சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இல்லறக் கோட்பாடுகள்

முனைவர் மு.பழனியப்பன்

Jul 18, 2020

Siragu silappadhigaaram1

சிலப்பதிகாரம் மிகச் சிறந்த இல்லறக் காப்பியம். இன்பம், துன்பம் ஆகிய இரு நிலைப்பாடுகளிலும் கோவலன், கண்ணகி இருவரும் இணைந்தே நிற்கின்றனர். இணைந்தே எதிர் கொள்ளுகின்றனர். விதி வசத்தால் மண்ணுலக வாழ்வினைக் கோலவன் இழந்தாலும், கோவலனும், கண்ணகியும் விண்ணுலக வாழ்வில் இணைந்து செல்வதாகவே காப்பியம் காட்டுகின்றது. இல்லறத்தை நல்லறமாகச் செய்தால் விண்ணுலக வாழ்வினைப் பெறலாம் என்பதற்காக சான்று கோவலன் கண்ணகி வாழ்க்கை ஆகும்.

அறம் இல்லறம், துறவறம் என இருவகையாக அடிப்படையில் பிரிக்கப்பெறுகின்றது. இல்லற மாண்புகளும், துறவற மாண்புகளும் சிலப்பதிகாரத்தில் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. இம்மாண்புகள் செறிவாகிக் கோட்பாடுகளாகி விடுகின்றன.

இல்லறத்தின் அடையாளமாக சிலப்பதிகாரத்தினுள் காட்டப்பெறுபர்கள் பலர் என்றாலும் கண்ணகியும் கோவலனும் அவர்களுள் முன் நிற்பவர்கள் ஆவர். பாண்டியன், அவனின் மனைவி பாண்டிமாதேவி ஆகிய இருவரும் தன்னுயிர் கொண்டு தன் துணையின் இன்னுயிர் தேடியவர்கள், சேரன் கங்கைக்குச் செல்லும்போது ஏற்படும் பிரிவில் வருந்தி வாட்டமுற்று நிற்கிறாள் சேரமாதேவி. மாசத்துவான், மாநாய்கன் குடும்பமும் இல்லறவழி நிற்பனவே ஆகும். இவர்கள் அனைவரும் இல்லற நல்லறத்தின் எடுத்துக்காட்டினராகவே சிலப்பதிகாரத்துள் திகழ்கின்றனர்.

Siragu silappadhigaaram2கண்ணகி கோவலனின் நல்லறம்

கோவலனும் கண்ணகியும் மிக இளம் வயதிலேயே திருமணத்தில் இணைகின்றனர். பதினாறு ஆண்டு வயதினனான கோவலனும், பன்னிரண்டு வயதினளான கண்ணகியும் ஒன்று சேர்ந்து திருமண வாழ்வினைத் தொடங்குகின்றார்கள். அவர்கள் தொடங்கும் தனிக்குடித்தன வாழ்விற்குப் பெற்றோர்கள் பெரிதும் துணை நிற்கின்றனர். அவர்களின் கண்காணிப்பில், போற்றுதலில் இல்லறத்தை நல்லறமாக இருவரும் செய்கின்றனர்.

தனிக்குடித்தனம்

சிலப்பதிகாரக் கதை மங்கலமாகத் தொடங்குகிறது. மங்கல வாழ்த்துப் பாடலில் கோவலனும் கண்ணகியும் இணைந்து இல்லறம் ஏற்கின்றனர். இல்லறம் ஏற்றவர்கள் மனையறம் படுத்த காதை வழியாக தனிக்குடித்தனம் நடத்துகின்றனர். மனையறம் படுத்தல் என்ற தலைப்பே, அறத்தின் அடிப்படையில் இல்லறத்தை நடத்துதல் என்று பொருள் தரும்.

பெற்றோருடன் இதுவரை வாழ்ந்து வந்த கோவலன் அவனுக்கான மனைவியை இல்லறத்தின் துணைவியாக ஏற்றபின் வேறு குடும்பமாக வைக்கப்படுகிறான். அவ்வாறு வேறு வைக்கபடுவதற்காக எழுநிலைமாடம், பெருஞ்செல்வம், உரிமைச் சுற்றம் ஆகியன அவனுக்கும், கண்ணகிக்கும் அளிக்கப்பெறுகின்றன.

கண்ணகியும் கோவலனும் எழுநிலை மாடத்தில் இருந்து இன்பம் தூய்க்கின்றனர். மேலும்

            ‘‘வாரொலிக் கூந்தலைப் பேரியற் கிழத்தி

            மறப்பரும் கேண்மையோடு அறப்பரிசாரமும்

            விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்

            வேறுபடு திருவின் வீறுபெறக் காண

            உரிமைச் சுற்றமோடு ஒரு தனி புணர்க்க

            யாண்டு சில கழிந்தன இற்பெருங் கிழமையி

            காண்டகு சிறப்பிற் கண்ணகி தனக்கென்”

என்று கண்ணகியும் கோவலனும் இல்லற மாண்புகளைச் செய்துவரும் நன்முறை சிலப்பதிகாரத்தில் காட்டப்பெறுகின்றது.

மேற்காண் அடிகளில் கண்ணகியும் கோவலனும் செய்த இல்லற நல்லறங்கள் பல சுட்டப்பெற்றுள்ளன. அவ்வறங்களின் விரிவு பின்வருமாறு:

மறப்பரும் கேண்மை

சுற்றத்தினருக்கு வேண்டுவன அளித்து அவர்களைப் பேணும் நன்முறை சுற்றம் தாழாஅல் எனப்படும். அவ்வகையில் கண்ணகியும் கோவலனும் தம் இருவர் சுற்றத்தையும் பேணிக்காக்கும் நன்முறை செய்ய இல்லறம் ஏற்றுக்கொண்டனர்.

அறப்பரிசாரம்

அறநெறியில் நிற்பவர்களைத் தாங்குதல் என்ற அறத்தையும் கண்ணகியும் கோவலனும் இணைந்து செய்யத் தலைப்பட்டனர். அறவோர்க்கு அளி;த்தல், அந்தணர் ஓம்பல், துறவோர்க்கு எதிர்தல் போன்ற பண்புகள் அறப்பரிசாரத்துள் அடங்கும். இதனை அறப்பரிகாரம் என்று பாடபேதமாகக் கொண்டும் உரை எழுதப் பெற்றுள்ளது. அறப்பரிகாரம் என்பது அறத்தினை முன்னிறுத்திச் செய்யப்படும் செயல்பாடுகள் என்ற நிலையில் இதுவும் ஒரு நல்லறத் தொகுப்பாகின்றது.

விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கை

வீட்டுக்கு வரும் விருந்தினர்களை, புதியவர்களை விரும்பி வரவேற்று உபசரிக்கும் விருந்து போற்றும் தன்மையும் இல்லறத்திற்கான அறங்களுள் ஒன்றாகும். அதனைச் செய்யவும் கண்ணகியும் கோவலனும் வழிப்படுத்தப்பெற்றனர்.

இவ்வறங்களைச் செய்து கண்ணகியும் கோவலனும் சில காலம் வாழ்ந்து வந்தனர். அவ்வாறு வாழ்ந்து வரும் நிலையில் மாதவியின்பால் அன்பு கொண்டு கோலவன் கண்ணகியைப் பிரிகின்றான். அவ்வாறு பிரியும் நிலையில் கண்ணகி மேற்சொன்ன அறங்களைச் செய்யாது தவிக்கிறாள். தன் கணவன் இல்லாத நிலையில் இவ்வறங்களைச் செய்ய இயலாது தவிர்க்கிறாள். இதனை இளங்கோவடிகள் தன் காப்பியத்தில் பதிவு செய்துள்ளார்.

‘அறவோர்க்களித்தலும் அந்தண ரோம்பலும்

துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”

என்ற நிலையில் கண்ணகி மேற்சொன்ன இல்லற அறங்களைச் செய்ய இயலாது தவித்த நிலையை இளங்கோவடிகள் காட்டுகின்றார்.

கண்ணகி தனித்திருக்க அவளிடம் செல்வம் இருந்தும் அறவோர்க்கு ஒன்று அளிக்க இயலவில்லை. அந்தணர்க்கு ஒன்று ஈய முடியவில்லை. துறந்தவர்களுக்குச் சார்பாக எச்செயலும் செய்ய இயலவில்லை. இவ்வகையில் இல்லற அறங்களைச் செய்ய கணவனும் மனைவியும் இணைந்திருக்க வேண்டும் என்பதையும் இணைந்து அறங்களைச் செய்தலே அறங்களாகும் என்பதையும் உணரமுடிகின்றது.

கண்ணகியின் பொறுமையும் பெருமையும்

இருப்பினும் கண்ணகி கோவலனின் தாயால் அளிக்கப்பெற்ற எழுநிலை மாட வீட்டில் இருந்து வேறு எங்கும் சென்றாள் இல்லை. அவள் தன்னை அலங்கரித்துக் கொள்ளவும் இல்லை. மங்கலஅணி தவிர பிற அணிகள் ஏதும் அணியவில்லை. சோகத்தின் உருவமாக, துயரத்தின் இருப்பிடமாக அவள் கவலை கொண்டு வாழ்ந்துவந்தாள்.

‘‘அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய

மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்

கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்

மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்

கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்

திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரியச்

செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்

பவள வாள்நுதல் திலகம் இழப்பத்

தவள வாள்நகை கோவலன் இழப்ப

மைஇருங் கூந்தல் நெய்அணி மறப்பக்

கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும்,

காதலர்ப் பிரிந்த மாதர் நோதக

ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி”

என்ற நிலையில் கண்ணகி வாழ்ந்து வந்தாள். கணவன் தன்னைப் பிரிந்த நிலையில் தன்னை அழகு செய்துகொள்ள அவளின் மனம் விரும்பவில்லை. தன்னழகு கணவனுக்கானது என்று அவனுக்காக கண்ணகி காத்திருக்கிறாள். மேலும் அவன் சென்றவழி தேடி அவள் செல்லவில்லை. ஆனால் தன் கணவன் வந்துவிடுவான் என்று எண்ணி ஏங்கிக் காத்திருக்கிறாள்.

தன் கணவன் வந்துவிட வேண்டும் என்பதற்காக அவள் எந்த வித கடவுள் பூசையையும் செய்ய விரும்பவில்லை. ஏதோ ஒரு கட்டாயத்தின்பேரில் வரும் கணவன் மீளவும் பிரியமாட்டான் என்பதில் என்ன உத்தரவாதம் இருந்துவிட இயலும். இதன் காரணமாகத் தானாகத் தன் கணவன் தன்னை வந்தடையட்டும் என்று அவள் காத்திருக்கிறாள். அந்தக் காத்திருப்பில் அவள் வெற்றியும் பெறுகிறாள்.

இவள் காத்திருக்கும் பொழுதுகளில் கோவலனின் பெற்றோர் வந்து இவளைக் கண்டு செல்கின்றனர். அந்த இக்கட்டான நிலையிலும் கணவனைப் பற்றி ஒரு கடுஞ்சொல் கூட சொல்லாத அன்பு உள்ளம் உடையவளாக அவள் விளங்கினாள். அவளே அதைக் கோவலனிடம் பகிர்ந்து கொள்கிறாள்.

‘‘பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்

மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்

முந்தை நில்லா முனிவிகந் தனனா

அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி அளைஇ

எற்பா ராட்ட யானகத் தொளித்த

நோயும் துன்பமும் நொடிவது போலுமென்

வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப்

போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும்

மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்”

என்று தன் வாழ்க்கையைத் தானே மதிப்பிட்டுக்கொள்கிறாள் கண்ணகி.

மாநிதிக் கிழவனாகிய மாசாத்துவான் தன் மனையாளுடன் கண்ணகியை விட்டுக் கோவலன் பிரிந்திருந்த காலத்தில் வந்து கண்டு செல்வர். அப்போதெல்லாம் கண்ணகி தன் கணவன் கோவலன் தன்னுடன் இல்லாத நிலையினால் ஏற்பட்ட வெறுப்பினை நீக்கி நிற்பேன். அதனை நுட்பமாக உணர்ந்து கொண்ட அவர்கள் தம் உள்ளத்து அன்பு மிகுதியால் அருள் நிறைந்த மொழிகளை எமக்காகச் சொல்வர். இதனைக் கேட்ட நான் சிறு புன்முறுவல் பூத்து நிற்பேன். இச்சிரிப்பு அவர்களுக்கு மேலும் வருத்தத்தைத் தரும். இதற்கெல்லாம் கோவலன் தான் காரணம், அவனின் போற்றா ஒழுக்கம் தான் காரணம் என்று மென்மையாய் கணவனைக் கண்டிக்கும் தன்மை பெற்றவள் கண்ணகி. இதுவே சிறந்த இல்லறக் கோட்பாடு என்று சிலப்பதிகாரம் குறிக்கின்றது.

இவ்வாறு துன்பப்பட்டு தன் வாழ்வின் பிரிவுக்காலத்தை அமைதியாகக் கழித்த கண்ணகியை அவளின் பெருந்தன்மையைக் கோவலன் உணர்கிறான். உணர்ந்து அவளைப் பெரிதும் பாராட்டுகிறான்.

            ‘‘குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்

            அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி 85

            நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்

            பேணிய கற்பும் பெருந்துணை யாக

            என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த

            பொன்னே கொடியே புனைபூங் கோதாய்

            நாணின் பாவாய் நீணில விளக்கே 90

            கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி

            சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய்

            மாறி வருவன் மயங்கா தொழிகெனக்”

என்ற பாராட்டு மொழிகள் கண்ணகிக்கு அவளின் கணவன் கோவலனால் கிடைத்த பாராட்டுமொழிகள் ஆகும்.

கோவலன் தன்னால் கண்ணகி எவ்வளவு துயரப்பட்டிருப்பாள் என்பதையும் அடுக்கடுக்காக மொழிகின்றான். பெற்றோரையும், குற்றேவல் புரியும் மகளிரையும், அடிமைத் தொழில் செய்வோரையும், தோழிகளையும் விட்டு அவர்களின் உதவி என்ற சார்பினையும் விட்டுக் கண்ணகி தன் கணவன் கோவலன் பின்னால் அவன் சொற்களை நம்பி வந்துள்ளாள். இருப்பினும் அவளிடம் நாணம், மடன், நல்லோர் ஏத்தும் கற்பும் இருக்கிறது. அவற்றில் ஒரு குறைபாடும் இல்லை. இவையே அவளுக்குப் பெருந்துணைகளாக விளங்குகின்றன. பொன் போன்றவளே! கொடியே! அழகிய மலர் ம்hலையை ஒப்பவளே! நாணினைச் சுமந்த பாவை போன்றவளே! இவ்வுலகின் விளக்கமே! கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி! என்று பல பட பாராட்டுகிறான் கோவலன். தன் இறுதிக்கு முன்பாவது தன் மனையாளைப் புரிந்து கொண்டவனாக இங்குக் கோவலன் காட்டப்பெறுகிறான்.

இவ்வாறு கண்ணகியின் பொறுமை பெருமைமிக்க இல்லறமாகப் பரிணமிக்கிறது. ஆனால் கண்ணகியின் பொறுமை கணவனை இழந்தபின் சீற்றமாக வெளிப்படுகிறது.

‘‘காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்

கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய்

ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்”

என்ற நிலையில் கண்ணகி, சூரியனை முன்வைத்து தன் சீற்றத்தினைத் தொடங்குகிறாள். இச்சீற்றம் பாண்டிய சபைக்குச் சென்று, பின்பு மதுரையை அழலூட்டிய நிலையில் வெற்றி கொள்கிறது. கணவன் கள்வன் அல்லன் என்ற நீதி நிலை நாட்டப்பெறுகிறது.

அரசனிடம் சென்று தன் சிலம்பினைப் பற்றியும் அச்சிலம்பில் உள்ள மாணிக்கப் பரல்கள் பற்றியும் எடுத்துரைக்கும் வாதத்திறன் கண்ணகிக்கு எங்கிருந்து வந்திருக்க இயலும். அது அறத்தின் சீற்றம். அறமே கண்ணகியைப் பேச வைத்தது. அதுவே மதுரை அழல் உண்ணவைத்தது.

வஞ்சினம்

அல்லல்பட்டு அழுத கண்ணீர் சொரியும் கண்ணகி தன் கணவன் கள்வன் இல்லை; என்பதைக் கதிரவன் வழி அறிந்ததும் வஞ்சினம் மொழிகிறாள்.

‘‘கள்வனோ அல்லன் கணவன்என் காற்சிலம்பு

கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று

மாதர்த் தகைய மடவார்கண் முன்னரே

காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று

காதற் கணவனைக் கண்டா லவன்வாயில்

தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று

தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல்

நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று”

என்ற நிலையில் கண்ணகி வஞ்சினம் உரைக்கிறாள். கணவனிடம் பார்த்துப் பார்த்து மென்மைபடப் பேசும் கண்ணகிப் பெண்ணாள், வஞ்சினம் மொழிகிற அளவிற்கு எழுச்சி கொள்கிறாள். அவளி;ன் எழுச்சிக்குக் காரணம் அறம் அவளுக்குள் புகுந்து தூண்டலை ஏற்படுத்தியதுதான்.

என் கணவன் கள்வன் அல்லன். அவன் கொண்டுவந்த சிலம்பின் மதிப்பு அறிந்து; அதனை விலை பொருட்டால் கொள்ள அவனைக் கொன்றுள்ளனர். இது அநியாயம். இறந்த கணவனை நான் உயிருடையவனாகக் காண்பேன். காதற் கணவனைக் கண்டால் அவன் வாயில் தீதறு நல்லுரை கேட்பேன். இவ்வாறு செய்யவில்லை என்றால் மதுரை மக்களே இவள் நம்மை வருத்தமடையச் செய்தாள் என்று என்னை இகழுங்கள்!! என்று கண்ணகி வஞ்சினம் மொழிகிறாள்.

siragu silappadhigaaramகோவலன் மனைவி

மதுரை நகரம் எப்படி இருக்கும் என்று அறியாத கண்ணகி மதுரையில் கணவன் இறந்து கிடக்கும் இடம் சென்று அங்கு அவனைக் காண்கிறாள். அவன் அவளிடம் சிறிது பேசுகிறான்.

அவ்விடம் விடுத்துப் பின் அரசவை இருக்கும் இடம் வருகிறாள். அவ்வாறு அவள் வரும் நேரம் அரசவை கூடும் நேரமாகவும் இருந்துள்ளது. அரசவைக்குச் சென்று அங்குள்ள வாயிலோனிடம் அரசனைக் காண வந்த நிலை சொல்லி அரச அனுமதி பெற்றுக் கண்ணகி அவைக்களம் புகுகிறாள். புகுந்தவள் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, வழக்கினை உரைக்கிறாள்.

‘‘பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை யாகி

வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு 60

என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி

கண்ணகி யென்பதென் பெயரேயெனப்”

என்று நீதிமுறை மாறாது தன்னை அறிமுகம் செய்துகொள்கிறாள். இவ்வறிமுகத்தில் தன் கணவன் பெயர் சுட்டித் தன்னை, அறிமுகம் செய்து கொள்கிறாள் கண்ணகி.

மாதவியைத்தேடிப் பிரிந்தபோது அதனைப் பற்றி சிந்திக்காத கண்ணகி, தன் கணவன் கள்வன் என்று சொல்லிக் கொலை செய்யப்பட்டதை அறிந்துக் குமுறுகிறாள். அவனின் குற்றத்தை நீக்க தெரியாத ஊரில் தக்க இடம் தேடி நீதி கேட்கிறாள். இவளுக்குள் இருக்கும் அறச் சீற்றம்தான் இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

தீயோர் பக்கம் தீ சேர்க

அறத்தின் நிலைநாட்டலால் கோவலன் கள்வன் அல்லன் என்று மெய்ப்பிக்கப்டுகிறான். தான் முன் கூறிய வஞ்சினத்தில் வெற்றி பெறுகிறாள் கண்ணகி.

            ‘‘யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த

            கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று

            இடமுலை கையால் திருகி மதுரை

            வலமுறை மும்முறை வாரா அலமந்து

            மட்டார் மறுகின் மணிமுலை வட்டித்து

            விட்டெறிந்தாள்”

என்ற நிலையில் கண்ணகி தன் வஞ்சினத்தின் வெளிப்பாடாக மதுரையை எரிக்கிறாள். அவ்வாறு எரிக்கும் நிலையிலும் தீ தீறத்தார் பக்கம் மட்டுமே செல்லட்டும் என்று கண்ணகி அழல் தெய்வத்தை வழிப் படுத்துகிறாள்.

‘‘பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்

மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்

தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய 55

பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே

நற்றேரான் கூடல் நகர்”

என்ற நிலையில் இல்லறத்தாரால் காக்கப்படுகின்றவர்களைத் தவிர்த்து தீயழல் சுடச் சொல்கிறாள் கண்ணகி. பார்ப்;பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி போன்றோரை விடுத்து மற்றவர்களைச் சுட வேண்டும் என்ற கண்ணகியின் கட்டளை அவள் இல்லறத்தின் பக்கம் நிற்கிறாள் என்பதைக் காட்டுகின்றது.

இவ்வாறு தற்காத்து, தற்கொண்டான் பேணி தகை சான்ற சொற்காத்து சோர்வில்லாமல் நிறைவாழ்வு வாழ்ந்த பெண்ணாள் கண்ணகி ஆவாள். அவளின் கற்புத்திறம் கணவனாலும், மக்களாலும், தெய்வத்தாலும் போற்றுதலுக்குரியதாக விளங்கியது. அவளின் கற்புத்திறம் வெளிப்பட முழுமையாக அறம் காரணமாக இருந்துள்ளது.

கோவலனின் அறநெஞ்சம்

கோலவன் அறம் வயப்பட்டவன். இவன் செய்த அறங்கள் தலையாய அறங்களாகச் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பெறுகின்றன. இவனின் அறங்களால் இவன் அழியாப் புகழைப் பெறுகிறான். கருணை மறவன், செல்லாச் செல்வன், இல்லோர் செம்மல் என்று கோவலன் அவன் செய்த அறங்களின் விளைவால் பட்டமளித்துப் பாராட்டப் பெறுகிறான். அல்லல்பட்டவர்களுக்கு உதவும் நல்லறமே கோவலன் கைக்கொண்ட நல்லறமாகும்.

கருணை மறவன்

ஏழைகளுக்கும், துன்பப்பட்டவர்களுக்கும் இரங்கும் கருணைத்திறம் மிக்கவனாகக் கோவலன் விளங்கியுள்ளான்.

ஏழை முதிய அந்தணன் ஒருவன் தானம் பெற வீதி வழியே வருகின்றபோது, யானை ஒன்று அவனைத் தன் துதிக்கையில் வளைத்துப் பிடித்துக் கொண்டது. அந்த யானையின் பிடியில் இருந்து, அவ்வந்தணனை விடுவித்து யானையை அடக்கி நிற்கிறான் கோவலன். கருணை கொண்டு மறத்தன்மையுடன் யானையை அடக்கியமையால் கோலவன் கருணை மறவன் எனப்படுகிறான்.

‘‘ஞான நன்னெறி நல்வரம் பாயோன்

தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன்

தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி

வளைந்த யாக்கை மறையோன் றன்னைப்

பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம்

வேக யானை வெம்மையிற் கைக்கொள

ஓய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக்

கையகத் தொழித்ததன் கையகம் புக்குப்

பொய்பொரு முடங்குகை வெண்கோட் டடங்கி

மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்

பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்

கடக்களி றடக்கிய கருணை மறவ”

கோவலனின் கருணைத்திறமும், மறத்தன்மையும் இந்நிகழ்ச்சியின்வழி வெளிப்பட்டு நிற்கிறது. அந்தணர் ஓம்பல் என்ற இல்லற அறமும் இங்குக் காக்கப்பெற்றுள்ளது.

செல்லாச் செல்வன்

தன் செல்வத்தை எல்லாம் வழங்கிய செல்லாச் செல்வனாகக் கோவலன் விளங்குகிறான். குழந்தையைக் கடிக்க வந்த பாம்பினைக் கொன்ற கீரியை அதன் உதவும் தன்மையை உணராமல், குழந்தையைக் கொன்றுவிட்டதோ என்று கருதி அதனைக் கொன்றுவிடுகிறாள் ஒரு பார்ப்பனப் பெண். இதன் காரணமாக அவளின் கணவன் அவளை பாவம் செய்தாள் என்று துறந்து வடதிசை போகின்றான். போனவன் ஓர் ஓலையில் வடமொழியில் சில தானக்குறிப்புகளை எழுதி இதனைத் தக்காரிடம் காட்டி இவற்றைச் செய்த பின் என்னைச் சேர்க என்று கூறுகின்றான். இவ்வோலையை எவரும் பற்றுவார் இல்லை. அவ்வந்தணப் பெண்மணியும் அலைந்து திரிகிறாள். கோவலன் அவளின் துன்பத்தைப் போக்க எண்ணி அவளை அழைத்து, அவளின் கையில் உள்ள வடமொழியாலான தானக் குறிப்புகளை உணர்ந்து, அவளுக்காக தானம் பல செய்து அவளை அவள் கணவனுடன் சேர்த்து வைக்கிறான் கோவலன். இதன் காரணமாகச் செல்லாச் செல்வன் என்று அவன் அழைக்கப்பெற்றான். செல்லாச் செல்வன் என்பது கோலவன் தொலையாத செல்வத்தை உடையவன் என்பதைக் காட்டுகின்றது.

‘‘பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக

எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல

வடதிசைப் பெயரும் மாமறை யாளன்

கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை

வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக் கெனப்

பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர்

மாட மறுகின் மனைதொறு மறுகிக்

கருமக் கழிபலங் கொண்மி னோவெனும்

அருமறை யாட்டியை அணுகக் கூஉய்

யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென

மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி

இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்

கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென

அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்

நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு

ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்

தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்

தானஞ் செய் தவள் தன்றுயர் நீக்கிக்

கானம் போன கணவனைக் கூட்டி

ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து

நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ”

என்ற நிலையில் தன் செல்வத்தை எல்லாம் தானம் செய்ய விரும்பியவன் கோவலன் என்பதை உணரமுடிகின்றது.

இல்லோர் செம்மல்

கோவலன் இல்லத்தவர்களின் செம்மலாகவும் விளங்கியவன் ஆவான். அவன் பத்தினி ஒருத்தியைப் பொய் சாட்சி சொல்லித் துன்பப்பட வைத்த ஒருவனைப் பூதம் கடித்துத் தின்ன முயன்ற நிலையில் கோலவன் அவனைக் காக்க தன் உயிரைத் தர முன்வருகிறான். ஆனால் பூதமோ பாவப்பட்ட ஓர் உயிருக்காக, நல்ல உயிரான கோவலனை ஏற்க இயலாது என்று சொல்லிப் பொய்க்கரி சொன்னவனை விழுங்கிவிடுகிறது. விழுங்கியவன் தாய் ஆதரவற்று நின்ற நிலையில் கோவலன் அவளைக் காக்கும் பொருட்டு பொருள் அளித்தான். பல்லாண்டுகள் அத்தாயைப் பாதுகாத்தான். இதன் காரணமாக அவன் இல்லோர் செம்மல் என்று போற்றப் பெற்றான். இதனைச் சிலப்பதிகாரம்

பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த

மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன்

அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக்

கறைகெழு பாசத்துக் கையகப் படலும்

பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு

கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி

என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென

நன்னெடும் பூதம் நல்கா தாகி

நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு

பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை

ஒழிக நின் கருத்தென உயிர்முன் புடைப்ப

அழிதரு முள்ளத் தவளொடும் போந்தவன்

சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்

பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப்

பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்”

என்று குறிப்பிடுகின்றது.

இவ்வாறு கோவலன் ஆதரவற்றவர்களுக்கு உதவும் அறத்தினைச் செய்து மகிழ்ந்திருக்கிறான். கோவலனைப் பொறுத்தவரையில் தன்னை நாடிவந்து ஆதரவு கேட்பவர்களை ஆதரவுடன் பேணிக்காக்கும் தன்மை பெற்றவன் என்பதை அறியமுடிகின்றது. மாதவிக்கும் ஆதரவளித்தவனாகவே அவன் விளங்குகிறான்.

கணவனை இழந்தவர்க்குக் காட்டுவது இல் என்னும் பாண்டிமாதேவியின் நல்லறம்

கணவன் இறந்தபின் வாழ்தலில் பொருள் இல்லை என்ற இல்லற அறமும் சிலப்பதிகாரத்தில் சுட்டப்பெற்றுள்ளது. பாண்டியன் நெடுஞ்செழியன் தான் தவறுடையவன் என்று தன் உயிர் நீக்கும் நிலையில் உடனே தன் உயிர் நீக்கிறாள் ;பாண்டிமாதேவி. அவளின் கற்புத்திறம் பாராட்டத்தக்கது.

திருமீழ் மார்பின் தென்னவர் கோமான்

தயங்கிணர்க் கோதை தன்துயர் பொறாஅள்

மயங்கினள் கொல்லென மலரடி வருடித்

தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள்

கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொறாஅள்

மன்னவன் செல்வுழிச் செல்க யானெனத்

தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல்

பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்’

என்ற நிலையில் கணவனுக்காகவே உயிர் வாழும் நன்முறை இல்லறத்தின் தலையாய அற நடைமுறையாக இருந்துள்ளது. இங்குப் பாண்டிமாதேவி தன்னுயிர் கொண்டு தன் கணவன் உயிர் தேடுகின்றாள். உயிரும் உடலும் ஒருங்கு கலந்து வாழ்ந்த தன்மையராக பாண்டியனும் அவன் மனைவி பாண்டிமாதேவியும் விளங்குகின்றனர்.

இதன் காரணமாகவே இவளின் கற்புத்திறம் கண்ணகிக்கு இணையாக வைக்கப்பெற்று, அவளுக்கும் கோயில் எழுப்பலாம் என்ற கருத்து சேரநாட்டில் காட்டப்பெற்றுள்ளது.

கோப்பெருந்தேவியின் மகிழ்ச்சி

சேரமாதேவியிடம் விடை கேட்டு சேரன் பிரிகின்றான். இருப்பினும் அவன் திரும்பி வரும் வரை வருத்தத்துடன் காத்திருக்கிறாள் தேவி. அவன் வந்தபின் மகிழ்கிறாள்.

            ‘‘ ஓர்த்துடன் இருந்த கோப்பெருந் தேவி

            வால்வளை செறிய வலம்புரி வலனெழ

            மாலைவெண் குடைக்கீழ் வாகைச் சென்னியன்

            வேக யானையின் மீமிசைப் பொலிந்து

            குஞ்சர ஒழுகையிற் கோநக ரெதிர்கொள

            வஞ்சியுட் புகுந்தனன் செங்குட் டுவனென்.”

தன் கணவனின் பிரிவில் அவனுக்காகக் காத்திருக்கும் கற்பு நிலை என்பதே பெண்களின் தலையாய அறம் என்று கொள்கிறது சிலப்பதிகாரம்.

இவ்வகையில் பெண்கள் கற்பு நிலை காத்தலும், ஆண்கள் ஆதரவற்றோருக்கு உதவுதலும் ஆகிய இருவகை அறங்களே கோட்பாட்டு அளவில் சிலப்பதிகார இல்லற அறங்களாகக் போற்றப்பெறுகின்றன.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இல்லறக் கோட்பாடுகள்”

அதிகம் படித்தது