நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

“இலக்கியக் கோட்பாடுகளும் மறு உருவாக்கங்களும்” மூன்று நாட்கள் தேசியப் பயிலரங்கம் (2019): விமர்சனப் பார்வையில்.

முனைவர் ஆ.சந்திரன்

Jul 3, 2021

நன்றி! என்று கூறிக் கைக்குலுக்கியவரின் முகப்பொலிவின் அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முயல்கையில், கைக்குலுக்கியவரின் வாய்வழியே வெளியேறிய சொற்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நினைத்துப் பார்க்கையில் இப்போதும் அவரது கூற்றில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. “இவரை நாங்கள் சந்திக்கலான்னு போனால், “வேலை இருக்கு அப்புறம் பார்க்கலான்னு…” சொல்லுவார். சில நேரங்களில் ஒரு சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைக்கும். அவ்ளோ பிசியானவருடன் ஒன்னறை மணிநேரத்திற்கு மேல கலந்துரையாட வாய்ப்பு ஏற்படுத்தி தந்தீங்க……” என்று தொடர்ந்த ஓர் இளம் ஆய்வாளரின் ஏக்கம் தீர்வு நோக்கி நகர்வதை உணர முடிந்தது அப்போது.

இதுதான் இல்லை… இல்லை.. இதைத்தான் தமிழ்த் துறையினர் எதிர்பார்த்தனர். அவர்களின்  நோக்கமும்கூட இதுதான். இது சாத்தியமா? நடத்த இயலுமா? வெற்றிபெறுமா? என்ற வினாக்களைச் சாத்தியமாக்கிய இருவரை இங்கு நினைவு கூர்வது நலம் என்று நினைக்கிறேன். ஒருவர் முனைவர் ஆ. முத்தையன் மற்றொருவர் முனைவர் பி.பாலசுப்பிரமணியம்.

ஒரு புறம். தமிழ்ச் சூழலில் ஆய்வு மங்கிப் போனது. தரமான ஆய்வாளர்கள் இல்லை. தரமான ஆய்வுகள் நிகழ்வதில்லை. இத்தியாதி….  இத்தியாதி…. இன்னொரு புறம்,  நல்ல நெறிகாட்டுநர் இல்லை. ஆய்வுச் சுதந்திரம் இல்லை. இத்தியாதி… இத்தியாதி…. இந்த எதிரெதிர் குற்றச்சாட்டுக்களின் மையத்தில் இன்றைய தமிழாய்வு மையம் கொண்டுள்ளது என்பது உண்மைதான். என்றாலும் இதைச் சரி செய்யும் முயற்சிகள் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்று வந்துகொண்டுதான் இருக்கின்றது. அத்தகைய முயற்சிகளின் தொடர்ச்சியாய் / ஒரு சிறு கூறாய் வடிவமைக்கப்பட்டதே “இலக்கியக் கோட்பாடுகளும் மறு உருவாக்கங்களும்” என்ற மூன்று நாட்கள் (20 – 22 ஆகஸ்டு19) தேசியப் பயிலரங்கம்.

siragu payilarangam2

இந்தப் பயிலரங்கம் துறைசார்ந்த அறிஞர்கள் = பேராசிரியர்கள் + ஆய்வு மாணவர்கள் + முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் (ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர்கள் 40 மேற்பட்டவர்கள் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது) என வடிவமைக்கப்பட்டிருந்ததே இந்தப் பயிலரங்கத்தின் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டியது. அத்துடன், கருத்துரையாளர், பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள் மற்றும் முதுகலை மாணவர்களிடையே நடைபெற்ற விவாதங்களில் இளங்கலைத் தமிழ் மாணவர்களைப் பங்கெடுக்கச் செய்வதன் மூலமாக அவர்களுக்கும் இலக்கியம் குறித்த புதிய தெளிவினைத் தொடக்க நிலையிலேயே அறிவதற்குரிய ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது இப்பயிலரங்கின் புதிய அம்சமாகும். இது சடங்கிற்காக நடத்தப்படும் பயிலரங்கம் இல்லை என்பதைப் பறைசாற்றுவதாய் மூன்றாம் நாள் இறுதியில் நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்பாளரின் பின்னூட்ட உரைகள் அமைந்தன. அவ்வுரைகளில் சுட்டப்பெற்ற கருத்துக்களில் மிக முக்கியமானவையாகப் பின்வரும் கருத்துக்களைக் கருதுகின்றேன்.

“இலக்கியக் கோட்பாடுகளும் மறு உருவாக்கங்களும்” மூன்று நாட்கள் தேசியப் பயிலரங்கம் என்ற இந்தப் பயிலரங்கத்தின் அழைப்பிதழைப் பார்த்ததும் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். கலாச்சார மூலதனம் பியூர் பூர்தியுவின் கோட்பாடு – ஓர் அறிமுகம் – முனைவர் து.ரவிக்குமார்,  கெடலரும் மரபும் மீட்சியும் – பேரா.சிவசு, இன்றைய மார்க்சியம் – வளர்ச்சியும் சவால்களும் – திரு.எஸ். பாலசந்திரன், தமிழ்த் திணைக்கோட்பாடும் சூழலியல் திறனாய்வும் – திரு. பாமயன், சமகாலப் பெண்ணியத் திறனாய்வின் வளர்ச்சிப்போக்குகளும் சவால்களும் – திருமிகு சுகிர்தராணி, உளப்பகுப்பாய்வுக் கோட்பாடும் இலக்கிய பயிற்சியும் – முனைவர் அரங்க நலங்கிள்ளி, இலக்கிய இனவரைவியல் – முனைவர் ஞா.ஸ்டீபன், கோட்பாட்டுப் பின்புலத்தில் இலக்கியங்களின் உண்மைத்துவத்தைப் புரிந்து கொள்ளல் – முனைவர் த.விஷ்ணுகுமாரன், டெரிடாவின் எழுத்தியல் – திரு. ஜமாலன்,  அமைப்பியல் – பின் அமைப்பியல் – பின் நவீனத்துவம் – திரு.எஸ்.சண்முகம், பெரியாரியம் அம்பேத்காரியம் தமிழ்த்தேசியம் முன்வைக்கும் தலித்தியமும் இன்றைய போக்குகளும் – திரு. அழகியபெரியவன், தொல்காப்பியத்தில் திணையியல் பார்வை – முனைவர் துரை. சீனிச்சாமி, மாந்திரிக எதார்த்தவாதம் – முனைவர் ஆ.பூமிச்செல்வம், இலக்கிய மானிடவியலும் பின்னை நவீனத்துவமும் முனைவர் ஆ.செல்லப்பெருமாள், பின்காலனித்துவக் கோட்பாடுகள் – முனைவர் க.பஞ்சாங்கம், மூலப்படிவ வாசிப்பு – முனைவர் தி.கு.ரவிச்சந்தின் என்ற நீண்ட பெரும் பட்டியலைப் பார்த்ததும் ஏதோ மூத்தப் பேராசிரியர்கள் தான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்தால் எல்லோரும் இளைஞர்களாக இருந்தார்கள். அழகான நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு நன்றி” என்று கூறியதைத்தான்.

பொதுவாகப் இம்மாதிரியான பயிலரங்கம் நடத்துவதில் உள்ள மிக முக்கியமான சிக்கல் ஒன்று உண்டு என்றால் அது திட்டமிடப்பட்ட அழைப்பாளர் உரிய நேரத்தில் நிகழ்விடத்தில் இருக்கச் செய்வது. பெரும்பாளும் இந்த இடத்தில் திட்டமிட்டவாறு நடத்தி முடிப்பதில் எப்போதுமே ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரு பதட்டம் இருந்துகொண்டுதான் இருக்கும். அதுவும் மூன்று நாட்கள் பதினாறு அழைப்பாளர்கள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட் நேரத்தில் அமர்வில் இருப்பது அல்லது அவர்களை இருக்கச் செய்வது இரண்டுமே சவால் நிறைந்த ஒரு பணியாகத்தான் இருக்கும். ஏனெனில் நிகழ்விடத்திற்கும் அழைப்பாளர் இருப்பிடத்திற்கு இடையிலான பயண இடைவெளி மற்றும் அவருடைய பணியின் தன்மைகள் இந்த சிக்கலை ஏற்படுத்தும் காரணிகளாக அமைவதுண்டு. இது பொதுவாக கருத்தரங்குகள் பயிலரங்குகளில் சாதாரணமாக பார்க்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் இந்தப் பயிலரங்கில் அழைப்பாளர்களின் வருகையில் சில சுவாரசியங்களைக் காண முடிந்ததது. இந்த கட்டுரையில் அதை இடைசெருகலாகத் தான் சேர்க்கிறேன் (இந்தப் பத்தி 11-11-2019 1.40 am சேர்க்கப்பட்டது). என்றாலும் இதற்கான அவசியம் உள்ளதாகவே எனக்குத் தோன்றுகின்றது. முதலில் சிவசு  ஐயாவைப் பற்றிச் சொல்லாம் என்று நினைக்கின்றேன்.

திருநெல்வேலியில் இருந்து வருகைப்புரிந்த அவருடைய வருகை உண்மையில் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. மூத்த அறிஞரான அவர் (வயதிலும் வாசிப்பிலும்) தன்னுடைய தற்போதைய தொடர் நிகழ்வாகக் புதன்கிழமை தோரும் இடை நிறுத்தம் செய்யாமல் செய்துவரும் தன்னுடைய இலக்கிய வாசிப்பு / விமர்சன நிகழ்ச்சி எவ்விதத்திலும் தடைபடக் கூடாது அதே நேரம் ஒத்துக் கொண்ட நிகழ்வில் கலந்துகொண்டே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்ததது உண்மையில் தமிழ்ச் சூழலில் அரிதாகப் பார்க்கக் கூடிய ஒன்று. ஒருங்கிணைப்பாளர்களுக்குச் சிரமம் அளிக்காமல் திரும்பிச்செல்ல உரிய தொடர்வண்டி இன்மையைச் சுமையாகக் கருதாமல் தன்னுடைய சொந்த காரிலே ஒரு நாள் முன்கூட்டியே வந்தது உள்ளபடியே தமிழ் ஆய்வாளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பாடம் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. ஏனெனில் ஒரு நிகழ்வில் பெயர் கூற விரும்பவில்லை ஒரு பெண் படைப்பாளியை அழைத்திருந்தோம் ஒரு நிகழ்விற்கு 100 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வருவதற்று அவருக்கு கால் டேக்ஸி தேவைப்பட்டது. ஆனால் தன்னுடைய வாசிப்பு அனுபவத்தை எப்படியாவது இளந்தலைமுறையினருக்குப் போய்ச் சேரவேண்டும் என்று விரும்பும் இம்மாதிரயான நபர்களிடம் இன்னும் கற்கவேண்டியது நிறைய உள்ளது.

அடுத்ததாக துரைச் சீனிச்சாமி ஐயா. இவரை நான் வரவேற்ற விதம் உண்மையில் ஒரு சிறப்பு அழைப்பாளரை வரவேற்கும் முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இன்னும் எனக்குத் தோன்றுகின்றது. அவர் நிகழ்வில் கலந்துகொள்ள சம்மதித்த போதே தான் மூன்றுநாளும் கல்லூரியில் தங்கலாம்னு இருக்கேன் தங்க முடியுமா? என்றுதான் ஒரு டிமாண்டை ஒருங்கிணைபாளிடம் வைத்தார். மூத்த அறிஞர் என்றால் இப்படித்தான்  நிகழ்விடத்திற்கு வந்து செல்ல வேண்டும் என்ற தமிழ்ச் சூழலில் உள்ள வழக்கமான நடை முறைகளை / நெறிமுறைகளை உடைத்தெரிந்தார் என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் தொடர்வண்டிக்கு முன்பதிவு செய்ய வேண்டாம் பேருந்திலோ அல்லது தொடர்வண்டியிலோ நானே ஏற்பாடுசெய்து கொண்டு வந்துவிடுகின்றேன் என்றவர். நிகழ்வின் இரண்டாம் நாள் அமர்வில்தான் அவருக்கான நேரம் ஒதுக்கட்டிருந்தது. ஆனால் முதல் நாள் காலை 10.33 மணிக்கு நிகழ்விடத்தின் வெளியில் நின்று கொண்டிருந்த என்னை அழைத்து “தம்பி இங்க பயிலரங்கம் எங்கு நடக்கு” என்ற அவருடைய அந்த சத்தம் இன்னும் என் செவிகளில் ஒளித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அவ்வளவு ஒரு எளிமை. அத்துடன் நில்லாமல் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மூன்று நாட்கள் நிகழ்வில் இருந்தது இடைஇடையே தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டது தமிழ்ச் சூழழுக்குத் தேவையான ஒன்றுதான் என்று எனக்குப்படுகின்றது.

அடுத்ததாகப் விஷ்ணுகுமரன் ஐயாவைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். அவரை அழைத்த போதே “தம்பி நான் அவசியம் வரணுமான்னு பார்த்துக்குங்க கூப்பிடனும்னு கூப்பிடாதீங்க” இதைத் தான் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அவரிடமிருந்து எதிர்கொண்ட முதல் பதில். கோட்பாடுகள் தொடர்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் பற்றிய ஒரு நீண்ட பட்டியலை நாங்கள் தயாரித்த போது முக்கியமானவர்கள் என்ற பகுதியில் இடம்பெற்றிருந்த பெயர்களில் அவருடைய பெயர் இடம்பெற்றிருந்தது. எனவே “ஐயா நீங்க அவசியம் வரவேண்டும்” என்ற அழைப்பை ஏற்றத்துடன் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நாளுக்கு ஒரு நாள் முன்னரே ஒர் அழைப்பாளர் தவிர்க்க இயலாத காரணத்தினால் திடீரென வராமல் போகவே “ஐயா உங்களால் வர முடியுமா“ என்ற ஒருங்கிணைப்பாளரின் வேண்டுகோளைத் தட்டாமல் சரியான நேரத்திற்குள் வந்துதுடன் அவருடைய உரையும் விவாதமும் மாலை 7.30க்கு மேல் நீடித்தது என்பதும் இங்குச் சுட்டத்தக்கனவாகும்.

பொதுவாகப் பயிலரங்கம் என்றாலே 30 அல்லது 40 நபர்களைத் தெரிவுசெய்து பயிற்சியளித்தல். பயிற்றுவிக்கப்பட்டதை அவர்கள் எவ்வாறு உள்வாங்கினார்கள் என்று சோதித்துப் பார்த்தல் என்ற முறையில்தான் அமையும். ஆனால் அவ்வாறு இல்லாமல் 150 – க்கும் சற்று மேற்பட்ட எண்ணிக்கையில் கலந்துகொண்ட ஆய்வாளர்களுடன் அதே அளவிலான இளங்கலை மாணவர்களை உள்ளடக்கிய இப்பயிலரங்கில் மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் என்ற படிநிலை வளர்ச்சிகளுக்கு ஏற்ப கருத்துரைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. என்றாலும், ஓர் அமர்வுக்கு மட்டும்  முன் கூட்டியே பல்வேறு பின்புலத்துடன் கூடிய ஒன்பது கதைகள் ஆய்வாளர்களுக்குப் படிக்கத் தரப்பட்டு அக்கதைகளை ஒரு கோட்பாட்டு பின்புலத்தில் பொருத்தி விவாதிக்கப்பட்டது. இம்முயற்சி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

siragu payilarangam1

அடுத்ததாக, மூன்றாம் நாள் இறுதியில் பங்கேற்பாளர்களிடம் இருந்து எழுதிவாங்கப் பெற்ற பின்னூட்ட உரைகளில் இடம்பெற்றிருந்த கருத்துக்கள் மிக முக்கிய அம்சங்களாகக் கருதுகின்றேன். அவற்றின் சாரம்சம்,

  1. நேர மேலாண்மை  சிறப்பாக இருந்தது.
  2. விவாதத்திற்கு உரிய போதிய நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது சிறப்பு.
  3. ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றன.
  4. கருத்துரையாளர்களின் தெரிவு சிறப்பாக இருந்தது.
  5. வினா எழுப்பியவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
  6. பங்கேற்பாளர்களிடம் இருந்து கேட்கப்பெற்றவற்றில் சில அடிப்படையான சாதாரண வினாக்களாக இருந்தன. அவையும் ஆழமான வினாக்களாக இருந்திருப்பின் பயிலரங்கம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
  7. பங்கேற்பாளர்களுக்குத் தங்கும் இடவசதி போதுமானதாக (எதிர்பார்த்த அளவில்) இல்லை. மற்றபடி நிகழ்ச்சி ஏற்பாடு அருமை.
  8. இப்பயிலரங்கில் தமிழவன் போன்ற இன்னும் முக்கியமான சில ஆளுமைகளைக் கருத்துரையாளர்களாக இணைத்திருக்கலாம். அத்துடன், இன்னும் ஓரிரு நாட்கள் நீட்டித்திருக்கலாம்.
  9. கருத்துரையாளர்களின் கருத்துரைகளுக்கு நன்று, சிறப்பு, அருமை என்று மதிப்பீடு அளிக்கின்றேன். (மோசம் (1-2), பரவாயில்லை (3-4), நன்று (5-6), சிறப்பு (7-8), அருமை 9-10 மதிப்பெண் அடிப்படையில்)

என்பது போன்ற கருத்துக்கள் பங்கேற்பாளரின் அறிவுப் புலத்திலிருந்து வெளிப்பட்டவை. இக்கருத்துக்கள் பயிலரங்கம் செயல்பட்ட தன்மையை ஆரோக்கியமான விமர்சனத்திற்கு உட்படுத்தி இருந்ததுடன் அடுத்தடுத்து நடக்க வேண்டிய பயிலரங்கங்களில் கலைய வேண்டிய குறைகளையும் சுட்டியது. இதை நல்லதொரு தொடக்கமாகவே நான் கருதுகிறேன்.

இந்த இடத்தில் சில விசயங்களைக் கூறுவது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்காதென்று நினைக்கின்றேன். இந்தப் பயிலரங்கம் சரியாக 9 மணிக்குத் தொடங்கி முதல் இரு நாட்கள் (20, 21 – 08 – 19) இரவு 7.30 வரை தொடர்ந்து நடந்தது. இடையே அதிகபட்சமாக ஏறக்குறைய ஓர் ஒன்றரை மணிநேரம் மட்டுமே (தேநீர், உண்டாட்டு) இடைவேளை விடப்பட்டிருக்கும். தேநீர் இடைவேளையின் போது “நண்பர்களே டீ குடித்துவிட்டீர்களா? என்றதும், இப்ப… உள்ளே போகனும் அதானே!” என்ற உரையாடல்களே அதற்கு நேரடிச் சாட்சியங்களாகும் (I witness).  அத்துடன், தொடக்க விழா நிறைவு விழா என்ற வழக்கமான மேடை சம்பிரதாயங்கள் / நேர விரயங்கள் / புகழ்மாலைகள் தவிர்க்கப்பட்டு / உடைபட்டு அனைத்தும் ஆய்வு நோக்கில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கருத்துரையாளர் ஆய்வாளர் இடையிலான இடைவெளி அற்ற ஒரு சூழலில் அரங்கத்தை அமர்வுக்கு அமர்வு இயன்றவரை ஒருங்கிணைப்பாளர்கள்  வட்டம், அரைவட்டம், சதுரம், முக்கோணம் முதலிய பல வடிவங்களில் மாற்றி அமைத்தமை புதிய அனுபவத்தை ஏற்படுத்தியது.

பங்கேற்பாளர்களிடம் பணம் பெற்றுப் பயிலரங்கம் நடத்துவதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. இப்போதும் இல்லை. என்றாலும், இந்த நிகழ்ச்சி பணம் பெற்று நடத்தியதை நான் உளப்பூர்வமாகவே வரவேற்கின்றேன். பொதுவாகப் பல்கலைக்கழகங்கள் தனியாகவும் அல்லது நான்கைந்து கல்லூரிகள் / நிறுவனங்களுடன் இணைந்தோ நடத்தும் பயிலரங்கம், கருத்தரங்கம் போன்றவற்றிற்கு ஆயிரம் இரண்டாயிரம் எனப் பணம் பெற்று நடத்தும் இன்றைய சூழலில்  எவ்வித நிதி ஆதாரமும் இல்லாத சூழலில் வேறு வழியின்றி பங்கேற்பாளர்களிடம் பேராசிரியர், ஆய்வாளர் என்ற பிரிவில் குறைந்த தொகையும் தெரிந்த நண்பர்களிடம் நன்கொடையாகவும் கல்லூரியில் இருந்து பெறப்பட்ட சிறிய தொகையும் போதாமைக்குத் தம்முடைய பாக்கெட்டிலிருந்து போட்டும் பற்றாக்குறை என்று வந்ததால் “எதையாவது விற்றாவது சிறப்பாக நடத்தலாம்” (பி.பாலசுப்பிரமணியம்  சாரின் அந்த வார்த்தைதான் உண்மையில் இந்தப் பயிலரங்கின் நிகழ்வுகள் பற்றி உண்மைப் பதிவுகளை ஆவணப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியது. ஏனெனில் அதற்கு முன்னர் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் அவர் அவ்வாறு செய்திருக்கிறார். குறிப்பாகச் சென்ற ஆண்டு நானும் முத்தையன் சாரும் இணைந்து நடத்திய கவிதைப் பயிலரங்கம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான சிறுகதைப் போட்டி நடத்தி சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து “விடலை” என்னும் பெயரில் நூலாக்கம் செய்யப்பெற்றது. அப்போது அவர் தன்னுடைய கைகாசைச் செலவு செய்தமையை நான் நேரில் பார்த்திருக்கிறேன்) என்று முன்னின்று நடத்திய பேராசிரியர் முனைவர் பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தூய நெஞ்சக்கல்லூரி பேராசிரியர்களுக்கும், கல்லூரியின் நிர்வாகிகளுக்கும், குறிப்பாகப் பிரிவு இரண்டின் கூடுதல் முதல்வர் முனைவர் கே.ஏ. மரிய ஆரோக்கியராஜ் அவர்களுக்கும் மனமாற ஒரு பாராட்டைத் தெரிவிப்பதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன்.

பயிலரங்கம் நடத்தியதுடன் நில்லாமல் பயிலரங்கில் விவாதிக்கப்பட்ட ஆய்வாளர்களின் கருத்துரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்யும் பணியும் நடைபெற்று வருவதும், பங்கேற்ற ஆய்வாளர்களை ஒருங்கிணைக்க ஏதுவாக புலனம் குழு (whatsapp group) ஏற்படுத்தித்  தொடர்ந்து இம்மாதிரியான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் பங்கெடுக்க வழிவகை செய்திருப்பதுமான செயல்கள் உள்ளபடியே நல்லதொரு செயல்பாடுகளாகவே படுகின்றன.

காலம் / நிதி உள்ளிட்ட சில காரணங்களால் பயிலரங்கில் முனைவர் து.ரவிக்குமார், எஸ் பாலசந்திரன், பிரேம், தமிழவன் போன்ற வருகைக்கு ஒப்புகொண்ட / அழைக்க நினைத்தவர்கள் வருகை புரிந்திருந்தால் நிகழ்வு மேலும் சிறப்படைந்திருக்கும்.

siragu payilarangam3

இப்பயிலரங்கம் இத்துடன் நின்றுவிடக்கூடாது. யு.ஜி.சி போன்ற அமைப்புகளிடம் உதவிபெற்று அடுத்தடுத்த கட்டத்திற்கு இதை வளர்த்தெடுக்க வேண்டும். உங்களைப் போன்ற இளைஞர்கள் அதற்கு முன்வரவேண்டும்…. என்பன போன்ற சில நல்ல கருத்துக்களை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அளித்துச் சென்றமை (முக்கியமாக சிவசு, அரங்க. நலங்கிள்ளி, செல்லபெருமாள், பூமிச்செல்வன்…) குறிப்பிடத்தக்கனவாகும்.


முனைவர் ஆ.சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- ““இலக்கியக் கோட்பாடுகளும் மறு உருவாக்கங்களும்” மூன்று நாட்கள் தேசியப் பயிலரங்கம் (2019): விமர்சனப் பார்வையில்.”

அதிகம் படித்தது