செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

இரத்த வகைகளுக்கும் மூளையின் செயல்திறனுக்கும் உள்ள தொடர்பு

தேமொழி

Jun 13, 2015

blood types1நம் அனைவருக்கும் இரத்தம் பார்ப்பதற்கு ஒரே மாதிரி சிவப்பு நிறமாக இருந்தாலும், அதில் ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ என்ற நான்கு வகைகள் உண்டு என்பதும், ஒவ்வொருவரின் இரத்தமும் இதில் ஏதோ ஒரு வகையானது என்பதும் பள்ளி நாட்களிலேயே நாம் அறிந்ததுதான். இந்த இரத்த வகைகளுக்கும் மூளையின் செயல் திறனுக்கும் தொடர்பு உள்ளது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. நமது மூளையின் வளர்ச்சியிலும், வயது ஏற ஏற முதிர்ச்சியடையும் நிலையிலும், மூளையின் வளர்சிதை மாற்றங்களிலும் இரத்தம் வகிக்கும் பங்கு தற்பொழுது அறியப்பட்டுள்ளது. குறிப்பாக ‘O’ வகைப் பிரிவு இரத்தம் உள்ள மக்களுக்கு, மற்ற இரத்த வகை மக்களைவிட மூளையில் சாம்பல் நிறப் பொருள் (grey matter) அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதிக அளவு சாம்பல் நிறப்பொருள் இருப்பது அறிவாற்றலுக்கும், நினைவாற்றலுக்கும் (cognitive/thinking and memory) உதவும்.

Blood cells in the brain flowing through veinsவயதாகும் பொழுது மூளை பலமாறுதல்களுக்கு உள்ளாகிறது. மூளையின் அளவு சுருங்கத் தொடங்குதல், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவுவிலும் மாறுதல் எனப் பலவகை மாறுதல்களுக்கு மூளை உள்ளாகிறது. அது போலவே வயதாகி மூளை முதிர்ச்சி அடையும் பொழுது மூளையின் சாம்பல் நிறப்பொருளின் அளவு குறைந்து மூளையின் அமைப்பில் மாறுதல் நிகழும். சாம்பல் நிறப் பொருள் நரம்புச் செல்களால் ஆனது. குறிப்பாக மூளையின் நரம்பு செல்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன, இவற்றின் அளவிலும் எண்ணிக்கையிலும் ஏற்படும் வயதிற்கேற்ற மாற்றங்கள் அறிவுத்திறனையும் நினைவுத்திறனையும் பாதிக்கிறது.

blood types3இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ‘ஆனலீனா வேனெறி’ (Professor Annalena Venneri of University of Sheffield, UK) அவர்களும், அவரது ஆய்வுக் குழுவினரும் இரத்தவகைகள் நமது மூளை மற்றும் நரம்புமண்டல வளர்ச்சியில் பங்கேற்பதையும், ‘O’ இரத்த வகையினரைத் தவிர பிற இரத்தவகையினரின் மூளையில் சாம்பல் நிறப்பொருளுக்கும் உள்ள தொடர்பையும் அறிய ஆய்வுகள் மேற்கொண்டனர்[1]. நல்ல உடல்நிலையில் உள்ள 189 பேரின் மூளையின் ‘காந்த அதிர்வலை வரைபடங்கள்’ (Magnetic Resonance Imaging scans – MRI scan) சேகரிக்கப்பட்டு ‘O’ இரத்தப்பிரிவு உள்ளவர், ‘O’ இரத்தப் பிரிவு இல்லாத பிறர் என்ற இரு குழுவினரின் மூளை படங்களில் ஓர் ஒப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. ‘O’ இரத்த வகைத் தவிர்த்த மற்றவர்களுக்கு, மூளையின் டெம்ப்போரல் மற்றும் லிம்பிக் (temporal and limbic regions of the brain)பகுதிகளிலும், சிறுமூளையின் பின்புறப்பகுதியிலும் (the posterior proportion of the cerebellum) சாம்பல் நிறப் பொருளின் அளவு குறைவாக இருப்பதை ‘காந்த அதிர்வலை வரைபடங்கள் தற்பொழுது காட்டியுள்ளன. மூளையின் இப்பகுதிகள், நீண்ட நாள் நினைவுகளைச் சேமிக்கும் பகுதிகளாகும். சுருக்கமாக, அல்சைமர் மறதி நோயால் (Alzheimer’s disease) மூளையின் எப்பகுதி பாதிப்படையுமோ அப்பகுதிகளில் ‘O’ இரத்தப் பிரிவு இல்லாதவர்களுக்கு மூளையில் சாம்பல் நிறப் பொருள் அளவு குறைவாக இருப்பது தெரிய வந்தது.

blood types2மூளையின் மேற்பரப்பில் இருக்கும் சாம்பல் நிறப் பொருள் அறிவாற்றலுக்கும் நினைவாற்றலுக்கும் உதவுவதால் ‘O’ இரத்த வகையினரைத் தவிர பிற இரத்தவகையினரின் அறிவாற்றலிலும் நினைவாற்றலிலும் வயதான காலத்தில் குறைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று ஆனலீனா வேனெறி குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வின் மூலம் இரத்த வகைகளுக்கும் மூளையின் அமைப்புக்கும் உள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முதல்கட்ட ஆய்வினைத் தொடர்ந்து, எவ்வாறு செயல்முறையில் மூளையின் வளர்ச்சியில் இரத்த வகைகள் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என அறிய அடுத்த கட்ட ஆய்வுகளைத் தொடர்வது தேவை என இந்த ஆய்வாளரும் இவரது ஆய்வுக் குழுவினரும் அறிவித்துள்ளார்கள்.

blood types6இரத்தவகை நினைவாற்றலைப் பாதிக்கிறது என்பதை முன்னரும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. மொத்த மக்கட்தொகையில் ஏறக்குறைய 4 விழுக்காட்டினர் AB இரத்த வகைப் பிரிவினர். வயதான பிறகு AB இரத்த வகைப் பிரிவினரில் 82 விழுக்காட்டினர் பழைய தகவல்களையும் நிகழ்வுகளையும் நினைவுகூர்வதில் பாதிப்பு அடைகிறார்கள். AB இரத்த வகை மக்களுக்கு வயதான பின்னர் ‘அல்சைமர் மறதி நோய்’ வர அதிகம் வரவும் வாய்ப்புள்ளது என்றும் கண்டறியப்பட்டது. இவ்வாறு AB இரத்த வகைப் பிரிவினரின் மூளையில் ஏற்படும் மாற்றத்திற்கு ‘ஃபேக்டர் 8′ என்ற இரத்தத்தை உறையவைக்கும் ஒரு முக்கியமான புரதத்தின் (factor 8 — a protein that helps blood to clot) அளவு இரத்தத்தில் சராசரி அளவிற்கும் அதிகமாக இருப்பதே காரணம் என்றும், அது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இரத்தத்தில் உள்ள ‘ஃபேக்டர் 8′ ன் அளவிற்கும் இரத்த வகைகளுக்கும் உள்ள தொடர்பும்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது போல ‘ஃபேக்டர் 8′ ன் அளவிற்கும் மறதி நோய்க்கும் உள்ள தொடர்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

blood types5வயதானால் ‘O’ இரத்த வகையினரைத் தவிர பிறரின் அறிவாற்றலும் நினைவாற்றலும் குறைய வாய்ப்புகள் அதிகம் என்பதை இந்த இரு ஆய்வுகளின் முடிவுகளும் அறிவித்துள்ளது. சரியான உணவு முறையைக் கடைப்பிடிப்பதாலும், மன அமைதிக்காக தியானத்தில் ஈடுபடுவதாலும், மூளைக்குத் தொடர்ந்து சிந்தனைப் பயிற்சி கொடுப்பதாலும் மூளையில் சாம்பல் நிறப் பொருள் அளவு குறைவைத் தாமதப்படுத்தி நினைவாற்றலைத் தக்க வைக்கவும் வாய்ப்புள்ளதுஎன மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள். மூளையின் செயல்திறனைப் பாதிக்கும் மற்ற பிற காணிகள் மரபணுக்கள், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அதிக உடல் எடை, புகை பிடிக்கும் பழக்கம் போன்றவையும் ஆகும். இவை யாவையுமே மூளையின் அளவு குறைவதற்கு காரணங்கள் என்றும் ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் தகவலுக்கு:

[1]‘O’ blood type is associated with larger grey-matter volumes in the cerebellum,” Brain Research Bulletin, Volume 116, July 2015, Pages 1-6, ISSN 0361-9230, dx.doi.org/10.1016/j.brainresbull.2015.05.005

[2] Alexander K, Cushman M, Gillett S et al. ABO blood type, factor VIII, and incident cognitive impairment in the REGARDS cohort. Neurology. 2014.

[3] Cherbuin N, Kurth F, and Luders E. Forever Young(er): potential age-defying effects of long-term meditation on gray matter atrophy. Frontiers in Psychology. 2015.

It’s in your blood: Links found between blood type and risk of cognitive decline

http://www.sheffield.ac.uk/news/nr/blood-type-cognitive-disease-1.469296

Blood Type And Brain Health: Type O Protects Against Cognitive Decline Via Gray Matter, By Lizette Borreli, Jun 9, 2015, Medical Daily.

http://www.medicaldaily.com/blood-type-and-brain-health-type-o-protects-against-cognitive-decline-gray-matter-337216


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இரத்த வகைகளுக்கும் மூளையின் செயல்திறனுக்கும் உள்ள தொடர்பு”

அதிகம் படித்தது