இலக்கணத்தில் விளைந்த இலக்கியம்
பேராசிரியர். க.பூரணச்சந்திரன்Oct 25, 2014
பழங்காலத் தமிழில் இலக்கியப் பொருள் அகம், புறம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவற்றின் தன்மைகளை விளக்குவது பொருளிலக்கணம். இக்காலத்தின் கவிதையியல், கவிதை இலக்கியக் கொள்கை என்ற சொற்களுக்கு நேரான பழங்காலச் சொல் பொருளிலக்கணம். இப்பொருளிலக்கணத்தைத்தான் தொல்காப்பியப் பொருளதிகாரம் விரிவாகக் கூறுகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அகத்திணை இயல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல் ஆகிய ஐந்து இயல்களில் அகத்திணைப் பாக்களை இயற்றும் வழிமுறைகளைக் காணலாம்.
தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்திகளைச் சுருக்கியோ, விரித்தோ, சற்றே மாற்றியோ கூறுவதாக இறையனார் அகப்பொருள், நம்பியகப்பொருள், மாறன் அகப்பொருள் எனப் பிற்காலத்தில் பல தனி இலக்கண நூல்கள் எழுந்தன. இவை ஒவ்வொன்றும் தொல்காப்பியத்தின் அக இலக்கணக் கூற்றுகளை வரிசைப்படுத்திக் காட்டுகின்றன. களவு கற்பு என்ற இயல்களாகப் பகுத்து, அவற்றுள் கிளவிகளும் துறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் இந்த நூல்களில் சொல்லப்படும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு உதாரணச் செய்யுள் இயற்றவேண்டிய தேவை ஏற்பட்டது. இப்படி, அகப்பொருள் நூல்களில் காணப்படும் கூற்றுகளுக்குரிய உதாரணச் செய்யுட்களைத் தொகுத்தபோது அதுவே ஒரு தனி இலக்கிய வகையாக மாறிவிட்டது. இப்படித் தோன்றிய இலக்கியத்திற்குக் கோவை எனப் பெயரிட்டார்கள். பலவேறு உதாரணச் செய்யுட்கள் கோவையாக அமைக்கப்பட்டதனால் கோவை என்ற பெயர் பெற்றது.
“கல்லாடம் கற்றாரோடு சொல்லாடாதே” என்று ஒரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழியின் காரணமாக, கல்லாடம் என்பது ஒரு இலக்கண நூல் என்று இன்றும் நினைக்கிறார்கள். ஆனால் கல்லாடம் என்பதும் ஒரு அகப்பொருட் கோவை நூல் தான் என்பது பலருக்கும் இன்றுவரை தெரியாது. இம்மாதிரிப் பிற்காலத்தில் கோவை நூல்கள் பெருகின. முதன்முதலில் தோன்றியது பாண்டிக்கோவை என்னும் நூல்,
இலக்கணத்திலிருந்து பிறந்த இலக்கியம்:
தொல்காப்பியம் கூறும் அகப்பொருள் துறைகளை நாடகப் போக்குடன் முறையாக அமைத்து, தொல்காப்பியர் கூறும் விருந்து என்னும் வனப்பிற்கேற்பப் புதுவதாக உருவாக்கி அமைக்கப்பட்டது கோவை இலக்கியம் என்று இதற்கு இலக்கணம் கூறுவார்கள். பொதுவாக இலக்கியத்திலிருந்துதான் இலக்கணம் தோன்றும் என்பார்கள். இங்கோ இலக்கணத்திலிருந்து இலக்கியம் தோன்றியதாகச் சொல்லப்படுவது ஓர் ஆச்சரியம்தான். இறையனார் அகப்பொருளுக்கு இசைய இயற்றப்பட்டது பாண்டிக்கோவை. நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டிய அரசன்மேல் பாடப்பட்ட நூல் அது. 400க்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டுள்ளது. நம்பியகப் பொருள் என்னும் இலக்கண நூலுக்கு ஏற்ப இயற்றப்பட்டது தஞ்சை வாணன் கோவை. இதில் 425 பாக்கள் உள்ளன.
சங்க இலக்கியங்களிலிருந்து தோன்றியதா?:
இலக்கணநூல்களிலிருந்து கோவை தோன்றியது என்பதற்கு மாறாக, சங்க அக இலக்கியங்களிலிருந்தே கோவை இலக்கியம் தோன்றியது என்றும் நாம் கொள்ளலாம்.
சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகையிலுள்ள அகநூல்களின் பாக்கள் ஏறத்தாழத் தொல்காப்பிய அகப்பொருள் இலக்கணத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. குறுந்தொகை நற்றிணை அகநானூறு போன்ற அக இலக்கியங்களில் ஐந்திணை நெறிப்படிப் பாக்கள் அமைகின்றன. இவை யாவும் ஒரே கவிஞர் பாடியவை அல்ல. பலவேறு புலவர்கள் பல்வேறு காலங்களில் பாடிய தனித்தனிப் பாடல்கள். பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையைக் கூறிய இலக்கியம் என்பதால் ஒவ்வொரு பாட்டின் கூற்றும் ஒவ்வொரு வகையாக அமைகிறது. ஒரு பாட்டு, குறிஞ்சித் திணையில் தலைவன் தலைவியை நலம் பாராட்டுவதாக இருக்கலாம். அடுத்த பாட்டு, மருதத்திணையில் தலைவனுக்குத் தோழி வாயில் மறுப்பதாக இருக்கலாம். மூன்றாவது பாட்டோ, பாலைத்திணையில் தலைவன் தலைவியை நினைத்துப் புலம்புவதாக இருக்கலாம். இப்படிச் சங்க காலத்தில் ஒவ்வொரு பாட்டும் அந்தந்தக் கவிஞரின் மனநிலைக்கேற்ப, அவர் எடுத்துக் கொண்ட செய்திக்கேற்பப் பாடப்பட்டது.
பிற்காலத்தில் இந்தக் கூற்றுமுறைகளைத் தொகுத்து நாடகப்பாங்கில் வரிசைப்படுத்திக் காணும் போக்கு தோன்றியது. இதன் விளைவே கோவை இலக்கியம் என்று கூறலாம். அகப்பொருளுக்குரிய துறைகள் யாவும் நாடகப் பாங்கோடு முறையாகக் கோக்கப்பட்ட பொருண்மைச் சிறப்பால் கோவை என்னும் பெயரை இந்த இலக்கியவகை பெற்றுள்ளது என்று சொல்வார்கள்.
சங்க அக இலக்கியமும் கோவையும்:
அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்ற அகப்பாடல் தொகுப்பு நூல்கள் 400 பாக்களைக் கொண்டு அமைந்துள்ளன. இதனை ஒட்டியே கோவை என்ற இலக்கிய வகையும் 400 பாக்களைக் கொண்டதாக அமையவேண்டும் என்னும் வழக்கு அமைந்தது. இன்றுள்ள கோவை நூல்களில் திருக்கோவையார் ஒன்றுதான் சரியாக 400 பாக்களைக் கொண்டு அமைந்துள்ளது. பிற நூல்கள் ஏறத்தாழ இந்த எண்ணிக்கையை ஒட்டிச் செல்கின்றன.
சங்க இலக்கியத்திற்கும் கோவை இலக்கியத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
1. சங்க இலக்கிய அகப்பாக்களுக்குத் துறை கிடையாது. திணை உண்டு. அத்திணைக் குரிய கூற்றுகள் உண்டு. இந்தக் கூற்றுகளைத் துறையாக மாற்றிவிட்டது கோவை இலக்கியம்.
2. சங்க அகப்பாக்கள் ஆசிரியப்பாவில் அமைந்தவை. அகப்பொருட்கோவைச் செய்யுட் களோ கட்டளைக் கலித்துறை என்னும் நான்கடிப் பாவகையால் அமைந்தவை.
3. சங்க இலக்கியத்தில் தலைவன்-தலைவி போன்ற கவிமாந்தர் உண்டு. எந்தத் தலைவன் தலைவி பெயரும் கூறப்படுவது கிடையாது. ஆனால் கோவை இலக்கியத்தில் (புகழப்படுகின்ற) பாட்டுடைத் தலைவன் வேறு, கிளவித் தலைவன் வேறு.
பாட்டுடைத் தலைவன்-கிளவித் தலைவன் வேறுபாடு சங்ககாலத்திலேயே தோன்றி விட்டது. உதாரணமாக, பத்துப்பாட்டில் ஒன்றாகிய பட்டினப்பாலை. அதன் பாட் டுடைத் தலைவன் கரிகாற் சோழன். ஆனால் அந்தப் பாட்டிலேயே வரும் அகப்பொருளுக்குரிய தலைவன் வேறு. இவன் தன் தலைவியைப் பிரிந்துசெல்ல முடியாமல் தயங்குகிறான். இப்படிப்பட்ட பாடல் தலைவனைப் பிற்காலத்தில் கிளவித் தலைவன் என்றார்கள். பாட்டு எந்த அரசனைப் புகழ்ந்துபாட இயற்றப்பட்டதோ அவனைப் பாட்டுடைத் தலைவன் என்றார்கள்.
4. சில கோவை நூல்கள், சங்க இலக்கிய மரபைப் பின்பற்றினாலும், அதை மீறியும் செல்கின்றன. தஞ்சைவாணன் கோவையில் வரைவியல் என்ற பகுதியில் வரும் மீட்சி, தன்மனை வரைதல், உடன்போக்கு இடையீடு போன்றவற்றிற்கு உதாரணங்களைச் சங்க இலக்கியத்தில் காண்பது அரிது. தொல்காப்பியத்திலும் இவைகுறித்த செய்தியைக் காண இயலாது. இப்படிப் பழைய இலக்கண வரையறைகளைப் பெருக்கிக் காட்டுவதையும் கோவை நூல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
உதாரணமாகத் தஞ்சைவாணன் கோவையில் தன்மனைவரைதல் என்ற பகுதியில்,
தலைவியின் தாய், தன் மனையில் மணம் செய்துவைக்கவேண்டும் என்ற ஆவலைச் செவிலிக்கு உணர்த்துகிறாள்.
செவிலிக்குத் தோழி ஏற்கெனவே இருவரும் திருமணம் செய்துகொண்ட செய்தியைச் சொல்கிறாள்.
அதனைச் செவிலி நற்றாய்க்குச் சொல்கிறாள்.
நாங்கள் மணம் செய்துகொண்டதை உங்கள் சுற்றத்தார்க்குச் சொல் என்று தலைவன் தோழிக்குச் சொல்கிறான்.
நான் முன்னமே அதைச் சொல்லிவிட்டேன் என்று தோழி தலைவனுக்கு உரைக் கிறாள்.
இவைபோன்ற செய்திகள் சங்கப்பாக்களில் கிடையாது. இவையெல்லாம் சங்க இலக்கிய அல்லது தொல்காப்பியக் கூற்றுமுறைகளை எடுத்துக்கொண்டு மனம்போன போக்கில் விரிவுசெய்துகொள்ளும் மிகைக் கற்பனைகளே,
5. கோவை நூல்கள், தங்கள் முன்னோடிகளாகிய சங்க இலக்கியங்களோடு ஒப்பிட இயலாதவைதான், ஒருநிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட காலத்தின் கவிதை வறட்சி யைக் காட்டுபவை. முன்சென்றோர் வளமான இலக்கியம் படைத்துவிட, பின்வந்தவர் கள் எதை எழுதுவது என அறியாமல், முன்சென்ற இலக்கியத்தைப் பட்டியலிடும் நிலையில் படைத்த நகல் இலக்கியமே கோவை. மேலும் இடைக்காலத்திற்கே உரிய தன்மையான கட்டளைக் கலித்துறை என்னும் கடினமான யாப்பில் படைத்தலும் இதில் காணப்படுகிறது.
கோவை நூலின் இலக்கணம் :
கோவை இலக்கியம் கட்டளைக் கலித்துறைச் செய்யுள் என்ற யாப்பில் இயற்றப்படும் என்பது மரபு. சில இலக்கண நூல்களில கலித்துறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கலித்துறை வருவதோடு பிற பாக்களும் வரும் என முத்துவீரியம் என்ற இலக்கண நூல் கூறுகிறது. கோவை நூல்களில் பயின்றுவரும் பான்மை நோக்கிக் கட்டளைக் கலித்துறைக்குக் கோவைக் கலித்துறை என்றே பெயர்கொடுத்தார் வீரசோழிய உரைஆசிரியர் பெருந்தேவனார். பிற கலித்துறைகளைக் காப்பியக் கலித்துறை என்று அவர் கூறியுள்ளார். பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கணவிளக்கப் பாட்டியல், தொன்னூல் விளக்கப் பாட்டியல், முத்துவீரியப் பாட்டியல், பிரபந்த தீபிகை, சுவாமிநாதம் ஆகிய பத்து இலக்கண நூல்கள் கோவை இலக்கியத்தின் இலக்கணத்தைக் கூறுகின்றன. நிலம்-பொழுது என்னும் இருவகை முதற்பொருள், பதினான்கு கருப்பொருள்கள், புணர்தல் முதலிய பத்து உரிப்பொருள்கள் பொருந்திவர, கைக்கிளை முதலான களவு, கற்புத் துறைகளைப் பெற்றுவருவது கோவை என்று பன்னிருபாட்டியலில் விரிவாக இலக்கணம் சொல்லப்படுகிறது.
புறப்பொருட்கோவையும் பாடப்பெறும் என்று சுவாமிநாதம் கூறினாலும் அம்மாதிரி நூல்வகை இன்று இல்லை. பொருளிலக்கணத்தில் திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள் வகை, துறை எனப் பன்னிரண்டு உறுப்புகள் இருப்பதாகக் கூறுவார்கள். கோவை இலக்கியம் இவ்வுறுப்புகளைப் பெற்றுவரும். அகப்பொருள் துறைகள் வரையறுக்க இயலாதவை. ஒவ்வொரு கிளவிக்கும் இத்தனை துறைகள் என்று எண்ணி வரையறுக்க முற்பட்டன பிற்கால நூல்கள்.
தலைவனும் தலைவியும் தாமே ஒரு தனியிடத்தில் சந்தித்து தோழியின் துணைகொண்டு காதலின்பம் பெறும் களவொழுக்கம் முதலாக, தலைவன் ஊரார் அறியத் தலைவியை மணந்து விருந்தோம்பி மக்கட்செல்வம் பெற்று வாழும் கற்பொழுக்கம் ஈறாக உள்ள பொருண்மையைப் பல்வேறு துறைகளாகக் கதைப் பாங்கில் கூறுவது கோவை என்று நாம் சுருக்கமாகக் கூறலாம். தஞ்சைவாணன் கோவையில் 33 கிளவிகள் உள்ளன. திருக்கோவையாரில் 25 கிளவிகள் மட்டுமே உள்ளன.
திரைப்படச் செயற்கை:
சங்க இலக்கியங்கள் இயல்பான எடுத்துரைப்புகள். காரணம், எந்த எந்தக் கூற்றுகளை எந்தப் புலவர்கள் முதன்மையாகக் கருதினார்களோ அதைப் பாடினார்கள். இந்தக் கூற்றுகள் எல்லா தலைமக்கள் வாழ்க்கையிலும் கட்டாயம் நிகழவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை. எல்லாத் தலைவர்களும் காட்சி என்பதில் தொடங்கி, தோழியின் வாயிலாக மட்டுமே தலைவியைச் சந்தித்து, உடன்போக்கில் ஈடுபட்டு, பிறகு மணந்து, பிறகு பரத்தையருக்காகப் பிரிந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை. ஆனால் ஒரே தலைவன் தலைவியின் வாழ்க்கையில் இத்தனையும் நடப்பதாகத் தொகுத்துக் கூறும்போது அது செயற்கை ஆகிவிடுகிறது. இப்படிப்பட்ட செயற்கை இலக்கியம்தான் கோவை இலக்கியம்.
இன்றும்கூட எல்லா மனிதர்களும் காதல்கொள்ளவேண்டும் என்ற அவசிய மில்லை. காதல் கொண்டபின் வில்லனால் ஆபத்து நேரவேண்டும் என்ற அவசியம் இல்லை. கதாநாயகன் வீரதீரனாக அமைந்து வில்லனோடு மோதவேண்டிய அவசி யமும் எல்லார் வாழ்க்கையிலும் ஏற்படுவதில்லை. ஆனால் இவையனைத்தும் ஒன்றாகச் சேர்ந்ததாக நமது திரைப்படங்கள் செயற்கையாகக் காட்டுவதுபோலப் பழங்காலக் கோவை நூல்களும் அகப்பொருள் துறைகள் யாவும் ஒருவன் வாழ்க்கையிலே அமைந்ததுபோலச் செயற்கையாகக் காட்டியுள்ளன.
கோவை நூல்களில் இறைவன் திருவருளைப் பேசும் திருக்கோவையார், சந்திர வாணன் என்ற தலைவன்மேல் இயற்றப்பட்ட தஞ்சைவாணன் கோவை என்பவை புகழ்பெற்றவை.
திருக்கோவையார்:
சைவசமய குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் திருக்கோவையார் பாடினார் என்பர். எட்டாம் திருமுறையாகத் திருவாசகத்துடன் திருக்கோவை யாரும் சேர்க்கப்பட்டுள்ளது. உருக்கமான திருவாசகப் பாக்களைப் பாடிய திருவாதவூரர், திருக்கோவையார் போன்றதொரு செயற்கையான சிற்றிலக்கிய நூலை யும் எழுதியிருப்பார் என்பது பொருந்தாததாகத் தோன்றுகிறது. இறைவனே மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தைத் தம் திருக்கரத்தால் எழுதினார் என்று புராணக்கதை உண்டு. ‘பாவை பாடிய வாயாற் கோவை பாடுக’ என்று இறைவன் அருளிச்செய்தமையின் திருக்கோவையை மாணிக்கவாசகர் இயற்றினார் என்பர். இதை எழுதிக்கொண்டு இறைவன் மறைந்தபோது இவ்விரண்டு நூல்களுக்கும் பொருள் யாதெனப் பிறர் வினவ, மாணிக்கவாசகர் நடராசப் பெருமானைச் சுட்டிக்காட்டினார் என்றும் கூறுவர். இதனைக் குமர குருபரர், தமது சிதம்பர மும்மணிக்கோவையில்,
பைந்தமிழ் நவின்ற செந்நாப் புலவன்
ஐந்திணை உறுப்பின் நாற்பொருள் பயக்கும்
காமஞ் சான்ற ஞானப் பனுவற்குப்
பொருளெனக் காட்டிய ஒருபெருஞ்செல்வ
என்று வருணிக்கின்றார்.
ஊழிக்காலத்தின் இறுதியில் எல்லா உலகங்களையும் இறைவன் அழித்தபிறகு அவனுக்குச் சலிப்பேற்படாமல் இருக்கப் படிக்கவேண்டியே கோவையைப் பாடப் பணித்தான் என்று இதனைச் சமத்காரமாகப் பேராசிரியர் சுந்தரனார் மனோன் மணீயத்தில் பாராட்டுகின்றார்.
அகப்பொருள் நூலாயினும், திருக்கோவையார் பேரின்பச் சார்பான நூல் என்றே உரைப்பர். இதனால்தான் இதற்கு உயர்வு குறிக்கும் ஆர் விகுதி கொடுத்து இந்நூல் வழங்கப்படுகிறது.
இந்நூலின் தொடக்கத்தில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட அதிகார வரலாறு என்ற பகுதியில், கிளவிப்பெயர்கள் 25ஐயும் கூறி, ‘‘அருள் வயிற் சிறந்த அகத்திணை மருங்கின் இருளறு நிகழ்ச்சி இவையென மொழிப’‘ என்றதாலும், பேராசிரியர் இதன் முதற்பாட்டு உரையில் ‘‘ஈசர் தில்லை என்றமையின் வீடுபேற்றின்பத்தைச் சுட்டினார்’‘ என்று கூறுவதாலும் இதனை ஞானநூல் எனவே கருதிவருவது புலனாகிறது. இதனை வற்புறுத்தற்பொருட்டு திருக்கோவையார் உண்மை என்ற நூலும் எழுதப்பட்டுள்ளது.
‘‘நாயகி பரம்பொருளாக, நாயகன் பக்குவ ஆன்மாவாக, தோழி திருவருளாக, தோழன் ஆன்மபோதமாக, நற்றாய் பரையாக, திரோதாயி செவிலித் தாயாக, மேலும் நாயகன் கூற்றெல்லாம் நாயகி கூற்றாகவும், நாயகி கூற்றெல்லாம் நாயகன் கூற்றாகவும் நிகழ்ந்துவரும். நாயகியைச் சிற்றம்பலம்போல வருணிக்கையால் நாயகி பரம்பொருளா யிற்று. பெறுவான் நாயகனும் பேறு நாயகியுமாக இரசமும் நாவும்போல இருத்தலானும், கொத்தும் துறையும், கருப்பொருளும் உரிப்பொருளும், இடமும் எல்லாம் அருளின்பம் எனக்கொள்க’‘ என்று சீர்காழித் தாண்டவராயர் இதன் பேரின்பச்சார்பினை விளக்குகிறார். இதற்குப் பேராசிரியர் எழுதிய உரை ஒன்று உள்ளது. பழைய உரை ஒன்றும் உள்ளது.
இந்நூலுக்குப் பாட்டுடைத் தலைவன் தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தப் பெருமான். கிளவித்தலைவன் சிலம்பன், வெற்பன், விடலை, ஏந்தல், நாடன் என்றெல்லாம் பொதுப்பெயர்களினாலே பழைய மரபிற்கேற்பக் குறிக்கப்படுகிறான்.
திருக்கோவையார் ஆசிரியர் சங்க இலக்கிய மரபில் தோய்ந்தவர் என்பதில் ஐயமில்லை. சான்றாக, திருக்கோவையாரின் உலகியல்புரைத்தல் என்ற துறையைக் காண்போம். தலைவியும் தலைவனும் உடன்போக்கில் ஈடுபட்டனர். அதாவது பெற்றோர் திருமணம் செய்ய மாட்டார்கள் என்றெண்ணி இருவரும் வேற்று£ர் சென்றுவிட்டனர். அப்போது செவிலித்தாய் அவர்களைத் தேடிச் செல்கிறாள். ‘‘செவிலியது கவலைதீர மன்னிய உலகியல் முன்னி உரைத்தது’‘ என்பது இதற்குக் கொளு. இந்தப் பாட்டைக் காண்போம் (248).
சுரும்பிவர் சந்தும் தொடுகடல் முத்தும் வெண்சங்கும் எங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்கு அணியாம், வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான் சிவன் சிற்றம்பலமனைய
கரும்பன மென்மொழியாரும் அந்நீர்மையர் காணுநர்க்கே.
வண்டுகள் சூழ்ந்து பறக்க நிற்கின்ற சந்தனமரமும், சகரராலே தோண்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற கடலில் பிறந்த முத்தும், வெள்ளிய சங்கும், தம்மை விரும்பி யவர்களிடம் சென்று அவர்களுடைய உடலுக்கு அலங்காரமாகின்றன. நலம்பெற்ற கங்கையின் பெருநீரைச் சூடியருளுகின்றவன் தலைவன், சிவனென்னும் நாமத்தை உடையவன், அவனுடைய திருச்சிற்றம்பலத்தை ஒத்துக் கரும்பை நிகர்த்த வார்த்தை யினை உடையவளும் ஆழமாக நினைக்கும்போது சிறந்த கற்பினை உடையவள். ஆதலால் நீ அவளைத் தேடிச் செல்லவேண்டா’‘
என்று செவிலிக்கு அறிவுரை கூறுவதாக இப்பாட்டு அமைகிறது.
இக்கருத்தை இதைவிடச் செம்மையான முறையில், பழந்தமிழ் இலக்கியமான கலித்தொகையில் காணலாம். தலைவன் தலைவி உடன் சென்ற பின்னர், தேடிவரும் செவிலி முக்கோற் பகவர் எனப்படும் துறவியர்களைக் காண்கிறாள். அவர்களை வினவுகிறாள். அவர்கள் அவளுக்கு பதிலுரைக்கிறார்கள்.
ஆணெழில் அண்ணலொடு அருஞ்சுரம் முன்னிய
மாணிழை மடவரல் தாயிர் நீர் போறீர்;
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.
என ஆங்கு, இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,
அறந்தலைப் பிரியா ஆறும் மற்று அதுவே. (9)
இதே சந்தனம், முத்து என்னும் உவமைகளே மேற்கண்ட திருக்கோவையாரில் ஆளப்படுகின்றன. திருக்கோவை பாடியவர் கலித்தொகைப் பாட்டில் வரும் யாழின் இசையை விட்டுவிட்டார். இரண்டு பாக்களையும் ஒப்பிடுவோர்க்குச் சங்கஇலக்கியக் கலிப்பாவின் சிறப்பு புலனாகும். திருக்கோவையில் சிவபெருமானின் புகழுரைக்கும் பாங்கு பிறவற்றைவிட மேம்பட்டு விடுகிறது. வியன்கங்கை என்னும் பெரும்புனல் (சிவபெருமானின் மனைவி என்ற முறையிலோ, அவன் தலையிலுள்ளது என்ற முறையிலோ) இடத்தைப் பிடித்துக்கொள்கிறது. உரையிலோ சகரர் தோண்டிய கடல் என்ற தேவையற்ற புராணக்கதை இடம்பெறுவதாகிறது.
கோவை நூல்கள் களவியலில் காட்சி எனப்படும் துறையில் தொடங்கி, கற்பியலில் பொருள்வயிற் பிரிதல் என்னும் துறையில் முற்றுப்பெறும். தலைவன் முதன்முதலில் தலைவியைக் காண்பது காட்சி எனப்படும் துறை. திருக்கோவையாரில் அது இவ்விதம் அமைகிறது:
திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர் தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள் கொண்டோங்கு தெய்வ
மருவளர் மாலையர் வல்லியின் ஒல்கி அனநடை வாய்ந்து
உருவளர் காமன் தன் வென்றிக்கொடிபோன்று ஒளிர்கின்றதே.
துறைவிளக்கத்தைக் கூறுவதுபோல் வருகின்ற கொளு என்னும் பகுதியும் திருக் கோவையாரில் அமைந்துள்ளது. இதற்குக் கொளு-மதிவாணுதல் வளர்வஞ்சியைக் கதிர்வேலவன் கண்ணுற்றது என்பது. அதாவது, ‘‘பிறையை ஒத்து ஒளிசிறந்த நெற்றியினை உடைய இளைய வஞ்சிக்கொம்பை நிகரானவளை ஒளிசிறந்த வேலினை உடையவன் கண்டது’‘ என்று பழைய உரையாசிரியர் விளக்குவர். இப்பாட்டின் பொருள்:
“திருவளரும் தாமரைப்பூவினையும், அழகுவளரும் நீலப்பூவினையும், ஈசர் தில்லைவரைப்பின் கண் உண்டாகிய பூங்குமிழினது நிறம் வளரும் பூவினையும், கோங்கு அரும்புகளையும் செவ்விக் காந்தட்பூக்களையும் உறுப்பாகக் கொண்டு மேம்பட்ட தெய்வமணம் வளரும் மாலை ஒரு வல்லிபோல நுடங்கி, அன்னத்தின் நடைபோல நடைவாய்ந்து, வடிவு வளரும் காமனது வெற்றிக்கொடிபோன்று விளங்குகிறது, என்ன வியப்போ என்றவாறு”.
அதாவது, தாமரைப்பூ, நீலப்பூ, குமிழம்பூ, கோங்கம்பூ, காந்தட்பூ, ஆகியவை சேர்ந்து ஒரு மாலையாக அமைந்ததன்றி, அது ஒரு கொடிபோல அசைந்து அன்னநடை நடந்து வருகிறதே, என்று தலைவியின் தோற்றத்தைப் பார்த்துத் தலைவன் வியப்பதுபோல் அமைந்திருக்கிறது இந்தப்பாடல்.
இதற்குப் பழைய உரை, ‘‘அழகுமிக்க தாமரைப்பூவினையும், சிறப்புடைய நீலப் பூவையும், சிவனுடைய சிதம்பரத்தில் நிறமிகுந்து பொலிவினைஉடைத்தாகிய குமிழம்பூவையும் கோங்கு அரும்புகளையும் செவ்விக் காந்தட்பூக்களையும் இப்புட்பங்களை அவயவமாகக் கொண்டு (எங்ஙனமெனில், தாமரைப்பூவை முகமாகவும், செங்கழுநீர்ப்பூக்களைக் கண்களாகவும், குமிழமலரை நாசியாகவும், கோங்கரும்புகளை மார்புகளாகவும், செவ்விக்காந்தட் பூக்களைக் கரங்களாகவும், இப்படி அவயவமாகக் கொண்டு) உயர்ந்த தெய்வ வாசனை மிக்க மாலை ஒரு வல்லி சாதகக்கொடிபோல நுடங்கி அன்னத்தின் நடைபோல நடையும் வாய்ந்து வடிவு மிகுந்த மாரவேளின் வெற்றிக்கொடியை ஒத்து விளங்கா நின்றது என்ன அதிசயமே’‘ என வரும்.
திருக்கோவையாரின் ஒவ்வொரு பாட்டும் இறைவனைப் புகழ்வதையே நோக்க மாகக் கொண்டுள்ளது என்ற அளவில் ஒவ்வொரு பாட்டின் உட்பொருளும் சிறப்பாகத் திகழ்கிறது. இதற்கு இப்பாட்டும் சான்று. உருவகமாகவே பாட்டு முழுதும் அமைந்துள்ளது. அதற்கும் மேலாக இனிய தமிழில் அப்பாட்டுக்கு உரையெழுதும் உரையாசிரியர்களின் உரைநடை மிகச் சிறப்பான வடிவம் கொண்டுள்ளது.
இந்த நூலுக்குப் பேராசிரியர் உரை மிகச் சிறப்பானது. மேற்கண்ட இந்த முதற்பாட்டின் உரையிலேயே, திருவளர் தாமரை என்று தொடங்கும் தொடருக்கு உரையெழுதும்போது, அவர், ‘‘திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம். என்றது அழகு… கோயிலைத் திருக்கோயில் என்றும், கோயில் வாயிலைத் திருவாயில் என்றும், அலகைத் திருவலகு என்றும், பாதுகையைத் திருவடிநிலை என்றும் வழங்கும் இத்தொடக்கத்தன எல்லாம் திருமகளை நோக்கி எழுந்தன அல்ல. அது கண்டவனுடைய விருப்பத்தானே எழுந்தது. ஆதலானும் திருவென்பது அழகென்றே அறிக. அதனால் திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கமே.’‘ என்று அவர் உரையெழுதிச் செல்லும் முறை பாராட்டுக்குரியதாக அமைகிறது.
தஞ்சைவாணன் கோவை:
திருக்கோவையார் எழுதப்பட்டுப் பிறகு நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின் எழுந்தது தஞ்சைவாணன் கோவை. பொய்யாமொழிப்புலவர் என்பவரால் ஆக்கப் பட்டது. பொய்யாமொழிப் புலவருடைய கதை, ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்பு தியாகராஜ பாகவதர் நடித்து சிவகவி என்னும் திரைப்படமாக வந்துள்ளது.
மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி.12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசர். இந்த மன்னனுக்கு அமைச்சனாகவும் படைத்தலைவனாகவும் விளங்கியவன் சந்திரவாணன் என்னும் தலைவன். பாண்டிநாட்டுத் தஞ்சாக்கூரில் பிறந்தவன் ஆதலின் தஞ்சைவாணன் என்ற பெயர் அவனுக்கு வழங்கியது. அவன் பெயரில் பொய்யாமொழிப்புலவர் இயற்றிய நூல்தான் தஞ்சைவாணன் கோவை. இதற்குச் சொக்கப்பநாவலர் என்னும் புலவர் சிறந்த உரையன்று எழுதியுள்ளார்.
அதன் முதற்பாட்டு-காட்சித் துறை பற்றியது-பின்வருமாறு:
புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்
கயலே மணந்த கமல மலர்ந்தொரு கற்பகத்தின்
அயலே பசும்பொற்கொடிநின்றதால் வெள்ளை அன்னம்செந்நெல்
வயலே தடம்பொய்கைசூழ் தஞ்சைவாணன் மலையத்திலே.
அன்னப்புள், செந்நெல் செறிந்த வயலும், வாவியும் சூழ்ந்த தஞ்சைவாணன் பொதிய வெற்பில் ஒரு கற்பகத் தருவின் பக்கத்தில் ஒரு பசும்பொற்கொடி, புயலைத் தாங்கிப் பிறை யைத் தரித்துப் போர்செய்யும் வில்லுடன் கெண்டைமீன் பொருந்திய தாமரை மலர்ந்து என் கண்ணெதிரே நின்றது என்பது பாட்டின் உரை.
ஒவ்வொரு பாட்டிற்கும் அகப்பாட்டு உறுப்பு பன்னிரண்டும் பொருந்தி வரவேண்டும் என்று முன்னர் கூறப்பட்டது. இந்த முதற்பாட்டிற்குக் காலம்-இறந்தகாலம், பயன்-காட்சி வியப்பினால் உள்ளம் மகிழ்தல், முன்னம்-தலைவியைக் கண்டு தலைவன் வியந்து பொருளைக் கூறாது உவமையே கூறுதல். மெய்ப்பாடு-மருட்கை, எச்சம்-நெஞ்சம், பொருள்வகை-ஆற்றொழுக்கு, துறை-ஒவ்வோரிடங்களில் அரிதாய் வரும் என்று உரையாசிரியர் விளக்கியுள்ளார்.
கோவை நூல்கள் எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகச் சில சான்றுகளைப் பார்த்தோம். திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை தவிர, பாண்டிக்கோவை, அம்பிகாபதி கோவை, திருவெங்கைக்கோவை, கோடீச்சுரக்கோவை எனப் பல கோவை நூல்கள் தமிழில் உள்ளன. திருக்கோவை யாரும் திருவெங்கைக்கோவையும் கோடீச்சுரக்கோவையும் இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டவை. அம்பிகாபதி கோவை யாரையும் பாட்டுடைத் தலைவனாகக் கொள்ளாது கோவையாகச் செல்லும் அகநிகழ்ச்சிகளை மட்டும் கூறுகிறது.
பிறகோவைகள் அனைத்துமே சிற்றரசர்களையும் வள்ளல்களையும் தலைவர் களாகக் கொண்டு பாடப்பட்டவை. அடிப்படைக் காரணம் சூழல்தான். நல்லதொரு சூழலின்றி நல்லதொரு இலக்கியம் வளர இயலாது. ஆதரிப்பதற்குப் பெரிய மன்னர்களேனும் வேண்டும், அதுவும்கூட முக்கியமல்ல. தமிழ்மொழி உணர்வு மக்கள் உள்ளத்தில் மேம்பட்டிருக்க வேண்டும். பாராட்டுதற்குத் தமிழ்ப்பேரரசர்களும் இல்லாத, வேற்றுமொழி அரசர்கள் ஆள்கின்ற தன்மையினால் தமிழை விரும்புவோரும் இல்லாத சூழலில், செயற்கை இலக்கியங்களைத் தவிர வேறு எவற்றை எதிர்பார்க்க முடியும்? இவையே அந்த இடைக்காலத்தின் பெருஞ்சாதனையாக உள்ளன.
இக்காலத்தில் இலக்கியக்கொள்கை முதலிய கொள்கைளும் அவற்றை ஒட்டிப் படைக்கப்படும் நூல்களும் இலக்கியமே என்று பின்நவீனத்துவக்காரர்கள் சொல்லு கின்றனர். இது ஒன்றும் புதிதல்ல, நாங்கள் பத்து நூற்றாண்டுகள் முன்பே அவ்வாறு செய்திருக்கிறோம் என்று கோவை பாடிய ஆசிரியர்கள் பெருமிதமடையலாம்.
பேராசிரியர். க.பூரணச்சந்திரன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலக்கணத்தில் விளைந்த இலக்கியம்”