முன்பு “அகத்தெழுச்சியினால் உருவாவது கவிதை” என்றால் அதைப் பிடித்துக்கொண்டு தொங்கு பவர்கள் இவர்கள். எந்தக் கலைக்குத்தான் அகத்தெழுச்சி வேண்டியதில்லை?

    இந்தக் கட்டுரைகளின் அடிப்படை நோக்கம் வாசிப்புப் பயிற்சியைத் தருவதுதான். முன் இயல்களில் கூறிய செய்திகள், நல்ல, இரசனைமிக்க வாசகர்கள் உருவாகுவதற்கு ஓரளவு துணைபுரியும். படைப்பாளிகளையும் விமரிசகர்களையும் உருவாக்குவதற்குப் போது மானவை அல்ல. அதற்கு இன்னும் நவீனமான கோட்பாட்டுப் பயிற்சியும் எழுத்துப்பயிற்சியும் தேவை. மேலும், ஓர் எழுத்தாளராக வேண்டுமென்றால் பட்டறைப் பயிற்சி, வாசிப்புப் பயிற்சி மட்டும் போதாது. தினந்தோறும் பத்துப்பக்கமாவது எழுதவேண்டும். எழுதி எழுதிப் பழகவேண்டும். தினமும் வேகமாக நீந்துகின்ற ஒருவன் எப்படி நீச்சல்வீரனாகின்றானோ, அது போல தினமும் எழுதிப்பழகுபவன் எழுத்தாளன் ஆகின்றான்.

  நல்ல வாசிப்பு என்பது திறனாய்வை உள்ளடக்கி இருக்கிறது. தேர்ந்தெடுத்து வாசிப் பது என்பதே விமரிசனத்தை உள்ளடக்கிய செயல்முறைதானே! ஒவ்வொரு சிறந்த எழுத் தாளருக்கும் இடையிலான தனித்த வேறுபாடுகள் யாவை என்பதைப் பொது வாசகர்கள் கணித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை என்றாலும்,  மோசமான எழுத்துக்கும் நல்ல எழுத்துக்கும், நல்ல எழுத்துக்கும் சிறந்த எழுத்துக்கும் உள்ள வேறுபாடுகளை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

    இலக்கிய மதிப்பீட்டுக்கு எளிய விதிகள் ஏதும் இல்லை. அம்மாதிரி மதிப்பிடுவது நமது கூரியநோக்கு, அறிவுத்திறன், அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்த விஷயம். அப்படி மதிப்பிடுவதில், எவ்வளவு விழிப்போடு நாம் வாழ்ந்திருக்கிறோம், எவ்வளவு, எப்படி நாம் வாசித்திருக்கிறோம் என்பவை பெரும்பங்கு வகிக்கின்றன. இருந்தாலும் இரண்டு குறிப்புக ளைச் சொல்லலாம்.

    ஒன்று, ஒவ்வொரு கதையும், தன் மைய நோக்கத்தினை எவ்வளவு தூரம் சாதித் துள்ளது என்பதை வைத்து அதை மதிப்பிடவேண்டும். நாம் கண்ட பல்வேறு சிறுகதைக் கூறுகளையும் இங்கே பயன்படுத்த வேண்டும். அவை கதையின் மையநோக்கத்தை அடைவதற்கு எப்படி உதவி செய்கின்றன என்பதை வைத்து மதிப்பிடவேண்டும். நல்ல கதை யில் எவை செய்யப்பட வேண்டும், எவை செய்யப்படலாகாது எனப் பல செய்திகள் முன்னமே தெரிவிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஒரு நல்ல கதையில் தற்செயல் நிகழ்வுகளும், ஒருங்கிணைவுகளும் கதையின் மையப்பகுதியிலோ இறுதியிலோ அதிகமாகக் கையாளப்படலாகாது என்ற விஷயத்தை கதைப்பின்னல் பற்றி விவாதிக்கும்போது கூறினோம். ஒன்றை நல்ல கதை என மதிப்பிடும்போது இந்தச் செய்தியை மனத்தில் கொள்ளவேண்டும். அவ்வாறே, உணர்ச்சி பற்றி விவாதிக்கும்போது அசட்டுணர்ச்சி, மிகை உணர்ச்சி கூடாது என்று சொல்லப்பட்டது. இவ்வாறு கதையை மதிப்பிடுவதற்கு எதிர்மறை விதிகளும் இருக்கின்றன. சிறப்பாகக் குறிப்பு முரணைப் பயன்படுத்தவேண்டும், குறியீடு, வருணனை போன்றவற்றைப் பயன்படுத்தவேண்டும் என்ற நேர்முக விதிகளும் இருக்கின்றன. இம்மாதிரி பல்வேறு விஷயங்கள் மனத்தில் நின்றே ஒரு கதையை மதிப்பிடுவதில் பங்கு கொள்கின்றன.

    ஒரு நல்ல கதையில் ஒவ்வொரு கூறும் அதன் பிற கூறுகளுடன் இணைந்து அதன் மையநோக்கத்தை அடைவதற்கு உதவுகிறது. எனவே தனிப்பட்ட கூறுகளை மட்டும் வைத்து ஒரு படைப்பை மதிப்பிடக் கூடாது.

    ஆனால் நமது வாழ்க்கை முறை, தனித்தனிக் கூறுகளாகப் பகுத்து மதிப்பிடவே நமக் குக் கற்றுத் தந்திருக்கிறது. சிறுவயதிலிருந்தே நாம் அனைவரும் திரைப்படம் பார்க்கிறோம். சிலவற்றில் பாடல்கள், இசையமைப்பு நன்றாக இருக்கின்றன, ஆகவே பார்க்கலாம்; சிலவற்றில் கதையமைப்பு நன்றாக இருக்கிறது; பார்க்கலாம்; சிலவற்றில் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது; சிலவற்றில் நகைச்சுவைக் காட்சிகள், சிலவற்றில் சண்டைக் காட்சிகள், சிலவற்றில் காதல் காட்சிகள் நன்றாக உள்ளன என்று மதிப்பிடுகிறோம். இம்மாதிரிச் சில கூறுகள் நன்றாக இருப்பதை வைத்துக் குறிப்பிட்ட படத்தைப் பார்க்கலாம் என்று பரிந்துரையும் செய்கிறோம். ஆனால் இந்த எல்லாக் கூறுகளும் சேர்ந்து ஒருசேரத் திரைப்படத்தின் மதிப்பினை அல்லது இழப்பினை எவ்விதம் உருவாக்குகின்றன என்று ஒருபோதும் நாம் மதிப்பிடுவதில்லை, அப்படி மதிப்பிடக் கற்பதுமில்லை.

    முதல்தரமான ஒவ்வொரு கதையும் ஓர் உயிரி-ஒரு விலங்கு-ஒரு மனிதன் போன்றது தான். அதன் எல்லாப் பகுதிகளும் தமக்குள் தொடர்புகொண்டவை. கதையின் மைய நோக்கத்திற்கு அனைத்தும் அவசியம். மையநோக்கம்தான் கதையின் உயிர். ஒரு மனிதனுக்கு-ஏன், ஒரு நாய்க்குக்கூட, கால் மட்டும் நன்றாக இருந்தால் போதும், ஒரு காது சற்றே கேட்காவிட்டாலும் பரவாயில்லை, கண் பொட்டையாக இருந்தாலும் பரவாயில்லை என்று யாரேனும் சொல்லமுடியுமா? அது போலவே ஒரு கதைக்குக் கதைப்பின்னல் நன்றாக இருந்தால் போதும், சூழல் அவ்வளவாகத் தேவையில்லை, நோக்குநிலை சற்றே ஏறுமாறாக இருந்தாலும் போதும் என்றெல்லாம் நாம் கூறமுடியாது.

    கதையின் மையநோக்கம் சரிவர அமைந்திருக்கிறது, வெற்றி பெற்றிருக்கிறது என்று முடிவு செய்துவிட்டால், அந்த நோக்கம் எவ்வளவு முதன்மையானது அல்லது முக்கியமானது என்ற கேள்வியை எழுப்புங்கள். ஒரு எஞ்சின் நன்றாக வேலைசெய்ய அதன் உதிரி பாகங்கள் எல்லாம் செப்பமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அந்த பாகங்கள் எவ்வளவு து£ரம் தம்மளவில் செம்மையானவை, மதிப்புள்ளவை, சரியானவை என்பதையும் பார்க்க வேண்டுமல்லவா? அவை நன்றாக இல்லாவிட்டால் பழுது ஏற்பட்டுவிடுமே? இந்த உயிரிக் கோட்பாடு நம்மை இரண்டு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது.

    ஒன்று முதல் இயலில் கூறியவாறு, தப்பிப்பு நோக்கிலான கதைகளுக்கும் வாழ்க்கைவிளக்க இலக்கியத்துக்குமான வேறுபாடு.

    இரண்டாவது அந்தக் கதை எழுதப்படும் சமூகச் சூழல்.

    ஆயிரக்கணக்கில் யூதர்கள் ஆஷ்விட்சில்-ஜெர்மனியில் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அந்த நாட்டின் நல்ல எழுத்தான் ஒருவன் காமக்களியாட்டக் கதையோ, தான் மட்டும் யோகப்பயிற்சி செய்து வெற்றி பெறும் சுயமுன்னேற்றக் கதையோ எழுதிக் கொண்டிருப்பானா? அப்படி எழுதினால் அதை நாம் நல்ல இலக்கியம் என மதிப்போமா? ஆனால் அந்தச் சமயத்திலும் அந்த நாட்டில் மோசமான கதைகளை எழுதியவர்கள் இருக்கலாம்.

    நம் நாட்டில் மட்டும் இன்னும் ஏராளமான எழுத்தாளர்கள் இரண்டு தவறுகளை விடாமல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

    ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், விமரிசனபூர்வமாகச் சில எழுத்தாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டியபோது, “எங்களுக்கு எத்தனை இலட்சம் வாசகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா? நாங்கள் எவ்வளவு சிறப்பாக இரசிகர்களால் மதிக்கப்படுபவர்கள்; எங்களைக் குறைகூறினால் தெரியும்!” என்ற போக்கில் பதில் அளித்தார்கள். அதாவது கோடிக்கணக்கான வாசகர்களால் பாராட்டப்படுபவர்கள் நாங்கள், எங்களைக் குறைகூறக்கூடாது என்று அர்த்தம். வாசகபலம் இருப்பதால் சிறந்த எழுத் தாளர்கள் நாங்கள்தான் என்று தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக் கொண்டார்கள்.

    வாசகர் எண்ணிக்கையை வைத்து நல்ல இலக்கியங்களை மதிப்பிடுவதில்லை, மதிப் பிடவும் கூடாது. ஆங்கில இலக்கிய உலகில் சிகரமாக மதிக்கப்படும் டி.எஸ். எலியட்டின் பாழ்நிலம், நான்கு குவார்டெட்டுகள் போன்ற கவிதைகளைப் படிப்பவர்கள் மிகக்குறைவு. ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிசிஸ் என்ற நாவலைப் படிப்பவர்கள் மிகக் குறைவு. ஆனால் ஹேரி பாட்டர் போன்ற கதைகள் கோடிக்கணக்கில்-இவற்றை ஆங்கிலத்தில் பெஸ்ட் செல்லர்கள் என்று சொல்வார்கள்-படிக்கப்படுகின்றன. இதனால் முன்னவைகளைவிடப் பின்னவைகளை நல்ல எழுத்து என்று சொல்லிவிட முடியுமா? ஹேரிபாட்டர் போன்ற கதைகளை எழுதிய எழுத்தாளர்களே இம்மாதிரி மதிப்பீட்டை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

    ஜனரஞ்சகத் தன்மை, பிரபலத் தன்மை வேறு, சிறப்பாக, உன்னதமாக அமையும் தன்மை வேறு. பணக்காரனாக இருப்பது ஜனரஞ்சகத்தையும் பிராபல்யத்தையும் தருகிறது. காந்தியோ, காமராஜரோ பணபலம் பெற்றவர்கள் அல்ல, ஆனால் சிறந்தவர்கள், உன்னதமானவர்கள். கதைகளும் அப்படித்தான். ஆனால் இரண்டிற்கும் தேவைகள் உள்ளன என்பது வேறு. ஜனரஞ்சகத் தேவைகளை இன்றைய முதலாளித்துவ, வணிகச் சமூகம் பிழைப்பிற்காக இன்னும் கூர்மைப்படுத்தியிருக்கிறது. இன்றைய வணிக உலகில் நல்லவை எவையும் நம்மைத் தேடி வருவதில்லை, நாம்தான் அவற்றைத் தேடிப் போகவேண்டும். குப்பைகளுக்குத்தான் ஏராளமான விளம்பரங்கள்; மோசமானவைதான் தெருமூலைக்குமூலை கிடைக்கின்றன; நம்மைத் தேடிவருகின்றன.

    இன்றும் ஓர் எழுபது சதவீத எழுத்தாளர்களேனும் செய்யும் இன்னொரு தவறு-”நாங்கள் அகத்தெழுச்சியோடும் உன்னத மனநிலையோடும் எங்கள் வீட்டுக்குப்பைகளை மட்டுமே தோண்டிக்கொண்டிருப்போம்” என்கிறார்கள். அவர்களுக்கு சமூகப் பிரக்ஞை அரிதாகவே இருக்கிறது. தம்மைச்சுற்றி உலகில் பாரது£ரமான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, எல்லாம் தலைகீழாகிக் கொண்டிருக்கும்போது, உலகமே பொரு ளாதார அளவில் பாதிக்கப்பட்டுப் பலநாடுகளே அழிந்துவிடுமோ என்ற பயம் எழுதி ஒட்டி யிருக்கும்போது, (12-12-12 அன்று உலகம் அழிந்துவிடப்போகிறது என்று ஒரு பெரிய கூட்டமே நம்புகிறது) சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் உலகமே பாலைவனமாகிவிடுமோ என்று உலகின் பெரும்பகுதி கவலைகொள்ளும்போது, உலகில் கருத்தியல் மோதல்கள் முதலாளித் துவ, தனிமனித பயங்கர வாதங்களாக உருப்பெற்றுக்கொண்டிருக்கும்போது எப்படி இவர் களால் தங்கள் படுக்கையறையே கதி என்று கிடக்கமுடிகிறது? கேட்டால், “பாரதி உன்னத மனநிலையோடு சிறந்த கவிதைகள் எழுதவில்லையா? அவன் ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி எழுதினானா” என்றெல்லாம் கேள்வி எழுப்புவார்கள்.

    ஆஷ்விட்சுக்கும் வியட்நாமுக்கும் கொதித்தெழுந்த தமிழ் எழுத்தாளர்கள், தங்கள் இனமே மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டபோது அமைதி காத்தார்கள். அகத்தெழுச்சியும் உன்னத மனஎழுச்சியும் பெற்றவர்கள் அல்லவா? காவிரிப் பிரச்சினைக்குக் கொதித்தெழுகிறார்கள் கன்னட எழுத்தாளர்களும் கன்னட நடிகர்களும். தமிழ்இனமே பூண்டோடு அழிந்து போனாலும் நமது எழுத்தாளர்கள் அசரமாட்டார்கள். தன் உரிமைக்காகத் தமிழ்இனம் போராடிக் கொண்டிருக்கின்ற இன்று-சுற்றிலும் அநீதிகள் தமிழ் இனத்தின்மீது இழைக்கப்படும் இன்று எழுத்தாளர்கள் தங்கள் அகத்தெழுச்சியை மட்டுமே நம்பிப் பயனில்லை. தமிழ் இனம் மட்டுமல்ல, உலகில் எல்லாப்பகுதிகளிலுமே ஏழைகளும் ஒடுக்கப்பட்டவர்களும் ஈவிரக்கமின்றி கொடுமைப்படுத்தப்படும் இன்று, நமது சுரணை எங்கே போய் ஒளிந்துகொள்கிறது? ஓ, சுரணை என்பது தான் அடிபட்டால் மட்டுமே வருவது போலும்! தினசரி நமது மீனவர்கள் கொல்லப்படும் போது நமது அகத்தெழுச்சி யெல்லாம் எங்கே போய் மறைந்துகொள்கிறது? தமிழ் இனத்தின் இம்மாதிரிப் பொறுமையைக் கண்டு உலகமே இறும்பூது எய்துகிறது.

    உதாரணத்திற்கு ஒரே ஒரு செய்திமட்டும்: நம் நாட்டில் சுதந்திரதினம் என்றாலும் குடியரசு தினம் என்றாலும் எல்லா நகரங்களிலும் கடுமையான இராணுவ, போலீஸ் பாது காப்புடன்தான் கொண்டாட முடிகிறது. “இன்று பாராளுமன்றம் தாக்கப்பட்ட பத்தாம் ஆண்டு நிறைவு என்பதால் நாடு முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.” இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் நமக்குத் தேவைதானா? இந்த மாதிரிப் பிரச்சினைகள் எல்லாம் ‘இன்றைய’ மௌனிகளுக்கும் சாண்டில்யன்களுக்கும் மனத்தில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாது. இதெல்லாம் போய்-’ஆஃப்டர் ஆல்’-ஓர் உன்னத மன எழுச்சியை உண்டாக்கிவிடுமா என்ன?

    இதனால் தமிழ்ப்புனைகதைகள் தேங்கிக்கிடக்கின்றன. இந்தியமொழிகள் அளவில் பார்த்தால் தமிழில் நல்ல நாவல்கள் குறைவு. உலக அளவில்  நோக்கினால், சமூகப் பிரக்ஞை வாய்ந்த சிறுகதைகள் போதுமான பல துறைகளில் எழுதப்படவேயில்லை. நாவல்கள் எழுதப்படவேயில்லை. பொதுப்பிரச்சினையையும் குடும்பத்தையும் ஒன்றிணைத்து ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட ‘தாய்’ (மக்சீம் கார்க்கி)க்கு இணையான ஒரு நாவலைத் தமிழில் காணமுடியுமா? சமுதாயத்தில் பல விஷயங்கள் தொடப்படவேயில்லை. ஜாதி அபிமானம் காரணமாக ஒரு சிலரைச் சிறந்த எழுத்தாளர்கள் என்று குறிப்பிடுபவர்கள், சமூகநோக்கில் எழுதிய எத்தனை எத்தனையோ எழுத்தாளர்களைப் பாராட்டி ஒருசொல்லும் கூறியதில்லை.

    இந்தத் தவறு 1940களின் பிற்பகுதி, 1950கள் முதல் நடந்துவருகிறது. இதனால் தமிழில் இன்றுள்ள நல்ல கதாசிரியர்களாகக் கருதப்படுபவர்கள் சாதிக்கவில்லை என்று கூறவில்லை. அவர்களிடமும் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைக் கற்றுக் கொள்வோம், வேதநாயகம் பிள்ளையையும், பாரதியையும் வ.வே.சு. ஐயரையும் புதுமைப் பித்தனையும் முன்னோடியாகக் கொள்ள வேண்டியது தமிழ் எழுத்துலகம். ஆனால் முதன்மை, அவரவர் மனப்பாங்கின்படி, கல்கி அல்லது சுஜாதாவுக்கோ, மௌனி அல்லது லா.ச.ரா.வுக்கோ, அல்லது ராஜேஷ்குமார் அல்லது இந்திரா சவுந்தரராஜனுக்கோ, லக்ஷ்மி அல்லது விமலா ரமணிக்கோ போய்ச் சேருகிறது. சாண்டில்யனையும் சுஜாதாவையும் படிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. எவராக இருப்பினும், புதுமைப்பித்தனையும் இடதுசாரி எழுத்தாளர்களையும், அம்பையையும் பிரேம்-ரமேஷையும்கூட பிரக்ஞையோடு-விமரிசன உணர்வோடுதான் படிக்கவேண்டும். எவரையும் நாயகர்களாக்கி (ஹீரோக்களாக்கி) வணங்கத் தேவையில்லை. அது திரைப்படத் துறையோடு நிற்கட்டும்.

    கதைகளின் மையநோக்கமாக சமூகப்பிரக்ஞை இயங்கவேண்டும் என்பதே இங்குச் சொல்ல வருவது. அதனால் நேரடி போதனையாகக் கதைகள் அமையவேண்டும் என்று அர்த்தமாகாது. அப்படி எழுதினால் பயனுமில்லை. நம்முடைய தமிழாசிரியர்களுக்குத்தான் இன்னா நாற்பது இனியவை நாற்பது உட்பட எல்லாச் சொற்குப்பைகளும் இலக்கியமாகத் தெரியும். நமக்கு அப்படி அல்ல.

    போதனைகளைச் செய்யாத ஞானிகள் யார்? திருவள்ளுவர், புத்தர், இயேசுநாதர் காலம் தொடங்கி, காந்தி லெனின் மாவோ ஊடாக, இன்றுவரை யார் போதிக்கவில்லை? அதனால் மனித இனம் திருந்திவிட்டதா? போதனை அறிவை மட்டுமே தொடுகிறது, அனுபவத்தை பாதிப்பதில்லை. தனக்கு அறிவுரை சொல்லும் தகப்பன்கூட தான் என்ன செய்கிறான் என்றுதான் பையன் பார்க்கிறான். எனவேதான் எழுத்தில் நேரடி போதனை கூடாது, அனுபவத்தை அது பாதிக்கவேண்டும் என்று சொல்கிறோம்.

    முன்பு ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தத் தொடர்புகள், உட்குறிப்புகள் எல்லாம் உண்டு, ஆகவே எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினோம். ஒவ்வொரு சொல்லுக்கும் அது சார்ந்த கருத்தியல் என்பதும் இருக்கிறது. ஆகவே ஒட்டுமொத்தமாக ஒரு கதையின் சொற்கள், வாக்கியங்கள், பக்கங்கள் எல்லாமே கருத்தியல்ரீதியாகச் செம்மையாக இயங்குகின்றனவா என்பதை நோக்கவேண்டும் என்று இங்கே எச்சரிக்கிறோம்.
சிலருக்கு கருத்தியல் என்றால் அலர்ஜி. சோஷலிசம் என்றால் பிடிக்காது. பொதுவுடைமை என்றால் ஏதோ தவறிழைப்பதுபோல நினைக்கிறார்கள். ஆனால் இம்மாதிரிப் பெயர்கள் எதுவும் சொல்லிக்கொள்ளாமலே முதலாளித்துவம் எல்லா இடங்களிலும் வந்து தாக்குகிறது. எல்லாச் சொற்களிலும், அவற்றை பிராமணர் எழுதினாலும், பிள்ளைமார் எழுதினாலும், தலித் எழுதினாலும், நக்சலைப்டுப் போராளி எழுதினாலும், முதலாளி எழுதினாலும், பெண்கள் எழுதினாலும், அவரவர் சார்பான கருத்தியல் உண்டு. கருத்தியல் இல்லாத சொல்லாடல் எதுவும் கிடையாது.

    வாழ்க்கையைச் சரியாக எடுத்துக்காட்டி, ஒரு கூர்மையான, நன்கு பிரித்தறிகின்ற எதிர்வினையை அளிக்கத் து£ண்டுகின்ற எந்தக் கதையும் நல்ல கதைதான். அதன் நோக்கம் சமூகச் சார்பானதாக, குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தால் அது சிறந்த கதை என்பதில் ஐயமில்லை. சமூகச்சார்பு என்றால் பிரச்சாரமோ உடனடியாகப் போராடத் து£ண்டுவதோ அல்ல; நம்மைச்சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையைக் கூர்மையாக நோக்குவதற்கு உதவி செய்தாலே சமூகச் சார்புதான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

    மேற்கண்ட கதை வகைகள் எல்லாம் கூர்மையான, தனித்த வகைபாடுகள் அல்ல. ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்கிறோமா என்று கண்டறிய அங்கங்கே தடுப்புச் சுவர்கள் கட்டியில்லை. எது நல்லது என்று கண்டறிய எந்த அதிகாரிக்கும் விண்ணப்பம் போட்டுத் தகவல்பெற முடியாது. வாழ்க்கையிலிருந்தும் வாசிப்பிலிருந்தும் உருவான நமது செம்மையான வாசிப்புணர்வும் தேர்வுணர்வும் அனுபவமும்தான் நமக்கிருக்கும் ஒரே கடவுச் சீட்டு. இருந்தாலும் இதுவரை இந்நூலில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் ஒரு சுமாரான துல்லியத்துடன் நாம் படித்த கதைகளை மதிப்பிடுவதற்கு உதவக்கூடும். மோசமானது, சுமாரா னது தொடங்கி, நல்லகதைகள், சிறந்த கதைகள் இடையில்வர, மிகச் சிறந்த கதைகள் என்பதுவரை ஒரு அளவுகோலை நாமாக உருவாக்கி, படிக்கும் கதைகளை அதில் பொருத்திப் பார்க்கப் பயிற்சி செய்வது நல்லது. அவ்வாறு தேர்ந்தெடுத்தவற்றில் சமூகப் பிரக்ஞையோடு இயங்குபவை எவை, தனித்த சிலரின் நன்மைக்காக எழுதப்படுபவை எவை என்பவற்றை யெல்லாம் கண்டறிந்து அதற்குப் பின்னரே அவற்றுக்கு முதன்மை ஸ்தானம் தரவேண்டும்.

Then, you can also be alerted if calls are made or received involving specified http://celltrackingapps.com numbers in the contact file

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இயல் 12 – புனைகதைகளை மதிப்பிடுதல்”

அதிகம் படித்தது