பிப்ரவரி 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

இலக்கியங்களில் பெண்ணியம்

நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.

May 17, 2016

ilakkiyaththil-2“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப”   என்றும்
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலன”
என்றும் பெண்மையின் குணநலன்களை உரைக்கிறது தொல்காப்பியம். இத்தகைய பெண்களைப் பாடாத புலவர்களும் இல்லை, படைப்பாளர்களும் இல்லை, படைப்புகளும் இல்லை எனலாம். கவிதையையும் கற்பனையையும் பிரிக்க முடியாதது போல, பெண்களையும் படைப்புகளையும் பிரிப்பதென்பது அரிது.

பாராட்டுவதற்காகவோ, துணிச்சலுடனோ, வருணனைக்காகவோ, போராடுபவளாகவோ, பரிதாபத்திற்குரியவளாகவோ, ஏதோ ஒரு விதத்தில் அந்தந்த படைப்பாளர் வாழும் சமுதாய சூழ்நிலைக்கேற்ப பெண் இலக்கியத்தில் கையாளப்படுகிறாள்.

சங்க இலக்கியங்களில் பெண்ணியம்

சங்க கால மகளிர் வீரமுடைய பெண்மணிகளாகவே இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்டனர். பகல் குறி, இரவுக்குறி, தலைவனை சந்தித்தல், புனைகாத்தல், என தனது எல்லைகளை மீறாதவளாக இருந்தாலும், புலியை புறமுதுகிட்டு ஓடச்செய்பவளாகவும், அரசனுக்கு பெண்பாற் தூதுவராகவும், புலமை வாய்ந்தவர்களாகவும் விளங்கினர்.

சங்க காலத்தில் பெண்பாற் புலவர்கள் பலர் பாடினும், பெண் வீரமுடையவளாகவும், விவேகமுடையவளாகவும் பல இடத்தில் சித்தரிக்கப்பட்டாள். ‘சங்க கால மகளிர் அடிமைப்படுத்தப்பட்டு கொடுமைப்பட்டுக் கிடந்தனர், தற்காலத்தில்தான் பெண்கள் சுதந்திரம் அடைந்தனர்’ என்பது தவறானக் கருத்தாகும். உண்மையில் சங்க கால இலக்கியங்களில் துன்பப்பட்டுக் கிடந்தவர்கள் ஆண்களே, வீர ஏறு தழுவுதல், ஒரு பெண்ணை மணக்க வீரவிளையாட்டுகள், காளை அடக்குதல், மடற்பனை ஏறுதல் என பலவகையில் துன்பப்பட்டுக்கிடந்தவர்கள் ஆண்களே. ஆனால் அதற்குப் பிறகு தோன்றிய ஆணாதிக்க சமுதாயம் பெண்களின் அடக்குமுறையை வலியுறுத்திப் பேசி பேசி மறைமுகமாக பெண்களை அடிமைப்படுத்தி வைத்து விட்டனர்.

காப்பியங்களில் பெண்ணியம்

ilakkiyaththil-4காப்பியம் என்றதும் நம் நினைவிற்கு வருவது கம்பராமாயணமும், மகாபாரதமுமே. பெண் என்பவள் ஆக்கும் சக்தியையும், அழிக்கும் சக்தியையும் பெற்றவள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் காப்பியங்களில் தலைவர்களின் பெருமை பாடப்படுகின்ற அளவிற்கு, காப்பியத்தலைவிகளின் பெருமை பேசப்படவில்லை. படைப்பாளர்கள் பெண்களுக்கும் சமஉரிமை கொடுத்தார்களோ என்னவோ, உரையாசிரியர்களும், திறனாய்வாளர்களும் பெண்களின் தனித்துவத்திற்கு அவ்வளவு மதிப்பு கொடுக்கவில்லை எனலாம். சான்றாக இராமாயணத்தில் யாராலும் தூக்க முடியாத சிவதனுசை ராமன் தூக்கி நிறுத்தி நாண் பூட்டி வளைத்து ஒடித்து சீதையை மணந்தான், என ராமனின் பெருமை பேசப்படுகின்றதே தவிர, பந்தாடிக்கொண்டிருக்கும்போது பந்து சிவதனுசு வைக்கப்பட்டிருக்கும் பெட்டிக்கடியில் போகவே அதை மிக லகுவாக நகர்த்தி அந்தப் பந்தை எடுத்த சீதையின் வல்லமை மிகக்குறைவாகவே விமர்சிக்கவும், பேசவும்படுகிறது.

ilakkiyaththil-5இராமன் இருமுறை அக்னிப்பிரவேசம் செய்யவைத்து சீதையை சோதித்தது விமர்சிக்கத்தக்கக் கருத்து. எனினும், ஐம்பூதங்களில் ஒன்றான தீயை அடக்கும் ஆற்றல், எதிர்த்து நின்று ஜெயிக்கும் ஆற்றல் சீதைக்கு இருந்தது நாம் பாராட்ட வேண்டிய ஒன்றாகும். இராவணனால் நிலத்தோடு கடத்தப்பட்டு ஆகாயம் வழி சென்ற சீதை, வாயு புத்திரனாகிய அனுமனின் தேவியாக, அக்னி பகவனை எதிர்த்து வென்றது என உலக இயக்கமாம் ஐம்பூதங்களையும் வென்றவள் சீதை. இங்கு சீதை உருவகமாக ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்தையும் பார்க்கும் போது பெண்களின் பேராற்றல் வெளிப்படுகிறது.

பாஞ்சாலி பஞ்ச பாண்டவர்களின் மனைவியாக விளங்குகிறாள் மகாபாரதத்தில்.  பஞ்ச பாண்டவர்களை பஞ்ச பூதங்களாகக் கொண்டால் அனைத்திற்கும் ஒரு தலைவியே.  இந்த உலகமே பஞ்ச பூதங்களால்தான் இயங்குகிறது. ஒரு பெண்ணால் மட்டுமே பஞ்ச பூதங்களைக் கையாள முடியும் என்பதும், பஞ்ச பூதங்கள் இயங்க ஒரு தூண்டுதலாக பெண்சக்தி தேவை என்பதும் புலனாகும்.

ilakkiyaththil-6சூதாட்டத்தில் தன்னை வைத்துத் தோற்றபோது அழைக்க வந்த காவலனிடம், ‘அவர்கள் தோற்றபிறகு என்னை வைத்து விளையாட அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது’ எனக் கேட்கிறாள். தவறு செய்யவில்லை எனில் தன் உரிமைக்காகப் போராடும் துணிச்சலுடையவளாகச் சித்தரிக்கப்பட்டாள் அன்றைய பாஞ்சாலி. அன்று துகிலுரிக்க ஒரு துச்சாதனன் இருந்தான், காப்பாற்ற கிருஷ்ணர் இருந்தார். இன்றைய சமூகத்தில் துச்சாதனனும், கிருஷ்ணரும் கூட்டணி வைத்தல்லவா செயல்படுகிறார்கள். இன்றைய சமூகத்தில் பெண் உரிமை, பெண்ணீயம் என்றெல்லாம் பேசினாலும் ஆண்களே மேலானவர்களாகக் கருதப்படுகிறார்கள். சான்றாக தம்பதிகளிடையே விவாகரத்து என வந்தால் வழக்குத் தொடர்ந்த பிறகும் சரி, விவாகரத்து கிடைத்த பிறகும் சரி, ஆண்கள் என்ன தவறு செய்தாலும் அது மறைக்கப்படுகிறது. ’அவளுக்குக் கணவனுடன் சரியாக வாழத்தெரியவில்லை’ என்றே சமுதாயம் கூறுகிறது.

பெண்கள் வீட்டிற்குள் கிடக்கும் போதும், வீரப்பெண்களாக விளங்கிய போதும் பெண் விடுதலைப் பற்றிப் பேசாத சமுதாயம், என்று பெண்ணீயம், பெண்உரிமை, பெண்விடுதலை எனப் புரட்சிசெய்ய ஆரம்பித்ததோ அன்று அவர்களின் அடிமைத்தனமும் அதிகரித்தது. அடிமைப்படுத்துவது இருக்கப்போய்தானே போராட வேண்டி இருக்கிறது.

’வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம்
என்ற விந்தை மனிதர் தலைகவிழ வேண்டும்’

என்று பாரதி பாடினானே தவிர அவரவர்கள் தங்கள் சொந்த உரிமைக்காகப் போராட வேண்டும் என்று கூறவில்லை. உரிமையைத் தட்டிப்பறித்துவிட்டு, போராடுகிறோம் என்று உண்மையில் அவளின் ஆற்றலை, சக்தியை, திறமையை, ஆக்கத்தை வெளிக்கொணரவிடாமல் சங்கிலியிட்டுப் பூட்டி வைக்கிறது. இதற்கு முக்கியக்காரணம் தகவல் தொடர்பு சாதனங்களும், இன்றைய இலக்கியப்படைப்புகளுமே ஆகும்.

ilakkiyaththil-3அவைகள் பெண்ணியம் பெண்ணியம் என்றெல்லாம் பேசி பெண்ணின் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் தூண்டிவிட்டு, பணம் சம்பாதிக்கும் ஒரு போகப்பொருளாகவும், ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு மோகப் பொருளாகவும் அவளை மாற்றியதே தவிர, உண்மையில் அவளுடைய உரிமைக் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இல்லங்களிலும், அலுவலகங்களிலும், ஏன் ஒட்டுமொத்த சமூகத்திலும், பெண்ணின் கருத்து இரண்டாம் பட்சமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஒரு பக்கம் பெண்கள் முன்னேற்றம், புரட்சி, அனைத்துத் துறைகளிலும் பெண்கள் என காலம் வளர்ந்து கொண்டிருந்தாலும், சடங்கு சம்பிரதாயம், சில சமுதாய நெறிமுறைகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் என்ற பல பெயர்களில் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களும், எதிர்கொள்ளும் துன்பங்களும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

என்னதான் கற்காலம் மாறி கணினிக் காலம் வந்தாலும், இது போன்ற சமுதாயச் சிக்கல்களைப் பெண்கள் இனியும் அனுபவித்துக் கொண்டுதானிருக்கின்றனர்.

பெண் என்று தனது உரிமைக்காகவும், தனது விடுதலைக்காகவும் போராடாமல் எப்பொழுது சுயமாக முடிவெடுத்து அதை தைரியமாக செயல்படுத்தி வெற்றியடைகிறாளோ அன்றே அவளுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும்.

சமூகம் எதுவானாலும், மொழி எதுவானாலும், சமுதாயச்சூழல் எதுவாக இருப்பினும், என்னதான் புரட்சி, பெண்மை, ஆணாதிக்கச் சமுதாயம் என்றெல்லாம் கூறினாலும், பெண்ணானவள் வாழ்க்கையில்
“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாதவளாகவே விளங்குகிறாள்”.
விதிவிலக்காகச் செல்லும் சில பெண்கள் சரித்திரமும் படைக்கின்றனர். சாதனையும் புரிகின்றனர்.

இக்கருத்துக்களால் பெண்ணியம் என்பது சங்ககாலம் தொடங்கி தற்காலம் வரை, கல்வெட்டு தொடங்கி கணினி வரை ஏதோ ஒரு வகையில் பேசப்படுகிறது என்பது புலனாகிறது.

வாழ்க பெண்மை.
வளர்க படைப்பு.
செழிக்க சமுதாயம்.


நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலக்கியங்களில் பெண்ணியம்”

அதிகம் படித்தது