மே 8, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

இராமநாதபுரம் மாவட்ட இலக்கிய ஆளுமைகள்

முனைவர் மு.பழனியப்பன்

May 9, 2020

siragu ramanathapuram1

இராமநாதபுர மாவட்டம் தென்தமிழகத்தில் அமைந்துள்ள கடற்கரை சார்ந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் கிழக்கே பாக் ஜல சந்தியும்.   (பாக் நீரிணையம்), வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், மேற்கில் மதுரை மாவட்டமும், தென் மேற்கில் தூத்துக்குடி மாவட்டமும் அமைந்துள்ளன.

பாண்டிய மன்னர்களாலும், நாயக்கர்களாலும், சேதுபதி மன்னர்களாலும் ஆண்டு வரப்பட்ட இப்பகுதி ஆங்கிலேயர் காலத்தில் அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பத்தாம் ஆண்டில் மதுரை, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் சிலவற்றை இணைத்து உருவாக்கப்பெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் திரு. ஜெ. எப். பிரையண்ட் என்பவராவர். ஆங்கிலேயர் காலத்தில் இம்மாவட்டம் ‘‘ராம் நாடு” என்று அழைக்கப்பெற்றது. விடுதலைக்குப் பின்பு இராமநாதபுர மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இராமயாண காலம் தொட்டு இராமநாதபுரம் பதிவு செய்யப்பெற்று வந்துள்ளது. இதன் காரணமாக இம்மாவட்டம் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த்து என்பது தெளிவு. இராமபிரான் குரங்குக் கூட்டங்களை வைத்து பாலம் அமைத்து இலங்கை சென்ற நிலையில் கட்டப் பெற்ற சேது பாலம் இன்னமும் தொன்ப நிலையிலும், இயற்கை நிலையிலும் பெருவியப்பிற்கு உள்ளாக்குகிறது. இவ்வகையில் இராமாயணக் காலம் தொட்டு இராமநாதபுரம் குறிப்பிடத்தகுந்த மாவட்டமாக அமைந்திருந்த்து என்பது கருத்த்த்தக்கது.

இம்மாவட்டம் அதிக அளவிலான பரப்பினை உடையதாக்க் கருதப்பட்டதால் 15.03.1985 ஆம் நாளன்று, இராமநாதபுரம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை மற்றும் இளையான்குடி வட்டங்கள் கொண்ட சிவகங்கை மாவட்டம், திருவில்லிபுத்தூர், விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் இராஜபாளையம் வட்டங்கள் உள்ளடக்கிய விருதுநகர் மாவட்டம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம், ராமேஸ்வரம் வட்டங்கள் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம் என்ற நிலையில் இந்த மாவட்டம் நிர்வாகச் சீர்மை கருதிப் பிரிக்கப்பெற்றது.

இம்மாவட்டத்தில் தற்போது இரு வருவாய்க் கோட்டங்களாகப் பிரிக்கப்பெற்றுள்ளது. அவை 1. இராமநாதபுரம் வருவாய்க் கோட்டம், பரமக்குடி வருவாய்க் கோட்டம் என்பனவாகும்.

இவ்விரு கோட்டங்களில் ஐந்து, ஐந்து வருவாய் வட்டங்கள் உள்ளன. இராமநாதபுரம் வட்டம், இராமேஸ்வரம் வட்டம், திருவாடானை வட்டம், இராஜசிங்கமங்கலம் வட்டம், கீழக்கரை வட்டம் என்பன இணைந்த இராமநாதபுர கோட்டம், பரமக்குடி வட்டம், கடலாடி வட்டம், கமுதி வட்டம், முதுகுளத்தூர் வட்டம், போகலூர் வட்டம் ஆகியன இணைந்து பரமக்குடி கோட்டம் என்பன அவ்வட்டங்கள் ஆகும்.

இங்கு இந்துக்கள், இசுலாமியர்கள், கிறிஸ்துவர்கள் போன்ற சமயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

இம்மாவட்டம் பல தீவுகளைக் கொண்டுள்ளது. பாம்பன் தீவு, அப்பா தீவு, குருசடை தீவு, முயல் தீவு, முளித் தீவு, தலையாரித் தீவு, புள்ளிவாசல் தீவு, உப்புத்தண்ணித் தீவு போன்ற தீவுகள் அடங்கியுள்ளன. மேலும் இம்மாவட்டம் பல ஆலயங்கள்ளைக் கொண்டு விளங்குகிறது.

இராமேஸ்வரம் இராமநாத சுவாமிய கோயில், உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமிகோயில், பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில், பரமக்குடி முத்தாலம்மன் கோயில், பரமக்குடி மீனாட்சி அம்மன் கோவில், வரதரராஜ பெருமாள் கோவில் (எமனேஸ்வரம், பரமக்குடி), திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில், திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில், நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில், தேவிபட்டினம் நவபாஷனம், உப்பூர் வெயிலுகுகந்த விநாயகர் திருக்கோவில், பெருவயல் ரணபலி முருகன் கோயில், இராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில் மற்றும் குமரைய்யாகோவில், குண்டுக்கரை முருகன் கோயில், இராமநாதபுரம் கூரிச்சாத்தா அய்யனார் திருக்கோவில், கீழக்கரை மீனாட்சி அம்மன்கோயில், ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோவில்போன்றன இந்துக்கள் வழிபடும் கோயில்களாகும்.

கிறிஸ்துவர்களுக்கு உரிய வழிபாட்டு இடமாக ஓரியூர்அருளானந்தர் சர்ச்சும், இசுலாமியர்களுக்கு உரிய வழிபாட்டுத் தலமாக ஏர்வாடி தர்ஹாவும் புகழ் பெற்றனவாகும்.

இம்மாவட்டத்தில் பல சுற்றுலா தலங்களும் உள்ளன. சோகம் ததும்பும் தனுஷ்கோடி, பாம்பன் பாலம், இராமநாதபுரம் அரண்மனை, காரங்காடு சூழல் சுற்றுலா மையம், குருசடை தீவு சுற்றுலா, பாம்பன் குந்துக்கால் மண்டபம், வாலிநோக்கம் கடற்கரை, அரியமான் கடற்கரை, கமுதி கோட்டைமேடுபோன்றன இம்மாவட்டத்தின் சுற்றுலா இருப்பிடங்களாக விளங்குகின்றன.

இவ்வாறு அடிப்படைக் கட்டமைப்புகளுடன் அமைந்துள்ள இம்மாவட்டம் பல்வேறு அறிஞர்கள், கவிஞர்கள், புலவர்கள், பிறப்பிடமாகவும், பல்வேறு கலைஞர்கள் கூடும் இடமாகவும் விளங்கியது. விளங்கி வருகிறது. இம்மாவட்டத்தின் தனிச் சிறப்பு தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள் இப்பகுதி சார்ந்து பல படைப்புகளை படைத்தளித்து இருப்பதுதான்.

சங்க காலம் முதல் இக்காலம் வரை இராமநாதபுர மாவட்டத்தின் பல பகுதிகள் சார்ந்த படைப்பாளர்கள் தம் படைப்புகளைப் படைத்தளித்து வருகின்றனர். அவர்களின் படைப்புகளைக் காணுகையில் அவை சிறந்த ஆவணங்களாகாவும், இராமநாதபுர மாவட்ட பண்பாட்டை உரைப்பனவாகவும் விளங்குகின்றன.

சங்க காலத்தில் இராமநாத புர மாவட்ட இலக்கிய ஆளுமைகள்

siragu thirukkural2

சங்க காலத்தில் வாழ்ந்த புலவரான பிசிராந்தையார் என்ற புலவர் இராமநாதபுர மாவட்டம், பிசிர் குடி (முதுகுளத்தூர் வட்டம் பொசுக்குடி) என்ற ஊரைச் சார்ந்தவர் என்பது முடிந்த முடிபாகும். இவர் கோப்பெருஞ்சோழனுடன் நட்பு கொண்டவர். அவனுடன் வடக்கிருக்கச் சென்றவர்.

யாண்டு பலவாக நரையில வாகுதல்

யாங்கா கியரென வினவுதிராயின்

மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

யான்கண் டனையர் என் இளையர் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும் அதனதலை

ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்

பலர் யான் வாழும் ஊரே

என்ற பாடலில் தன் பிசிர்குடியின் சிறப்பினை எடுத்துரைத்துத் தான் நரையில்லாமல் வாழ்வதற்கான காரணம் கவலையின்மையே என்கிறார். பல நூறு மைல்கள் கடந்து சோழ நாட்டில் உள்ள கோப்பெருஞ்சோழனைக் காணாமல் கண்டு தன் பெயர் கேட்டார் அவன் பெயர் சொல்லும் தன்மை பெற்ற சங்க இலக்கிய ஆளுமை சார்ந்த புலவர் இவர்.

இவர் இருக்கும் ஊர் பற்றிக் கோப்பெருஞ்சோழன் பின்வருமாறு தன் பாடலில் பதிவு செய்கிறான்.

‘‘கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்

தாதொரு மறுகின் போதொடு பொதுளிய

வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ,

ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை

அவரை கொய்யுநர் ஆர மாந்தும்

தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்

பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே;

செல்வக் காலை நிற்பினும்,

அல்லற் காலை நில்லலன் மன்னே.”

இப்பாடலில் பிசிர் என்ற ஊர் சார்ந்த மக்கள் வரகரிசிச் சோற்றில் தயிர் ஊற்றி வேளைக்கீரைப் பொறியலை, அவரைக்காய்ப் பொறியலையும் சேர்த்து உண்ணும் வழக்கம் உடையவர்கள் என்று கோப்பெருஞ்சோழன் குறிப்பிடுகிறான். மேலும் பிசிர் என்ற ஊர் பாண்டி நாடு சார்ந்த்து என்ற குறிப்பும் இப்பாடலில் காணப்படுகிறது.

சங்க இலக்கியங்களில் தொண்டி, உத்தர கோச மங்கை, இராமேஸ்வரம், மணக்குடி, திருவாடானை போன்ற ஊர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

துறைமுக நகரமாக விளங்கிய தொண்டி கானலம் தொண்டி என்று சங்க இலக்கியங்களில் அழைக்கப்பெற்றுள்ளது. இத்தொண்டி பற்றிய குறிப்புகள் குறுந்தொகை போன்ற நூல்களில் கிடைக்கின்றன.

உத்தர கோச மங்கையை இலவந்திகைப் பள்ளி என்று சங்க இலக்கியங்கள் கருதுவதாகக் குறிக்கப்படுகிறது.

திருவாடானை சங்க காலத்தில் அட்டவாயில் என்று அழைக்கப்பெற்றுள்ளது. அக்காலத்திலேயே இவ்வூரில் விழா சிறப்பாக நடை பெற்றதாக நற்றிணையில் பரணர் குறிப்பிடுகிறார்.

இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள மணக்குடி பற்றிய குறிப்பு ஒன்றும் சங்க இலக்கியத்தில் காணக்கிடைக்கிறது.

 “தீதில் கொள்கை மூதூ ருள்ளு

மூரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச்

செம்மை சான்ற தேவன்

றொன்மை சான்ற நன்மை யோனே” – (அகம்.பாயிரம்)

என்ற பாயிர அடிகளில் சீர் கெழு மணக்குடி என்ற குறிப்பு தற்கால இராமநாதபுரத்தில் அமைந்துள்ள மணக்குடியே ஆகும். பால்வண்ணதேவன் வில்வதரயன் என்பவன் ஒரு உரையை அகநானூறுக்கு எழுதியதாக இதன்வழி தெரியவருகிறது.

பாயிரம் பாடப்பெற்ற காலம் சங்க காலத்திற்குப் பிற்கால நிலைப்பாடு உடையது என்றாலும் இவ்வுரையின் பழமை கருதி சங்க காலத்துடன் சற்று இணைந்த காலத்தில் மணக்குடி பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது என்பது அறியமுடிகிறது.

அகநானூற்றின் எழுபதாம் பாடலில் ஆலமரத்தில் சப்தமிட்ட கிளிகளை இராமன் கைகள் தூக்கிக் காட்ட அவை அடங்கின என்று குறிப்பு கிடைக்கிறது. இது இராமேஸ்வரத்தைச் சார்ந்த நடந்த நிகழ்ச்சி என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு சங்க காலத்தில் இருந்தே படைப்பாளுமை மிக்கப் படைப்பாளர்கள் இராமநாதபுர மாவட்டப்பகுதிகளில் இருந்துள்னர் என்பது தெரியவருகிறது.

நீதி நூல்காலப் படைப்பாளுமை

பதினெண் கீழ்க்கணக்கு காலத்தில் எழுந்த நூல்களுள் ஒன்று இன்னிலை. இதனை நூலாகவும் ஏற்பதுண்டு. விடுவதும் உண்டு. இதனை எழுதியவர் புல்லங்காடனார். இவர் இராமநாதபுர மாவட்டத்தைச் சார்ந்தவர் என்று சேது நாடும் தமிழும் என்ற நூல் குறிக்கிறது. புல்லங்காடு என்பது புல்லாணி, அதாவது திருப்புல்லாணி என்பது மேற்படி ஆசிரியரின் கருத்தாகும்.

பக்தி இலக்கிய கால படைப்பாளுமைகள்

திருஇராமேச்சுவரத்திற்குப் பல பக்தியாளர்களும் வருகை தந்துள்ளனர். மேலும் இம்மாவட்டத்தில் உள்ள திருவாடானை, திரு உத்தர கோச மங்கை போன்றவும் சைவப் பெரியார்களால் பாடப் பெற்ற பெருமை உடையனவாகும்.

இராமேசுவர தலத்து இறைவனைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், ‘‘அலைவளர் தண்மதி”, ‘‘திரிதரு மாமணி” என்ற தொடக்கமுடைய பதிகங்களைப் பாடியுள்ளார். திருநாவுக்கரசர் ‘‘பாசமும் கழிக்க கில்லா” என் றதொடக்கமுடைய பதிகத்தைப் பாடியுள்ளார்.

திருவாடானை திருத்தலத்திற்கு சம்பந்தர் ‘‘மாதோர்கூறுகந்து” என்ற தொடக்கமுடைய பதிகத்தைப் பாடியுள்ளார்.

திரு உத்தர கோச மங்கை பெருமான் குறித்து நீத்தல் விண்ணப்பத்தை மாணிக்கவாசகர் பாடியுள்ளார். அவரின் கீர்த்தித் திருவகவல், திருப்பொன்னூசல், திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி முதலிய பகுதிகளிலும் இக் கோயில் குறிக்கப்பட்டுள்ளது.

வைணவத் தலமான திருப்புல்லணை திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற தலமாகும். தன்னை நைவிக்கிலேன் என்ற தொடக்கமுடைய இருபது பாடல்களில் இத்தலத்தனைப் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார். மேலும் ஒரு பாட ல் மன்னும் மறைநான்கும் ஆனானை எனத் தொடக்கமுடையதாக அமைகிறது.

இராமேசுவரத் தலத்திற்கு உரியதாக ”வாலவாய” என்று தொடங்கும் திருப்புகழையும், ‘‘வானோர் வழுத்துனது” என்று தொடங்கும் திருப்புகழையும் அருணகிரிநாதர் பாடியுள்ளார். இவர் திருவாடானைத் திருத்தலத்திற்கும் ஒரு திருப்புகழ் பாடியுள்ளார். ஊண்ஆரும் உள்பிணியும் என்று தொடங்கும் திருப்புகழ் திருவாடானைக்கு உரியதாகும.

தாயுமானவர் இராமேசுவரத்திற்கு வருகை தந்து யோக நிட்டை பயின்றதாகவும், மேலும் அவர் தேவிப்பட்டிணத்தில் தன் வாழ்வின் நிறைவைப் பெற்றதாகவும் அவரின் வரலாறு உரைக்கப்பெறுகிறது.

பாம்பன் சுவாமிகள் குறிக்கத்தக்க பக்தியாளர் ஆவார். இவர் பாம்பன் தலத்தில் பிறந்து பின்பு சென்னையில் தன் வாழ்நாளை நிறைவு செய்தவர். இவர் இராமநாதபுர மாவட்டம் பிரப்பன்வலசையில் யோக நிட்டையில் இருந்தபோது முருகப் பெருமான் காட்சி தந்ததாகக் கூறுவர். இவர் ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியவர். சண்முக கவசம் பாடியவர். இவரின் பாடல்கள் தனித்த இறை ஆளுமை பெற்றனவாகும்.

இவ்வாறு பக்தி இலக்கிய காலத்தில் பல தெய்வப் புலவர்கள் இராமநாதபுர மாவட்டக் கோயில்களைப் பாடிப் பரவியுள்ளனர்.

உரையாசிரியர்கள் காலம்

உரையாசிரியர்கள் காலம் என்று ஒன்றும் தமிழ் இலக்கியவரலாற்றுக் காலப்பிரிவில் அமைவதுண்டு. அவ்வகையில் பரிதியார், பரிப்பெருமாள் எனப்படும் திருக்குறள் உரையாசிரியர் தென் செழுவை என்ற இராமநாதபுர ஊரைச் சார்ந்தவர் என்று கருதுகிறார் இராகவையங்கார். [i] இவர் சொல்லிக்கண நூல் ஒன்றிற்கும், இன்ப நூல் ஒன்றிற்கும் உரை செய்துள்ளார் என்ற குறிப்பும் அவரால் தரப்பெறுகிறது.

தற்கால இராமநாதபுர மாவட்டத்தில் செலுகை என்ற ஊர் முற்கான செழுகையாக இருக்க வாய்ப்புண்டு.

- தொடரும்


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இராமநாதபுரம் மாவட்ட இலக்கிய ஆளுமைகள்”

அதிகம் படித்தது