ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

இரண்டாம் உலகம்.., இந்தியாவிற்கு ஒரு வேண்டுகோள் (கவிதைகள்)

தொகுப்பு

Oct 3, 2015

இரண்டாம் உலகம்..

எழுதியவர்: செல்வக்குமார் சங்கரநாராயணன்

irandaam ulagam1

கழனி செழிக்கக் கண்டேன்
கட்டிட மரங்கள் உயர்வால்!
ஆறு நிறையக் கண்டேன்
அள்ளிய மண் சுவடால்!
மேகம் நிறையக் கண்டேன்
நச்சுப் புகை கலப்பால்!
புவி புதையக் கண்டேன்
நெகிழி பல புதைப்பால்!
உயிர்நாடி எல்லாம் கெடுத்தே
உயிர்வாழ மூச்சிறைக்கக் கண்டேன்!
செய்த பாவமெலாம் துரத்த
ஓடினேன் கால் கடுக்க- வாழ
இரண்டாம் உலகம் தேடி..

 

இந்தியாவிற்கு ஒரு வேண்டுகோள்

எழுதியவர்: சித்திரசேனன்

india1

இந்திய நாடு என்றொரு நாடு – இதில்

இருக்கிறது நம் தமிழ்நாடு

 

இந்தியா செய்யும் பெருங்கேடு – இதில்

இன்னல் கண்டது நம் தமிழ்நாடு

இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்

 

தமிழக வரிப்பணத்தை வாரி சுருட்டிக்கொள்ளும் – ஆனால்

தமிழகம் செழிக்க பணம் கொடுக்காது கொல்லும்

 

அத்தியாவசியப் பொருட்களை அண்டை மாநிலத்திற்கு அள்ளிக்கொடுக்கம்

ஐயோ இல்லையே என்றால் நமக்கு மட்டும் கிள்ளிக் கொடுக்கும்

இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்.

 

காவிரி நீரை விடச்சொல்லி கேட்டால் கண்டு கொள்ளாது

காய்கறி விலை உயர்வைக் குறைக்க நா எழாது

 

ஈழத்தமிழரைக் கொல்லச் சொல்லி ஆயுதம் கொடுக்கும் – அதற்கு

இந்தத் தமிழன் போராடினால் பிடித்து உயிரை எடுக்கும்

 

பஞ்சாப் சிங்கிற்கு டர்பன் பிரச்சனை என்றால் ஓடும்

பஞ்சத்தில் உழலும் தமிழர் பிரச்சனைக்கு காதை மூடும்

இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்

 

சிங்களவன் தமிழ் மீனவனைச் சுட்டால் உடன்படிக்கை

இத்தாலியன் கேரள மீனவனைச் சுட்டால் நடவடிக்கை

 

இலங்கை, எங்கள் எதிரி என தமிழர்கள் குரல் ஒலிக்கும் – இதை

இறுக்கமாய் காதை மூடிக்கொண்டு இலங்கையோடு கை குலுக்கும்

 

வடமாநிலத்தான் தடுக்கி விழுந்தால் பதறும் பாராளுமன்றம் – தென்

தமிழகத்தான் மருந்தைக் குடித்தால் பதிலே வராது என்றும்

இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்

 

டெல்லியின் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் ஓவென ஓலமிடும்

தமிழகத்தில் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டால் ம்… என உதடுமூடும்

 

வட இந்தியாவில் அணுஉலை தொடங்க அய்யோவென யோசிக்கும்

தமிழகத்தில் அணுஉலை தொடங்கி ஆகா, ஓகோ-வென பேசிக்கும்

 

இந்தியை எல்லோரும் படிக்க தன் குரலை உயர்த்தும்

இத்தமிழை செம்மொழியாக்கு என்றால் தன் குரலை தாழ்த்தும்

இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்

 

உயிர் பலிவாங்கும் எத்திட்டம் தொடங்கவும் உடனே தமிழ்நாடு என கை காட்டும் – பல

உயிர் பலியாகி உருத்தெரியாமல் கிடந்தாலும் ‘உச்’ கூட கொட்டாது எந்த கை நாட்டும்

 

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என முழங்கும் – பொருள்

இல்லாதவன் வறுமைக் கோட்டை அழிக்கத் தயங்கும்

 

வரி ஏய்ப்பவனை வணங்கி வாசல் தாண்டி அழைத்துச் செல்லும் – தரிசு

விரிசல் விழுந்தவனை வாசலில் நிறுத்தி குரைத்துக் கொல்லும்

இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்

 

இது ஜனநாயக நாடு என எல்லோரிடமும் பீத்திக்கொள்ளும்

இங்கே பண நாயகம் பேசி பாரையே குடித்து சுதி ஏத்திக் கொள்ளும்

 

ஊழல் எனும் ஊன்றுகோல் கொண்டு முன்னாடி நடக்கும் – இவன்

ஊழல் வாதி எனத் தெரிந்தாலும் உலகறியாமல் உண்மையை மூடி மறைக்கும்

 

கார்ப்பரேட் நிறுவனங்களோடு தாராளமயக் கொள்கையை ஏராளமாக்கும்

கஞ்சிக்கு வழியில்லாதவர்களுக்கு கடமைக்கு சில திட்டம் போட்டு கடமை முடிக்கும்

இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்

 

“எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்”- என எட்டுக்கடையில் பேசும் – இதே

எதிர்காலங்கள் தேர்தலுக்கு வந்தால் எதற்கு வந்தீர்கள்? என ஏசும்

 

பகவத்கீதை தேசிய நூல் என எல்லோரும் அறிய அறிவிக்கும் – ஆனால்

பாரத ஜனநாயக கொள்கையை கூண்டில் ஏற்றி காற்றில் பொறிவிக்கும்

 

கறுப்பு பணத்தை கல்லிக்காசு குறையாமல் மீட்டெடுக்க சபதமிடும் – ஆட்சிக்

கட்டிலில் அமர்ந்த அயர்வால் கூறிய வாக்கை மறந்து தூங்கிவிடும்

இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்

 

பிற நாட்டில் தடை செய்யப்பட்ட பொருள் தாம்பூலம் வைத்து அழைக்கும் – இந்த

பிற்போக்குத் தனத்தால் பிஞ்சுக் குழந்தைக்கும் நஞ்சு வைக்க உழைக்கும்

 

அயல்நாட்டு கழிவுப் பொருட்களை இங்கே கொட்டிச் செல்ல அனுமதிக்கும் – இது

ஆகாது என சமூக ஆர்வலர்களின் ஆர்ப்பாட்டம் கண்டு முனுமுனுக்கும்

 

அண்டை நாட்டான் நம்மீது சண்டையிட்டாலும் சமாதானம் பேசி நிற்கும் – இது

அகிம்சை வழியா இல்லை அடிபணியும் வழியா என சந்தேகப்பட வைக்கும்

இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்.

 

நிலவில் நீர் இருக்கிறதா என அறிய, கோடி ரூபாயை கொட்டி எரிக்கும் – பக்கத்து

தெருவில் நீர்வராத நிலைக்கு நிரந்தர தீர்வு காணாமல் வெட்டி முறிக்கும்

 

படிக்கவை படிக்கவை என பாரத கீதம் தீரமுடன் ஒலிக்கும் – இங்கு

படித்து இருந்தால் வேலை தர மட்டும் பக் பக்கென்று விழிக்கும்

 

நன்கு படித்தவர்களையும் வேலை கொடுக்காது, பிற நாடுகளுக்கு நாடு கடத்தும் – அந்த

நன்றி மறவா இந்தியனைப் பார்த்து ஏன் நாட்டை விட்டுச் சென்றீர் என கேட்டுத்தொலைக்கும்

இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்.

 

நாட்டுப் பிரச்சனையைப் பேசாமல் நாடாளுமன்றத்தை முடக்கிப் பார்க்கும் – நம்

நாட்டு மக்களின் வரிப்பணம் நாசமாய் போவதறியாமல் நாட்களைக் கடத்தும்

 

சட்டத்தின் கதவுகளை பணமென்ற சாவி கொண்டு சாதாரணமாய் திறக்கும் – ஆனால்

சமூகப் பிரச்சனை என்றால், வழக்கம் போல அறிக்கை விட்டு அந்நாளை முடிக்கும்

 

இந்திய அரசே! எதிர்காலம் நலம் பேண எச்சரிக்கையாய் ஒரு முடிவெடு – முன்னோர்

சிந்திய ரத்தம் வீணாகும் முன்னே நன்கு சிந்தித்து ஒரு விடைகொடு

 

இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்.

இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்.


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இரண்டாம் உலகம்.., இந்தியாவிற்கு ஒரு வேண்டுகோள் (கவிதைகள்)”

அதிகம் படித்தது