நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

இலக்கியம் படியுங்கள் !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Sep 24, 2016

siragu-ilakkiyam2

இப்போது இருக்கும் காலங்களில், பள்ளிகளில் தொழில் நுட்பத்திற்கு மற்றும் மருத்துவத் துறைக்குத் தேவையான பாடங்களை மட்டுமே விரும்பிக் கற்பிக்கும் – கற்கும் சூழல் இருக்கின்றது. ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிப்பாடங்களை மாணவர்கள் மதிப்பெண்களுக்காக கற்கின்றனரே தவிர்த்து விருப்பத்தோடு மாணவர்கள் கற்பதில்லை. அதிலும் தமிழ் மொழிப்  பாடத்தினை எட்டாவது படிக்கின்ற போதே நிறுத்திவிட்டு, நிறைய மாணவர்கள் பிரெஞ்சு அல்லது இந்தி மொழிப்பாடங்களை மதிப்பெண்களுக்காக எடுத்துப் படிப்பதை நாம் பார்க்கின்றோம். மொழிப் பாடங்கள் கற்பதினால் எந்தப் பயனும் இல்லை என்றே இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் நம்புகின்றனர். உண்மையில் ஒரு மொழியைப் படிக்கிறபோது அந்த மொழியில் இருக்கும் இலக்கிய, இலக்கணங்களை கற்கின்றபோது படிப்போரை அது வேறு ஒரு வாசிப்பு அனுபவத்திற்கு அழைத்துச் செல்கின்றது என்பதே உண்மை.

இலக்கியம் படிப்பதால் ஒரு சமூகம் கடந்து வந்த வழித்தடங்களை, அவர்களின் எண்ணங்களை, சிந்தனைகளை அடுத்தத் தலைமுறை புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கின்றது. நம் தமிழ் மொழியின் இலக்கிய வளங்கள் பற்றி நாம் என்றாவது எண்ணிப்பார்த்ததுண்டா? சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய நவீன இலக்கியம் வரை ஒவ்வொன்றும் படிக்கின்ற நம்மை ஒரு  பண்பட்ட நபராக மாற்றுகின்றது. கவிதையாக இருந்தாலும், சிறுகதையாக இருந்தாலும், நெடுங்கதையாக இருந்தாலும், கட்டுரைகளின்  தொகுப்பாக இருந்தாலும் அவற்றைப் படிக்கும்போது, அதைப்பற்றி விவாதிக்கும்போது நம்  சொல்லகராதி மேம்படுகிறது. நிறைய வார்த்தைகள் நமக்கு புதியதாய் கிடைக்கின்றது; நம்முடைய கற்பனை வளத்தை அது அதிகரிக்கின்றது; மற்ற மனிதர்களின் நிலையில் இருந்து யோசித்து விடயங்களைப் புரிந்து கொள்ள முடிகின்றது; வாழ்க்கையின் தத்துவங்களை, அழகியலை மேலும் புரிந்து கொண்டு இந்த வாழ்வை திறம்பட வாழக் கற்றுக்கொடுக்கின்றது.

siragu-ilakkiyam4

இன்றைய வாழ்வு மிகுந்த மன உளைச்சலைக் கொடுப்பதாக இருக்கின்றது. பொய்மையும், கயமையும், அழுக்காறாமையும் மனித மனங்களை ஆட்டுவிக்கின்றன. இந்த இறுக்கத்தினை  ஏற்படுத்தும் வாழ்வில் இருந்து சற்று ஒதுங்கி சங்க இலக்கியத்தின் பாடல்களை, நாலடியார் கூறும் நற்கருத்துக்களை, திருக்குறள் கூறும் வாழ்க்கை இலக்கணங்களைப்  படித்துப்பாருங்கள், வாழ்வின் நகர்தல் சுமையாக இருக்காது.

“The crown of literature is poetry.” இலக்கியத்தின் கிரீடம் கவிதைகள், என்று ஆங்கிலத்தில் கூறுவதுண்டு. சங்க இலக்கியங்கள் மற்றும் அதன் பின் எழுதப்பட்ட பாடல்களும், கவிதைகளும் தரும் பாடங்கள் வாழ்வில் பலத் தடைகளை கடக்க உதவும்.

“நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை,
அல்லார் எனினும், அடக்கிக் கொளல்வேண்டும்!
நெல்லுக்கு உமி உண்டு; நீருக்கு நுரை உண்டு;
புல் இதழ் பூவிற்கும் உண்டு! ”

என்று கூறுகிறது நாலடியார் : பாடல் 221

நாம் இனியவர் என்று பழகிய ஒருவர் நாம் எதிர்பார்த்தபடி  இல்லை என்றாலும் நாம் அதை பெரிய விடயமாகக் கொள்ளாது இருக்க வேண்டும். ஏனெனில் நெல்லில் உமி உண்டு, நீரில் நுரை உண்டு, பூவில் புல்லைப் போல மெல்லிய இலை ஒன்று உண்டு. இவற்றுக்காக நாம் அவற்றை ஒதுக்குவதில்லை, ஒதுக்கவும் முடியாது. ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள் எவ்வளவு அருமையான கருத்து. பல மனநல மருத்துவர்கள் புரியவைக்கப் போராடும் விடயத்தை எவ்வளவு எளிமையாக இந்த நாலடியார் பாடல் புரிய வைக்கின்றது.

சங்க இலக்கியம் கடந்து, 20ஆம் நூற்றாண்டில் எண்ணற்ற கவிஞர்களும், எழுத்தாளர்களும் இந்தச் சமுதாயத்தில் நிலவும் ஆதிக்கத்தினை எதிர்த்து  தங்கள் கவிதைகளை படைத்திருப்பதை நாம் பார்க்க முடியும்.

ஒடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஒர்நொடிக்குள்
ஒடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி,
ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப் பாநீ

என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் உலகப்பன் பாட்டு என்ற கவிதையில் முதலாளித்துவத்தை, தொழிலாளர்கள் எப்படி எதிர்கொள்ள  வேண்டும் என்று மிக அழகாக எழுதியிருப்பார். இன்றைய காலகட்டத்தில் அது எவ்வளவு உண்மை என்று நம்மைச் சுற்றி நடக்கும் பொதுவுடைமைக்கு எதிரான வன்முறைகளில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

siragu-ilakkiyam3

அது மட்டுமல்ல யாப்பிலக்கணங்களைத் தவிர்த்து மாறுபடும் கவிதைப் படைப்பான புதுக்கவிதைகள் மூலம் எண்ணற்ற கவிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். புதுக்கவிதைகள் உள்ளடக்கம், உத்திமுறைகள் ஆகியவற்றில் புதுமையுடையனவாகும்.

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத்தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை

என கவி  மேத்தா புதுக்கவிதை பற்றி நயம்படக் கூறுவார்கள்.

தலித்தியம், பெண்ணியம், குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய கவிதைகள் என்று புதுக்கவிதைகளின் எல்லைகள் பெரியது. இது மிகப் பெரிய சிந்தனைப் புரட்சியை மக்களிடையே ஏற்படுத்தியது என்றால் அது மிகையன்று.

கவிஞர் அறிவுமதியின் உறக்கம் என்ற  புதுக்கவிதையில்

விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா.

என்று எழுதியிருப்பார். ஒரு மூன்று வரியில் அவரின் சிந்தனையை எண்ணிப்பார்க்க வேண்டும்.

குறிப்பாக இன்றைய பெண்ணியக்  கவிஞர்கள் முற்றிலும் புதிய தளத்தை பெண்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.

siragu-ilakkiyam1

இலக்கியம் படிக்கின்ற போது காலந்தோறும் இலக்கியங்கள் எப்படிப்பட்ட மாற்றங்களை சந்தித்து வந்திருக்கின்றது என்றும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

தமிழ் மட்டுமல்ல எந்த மொழி இலக்கியமும் ஒரு புது அனுபவத்தை நமக்கு ஏற்படுத்தும் வல்லமை பெற்றது.

“Literature is my Utopia. Here I am not disenfranchised. No barrier of the senses shuts me out from the sweet, gracious discourses of my book friends. They talk to me without embarrassment or awkwardness.” Helen Keller

இலக்கியம் எனது கற்பனை உலகு. இங்கே எனது வாக்குரிமை பறிக்கப்படாது. ஐம்புலன்களின் எந்தத் தடையும் என்னை இனிமையான, கருணையுள்ள  உரைக்கோவை சொல்லாடலில் இருந்து தடுப்பதில்லை. இலக்கியங்கள் என்னிடம் தடுமாற்றமும், அலங்கோலமற்ற நிலையில் பேசுகின்றன என்று ஹெலன் கெல்லர் (Helen Keller) கூறுகிறார். இவர் அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர் – அரசியல் செயற்பாட்டாளர். இவருக்கு  காது கேட்காது; கண் பார்வையும் இல்லை. இவர் எவ்வளவு அழகாக இலக்கியத்தின் அழகியலை, அது தரும் இன்பத்தினை கூறுகிறார் என்று எண்ணிப்பாருங்கள்.

எனவே தோழர்களே, இலக்கியம்  படியுங்கள் அது உங்களுக்கு ஏற்படுத்திடும் அனுபவங்கள் ஏராளம் ! ஏராளம் !!

 


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலக்கியம் படியுங்கள் !!”

அதிகம் படித்தது