மே 21, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

உடல் பருமனும் நோய்களும்

சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

Nov 14, 2015

Dr.Jerome -FIபழைய காலங்களில் பலிகொடுப்பதற்கென்றே ஆடு மாடு போன்றவைகளை வளர்ப்பார்கள். மிகவும் பரிவுடன் அதற்குத் தேவையான எல்லாத் தீவனங்களையும் கொடுத்து வளர்ப்பார்கள். அதை வேலைக்கும் பயன்படுத்தமாட்டார்கள் அதுவும் நன்கு ‘கொழு கொழு’ என்று வளரும். அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்திலும் சிலர் இதேபோல் செய்கிறார்கள். ஆனால் விலங்குகளுக்கு பதிலாக அதேபோல பிள்ளைகளை வளர்க்கிறார்கள், பலி கொடுப்பதற்கு.

ஆம், உடல் பருமனால் அநேக நோய்கள் உண்டாகின்றன. ஆயுள்காலத்தை வெகுவாக குறைக்கும் காரணிகளில் உடல் udal paruman4பருமன் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

சிறுவயதில் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்களோ அப்படியே வாலிப வயதிலும் வளர்கிறார்கள், நடுத்தர வயதிலும் வாழ்கிறார்கள். கல்லூரிக்குச் சென்றாலும் நூலகத்தை விட உணவகத்திலேயே இவர்களை அடிக்கடி பார்க்க முடியும்.

உடல் பருமன் கிட்டத்தட்ட எல்லா நோய்களோடும் தொடர்புடையது.

udal paruman6இப்படிச் சொன்ன உடனேயே, உங்கள் மனதில் எழுகின்றவைகள். “டாக்டர், என் மகன்/மகள் எவ்வளவு எடை இருக்க வேண்டும்?” இப்போது இருக்கும் எடை சரிதானா, அதிகமா? என்பதுதான். இதற்கெல்லாம் பதில் இருக்கிறது. ஆனால் இவைகளுக்கு பதில் காண்பதற்கு முன்பாக, சில வாழ்வியல் புரிதல்கள் நமக்கு வேண்டும்.

இந்த புரிதல்களை அடிப்படையான அறிவு (Common Sense) என்றே நான் கூறுவேன்.

அதாவது உணவு என்பது உடலை வளர்ப்பதற்கல்ல, பசி எடுக்கும்போது தேவைக்கு சாப்பிடுவதற்கே. இந்த அடிப்படை உணர்வோடும் உடல் இயங்கியலோடும் இணைந்து வாழ்ந்தாலே போதும். எவ்வளவு எடை இருக்க வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும் என்ற கேள்விகள் வராது. உடல் எடையும் கூடாது.

இதை திருவள்ளுவரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்,
“அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து”
இதில் ‘பசி’ என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும்.

இது நாம் வாழும் சூழல், நாம் செய்யும் வேலைகள் இவைகளைப் பொறுத்து மாறுபடும்.

udal paruman3சரி, இரண்டு பேர் இருக்கிறார்கள், ஒருவர் உங்கள் மகன் மற்றொருவர் பக்கத்து வீட்டு பையன், இருவருக்கும் ஒரே வயது. இருவரும் ஒரே எடை, ஒரே உயரம். கிட்டத்தட்ட இருவரும் ஒரே மாதிரியான வேலைகளைத்தான் காலை முதல் இரவு வரை செய்கிறார்கள். உங்கள் பக்கத்து வீட்டு பையன் ஆறு இட்லிகள் சாப்பிடுகிறான். உங்கள் பையனோ நான்கு இட்லிகள்தான் சாப்பிடுகிறான். “இருவரும் ஒரே மாதிரியாகத்தானே இருக்கிறார்கள் எனவே இவனும் ஆறு இட்லி சாப்பிடுவதுதானே சரி” என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படியல்ல இங்கு BMR- Basal Metabate Rate என்ற ஒன்றை உங்களுக்கு விளக்க வேண்டும். அதாவது அடிப்படை வளர்சிதை மாற்றம், இது என்னவென்றால் ஒருவர் எந்த வேலையும் செய்யாமல், ஓய்வாக இருக்கும் நேரத்தில் அவர் உடலில் எவ்வளவு ஆற்றல் (கலோரி) செலவாகிறது என்பதுதான். இது ஆளுக்கு ஆள் மாறுபடும்.

நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன், உடல் கூறுகள் எல்லோருக்கும் ஒன்றே தவிர, உடல் இயங்கியல் ஆளுக்கு ஆள் மாறுபடும்.

எனவே பசி என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். அந்த பசியின் அளவுக்கு உண்பதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. (சில நோய் நிலைகளில் ‘பசியின்மை’ ஏற்படும். அதற்கு சிகிச்சை எடுப்பது அவசியம்)

இந்த பசியின் அளவை ஒவ்வொருவரும் அறிவால் அறிந்தும், உணர்வால் உணர்ந்தும் சாப்பிடுவதே ஆரோக்கியம்.
இதனையும் திருவள்ளுரின் வார்த்தையில் கூறலாம்.
“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்”
இந்த ‘தீ அளவு’ என்பதை ‘BMR’ உடன் ஒப்பிடுவது மிகவும் பொருந்தும்.

udal paruman5சரி, உடல் பருமன் எப்படி ஏற்படுகிறது?

ஒரு நாளைக்கு நீங்கள் செலவளிக்கும் ஆற்றலுக்கு (இதனை கலோரி என்ற அளவீட்டில் குறிப்பிடுகிறோம்). அதிகமான கலோரி உள்ள உணவை தொடர்ந்து உண்டு வந்தால் உடல் பருமன் ஏற்படுகிறது.

ஒரு நாளைக்கு செலவாகும் கலோரிகளைவிட 50-200 கலோரி அதிகமாக உண்டு வந்தால், 4-10 ஆண்டுகளில் 2-20 க்கிலோ எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

udal paruman7எனவே ஒரு நாளைக்கு நீங்கள் எவ்வளவு கலோரி செலவு செய்கிறீர்கள் என்பதும் எவ்வளவு கலோரி உண்கிறீர்கள் என்பதும் தான் உடல் பருமனை தீர்மானிக்கிறது.

இதனையும் திருவள்ளுவரின் வார்த்தைகளில் கூறலாம்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
அருந்தியது – உண்ட உணவு((Energy Consumed)
அற்றது – செலவழிந்த சக்தி (Energy Spent)

எனவே இந்த ஆற்றல் சமநிலைதான் உடல் சமநிலையைப் (Energy Balance) பராமரிக்கிறது.
ஆனால் இவற்றை எப்படி அளந்து கொண்டிருப்பீர்கள்? இதை ஒவ்வொரு நாளும் கணக்கிட்டு சாப்பிட முடியாது.

ஆனால் உடல் பருமனாக உள்ளதா என்பதை கணக்கிட முடியும்.

இதற்கு BMI – Body Mass Index, உடல் நிறை குறியீடு என்ற ஒரு கணக்கீடு உங்களுக்கு தெரிந்திருக்கும்.

BMI கணக்கிடும் முறை:

உங்கள் எடையை (கிலோ கிராமில்) உங்கள் உயரத்தின் (மீட்டரில்) வர்க்கத்தால் வகுத்து கிடைப்பதே BMI.
உதாரணமாக நீங்கள் 65 கிலோ எடையும் 165 செ.மீ உயரமும் இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.
udal paruman8

பொதுவாக அனைவருக்கும் BMI 18 முதல் 24 வரை இருப்பது சரியான அளவு.

உடல் பருமனுக்கு இன்னொரு அளவுகோலும் உள்ளது. உங்கள் வயிற்றின் சுற்றளவைக் கொண்டும் நீங்கள் உடல் பருமனோடு இருக்கிறீர்களா இல்லையா என கணிக்கலாம். ஒரு அளவு நாடா(Measuring Tape) எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வயிற்றின் சுற்றளவை அளந்து பாருங்கள்.

udal paruman1நீங்கள் ஆணாக இருந்தால் வயிற்றின் சுற்றளவு அதிகபட்சம் 102 cm இருக்கலாம்.

udal paruman2நீங்கள் பெண்ணாக இருந்தால் 88cm. இதற்கு மேல் இருந்தால் நீங்கள் உடல் பருமன் பிரச்சனையில் உள்ளீர்கள்.

25 முதல் 30 வரை இருந்தால் உடல் எடை அதிகமாக இருக்கிறீர்கள். 30க்கும் மேல் இருந்தால் நீங்கள் ‘உடல் பருமன்’ பிரச்சனையில் உள்ளீர்கள். தொடர்ந்து உடல் எடை அதிகரித்துக் கொண்டே வந்தால் உங்களுக்கு அனேக நோய் வரும் வாய்ப்பு உள்ளது.

இங்கு இன்னொரு விடயத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். உடல் கூறுகள்தான் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறதே தவிர உடல் இயங்கியல் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அடிப்படையில் வாத உடலினர், பித்த உடலினர், கப உடலினர் என மூன்று வகையாக அனைவரையும் பிரிக்கலாம்.

வாத உடலினர் இயல்பாகவே உயரமானவர்களாகவும், ஒல்லியாகவும் காணப்படுவர். பித்த உடலினர் நடுத்தரமாக காணப்படுவர். கப உடலினர் சற்று பெருத்த உடலமைப்புடன் காணப்படுவர்.

இந்த வேறுபாடுகள் அவரவர்களுக்கு இயல்பானதே. எனவே எந்த வகையான உடலினர் எந்த விகிதத்தில் மாறுபட்டு காணப்படுகின்றனர் என்பதை அவர்களின் தேகநிலையையும், நாடி நிலையையும் வைத்தே சரியாக கணிக்க முடியும். எனவே பொதுவாக கூற வேண்டுமானால்,
“அற்றல் அளவறிந்து உண்க அது உடம்பு
பெற்றான் நெடிதுய்க்குமாறு”

உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்:

udal paruman5- இதய நோய்கள்
- பக்கவாதம்
- நீரிழிவு
- கல்லீரல் நோய்கள்
- உறக்கம் தொடர்பான நோய்
- நுரையீரல் நோய்கள்
- சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமை
- மூட்டு வலிகள்
- கால்களில் இரத்த நாளம் பாதிப்பு
- புற்று நோய் (மார்பக, கர்ப்பப்பை, பெருங்குடல் மற்றும் மலக்குடல்)
- சினைப்பை கட்டிகள்
- குழந்தை பேறின்மை
- மன சோர்வு
- சுய மரியாதை குறைவு
- பித்தப்பை கல்
- தோல் பிரச்சனைகள் (மார்பகங்களின் கீழ், தொடை இடுக்குகளில்)

மருத்துவ ஆலோசனைக்கு:

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D

சித்தமருத்துவ மையம்,

டாக்டர்ஸ் பிளாசா,

சரவணா ஸ்டோர் எதிரில்,

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,

வேளச்சேரி, சென்னை.

அலைபேசி எண்: 9444317293

இணையதள முகவரி:www.doctorjerome.com

மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com

முகநூல் முகவரி: https://www.facebook.com/jerome.xavier.5209?fref=ts


சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உடல் பருமனும் நோய்களும்”

அதிகம் படித்தது