நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

இலவச சட்ட உதவி – ஒரு பார்வை

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

May 17, 2016

free legal advice1பணமில்லாத ஏழை மக்கள், தங்கள் வழக்கை நடத்த சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையினால் எந்தவொரு இந்திய குடிமக்களுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 39-A வலியுறுத்துகின்றது. ஒரு அரசின் கடமை, அதன் குடிமக்கள் அனைவரும் சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்பட வேண்டும்  மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கிட உறுதி செய்ய வேண்டும் என்பதே என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின்  சரத்து 14 மற்றும் 22(1) வலியுறுத்துகின்றது.

குற்றவியல் நடைமுறை 304 இன் படி குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவியல் நடுவர் முன் நிறுத்தப்படும் அந்த நேரத்தில் இருந்தே, அவருக்கு பண வசதி இல்லாத நிலையில் சட்ட உதவி வழங்கிட வேண்டும் என்றும், பின் எப்போதெல்லாம் அந்த குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நீட்டிக்கப்படுகின்றதோ, சட்ட உதவி தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

1980-இல் உச்ச நீதிமன்றத்தின்  நீதியரசர் திரு. P.N. பகவதி அவர்கள் தலைமையில் தேசிய அளவில் சட்ட உதவிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்  குழு “CILAS “(Committee for Implementing Legal Aid Schemes) என்னும் பெயரால் வழங்கப்பெற்றது. 1987 இல் Legal Services Authorities Act என்ற சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள சட்ட உதவி மையங்கள் ஒரே வடிவங்களில் செயல்பட வழிவகுத்தது. இந்தச் சட்டம் இறுதியாக 1995 நவம்பர் ஒரு சில திருத்தங்களுக்குப் பின் செயல்பாட்டிற்கு வந்தது.

free legal advice51972 ஆம் ஆண்டு நீதியரசர் கிருஷ்ணா ஐயர் தலைமையில் சட்ட உதவி யாருக்கெல்லாம் வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நடத்திய ஆய்வின்படி,

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்
பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்
மலைவாழ் மற்றும் பழங்குடி மக்கள்
விவசாய மக்கள்
எல்லையில் நெடுங்காலம் பணியாற்றும் இராணுவ சிப்பாய்கள்
சமூகத்தில் பின்தங்கிய மகளிர் மற்றும் குழந்தைகள்
தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்கள்

இவர்கள் அனைவருக்கும் சட்ட உதவி வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகள் மூலம் சட்ட உதவி வறியவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று உறுதி செய்தது.

Hussainara Khatoon & Ors எதிர் Home Secretary, State of Bihar, என்ற வழக்கில்,
குற்றம் சாட்டப்பட்டவர் வறுமையில், தனிக்காவலில் இருக்கும் நிலையில் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள அவருக்கு உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை அரசு அவருக்கு வழங்க வேண்டும். இலவச சட்ட உதவி ஒருவருக்கு மறுக்கப்படுவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21 க்கு எதிரானது என்று கூறியது.

Indira Gandhi எதிர்  Raj Narain என்ற வழக்கில் உச்ச நீதி மன்றம்,
சட்டத்தின் ஆட்சி என்பது தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பு. ஒருவருக்கு சட்ட உதவி வழங்கப்படவில்லை என்றால், ஒரு வழக்கின் விசாரணையே சீர்குலைக்கப்படுகின்றது என்று கூறியது.

free legal advice41995 – இல் National Legal Services Authority (NALSA) – என்ற ஆணையம் தேசிய அளவில் நிறுவப்பட்டு பொருளாதரத்தில் பின் தங்கியவர்களுக்காக சட்ட உதவி வழங்கிடவும், விரைவாக நீதி வழங்கும் லோக் அதாலத் (Lok  Adalat) ஏற்படுத்தவும் செயல்படுகின்றது.

சட்ட உதவி வேண்டி தரப்படும் மனு, மனு தந்த நபருக்கு போதிய பண வசதி இருக்கின்றது என்று தெரியவரும் பட்சத்தில் நிராகரிக்கப்படலாம். அப்படி நிராகரிக்கப்பட்ட மனுவின் மீது மனுதாரர் மேல்முறையீடும் செய்யலாம்.

அவதூறு வழக்கு,
பழிவாங்கும் வழக்கு,
நீதிமன்ற அவமதிப்பு,
உறுதி மொழியில் பொய் கூறுதல்,
தேர்தல் தொடர்பான வழக்குகள்,
அபராதம் 50 ரூபாய் மேல் இல்லாத வழக்கு,
பொருளியல் சார்ந்த குற்றங்கள்

போன்ற குற்றங்களுக்கு இலவச சட்ட உதவி பொருந்தாது.

சட்ட உதவி என்பது பிச்சை அல்ல அது உரிமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே அதன் இலக்கு.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலவச சட்ட உதவி – ஒரு பார்வை”

அதிகம் படித்தது