நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

இலங்கையில் அழிக்கப்படும் இந்துக்களின் அடையாளங்கள்!

நிகில்

Nov 19, 2016

siragu-srilanga-kovil

இன அழிப்புப் போரை நடத்தி முடித்த இலங்கை அரசு, தற்போது இந்து மதத்தை இலங்கை மண்ணிலிருந்து வேறோடு அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தமிழர்களை தனிமைப்படுத்தி முடக்குவதில் குறியாக உள்ளது சிங்கள அரசு என ஆவேசத்துடன் பேச ஆரம்பிக்கிறார் சமீபத்தில் இலங்கைக்கு யாத்திரிகராக சுற்றுலா சென்று வந்துள்ள, இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம. ரவிக்குமார். அங்கு நேரடியாகக் கண்ட காட்சிகளை நம்மிடம் விவரித்தார்.

இலங்கையில் போர் முடிந்தும் இன்னும் தமிழர் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு ராணுவ முகாமைப் பார்க்க முடிகிறது. சம்பந்தப்பட்ட அந்தப் பகுதிக்குச் சென்றாலே கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத்தான் அனுமதிக்கிறார்கள்.

நான் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கொழும்பிலிருந்து வடக்கு மாகாணப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டு இருந்தேன். அப்போது ஆறு மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இந்து கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்தேன். அங்கு இந்து கடவுளுடன் புத்தருக்கு என்று தனிப்பீடம் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவதைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக அய்யனார், விநாயகர், மாரியம்மன், முனிஸ்வரன் கோவில்களில்தான் இது போன்ற புத்த மதத்தினரின் ஆக்கிரமிப்பைப் பார்க்க முடிந்தது. சிவ லங்காவை புத்த லங்காவாக மாற்றும் முயற்சியில் சத்தமில்லாமல் இறங்கி இருக்கிறது இலங்கை அரசு. தமிழர்களை வேரோடு கிள்ளிய சிங்கள ராணுவம் தற்போது இந்து கோவில்களைத் தேடித்தேடி அழித்துக் கொண்டிருக்கிறது.

இந்துக்களின் அடையாளங்களை மறைக்கும் முயற்சியில் யார் ஈடுபட்டு இருக்கிறார்கள்?

சிங்கள ராணுவம், சிங்கள அரசு, புத்த குருமார்கள். இலங்கை மண்ணில் புத்த மதம், கிறித்துவ மதம், இசுலாமிய மதம் இருக்கலாம் ஆனால், இந்து மதம் இருக்கவே கூடாது என்ற எண்ணம் தான் அவர்களின் இந்த வெறிச்செயல். இந்த உலகத்திற்கு அன்பை போதித்த புத்தரை இட ஆக்கிரமிப்பிற்காக பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. மேலும் போரில் உயிர் நீத்த முள்ளியவினை எனும் ஊரில் மாவீரர்களின் நினைவு இடங்களை அழித்து புத்தர் சிலைகளை வைத்துள்ளார்கள். தமிழர்களின் ஆளுமைக்குட்படுத்தப்பட்ட பகுதியில் சிங்களவர்களின் வெற்றிச் சின்னத்தைப் பார்க்க முடிகிறது.

siragu-srilanga-kovil2

குறிப்பாக எந்ததெந்த பகுதியில் இந்த ஆக்கிரமிப்பு வேலைகள் நடந்து வருகிறது?

கிளிநொச்சி, இரணிமடுவு, முருங்கன் உள்ளிட்ட முக்கிய பகுதியில் தான் இந்து கோயில்கள் குறிவைத்து குதறப்பட்டுள்ளன. திருக்கேதீச்சரம் கோயிலில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலின் முன்புறம் புத்தர் கோயிலைக் கட்டி இருக்கிறார்கள். அதன் தோரண வாயிலில் உள்ள சிலைகளை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். கிளிநொச்சியில் கனகாம்பிகை அம்மன் கோயிலை ஒட்டி புத்த கோயில் கட்டியிருக்கிறார்கள் புத்தபிக்குகள். சாவகச்சேரியில் இருந்த பிள்ளையார் மற்றும் முருகன் கோயில்கள் உடைத்து தள்ளப்பட்டுள்ளன. நாவற் குழியில் அய்யனார் கோயிலின் உள்ளேயே புத்தருக்கு கோயிலமைக்கப்பட்டு சிங்கள வழிபாடு கன ஜோராக நடக்கிறது.

சிங்கள அரசு ஈழத் தமிழர்களின் ஒற்றுமைக்குள் மத ரீதியிலான பிரிவினையை தெளிவாக உருவாக்கி உள் சண்டையை மூட்டுகிறார்கள். அதாவது இந்துக் கோவில்களுக்கு இத்தனை நெருக்கடி கொடுக்கும் இந்த நேரத்தில் தேவாலயம் மற்றும் மசூதிகளுக்கு எந்த இடைஞ்சலும் கொடுப்பதில்லை. எந்த தேவாலயத்திலும் புத்தர் சிலையைப் பார்க்க முடியவில்லை.

எதிர்த்து கேள்வி கேட்க யாரும் இல்லையா?

இந்த ஆக்கிரமிப்பு பற்றி அங்குள்ளவர்களிடம் பேசிய போதே நமக்கு ஏன் வீண் வம்பு என ஒதுங்கிக் கொள்கிறார்கள். எதிர்த்து கேட்டால் என் தெய்வத்தை வணங்க வருகிறேன், தடுக்க நீ யார் என்று சிங்களவர்கள் முழு உரிமை பேசுகிறார்கள். நம்முடைய தமிழர்கள் தேங்காய் கூட உடைக்க முடியாத பரிதாப நிலையைத்தான் பார்த்தேன்.

இந்து கோவில்களில் முதலில் புத்தர் சிலையை வைத்தவர்கள், நாளடைவில் எண்ணிக்கையைக் கூட்டி முழு கோவிலையும் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். சில இடங்களில் மதில் சுவர்களின் அருகில் புத்தர் கோயிலை கட்டிவிட்டு பின் சுவரை இடித்துவிட்டு கோயில் வளாகத்தைக் கைப்பற்றுகிறார்கள். இப்படித்தான் இந்து கோவில்கள் அடையாளம் மறைக்கப்பட்டு வருகிறது. ஒரு மதத்தை அழித்து அதன் வழி நடக்கும் பாரம்பரியத்தையும் சிதைத்து விட்டால் அந்த இன மக்களே வரலாற்றில் இல்லாமல் பண்ணிவிடலாம் என்பது தான் இலங்கை அரசின் எண்ணம்.

இது தொடர்பாக உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

உலக கவனத்தை ஈர்ப்பதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க இருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து அரசியல் கட்சிச் தலைவர்களுக்கும் அழைத்து விடுத்து இருக்கிறோம். இலங்கை அரசு தமிழர்களின் இடத்தில் பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக்கோரியும், இலங்கையில் அழிக்கப்படும் இந்து கோவில் அடையாளங்களை காத்திடவும், இலங்கை தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் தமிழகத்தில் உள்ள அகதிகளை இலங்கையில் குடியமர்த்தத் தேவையான அரசியல் சூழ்நிலையை உருவாக்கிட இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளோம்.

ஈழம் மலரும்……

என்னுடைய சுற்றுப் பயணத்தின் போது அங்குள்ள வீட்டிற்குச் சென்றேன். அப்போது வீட்டின் உள் பகுதி புதுப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெளிப்புறச் சுவற்றில் போரின் போது சுடப்பட்ட துப்பாக்கி குண்டுகளின் தாக்கம் அப்படியே இருந்தது. இதனை ஏன் சரி செய்ய வில்லை என அந்த வீட்டுக்காரரிடம் கேட்டேன். “போரின் போது உடலில் காயம் படுவது போல் எனது இல்லத்தின் மீது காயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ஈழம் மலரும், அப்போது தான் இதனை சரி செய்வேன்” என்று அவர் சொன்னது என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது என்றார் ரவிக்குமார்.


நிகில்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலங்கையில் அழிக்கப்படும் இந்துக்களின் அடையாளங்கள்!”

அதிகம் படித்தது