சனவரி 16, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

உடை தடையல்ல…(சிறுகதை)

ஸ்ரீதரன்

Sep 30, 2017

Siragu IT staffs1

பட்டுப்புடவையில் ஒய்யாரமாய் அலுவலகம் நுழைந்த ஸ்னேகாவை அபிஷேக், வைத்தக் கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அழகு நவீனமாக பொற்சிலை போலுள்ள ஸ்னேகாவைப் பார்த்து அவள் அலுவலகத்தில் ஜொள்ளு விடாத ஆண்களே இல்லை. வசீகர கண்களையுடைய கட்டழகி. தலையை வாராமல் படர்ந்திருந்த அவள் கருங்கூந்தல் தோகை போலிருக்க, கோவில் செப்பு சிலையை மிஞ்சும் அவளின் இளமை செழிப்பு பட்டுப் புடவையில் எடுப்பாக கண்ணுக்கு விருந்தளித்தது. அவளுடன் வேலை செய்யும் அந்த அலுவலகத்தில் உள்ள எல்லா ஆண்களும் செய்யும் வேலையை மறந்து விட்டு அவளைக் குதூகலத்துடன் பார்த்தனர். அவள் அபிஷேக்கைப் பார்த்து கையை அசைத்தாள். தேர் ஆடுவது போலிருந்தது.

ஸ்நேகா, சாதனா, அபிஷேக் எல்லாம் பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கேம்பஸ் இண்டெர்வியூவில் செலக்ட் ஆகி பிரபலமான சாப்ட்வேர் கம்பெனியில் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த நண்பர்கள் மூவரும் படிக்கும்போதே மிகவும் நெருக்கமாக பழகுவார்கள். ஸ்நேகாவுக்கு அப்பா, அம்மா கிடையாது. விடுதியில் தங்கியிருந்து படித்தாள். இப்போது பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறாள்.

ஸ்நேகாவும் சாதனாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டிப் போடும் அளவிற்கு மிதமிஞ்சிய அழகுடன் இருப்பார்கள். இருவரும் நெருங்கியத் தோழிகள் என்றாலும் ஸ்நேகா நேர்மறை சிந்தனை உள்ளவள். சாதனா எதிர்மறை சிந்தனை உள்ளவள். ஸ்நேகா துணிச்சல்காரி, டேக் இட் ஈசி பாலிசி உடையவள். சாதனா பயந்த சுபாவமுள்ளவள், எதையும் சீரியஸ்யாக எடுத்துக் கொள்வாள், எப்போதும் புடவைதான் உடுத்துவாள்.

ஸ்நேகா சீட்டில் உட்கார்ந்து வேலை செய்ய ஆரம்பித்தாள். அவளுக்கு வெளிநாடு போகவேண்டும் என்னும் ஆசை உண்டு. அவள் அலுவலகத்தில் இரண்டு பேரை வெளிநாடு அனுப்பப் போவதாகப் பேச்சு. யார் அந்த இரண்டு பேர் என்று இன்று தெரிந்து விடும். தன் பெயரும் அதில் இருக்க வேண்டுமே என்று பரபரப்பாக இருந்தாள் ஸ்நேகா.

மதிய உணவு சாப்பிடும் நேரம் பகல் ஒரு மணிக்கு சற்று நேரம் இருக்கும்போது ஸ்நேகாவுக்கு மேனேஜரிடமிருந்து அழைப்பு வந்தது. ஸ்நேகா பரபரப்புடன் அவர் அழைக்குள் நுழைந்தாள். மேனேஜர் கார்த்திக் பட்டுப்புடைவையில் அவள் அழைகைப் பார்த்துத் திகைத்தான். கார்த்திக் ஒரு ஜொள்ளு பார்ட்டி என்பது ஸ்நேகாவுக்கு நன்றாகத் தெரியும்.

”உட்காருங்க ஸ்நேகா, உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும். அமெரிக்காவுக்கு நீங்கள் செலக்ட் ஆகவில்லை. ஷர்மிளாவும் அபிஷேக்கும்தான் என்னுடைய செலக்‌ஷ்ன்”

ஸ்நேகாவுக்குத்தூக்கி வாரிப் போட்டது .

”என்ன சார் சொல்றீங்க?” என்றாள்

அவள் நெஞ்சகம் விம்மித் தணிந்தது.

கார்த்திக் அவளைப் பார்த்தான். பொங்கும் பருவ இளமை அவனை தடுமாற வைத்தது.

“சார் என்னை செலக்ட் பண்ணுங்க என்னை அமெரிக்கா அனுப்புங்க, நான் மிகவும் ஆசையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கேன” என்று அவனுக்கு மிக அருகில் நின்று கொஞ்சினாள்.

சிறிது யோசித்தான். அழகான பெண் கெஞ்சினால் அல்லது கொஞ்சினால் இரும்பு மனம் உடையவனும் மாறி விடுவான் அல்லவா? அவன் கவிழ்ந்து விட்டான்.

”சரி, உங்களைச் செலக்ட் செய்கிறேன்.” என்றான்.

ஸ்நேகாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

“தேங்ஸ் தேங்ஸ்” என்று துள்ளிக் குதித்தாள்.

”ஆர்டர் அனுப்புகிறேன். நீங்க போய் அபிஷேக்கை அனுப்புங்க” என்றான்

ஸ்நேகாமுகத்தில் மகிழ்ச்சி பொங்க வெளியே வந்தாள்.

சாதனாவிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள். சாதனாவும் அவளை வாழ்த்தி, ”எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருந்தால்கூட நான் ஒத்துக் கொண்டிருக்க மாட்டேன். என்னுடைய வீடு ரொம்ப ஆச்சாரம், நானும் ஆச்சாரம். எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் எனக்குத் திருமணம் நடந்துவிடும்” என்றாள்.

அபிஷேக் அவள் இருக்குமிடத்திற்கு வந்து விட்டான்.

”ஸ்நேகா நாம் இருவரும் சிகாவோவுக்குப் போகப் போகிறோம். என்னால் சந்தோசம் தாங்க முடியவில்லை. நாம் இரண்டு பேரும் சேர்ந்து போகப் போகிறோம் சேர்ந்து இருப்போம். மூன்று வருடம் கழித்துதான் இந்தியா வருவோம். இன்னும் பதினைந்து நாளில் நாம் சிகாகோ கிளம்ப வேண்டும். நீ துணிமணிகள் எல்லாம் வாங்கி தயாராய் இரு”.

ஸ்நேகா தயங்குவதைப் பார்த்து, ”பணம் இல்லையென்று யோசிக்க வேண்டாம். வா ஷாப்பீங் போகலாம். நீ எது வேண்டுமானாலும் வாங்கிக்கொள். எல்லாம் என் செலவு“.

ஸ்நேகாவுக்கு பெரிய கவலை விட்டது. புதிய உடைகள் வாங்க என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். கடவுளே வழி செய்தது போலிருந்தது.

சிகாகோ வந்து ஒரு அபார்ட்மென்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டனர்.

நாம் இருவரும் கணவன் மனைவி போல் சேர்ந்து வாழலாமா? என்று தன் கோரிக்கையை சமர்ப்பித்தான் அபிஷேக்.

”அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டு விடலாம் மூன்று வருடத்திற்கு. எல்லா செலவும் நீங்கதான் செய்யனும். வாடகையும் உங்களைச் சார்ந்தது.” என்றாள்.

அபிஷேக்கும் இந்த முறை பிடித்திருந்தது. கரும்பு தின்னக் கசக்குமா?

”ஓ. கே” என்றான் முகத்தில் மகிழ்ச்சியுடன்.

ஒரு காகித்தில் நிபந்தனைகள் எழுதப்பட்டன. இருவரும் கையெழுத்திட்டனர்.

அவன் மனம் ஆனந்தத்தில் மிதந்தது.அபிஷேக்கு அவளிடம் இச்சை, வேட்கை, ஆசை, காதல் உண்டு. அவள் தோள் மேல் கைபோட்டு அணைத்துக் கொண்டான்.

சிகாகோ வாழ்க்கை அவர்களுக்குப் பழகி விட்டது. சனி, ஞாயிறு விடுமுறை.

சனிக்கிழமை அன்று தவறாமல் டிரிங்க்ஸ் இருக்கும். குடித்து விட்டு நடனம் ஆடி வாழ்க்கையை அனுபவித்தார்கள். இன்பலோகத்தில் மிதந்தார்கள்.

அந்த இளம் ஜோடியின் வாழ்க்கைப் படகு இன்ப நதியில் ஆனந்தமாகச் சென்று கொண்டிருந்தது. இன்பத்தை அனுபவிப்பதே அவர்கள் வேலையாக இருந்தது.

ஸ்நேகா வாட்ஸ் அப் மூலம் சாதனாவை அடிக்கடி தொடர்பு கொண்டாள். அவர்கள் நட்பு தொடர்ந்தது. சாதனாவுக்கும் திருமணம் ஆகி டெல்லியில் அவள் கணவனுக்கு வேலை என்பதால் சென்னை வேலையை விட்டுவிட்டு செய்து விட்டு டெல்லி போய் விட்டாள். அவள் வீட்டில்தான் இருந்தாள். வேலைக்குப் போகவில்லை, குழந்தை இல்லை.

இரண்டு வருடம் ஒழுங்காக போய்க்கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் கணவனுக்கு வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை வந்தது. அவனை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். எவ்வளவு சிரமப்பட்டுத் தேடியும் வேறு வேலை கிடைக்கவில்லை. ஒரு நாள் சோர்ந்து போய் வரும் போது பேருந்து ஒன்று காலில் ஏறி இரண்டு கால்களும் எடுக்க வேண்டிய கட்டாயம். கால்கள் எடுத்ததால் அவன் முடமாகிவிட்டான். சாதனா சென்னைக்கே வந்துவிட்டாள் கணவனுடன். தான் ஏதாவது வேலை தேடி குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்று முயற்சி செய்தாள். துரதிஷ்டவசமாக வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவள் தேடிக்கொண்டே இருக்கிறாள்.

அதற்குள் மூன்று வருடம் முடிந்து விட்டது. ஸ்நேகாவுக்கு சிங்கப்பூர் மாற்றல் வந்து விட்டது. அபிஷேக்கு வாசிங்டன் நகருக்கு மாற்றம் வந்து விட்டது. ”நான் போக வேண்டும்” என்று குழந்தை மாதிரி அழுதான். ஸ்நேகா அவனை ஆசுவாசப்படுத்தினாள். போக மனசு இல்லாமல் அவன் பிரிந்து போனான். சிங்கப்பூர் வேலையில் சேரவேண்டும் என்பதால் முதலில் இந்தியா வந்திருந்தாள்.

சாதனாவைப் போய் பார்த்தாள்.

”வா, ஸ்நேகா. ஆளே மாறி விட்டாயே. கொழு கொழுன்னு ஆயிட்டே” என்று வரவேற்றாள் தோழியை.

”ஆரோக்கியமான உணவு, அபிஷேக்கும்தான் எல்லாவற்றிக்கும் காரணம். என்று கண் சிமிட்டியவள், ”அபிஷேக் எனக்கு நல்ல பார்ட்னராக இருந்தான். இப்போ வாசிங்டன் போய் விட்டான். எனக்குச் சிங்கப்பூருக்கு மாற்றம் வந்து விட்டது. அடுத்த வாரம் சிங்கப்பூர் போக வேண்டும்”.

” நீ எப்படி இருக்கிறாய். சாதனா?”

”ஏதோ இருக்கிறேன்.”

”ஏன் சலித்துக் கொள்கிறாய்?”

”பின்ன என்ன? என் கணவரின் மேல் பேருந்து ஏறி அவர் இரண்டு காலையும் முட்டிக்குக் கீழே எடுத்து விட்டார்கள். நான் இதுவரை வேலைக்குப் போகாமல் இருந்தவள் வேலை கிடைக்குமா என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இதுவரை எனக்கு வேலை கிடைக்கவில்லை. பழைய கம்பெனியில் போய் கேட்டதிற்கு அங்கு ஒரு முறை வேலை செய்தவரைத் திரும்பவும் வேலைக்கு எடுப்பதில்லை என்று திட்டவட்டமாக்க் கூறி விட்டார்கள். ஒரு எம்.என்.சி கம்பெனியில் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் பேண்ட், முழுக்கை சட்டை, ஷீ போட்டுக் கொண்டுதான் வேலைக்குப் போக வேண்டும் என்பதால் எனக்கு ஒப்புக் கொள்ள மனசு வரவில்லை. நான் ஆச்சார குடும்பத்தில் வந்தவள். என் கணவருக்கும் நவீன உடையில் விருப்பமில்லை. புடவையைத் தவிர வேறெதையும் அறியேன். மேலும் சட்டை போட்டுண்டு போனால் எல்லோரும் என்னையே உற்றுப் பார்ப்பார்கள். என்னமோ போலிருக்கும். அதனால் அந்த வேலையை நான் ஏற்றுக் கொள்ளவேண்டாமென்று இருக்கிறேன்”.

இதைக்கேட்ட ஸ்நேகா புன்னகை பூத்தாள்.

ஏண்டி எந்த உலகத்திலே இருக்கே நீ? ஆண்கள் பார்வைக்குப் பயந்து மாடர்ன் டிரஸ் போட மாட்டேன் என்றால் உன் வீட்டில் அடுப்பு எப்படி எரியும்? நீ ஆண்களின் பார்வையைப் இலட்சியம் செய்யாதே. உன்னை யாரும் கவனிக்க மாட்டார்கள். அப்படி யாரவது உற்றுப் பார்த்தால் வாட் இஸ் த பிராபளம்? என்று ஆங்கிலத்தில் கேள். கப் சிப் என்று போய் விடுவார்கள். நாம் சும்மா இருந்தால் முரண்டு பிடிப்பார்கள். நாம் முரண்டு பிடித்தால் சும்மா இருப்பார்கள். உடை தடையில்லை. மனம்தான் தடை.

” எனக்கு ரொம்ப வெட்கமாய் இருக்கிறது. நான் எப்படி சர்ட் போட்டுண்டு வெளியே போறது. என்னாலே முடியாது. நினைச்சுக் கூட பார்க்க முடியலே.”

”இந்த ஆணகளே இப்படிதான். ஆண் சமூகம் பெண்களை அடிமைகளாய் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறது. அடிமைகளாய் நம்மை எண்ண வைத்திருக்கிறது. பெண்களுக்கு உடை அணிவதில் முழு சுதந்தரம் வேண்டும். ஆண், பெண் இருவருக்கிடையே சமத்துவம் மலர வேண்டும். உடைகள் அணிவதில் பெண்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அயல் நாட்டில் ஆண்கள் மிகவும் கண்ணியமானவர்கள். இலண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன் கேள். ஒருமுறை ஓட்டலுக்கு வந்த பெண்மணி குழந்தை அழுததால் தன் மேலாடையை முற்றிலும் களைந்துவிட்டு ஓட்டலில் ஒரு பக்கம் அமர்ந்து குழந்தைக்கு பால் கொடுத்தாள். அங்கிருந்த யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. இந்தியாவில் இருந்தால் ஒரு கூட்டமே அந்தப் பெண் முன்னால் நின்று கொண்டிருக்கும். நீ நேர்மறை சிந்தனையோடு தீர்மானம் செய். உடனே வேலையை ஒப்புக் கொள். இந்தா உனக்குத் தேவையான டிரஸ் வாங்க கொஞ்சம் பணத்தை வைத்துக் கொள்” என்று இருபத்தி ஐந்து ஆயிரம் ரூபாயை சாதனாவிடம் கொடுத்தாள்.

”நீ சொல்வது சரி என்றாலும் எனக்குத் திகிலாகத்தான் இருக்கிறது.”

”பயப்படாதே. முயற்சி செய்து பார். பெண்ணுரிமைகளை நாம் விட்டு கொடுக்கக் கூடாது. நான் சுதந்திரமாய் இருந்தேன். இப்போதும் இருக்கிறேன். அதனால் பெண் சுதந்திரமாய் இருப்பதைப் பற்றி அறிவுரைக் கூறும் தகுதி எனக்கு உண்டு என நினைக்கிறேன்.”

சாதனா சிறிது யோசனை செய்தாள். ஸ்நேகா சொல்வது சரியென்று பட்டது. பணத்தை வாங்கிக் கொண்டவள், ”நீ சொல்வதில் நியாயம் இருக்கிறது. நீ சொன்னப்படியே செய்கிறேன். பிரச்சனைகள் வரும்போது கடவுள் யார் மூலமாவது நமக்கு வழி காட்டுகிறார். எனக்கு உன் மூலம் வழி காட்டியிருக்கிறார்” என்று கையைப் பிடித்துக் கொண்டுச் சொன்னாள். வாசல் வரை வந்து அவளை வழியனுப்பினாள். ஸ்நேகா காரில் ஏறும்முன் திரும்பிச் சாதனாவைப் பார்த்தாள். ஃபைளையிங் கிஸ் கொடுத்துத் தன் அன்பைத் தெரிவித்தாள்.

                             $$$$$$$$$$


ஸ்ரீதரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உடை தடையல்ல…(சிறுகதை)”

அதிகம் படித்தது