இறவா வரங்களே! (கவிதைகள்)
ராஜ் குணநாயகம்Nov 28, 2015
இறவா வரங்களே!
தமிழர் வரலாற்றில்
எழுதப்படமுடியா…….
எம் இனத்தின்
வீர காவியங்களே!
வரையப்படமுடியா……
எம்இனத்தின்
உயிர் ஓவியங்களே!
உம் குருதியால்
தமிழர் தேசத்தை
உலக வரைபடத்தில்
வரைந்தவர்களே!
மகாவம்சத்துள் புதைக்கப்பட்ட
தமிழர் சாம்ராஜ்யம்
உம்மால் மீண்டும்
உலகில் உயிர்கொண்டதே!
சுயநலப் பேய்களாம்
தமிழர் மத்தியில்…………….
சுயநலம் துறந்து
தாய்,தந்தை
சகோதரங்களை மறந்து
பெற்றோர் ஆசையாய்
சூட்டி அழைத்த பெயரை இழந்து
ஊர்,சுற்றம் இழந்து
இளமை பருவத்தின்
ஆசா பாசங்களை தூர எறிந்து
தமிழர் வாழ்வில்
விடுதலை சூரியன் உதித்திட
தம்மையே ஈகம் செய்த
தியாக தீபங்களே!
போர் இரகசியம் காத்திட
கழுத்தோடு நஞ்சை சுமந்த
நஞ்சுண்டகண்டர்களே!
தரணியில்
தம் சாவுக்கு
தாமே தேதி குறித்து
எமனின் முடிவுகளுக்கும்
சாவுமணி அடித்து
போர்க்களத்தில் விதையாய் வீழ்ந்த
விடுதலை காவியங்களே!
சூரியனும்
உம்மை சுட்டதில்லை
மழையும்
உம்மை
நனைத்ததில்லை!
இரவும் பகலும்
உமக்கு ஒன்றுதான்
வீடும் காடும்
உமக்கு ஒன்றுதான்
தரையும் கடலும்
உமக்கு ஒன்றுதான்
வாழ்வும் சாவும்
உமக்கு ஒன்றுதான்!
பசி
உம் வயிற்றை கிள்ளுவதில்லை
தூக்கம்
உம் விழிகளை தீண்டுவதில்லை
அச்சம்
உம் நெஞ்சில் எழுவதேயில்லை!
உம்
உயிரில் மூச்சில்
உணர்வில் ரத்தத்தில்
பேச்சில் நடையில் உடையில்
நினைவில் கனவில்
எங்குமே
எதிலுமே
தமிழர் விடுதலையின் தாகமே!
பொருளால் கட்டிய-நீங்கள்
துயிலும் இல்லங்கள்தானே
எதிரியால் துவம்சமானது
எம் உயிரால் கட்டிய-எங்கள்
இதய கோவிலின்
தெய்வங்கள் என்றும் நீங்களே!
தமிழ் தாய்மண்ணில்………..
நில்லாத காற்றாய்
ஓயாத அலையாய்
ஒளியாய் ஒலியாய்
இருளாய் விண்மீன்களாய்
விடியலாய் விடிவெள்ளியாய்
மழையாய் இடியாய் மின்னலாய்
நதியாய் கடலாய்
புல்லாய் மரமாய்
பூக்களாய்-கார்த்திகை பூக்களாய்
எங்குமே
எதிலுமே நீங்களே!
இன்று
எம் கண்ணீரை
உம் காலடிகளில் காணிக்கையாக்குகிறோம்
எம் இதய கோவில்களிலே…………………
அமைதியாய் துயில் கொள்ளுங்களே
எம் காவல் தெய்வங்களே!
——–
இன்று-உம்மை
எம் இதயம் பூஜிப்பதால்
நாமும் புனிதப்படுகிறோம்
எம் புனிதர்களே!
எம் தமிழ் தாய்மண்ணில்………
மீண்டும் மீண்டும் பிறந்து
விழித்தெழுங்களே………………
சுதந்திர விடியல் நாளொன்றில்………..
எம் இறவா வரங்களே!
இனவாத சிறை!
குள்ள நரிகள்
ஓநாய்கள்
வல்லூறுகளுக்கெல்லாம்
சுதந்திரமாய்
உல்லாசம்புரிந்திட
வில்பத்துவும்
வேடந்தாங்கலும்!
பாவப்பட்ட
எலிகளும்
பூனைகளும்
புறாக்களும்
பூசாவிலும்
வெலிக்கடையிலும்!
சித்திரவதை கூடங்களும்
அகதிமுகாம்களும்
ஈழத்தமிழனின்
நிரந்தர வாழ்விடமாச்சு!
தமிழர் உரிமையென்றால்
என்றுமே செல்லாக்காசுதான்…………………..
தமிழர் உரிமையும்
இனவாதமும்
நீதி தராசில்…………
பெறுதி கூடும் பக்கம்
என்றுமே சாய்ந்துகொள்ளும்
அநீதி தராசு
கண்கள் பிடுங்கப்பட்ட
நீதி தேவதையின் கையில்!
தமிழரின் குருதியின் மேல்
அரங்கேற்றப்படும்
இனவெறியர்களின்
அரசியல் தொடர் நாடகங்கள்!
நடிப்பவர்கள் காலாகாலம்
மாறிக்கொள்வர்
இருந்தும்
கதையும்
கதாபாத்திரங்களும் ஒன்றுதான்!
தமிழரின் குருதியின் மேல்
அரங்கேற்றப்படும்
இனவெறியர்களின்
அரசியல் தொடர் நாடகங்கள்!
நடிப்பவர்கள் காலாகாலம்
மாறிக்கொள்வர்
இருந்தும்
கதையும்
கதாபாத்திரங்களும் ஒன்றுதான்!
தரணி ஆண்ட தமிழன்
வந்தோரையெல்லாம் வாழவைத்த தமிழன்
இன்று
தம் உரிமைகளுக்காய்
பிச்சை எடுக்கிறான்
உலகின் காலடியில்!
பாவம்
பிச்சை போடத்தான் யாருமில்லை!
ஈழத்தமிழனின்
விடிவு என்பது……………………………….
விடையில்லாத விடுகதையோ…………..!
தூங்காத கனவுகள்!
பரந்தனில் எழுந்த
கருத்த பௌர்ணமி நீ
உன்னால் ஒளி கொண்டது
தமிழ் பெண்ணினம் தமிழினி!
பரந்தனுக்கு இனி
முகவரி நீ
பரந்தனில் நீ
பிறந்ததனால்-உன்னால்
புகழ் பரந்தனுக்கு இனி!
உயர்ந்தவள் நீ
ஆளுமையில் சிகரம் தொட்டவள் நீ
பொறுமையில் புவியை வென்றவள் நீ
போர்க்களத்தில் பாயும் புலி நீ
அரசியல் மேடைகளில் புயல் நீ!
தமிழரின் அடிமை இருள் போக்க
தமிழ் தாய் மடியினில் உதித்த
சூரியப்புதல்வனாம்-எம்
தலைவனின் வழிகாட்டலில்
விடுதலை போரில்
துணிவோடு போராடிய சூரியப்புதல்வி நீ!
பள்ளிக்கூடமும்
அடுப்பங்கரையும்
அலுவலக வேலையும்
கணவனும் குழந்தைகளும் என்று
ஆணாதிக்கத்துள்ளும்
சமுக வரையறைகளுக்குள்ளும்
சிறு வட்டம் போட்டு
வாழ்ந்தது தமிழ் பெண்ணினம்……..
விடுதலை போரில்
ஆணோடு சமமாய்
போர்க்களத்தில்
நிர்வாகத்தில்
சமூக ஒருங்கிணைப்பில்
அரசியல் செயல்பாடுகள் என
பல சேவைகள், சாதனைகள் புரிந்தாய்
பாரதி கேட்ட
புதுமை பெண் நீ
தமிழ் பெண்ணினம்-உன்னால்
தலை நிமிரும் தரணியில் இனி!
போர்க்களத்தில்
புற முதுகு காட்டி ஓடிய
சிங்கள சேனை
நிராயுத பாணியாய்
நீ சரணடைந்த போது
வதை முகாமில் அடைத்து
கொடுர வதைகள்
வன் கொடுமைகள் பல செய்தும்……..
உடலால்
உள்ளத்தால்
நரக வேதனைகள் பல அனுபவித்தும்…….
பதவிகள்,பட்டங்கள்
சலுகைகள்,சன்மானங்கள் தருவதாய்
குள்ள நரிகள் பல தந்திரங்கள் செய்த போதும்…….
இளையவர்
மூத்தவர் என தலைவர்கள்
பலரும் சோரம்போயிருந்தும்…………..
இறுதி மூச்சு வரை
அடிபணியாமல்
தமிழ் மானம் காத்த
அக்கினிப்புதல்வி நீ!
குருதிப்புற்று உன்னுள் வளர்ந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
உனை கொன்ற போதும்
இனப்பற்று உன்னுள்
கொஞ்சம் கூட குறையவில்லையே
எம் காவியப்புதல்வியே என்றும் நீ!
உன்னையே
மெழுகுதிரியாய்
தமிழ் இனத்துக்காய் ஈகம் செய்தவளே
உன் வாழ்வின் இறுதி நாட்களை
இருள் கவ்வ செய்த
உன் இனம் பற்றி
எங்குதான்-நீ சென்று
முறையிடப்போகின்றாயோ……….
இறந்த பின்னே
பிணத்தின் மீது கண்ணீர் பொழிந்தும்
மேடையேறி புகழ் பாடியும்
என்ன பயன்
மாண்டவர் மீண்டு வருவதில்லையே!
தமிழா!
இருக்கும்போது என்ன செய்தாய்
இன்று இருப்போருக்கும்
என்ன கைம்மாறு செய்யப்போகிறாய்……..
எழு ஓடு………
நதிகள் கடலை நோக்கித்தானே ஓடும்…….
ஆல விருட்சம் விழுகின்றபோதும்
ஆயிரமாயிரம் ஆல விருட்சங்களை
விதைத்துவிட்டுத்தானே விழுகிறது………
தமிழினி
நீயும் ஆயிரமாயிரம் தமிழினிகளை
விதைத்துவிட்டுத்தானே வீழ்ந்திருக்கிறாய்
மாவீரராய் தமிழ் தாய் மண்ணில்……
இறப்பு என்பது
சிவகாமிக்குத்தான்
தமிழினி
உனக்கில்லையே!
மாவீரர்களுக்கு மரணமில்லை
அவர் கனவுகளுக்கும் தூக்கமில்லை!
தமிழினி
இனியாவது
அமைதியாய் தூங்கு-நீ
எம் மாவீர செல்வங்களோடு
தமிழ் தாய் மடியில்!
ஆயிரமாயிரம் தமிழினிகள்
உம் கனவுகள் சுமந்து
தூங்காதிருப்பர்
சுதந்திர விடியல் நோக்கி……..
எரிந்த சாம்பல் கொண்டும்
எழுந்திடும் பீனிக்ஸ் பறவைகள்
தமிழினி
உன் சாம்பல் கொண்டும்
எழுந்திடுவர் ஆயிரமாயிரம் தமிழினிகள்
சுதந்திர விடியல் நோக்கி…….
-ஈழன்-
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இறவா வரங்களே! (கவிதைகள்)”