மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இறை வணக்கம்

முனைவர். ந. அரவிந்த்

Sep 10, 2022

siragu irai vanakkam
காலையில் குளித்த பின்னர் ஆண்கள் ஈரத்துண்டை இடுப்பை சுற்றி கட்டிக்கொண்டு இறைவனை வணங்கிய பின்னர்தான் அடுத்த வேலைக்கு செல்லவேண்டும். பெண்கள் ஈர சேலையை கட்டிக்கொள்ளலாம். நாம் குளித்தாலும் நம்முடைய உடலின் வயிற்று பகுதி சூடாகவே இருக்கும். நாம் இவ்வாறு ஈரத்துண்டை கட்டியிருப்பதால் வயிற்றுப்பகுதி குளிச்சியடையும். கிராமங்களில் ஆறு, குளம் அல்லது வாய்க்காலிற்கு குளிக்க செல்லும் ஆண்களும் பெண்களும் அழுக்கு துணியை துவைத்து குளித்த பின்னர் ஈரத்துணியையே கட்டிக்கொண்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சூட்டினால் உண்டாகும் உடல் பிரச்சனைகள் அனைத்திற்கும் இது தீர்வாக அமையும். இது இக்காலத்தில் நடைமுறைப்படுத்துவது எளிதன்று. ஆனால், பழக்கப்படுத்துங்கள். நல்லதே நடக்கும்.

குளித்த பின்னரே இறைவனை வணங்க வேண்டும். அகத் தூய்மை மற்றும் புறத் தூய்மை இரண்டுமே இறை வணக்கத்திற்கு இன்றியமையாதது. நாம் வணங்கும் இறைவன் உலகைப் படைத்து இன்றுவரை காத்துக்கொண்டிருப்பவன். மிகப் பெரியவன் எனவே குளித்த பின்பு சுத்தமான உடலுடன் இறைவனை வணங்குவது நல்லது. உடல் நலம் சரியில்லாதவர்கள் சுடு தண்ணீரில் முகம், கைகள் மற்றும் கால்களை நன்கு கழுவிய பின்னர் இறைவனை வணங்கலாம்.

வீட்டின் அருகில் கோயில் இருந்தால் கோயிலில் சென்று இறைவனை வணங்கலாம். அருகில் கோயில் இல்லையெனில் வீட்டிலேயே பிரார்த்தனை அறையில் இறைவனை வணங்கலாம்.

நம்மை சுற்றி தொலைக்காட்சி, அலைபேசி போன்ற தொந்தரவுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இறை வணக்கத்திற்கு ஒருமனப்படுத்துதல் மிக அவசியம். தொலைக்காட்சி, அலைபேசி போன்றவைகள் இறை வணக்கத்திற்கு தடங்கலாக இருப்பதால் சில நிமிடங்கள் விலகி இருத்தல் நல்லது.

இறைவனோடு உரையாடுவதுதான் இறை வணக்கம். இதனையே பிரார்த்தனை, செபம், இறை வேண்டல், மன்றாட்டு என பல பெயர்களில் குறிப்பிடுகிறோம். இறைவனிடம் நாம் நம் வாழ்க்கையை பற்றி பேசுவதே செபம். இறை வேண்டலிற்கு நல்ல சிந்தனையாகிய நல்லெண்ணம் மிக அவசியம். இறைவன் மாசற்றவன். நாமும் அவ்வாறே இருக்க முயற்சி செய்ய வேண்டும். மாசற்ற எண்ணம் இல்லையேல் இறைவனை தரிசிக்க வேண்டாம். அது வீண்.

எடுத்தவுடனேயே, எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என இறைவனிடம் வேண்டாதீர்கள். நமக்கு என்ன வேண்டும் அதை எப்பொழுது கொடுக்க வேண்டும் அத்தனையும் அவனுக்கு தெரியும்.

முதலில் நன்றி செலுத்துங்கள். இரவில் நன்றாக தூங்கி காலையில் உயிரோடு கண் விழித்ததில் இருந்து அவன் செய்த ஒவ்வொரு நன்மைகளுக்காகவும் நன்றி செலுத்துங்கள். நன்றி பாடலான துதி பாடலை தினமும் காலையில் பாடி இறைவனை வணங்குவோம்.

இரண்டாவதாக, ஒவ்வொருவருக்கும் இறைவன் தந்த புனித நூலை படித்து அதனை தியானம் செய்ய வேண்டும். இறைவன் அதன் மூலமாக நம்மிடம் பேசுவான். இறை வேண்டுதல் செய்வதோடு நிறுத்திவிட கூடாது. இறை வார்த்தைகளுக்கு செவி கொடுக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் இறைவன் இறை ஆகமங்களை தந்துள்ளான். அவற்றை தினமும் படித்து அதில் உள்ள இறை வார்த்தைகளை கடைபிடியுங்கள். இறைவனே ஆகமங்களாக இருக்கிறான் என்பதை மாணிக்க வாசகர், ஆகமம் ஆக நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! என்று போற்றி பாடியுள்ளார். ஆகமங்களின் உண்மையான உட்கருத்துக்களை உணர்ந்து தியானிக்க வேண்டும்.

அடுத்தது, பிறருக்காக வேண்டுதல் செய்யுங்கள். நம் நாட்டின் மக்களுக்காகவும், ஆளும் தலைவர்களுக்காகவும், பஞ்சம், பட்டினி, வியாதிகள், அண்டை நாட்டுடன் சண்டைகள், விபத்துகள், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை இறைவன் பாதுகாக்க வேண்டுமெனவும் வேண்டுவோம். உடல் நலமில்லாத உறவினர்கள், நண்பர்களுக்கு சுகம் கிடைப்பதற்காக, திருமண தடைகள் நீங்குவதற்காக, குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வேண்டி மற்றும் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமென இறைவனை வேண்டுங்கள்.

கடைசியாக, நமக்காக வேண்டுதல் செய்வோம். புற தேவைகளைவிட மன தூய்மையை தாரும் இறைவா! என வேண்டுவோம். இம்மைக்காகவும் மறுமைக்காகவும் வேண்டுதல் செய்வோம்.

இன்னொரு முக்கியமான விசயம் உள்ளது. நாம் சமீபத்தில் உடலாலோ உள்ளத்திலோ ஏதாவது தவறு செய்திருந்தால், பிறர் மனதை புண் படுத்தியிருந்தால் இறைவனிடம் மனம் கசந்து அழுது மன்னிப்பு கேட்போம். சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்போம். அதே தவறை திரும்ப செய்யாமல் இருப்போம். செய்த தவறுகளுக்காக மனம் வருந்துதல் பலவீனம் அல்ல. நம் பலம். ஒரு குடத்தில் முழுவதுமாக பழைய தண்ணீர் இருந்தால் அதற்குள் புதிய அமிர்தத்தினை எப்படி ஊற்ற முடியும். பழைய தண்ணீரை வெளியே கொட்டினால்தான் அமிர்தம் கிடைக்கும். அதுபோல்தான், பழைய பாவங்களை வெளியேற்றினால்தான் இறையருள் கிடைக்கும்.

அப்பொழுது, நம் அறிவிற்கு அப்பாற்பட்ட இறை அமைதியை நாள் முழுதும் இறைவன் அருளி நம் உடலையும், உயிரையும், உள்ளத்தையும் இறைவன் பாதுகாப்பான். இறைவனின் அருகில் நெருங்கிவர இறை வணக்கம் நமக்கு துணை செய்கிறது. அது மட்டுமின்றி, நாம் இறை வேண்டுதல் செய்வதன் மூலம் இறைவனின் சித்தத்தின்படி நடக்கும் வாய்ப்பினை பெறுகிறோம்.

இறைவணக்கத்திற்கு நாம் எந்த நிலையினையும் பயன்படுத்தலாம். சிலர் தலை வணங்கியும், சிலர் கைகளை உயர்த்தியும், சிலர் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தும், சிலர் முகங்குப்புற விழுந்தும் இறைவனை வணங்குகிறார்கள். இறைவனை வணங்க நிலை அல்லது இடம் பொருட்டல்ல, முழு மற்றும் சுத்த உள்ளத்துடனும், உண்மையோடும், நம்பிக்கையோடும் வணங்குவது மிகவும் அவசியம்.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இறை வணக்கம்”

அதிகம் படித்தது