ஜூலை 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

இலக்கியங்களில் தாவரங்கள்

இராஜா வரதராஜா

Jun 8, 2019

siragu-sanga-ilakkiyam1

தமிழ் மொழியின் இலக்கியப் பரப்பில் காலத்தில் முற்பட்ட இலக்கியம் சங்க இலக்கியமாகும். பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரங்களில் தமிழ் பேரவை அமைத்துத் தமிழ்மொழியின் இலக்கியப் பேரவை அமைத்துத் தமிழ்மொழியின் இலக்கியப் பழைமையினைக் காத்தனர். இப்பேரவைப் புலவர்களால் பாடப்பட்ட இலக்கியங்களின் தொகுப்புச் சங்க இலக்கியம் ஆகும்.

சங்க இலக்கியம்- வேறுபெயர்கள்

உயர்தனி இலக்கியம், சங்க இலக்கியம், சங்கத்தமிழ், சங்க நூல், சங்கப் பனுவல், சான்றோர் செய்யுள், செவ்வியல் இலக்கியம், திணை இலக்கியம், திணைப்பாட்டு, தொகையும் பாட்டும், பண்டைத்தமிழ், பண்டைய இலக்கியம், பதினெண் மேற்கணக்கு, பழந்தமிழ் இலக்கியம், பழைமை இலக்கியம் என்றெல்லாம் சங்க இலக்கியம் வழங்கப்படுகின்றது.

சங்க காலம் கி.மு. 500 முதல் கி.பி 100 என்பார் மு. வரதராசனார். இச்சங்க இலக்கியம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனும் இரு தொகுப்புகளாக அமைகின்றது.

எட்டுத்தொகையில் குறுந்தொகை குறிப்பிடத்தக்க அக நூலாகும். அந்நூலின் தாவரச் செய்திகள் பற்றி இக்கட்டுரை அமைகின்றது.

குறுந்தொகை அறிமுகம்

குறுமை+தொகை-குறுந்தொகை. குறுமை-சிறிய, தொகை- தொகுக்கப்பட்டது. சிறிய அளவுடைய அடிகளால் அமைந்த பாடல்களின் தொகுப்பு என்பதால் ‘குறுந்தொகை’ எனப்பட்டது.

அடி அளவினாலும் வேறு சில ஏதுக்களாலும் எட்டுத்தொகை நூல்களில் முதலில் தொகுப்பட்டது என்பர்.

இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். தொகுப்பித்தோன் உப்பூரிக்குடி கிழாராக இருக்கலாம் என்பர். இத்தொகையிலுள்ள பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர்.

402 பாடல்களுள் ஆசிரியர் பெயர் தெரியாப்பாடல்கள் 10 ஆகும். உவமையால் பெயர் பெற்றோர் 18 பேர். பாடல்களைப் புனைந்த 205 புலவர்களுள் 11 பேர் பெண்பாற் புலவர்கள் ஆவர். அதிக எண்ணிக்கையிலான பாடல்களைக் கபிலர் பாடியுள்ளார். இவருடைய பாடல்களாக 28 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

தாவரவியல்

siragu-sanga-ilakkiyam2

மனிதர்கள் மற்றும் விலங்குகள் உயிர் வாழ்வதற்கான வாழ்வியல் தேவையான குறிப்பிடத்தக்க அளவு உயிர்வளி மற்றும் உணவு ஆகியவை தாவரங்களின் மூலமே கிடைகின்றது.

ஆஸ்திரிய நாட்டுத் துறவி கிரிகர் ஜோகன் மெண்டல் 1822-1884, தன் மடத்தின் தோட்டத்தில் வளர்ந்த பட்டாணிக் செடியில்  பைசம் சட்டைவம்  பல வேறுபாடுகளை உடைய பண்புகளைக் கி.பி. 1865இல் கண்டறிந்தார்.

விதை வடிவம், நிறம், மலரின் நிறம். கனி வடிவம், கனி நிறம், மலரின் அமைவிடம் தண்டின் உயரம் ஆகியவற்றைக் கண்டறிந்தார். இது தாவரவியல் ‘தாவர அறிவியல்’, தாவர உயிரியல் என்று அழைக்கப்படுகின்றது.

கி. பி. 19 ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ் 1858-1937   தாவரங்களுக்குரிய உயர்வை விஞ்ஞானக் கருவிகள் கொண்டு எடுத்துக்காட்டி மெய்ப்பித்தார்.

உயிரினப் பன்மயம்

பல்லுயிரியம், உயிர்ப் பல்வகைமை, உயிரியல் பல்வகைமை உயிரினப்பன்மயம் என்றெல்லாம் ‘பையோ டைவர்சிட்டி’ மொழிபெயர்க்கப்பட்டுகின்றது.

உயிரினப் பன்மயம் என்பது புவியியல் எல்லாப் பகுதிகளிலும் பல்வேறு சூழல்களில் வாழும் பலவகையான உயிரினங்களைப் பற்றி விவரிக்கப்பயன்படுத்தும் ஒரு சொல்லாகும்.

உயிரினங்களின் வடிவம், நிறம், பருமன், நடத்தை போன்ற தன்மைகளைக் கூறுதல் உயிரினப் பன்மயம் எனப்படுகின்றது. உயிரினப் பன்மயத்தைச் சங்க இலக்கியங்களில் காணலாம்.

தொல்காப்பியம் கூறும் உயிரினப் பன்மையம்

தமிழர்கள் இயற்கையுடன் இயைந்து பண்டுதொட்டே வாழந்து வரும் சிறப்பிற்குரியவர்கள். புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றோடு தமிழர்களுக்கு பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல தொடர்புகள் இருந்திருக்கின்றன. அவனுடைய சமூக, பண்பாட்டு நிகழ்வுகளில் கூட தாவரங்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்திருக்கின்றன.

இன்று தாவரவியல் என்று சொல்லப்படக்கூடிய அறிவியலில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தெளிவு பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்.

தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை கிரிகர் ஜோகன் மெண்டல் கண்டுபிடிப்பதற்கு முன்பே தொல்காப்பியர் தொல்காப்பியத்தில்,

‘‘ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’’ -தொல் . பொருளதிகாரம் , 1526

என்றும்,

‘‘புல்லும் மரனும் ஓர் அறிவினவே

பிறவும் உலிவே அக்கிளைப் பிறப்பே’’-தொல். பொருளதிகாரம், 1527

என்றும் குறிப்பிடுகின்றார்.

உடம்பால் மட்டும் அறிவன ஓர் அறிவு உயிர்கள். அவை புல், மரம், செடி, கொடி, தாவர இனங்கள் அனைத்தும் ஆகும்.

பண்டைக்காலத் தமிழர் வாழ்வியல்

siragu-sanga-ilakkiyam3

பண்டைத் தமிழர் வாழ்வில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை அமைத்து கொண்டனர்.

முதற்பொருள் நிலமும் பொழுதும் ஆகும். இன்றைய மண்ணியல் என்ற அறிவியல் ஆய்விற்கு முன்பே, தமிழர்கள் நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்தாகப் பிரித்தனர்.

கருப்பொருளைத் தொல்காப்பியம்,

‘‘தெய்வம், உணாவே, மா, மரம், புள், பறை,

செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவும் கரு என மொழிப’’-தொல். பொருளதிகாரம்-964

என்று கூறுகின்றார். இதில் ‘மரம்’ என்ற தாவர இனம் சுட்டப்படுகின்றது.

நாற்கவிராச நம்பி,‘‘ஆரணங்கு, உயர்ந்தோர், அல்லோர், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணா, பறை, யாழ், பண், தொழில் எனக் கருஈரேழு வகைத்து ஆகும்’’ -அகப்பொருள் விளக்கம், அகத்திணையியல் 19 என்று பதினான்கு கருப்பொருளைச் சுட்டுகின்றார். இதில் பூ, மரம் என்ற இரு தாவர இனம் காட்டப்படுகினறது.

மலர்கள்

siragu malargal1

மனிதர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை பல நிலைகளில் தமிழர்களின் முக்கிய அங்கமாக மலர்கள் இருக்கின்றன. நறுமணம் உடைய மலரே சிறப்பிற்குரியது. இன்னா நாற்பதும்,

‘‘நாற்றமிலாத மலரின் அழகு இன்னா’’

என்கின்றது.

ஒவ்வொரு நிலத்திற்குரிய மலர்களை அகப்பொருள் விளக்கம் கூறுகின்றது.

குறிஞ்சி நிலம்- வேங்கைப்பூ, காந்தள் பூ

முல்லைநிலம்-குல்லைப்பூ, முல்லைப்பூ, தோன்றிப்பூ, பிடவம்பூ

மருதநிலம் -தாமரை பூ, கழுநீர்ப்பூ, குவளைப்பூ

நெய்தல் நிலம்- நெய்தல்பூ, தாழம்பூ,முண்டகப்பூ, அடம்பம் பூ

பாலை நிலம்- குராம்பூ, மராம்பூ

மார்கழி மாதத்தை ‘பீடை மாதம்’ என்பர், ‘பீத மாதம்’ என்ற சமஸ்கிருதச் சொல்லே ‘பீடை’ எனச் சிதைந்து விட்டது. ‘பீத’ என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘மஞ்சள்’ என்று பொருள் மார்கழியில் மஞ்சள் வண்ணப் பூக்களைத் தரும் தாவரங்கள் அதிகமாகப்பூக்கும். அதனால் ‘பீத மாதம் ‘என்பர்.

தலைவனின் நாட்டு வளத்தைச் சொல்ல,

‘‘கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’’-தேவகுலத்தார்-03

‘கரிய கொம்புகளையுடைய குறிஞ்சிப்பூ’ என்று கூறுகின்றது.

‘‘அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை

மேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகை

பூக்கொய் மகளிரின் தோன்றும் நாடன்’’

-கொல்லன் அழிசி, 26என்றும்,

 ‘‘. . . . . .        . . . . . முன்றில்

நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்’’-கோப்பெருஞ்சோழன்-53

என்றும் , நாட்டு வளத்தைக் கூறக் குறிஞ்சிப்பூ, வேங்கை மலர், புன்க மலர் ஆகியன பற்றிக் ‘கரிய கொம்புடைய குறிஞ்சிப்பூ’

‘கரிய அடியை உடைய வேங்கை மரப் பூ’

‘புன்க மரத்தின் மலர்கள் உதிரிந்து பரந்த வெள்ளிய மணற்பரப்பு’

என்று நிறம், வடிவம் சுட்டப்படுகின்றது.

‘‘. . . . . .     . . . .            மனை மரத்து

எல்லுறும் மௌவல் நாறும்

பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே’’

-பரணர்,19

என்பதில் முல்லை மலர் மனம் வீசும் கரிய கூந்தலை உடையவள் என்கிறது.

‘‘நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்’’

            -பனம்பாரனார்-52

நரந்தம் பூவின் மணம் கமழ்கின்ற கரிய கூந்தல்.

‘‘கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை

நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ

ஐது தொடை மாண்ட கோதை போல

நறிய நல்லோள் மேனி’’-சிறைக்குடி ஆந்தையார்-62

காந்தள் மலர், முல்லை மலர், குவளை மலர் போல , நறுமணத்தை உடைய தலைவியின் உடல்

            ‘‘வேங்கையும் காந்தளும் நாறி

            ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே’’-மோசிகீரனார்-சபு

வேங்கை மலரினது மணத்தையும், காந்தள் மலரினது மணத்தையும் ஒருங்கே பெற்றவள். ஆம்பல் மலரைக் காட்டிலும் குளிர்ச்சியை உடையவள்.

            ‘‘ மா என மடலும் ஊர்ப் பூ எனக்

            குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப’’-பேரெயின் முறுவலார்-17

மடல் ஊரும் போது எருக்கம் பூவை ஆடவர் சூடினர்.

‘‘ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன’’  குறுந்-46  , ‘‘கருங்கால் வேங்கை வீ உகு துறுகல்’’  குறுந்-47 ,‘‘குவளையொடு பொதிந்த குலிவி நாறு நறு நுதல்’’  குறுந்- 59, ‘‘வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகற் சில் நீர்’’  குறுந்-56

என்றெல்லாம் குறுந்தொகையில் மலர்களின் நிறம், வடிவம், மணம், உறுப்புகள் தாவரவியல் முறையில் சுட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

நறுமண சிகிச்சை என்பது இன்றைய விஞ்ஞான மருத்துவம், பண்டைய தமிழர் இதனை அறிந்திருந்தனர்.

மரங்கள்

siragu-sanga-ilakkiyam4

ஒவ்வொரு நிலத்திற்குரிய மரங்களை அகப்பொருள் விளக்கம் விரிவாகக் கூறுகின்றது. அவை பின்வருமாறு,

குறிஞ்சி நிலம்- சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில்

முல்லைநிலம்-கொன்றை, காயா, குருந்தம்

மருதநிலம்-காஞ்சி, வஞ்சி, மருதம்

நெய்தல் நிலம்- கண்டல், புன்னை, ஞாழல்

பாலைநிலம்- உழிஞை, பாலை, ஓமை, இருப்பை.

பண்டைய தமிழர் மரங்களைப் புனிதத் தன்மையோடு பார்த்தனர், பாதுகாத்தனர், இன்றைய வனவியல் கோட்பாடு சங்க காலத்திலேயே உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

மரத்திற்கு விளக்கத்தைத் தொல்காப்பியர்,

‘‘புறக் காழனவே புல் என மொழிப

அகக் காழனவே மரம் என மொழிப’’-தொல் . பொருளதிகாரம் -1585

என்ற நூற்பாவில் தருகின்றார்.

‘‘தோடே மடலே ஓலை என்றா

ஏடே இதழே பாளை என்றா

ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்

புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர்’’-தொல் . பொருளாதிகாரம்-1586என்று,

புல்வகை சார்ந்த மர உறுப்புகள் கூறப்படுகின்றன.

‘‘இவையே முறியே தளிரே கோடே

சினையே குழையே பூவே அரும்பே

நனை உள்உறுத்த அனையவை எல்லாம்

மரனொடு வரூஉம் கிளவி என்ப’’-தொல். பொருளதிகாரம் ,1587

என்று, மர உறுப்புகளை கூறுகின்றது.

‘‘குருகு உறங்கும் இன் நிழற் புன்னை’’  குறுந்.5, ‘‘வாகை வெண் நெற்று ஒலிக்கும்’’  குறுந்-7, ‘‘காஞ்சி ஊரன் கொடுமை’’  குறுந்-10,  ’’தொல் மூது ஆலத்துப் பொதியில்’’  குறுந்-15, ‘‘புது பூங் கொன்றைக் கானம்’’  குறுந்-21, ‘‘கருங்கால் வேம்பின்’’  குறுந்-24,  ‘‘வெண்கோட்டு அதவத்து’’  குறுந்-24,  ’’மென் சினை யாஅம் பொளிக்கும்’’  குறுந்.37,’’செவ்வி மருதின் செம்மலொடு’’  குறுந்.50,’’மடவமன்ற தடவுநிலைக் கொன்றை’’  குறுந்.66, ‘‘ நறுமா கொன்று ஞாட்பில் போக்கிய’’  குறுந்.73, ‘‘பொரிதான் ஓமை வளி பொரு நெடுஞ்சினை’’  குறுந்-79, ‘‘பசுமையான அரும்புகளை உடைய ஞாழல் ‘‘  குறுந்-81, ‘‘தீம் பழம் தூங்கும் பலவின்’’  குறுந்-83  ,’’மன்ற மரா அத்தபோம்’’  குறுந்.87, ‘‘அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு’’  குறுந். 96

என்று புன்னை, வாகை, காஞ்சி, ஆலம். கொன்றை, வேம்பு, அத்தி, யா, மருதம், மாமரம், ஓமை, ஞாழல், பலாமரம், வேங்கை போன்ற மரங்கள் பற்றிக் குறுந்தொகை கூறுகின்றது.

செடிகள்

siragu-sanga-ilakkiyam5

செடிகள் பற்றிய செய்திகளும் குறுந்தொகையில் காணக்கிடக்கின்றன.

‘‘அம்காற் கள்ளி அம்காடு இறந்தாரே’’  குறுந்-16, ‘‘அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து மாநீர்ச் சேர்ப்ப’’  குறுந்.49, ‘‘கூன் முள் முண்டகக் கூர்ம பனி மாமலர்’’  குறுந்-51, ‘‘குறுந்தாட் கூதளி ஆடிய நெடு வரை’’  குறுந்.60,’’பரீஇ வித்திய ஏனல்’’  குறுந். 72, என்று கள்ளிச் செடி , முள்ளிச்செடி, கூதளஞ்செடி, பருத்தி செடி பற்றியும் அறிய முடிகின்றது.

கொடிகள்

ஒன்றைப் பற்றி வளருபவை கொடிகள் ஆகும். அக்கொடிகள் பற்றி,

            ‘‘கொழுங்கொடி அவரை பூக்கும்’’  குறுந்-82

            ‘‘கறிவளர் அடுக்கத்து இரவில் முழங்கிய ‘‘  குறுந்.90

            ‘‘அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற’’  குறுந்.91

            ‘‘மாரிப் பீரத்து அலர் சில கொண்டே’’  குறுந்.98

            ‘‘பரு இலைக் குளவியொடு பசுமரல் கட்கும்’’  குறுந்.100

என்று அவரைக் கொடி, மிளகுக் கொடி, பிரப்பம்கொடி, பீர்க்கங்கொடி, மரலைக்கொடி பற்றிக் குறுந்தொகை காட்டுகின்றது.

புற்கள்         

புற்கள் பற்றியும் குறுந்தொகை மூலம் அறிய முடிகின்றது. அவை பின்வருமாறு

‘‘கான யானை கைவிடு பசுங்கழை ‘‘  குறுந். 54

‘‘விசும்பு தோய் பசுங்கழைக் குன்ற நாடன்  குறுந்.74

‘‘தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின்’’  குறுந். 85

‘‘அருவிப் பரப்பின் ஐவனம் வித்தி ‘‘  குறுந்.100

மூங்கில், கரும்பு, மலை நெல் என்று புற்கள் பற்றி அறிய முடிகின்றது.

கனிகள்

கனிகள் பற்றிய செய்திகளும் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு

‘‘கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்’’  குறுந்.08

‘‘வேரல் வேலி வேர்க்கோட் பலவின்’’  குறுந்.18

‘‘ஆற்று அயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து

எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல’’  குறுந்.67

‘‘கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி’’  குறுந்.90

மாம்பழம், பலாப்பழம், அத்திப்பழம், வேப்பம் பழம் பற்றிக் குறுந்தொகையால் அறிய முடிகின்றது.

பிற தாவர செய்திகள்:

‘‘கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’’  குறுந்.02

‘‘பயிறு போல் இரை பைந் தாது’’  குறுந்.10

தாதின் செய்த தண் பனிப் பாவை’’  குறுந்.48

போன்ற அடிகளில் பூந்தாது பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது.

இவ்வாறு திணை இலக்கியமான குறுந்தொகையில் தாவரங்கள் பற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. தாவரவியல் கூறுகின்ற வண்ணம், வடிவம், மணம் பற்றிக் கூறுகின்றது. இவையெல்லாம் நாட்டுச்சிறப்பு, தலைவியின் அழகு நலம், வர்ணனை என்ற நிலைகளில் பாடல்களில் புலவர்கள் கையாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிருக்கு ஆதாரமாக இருக்கும் தாவரங்கள் கலையியல் வழிச் சொல்லி, அதனைக் காக்கும் அறநெறியைப் பதிவுசெய்த நம் முன்னோர்கள் மாண்பு சிறப்புக்குரியது.


இராஜா வரதராஜா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலக்கியங்களில் தாவரங்கள்”

அதிகம் படித்தது