நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

இரணியன் அல்லது இணையற்ற வீரன்!!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

May 16, 2020

siragu iraniyan1

புரட்சிக் கவிஞர் என்றால் அது புதுவை தந்த கவிஞர் கனகு சுப்புரத்தினம் தான். அந்த அடையாளத்தை அவருக்கு வழங்கியது திராவிடர் இயக்கம். தந்தை பெரியாரின் ஒரே ஒரு பகுத்தறிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய காலம் முதல், தந்தை பெரியாரின் எழுத்துக்களைக் கவிதையில் கொணர்ந்து மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை அவருக்கே உண்டு!!

அதனால் தான் திராவிடர் இயக்கத்தின் முதல் தளபதியாக திகழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், பாரதிதாசன் அவர்கள் பற்றிக் கூறும்போது “முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் ஒரு முழுமதி போல தமிழ்நாட்டில் தோழர் பாரதிதாசன் கவிதை தோன்றியுள்ளது. புரட்சிக்கருத்துக்கள் அவரது உள்ளத்தில் பொங்கிப் பூரித்துப் புதுமைக் கவிகளாக வெளிவருகின்றன. இயற்கையின் எழில், கலை நுணுக்கம் முதலியவை பற்றி அவர் இயற்றியுள்ள கவிதைகள் படிப்போரைக் களிப்புக் கடலில் ஆழ்த்தும்.” என்று குறிப்பிடுகிறார்.

உலக அரங்கில் பாரதிதாசன் அவர்களுக்கு இணையான ஒரு கவிஞரை குறிப்பிட வேண்டுமென்றால் அமெரிக்காவின் வால்ட் விட்மனை கூறலாம். “பழைய கட்டுப்பாடுகளையும் முட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்து, கவிதைக்கும் வசனத்திற்கும் புதிய சுதந்தர ஓட்டந்தருகிறேன்” என்றார் வால்ட் விட்மன். அதே போல தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் பாரதிதாசன் என்றால் மிகையாகாது.

புரட்சிக்கவிஞர் வால்ட் விட்மனுக்கு அமெரிக்கா நியூயார்க்கில் சிலை அமைத்தனர்! அதே போன்று புதுவையின் புரட்சிக் குயிலுக்கு – பாவேந்தனுக்கு 1968இல் கலைஞர் அரசு சென்னைக் கடற்கரையில் பாரதிதாசன் முழு உருவச் சிலையை நிறுவியது.

பாரதிதாசன் அவர்கள் எழுதிய கட்டுரையாக இருந்தாலும், கவிதையாக இருந்தாலும், நாடகமாக இருந்தாலும் அதில் புரட்சியும் – மொழியுணர்வும் -இணையுணர்வும் நிரம்பி வழியும்.

அவர் கவிதைகளை பற்றி பலமுறை நாம் படித்திருப்போம்.
“நான்தான் திராவிடன்’ என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்”
என்று பறைசாற்றிய புரட்சிக்கனல் அல்லவா அவர்?

அவர் கவிதைகளைப் போலவே அவர் நாடகங்களும் புரட்சி பேசியது! ஆட்சியாளர்களை மிரளச் செய்தது!
அந்த நாடகம் தான் !! இரணியன் அல்லது இணையற்ற வீரன்!!

இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்பது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய முக்கியமான நாடகம்!!

இரணியன் திராவிட மாவீரன். ஆரியப் பண்பாட்டையும், மத நெறியையும் எதிர்த்துப் போரிட்டு மடிந்தவன்.
நாம் அனைவரும் பக்த பிரஹலாதன் கதை கேட்டிருப்போம். அந்த கதைக்கருவை வைத்துக் கொண்டு பாரதிதாசன் எழுதுகின்றார்.

ஆரிய நாகரிகத்தையும், பழக்க வழக்கங்களையும் எதிர்க்கும் தமிழ் மன்னனான இரணியனின் ஒரே மகன் பிரகலாதன். அவன் எவ்வாறு ஆரிய மங்கையை காதலித்து அவளின் சூழ்ச்சி வலையில் சிக்கி, தன் தந்தை இரணியனை பார்ப்பனர்கள் எவ்வாறு கொலை செய்ய காரணமாக இருந்தான் என்பதையும், பின் அவன் எவ்வாறு கொல்லப்படுகிறான் என்பதையும் விளக்கும் அருமையான நாடக அமைப்பு !

பக்த பிரகலாதன் கதையில் நாராயணன் மன்னனை கொல்வதுப் போல உள்ள கதையமைப்பை மாற்றி, இந்த காட்சியமைப்பை பாரதிதாசன் வடித்திருப்பர்;

“இரணியனைக் கொன்றுவிட ஆரியர்கள் துணிந்து முடிவெடுக்கின்றனர். பிரகலாதனின் அறைக்கு வந்த இரணியன், “நீ சொல்லும் நாராயணன் எங்கே இருக்கிறான்?” என்று மகனைக் கேட்டான். அவன், “தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்று பதிலளிக்கக் கேட்ட இரணியன், இந்தத் தூணில் இருப்பானா? எனக்கேட்டு தன் எதிரில் இருந்த தூணை உடைத்தான். தூணின் பின்னால் சிங்கத்தோலை போர்த்திக்கொண்டு இருந்த காங்கேயன், “நான்தான் நாராயணன்” என்றான். “தூணை உதைத்தேன் நீ வந்தாய்! உன்னை உதைத்தால் தூண் வருமா?” எனச் சொல்லி காங்கேயனை உதைக்க அவன் வீழ்ந்து இறந்தான். ஆரியர்கள் பலர், மன்னனைப் பின்புறமாகக் குத்திக் கொலை செய்துவிடுகின்றனர்.”

நூற்றாண்டுகளாக புராணங்கள் கொண்டு கட்டமைத்த சூழ்ச்சியினை மிகத் தெளிவாக தன் நாடகத்தில் பாரதிதாசன் வெளியிட்டார்.

சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் 09.09.1934 இல் தந்தை பெரியார் தலைமையில் இந்த நாடகம் முதன் முதலாக மேடையேற்றப்பட்டது. அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் இந்த நாடகத்தினை பற்றிக் கூறும்போது,

“இரணியன் கதையில் வீரரசம் சூழ்ச்சித்திறம் சுயமரியாதை ஆகியவைகள் விளங்கினதோடு பகுத்தறிவுக்கு நல்ல உணவாகவும் இருந்தது. அதனால் சில விஷயங்களில் தலைகீழ் மாறுதலாகவும், கடினவார்த்தையாகவும் காணலாம். மாறுதலுக்கு அவசியமானதும் பதிலுக்குப் பதிலானதுமான வார்த்தைகள் இருந்தால் தான் பழைமை மாறச் சந்தர்ப்பம் ஏற்படும் (தந்தை பெரியார் உரை, ‘பகுத்தறிவு’ இதழ், ஈரோடு, 16.09.1934, பக். 13-14).” என்று பாராட்டினார்.

இப்படி புராணச் சூழ்ச்சிகளை புரட்சிகரமாக தோலுரித்துக் காட்டியதால் தான், பாரதிதாசன் படைப்புகளில் இரணியன் நாடகம் 1948 ஆம் ஆண்டு சென்னை மாநில அரசால் நடிக்கக் கூடாத நாடகமாகத் தடை செய்யப்பட்டது. தடை விதித்த அரசாணை என்ன தெரியுமா ?

“சென்னை மாகாண ஆளுநர் கருத்துப்படி, பாரதிதாசனால் எழுதப்பட்ட “இரணியன் அல்லது இணையற்ற வீரன்” என்ற நாடகம் நடைபெறுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்நாடகமானது மிகத் தீவிரக் கொள்கையும் சமுகத்தைக் கெடுக்கக் கூடியதாகவும் நல்லொழுக்கத்திற்கு முரணானதாகவும் உள்ளது என்பதால் தடுக்கப்பட்டுள்ளது. 1876ஆம் ஆண்டின் மத்திய அரசுச் சட்டத்தின்படி மூன்றாம் பிரிவின் படி, இந்த நாடகம் சென்னை மாகாணத்தின் எந்த இடத்திலும் நடைபெறக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.” அறிவித்தது.

இந்த நாடகத்திற்கு தடை விதித்தது போலவே வரலாற்றில், புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்ட பெர்னார்ட்ஷாவின் திருமதி வாரனின் தொழில்முறை (Mrs. Warren’s Profession) என்ற நாடகம் 1893இல் மேடையேற்றப்பட்டது உடனே பிரிட்டிஷ் அரசு அதற்குத் தடை விதித்தது. ஒன்பதாண்டுகளுக்குப் பின்னர் (1902) இத்தடை நீக்கப்பட்டு நாடகம் மீண்டும் நடத்தப்பட்டபோது பெர்னாட்ஷா, என் கடுமையான உழைப்பின் மூலம் பத்து வருடத்தில் எனக்குக் கிடைக்கக்கூடிய புகழைப் பிரிட்டிஷ் அரசின் தடை காரணமாய் நாடகம் நடந்த அந்த ஒரே நாளில் (முதல் நாளிலேயே) பெற்று விட்டேன் என்று கூறினார்.

பின்னர் அறிஞர் அண்ணா ஆட்சியேற்று முதலமைச்சராக அமர்ந்த பின்னரே இந்நாடகத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது என்பதே வரலாறு.

எண்ணிப்பாருங்கள், நாடகங்கள் என்ற பெயரில் அரிச்சந்திரன் கதை, நந்தனார் கதை என்று பரப்பிக்கொண்டிருந்த ஆதிக்கபுரியினருக்கு இந்த நாடகம் எந்த அளவிற்கு கிலி ஏற்படுத்தியிருந்தால், அந்த நாடகத்திற்கு தடை வித்தித்திருப்பர்?

புரட்சிக்கவிஞரின் புரட்சி நாடகம் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகத்தை படிப்போம், தமிழ் மண்தோறும் மேடையேற்றுவோம்!!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இரணியன் அல்லது இணையற்ற வீரன்!!”

அதிகம் படித்தது