உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு என்பது ஒரு சமூக அநீதி!
சுசிலாJan 26, 2019
இடஒதுக்கீடு என்பது ஒரு சமூகநீதி, சமத்துவம் என்ற கருத்தியலை அடிப்டையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு ஏற்பாடு. காலங்காலமாக, சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு எதிலும் உரிமையில்லாத, கேட்டாலும் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தினரை முன்னேற்றி மேலே கொண்டுவந்து சமநிலையை எட்டுவதற்காக எழுதப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டம். அதில் சமூகரீதியாக, கல்வி ரீதியாக என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொருளாதார ரீதியாக என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. ஆனால், மத்தியில் ஆளும் பா.ச.க அரசு, திடுதிப்பென்று, இரண்டே நாட்களில், நாடாளுமன்ற இரு அவைகளிலும், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு’ என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அதிலும் இந்த ஆண்டே அதாவது வரும் கல்வியாண்டு அமல்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறது.
இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. 1928 – ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட வகுப்புவாரி உரிமை செல்லாது என்று உச்சநீதிமன்றம் 1950-ல் தீர்ப்பளித்தது. அப்போது இடஒதுக்கீட்டிற்கு ஏற்பட்ட நிலையினை எதிர்த்து, தந்தை பெரியார் தலைமையில், மாபெரும் போராட்டங்கள், கிளர்ச்சிகள் எழுந்தன. அதன் காரணமாக, முதலாவது அரசியல் சட்டத்திருத்தம் 1951-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது அந்த அரசியல் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, சட்ட அமைச்சர் டாக்டர். அம்பேத்கார் மற்றும் பல உறுப்பினர்களுடன் விவாதித்து, அதற்கு முன்னர், அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய விரிவான 340 -ல் எந்தெந்த வரையறை சொற்கள் போடப்பட்டதோ, அதே சொற்களை “Socially and Educationally” “சமூக ரீதியாக, கல்விரீதியாக” என்பதை அப்படியே பயன்படுத்தி, 15(4) என்றே பிற்படுத்தப்பட்டவர்களுக்காக புதுப்பிரிவை, இடஒதுக்கீட்டிற்கான சட்டத் திருத்தத்திலும் இடம்பெற செய்தனர். அப்போதும் சிலர், Economically என்று பொருளாதார ரீதியாக சேர்க்க வலியுறுத்தினார். அப்போது, அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் மிகத் தெளிவாகக் கூறினார்.
“பொருளாதார அளவுகோல் என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது. அது திட்டவட்டமான அளவுகோல் அல்ல. அது குழப்பத்திற்கு ஆளாக்கும்.” என்று கூறி, அதற்கு ஆதரவாக 243 வாக்குகள் பெற்று வெற்றியடைந்து சட்டமாக்கப்பட்டது. அதன்பிறகு, பி..வி. நரசிம்மராவ் ஆட்சியில், பொருளாதார ரீதியாக 10 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அப்போது 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ‘ பொருளாதார ரீதியாக ஒதுக்கீடு’ சட்டப்படி செல்லாது என்று 1992 ஆம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
பின்பு, 2016 -ல் குஜராத் மாநிலத்தில், பா.ச.க ஆட்சியின்போது பொருளாதார அடிப்படையில், பின்தங்கிய உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு செய்யும் வகையில் இப்போது போலவே ஒரு அவசர சட்டம் இயற்றப்பட்டது. அதனை எதிர்த்து போடப்பட்ட வழக்கிலும் உயர்நீதிமன்றத்தில் செல்லாது என தீர்ப்பு வழக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், ராஜஸ்தானிலும், உத்திரப்பிரதேசத்திலும் பிறப்பிக்கப்பட்ட ஆணையை அம்மாநில உயர்நிதிமன்றங்களே சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. இடஒதுக்கீட்டின் வரலாறு இப்படி இருக்கையில், தற்போது ஆண்டுகொண்டிருக்கும் பா.ச.க அரசு, வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, உயர் சாதியினரின் வாக்குகளைப் பெறுவதற்கு, இந்த புதிய சட்டத்தை அவசரகதியில் பிறப்பித்திருக்கிறது!
முன்னாள் பிரதமர் திரு. வி பி. சிங் அவர்களால் கொண்டுவரப்பட்ட மண்டல் கமிசனின், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒதுக்கீடுகளே இன்னும் கொடுக்கப்படவில்லை, நியாயமான முறையில் ஒதுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. மத்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி போன்றவைகளில் இன்னமும் உயர்ஜாதி என்று சொல்லிக்கொள்பவர்கள் தான் பணியில் இருக்கிறார்கள். அனைத்து உயர்பதவிகளையும் எடுத்துக்கொண்டால், உச்சநீதிமன்ற நீதிபதிகள், வெளியுறவு செயலர்கள், ஆட்சியர்கள் என்று அனைத்துத் துறைகளிலும் அவர்களின் நாட்டாமையாகத்தானே இருக்கிறது.! பொருளாதார வல்லுனரும், நோபல் பரிசு பெற்றவருமான திரு.அமர்த்தியா சென் அவர்களும், இந்த சட்டத்தை எதிர்த்துத்தான் கருத்து கூறியிருக்கிறார்.
‘அனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது என்பது இடஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும். இதனால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்லவே. சமூகத்தில், சாதி அடிப்படையில் ஒடுக்கிவைக்கப்பட்ட மக்களை முன்னேற்றுவதற்கான, அவர்களுக்கு மட்டுமே உள்ள ஒரு உரிமை. அதில் எதற்கு பொருளாதரத்தைச் சேர்க்க வேண்டும். பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டுமானால், உயர்சாதியினர் என்று அவர்களுக்கு மட்டும் எதற்கு இந்த ஒரு வரையறை. மற்ற சாதியினரிலும் ஏழைகள் உள்ளனர், அவர்களையும் சேர்த்து ஒரு திட்டம் அமைத்து பின்தங்கிய அனைவரையும் பொருளாதர ரீதியாக முன்னுக்கு வர வழிவகுக்கலாமே!
அதிலும், இவர்கள் கொண்டுவரும் இந்த 10 விழுக்காடு ஒதுக்கீடு என்பது ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் மற்றும் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் உயர்சாதியினருக்கு என்ற ஒரு வரையறை வகுக்கப்பட்டிருக்கிறது. என்ன ஒரு கொடுமை, அநியாயம்!
ஆண்டுக்கு 8 லட்சம் என்றால், மாதத்திற்கு 65,000 ரூபாய் சம்பளம் பெறுபவர், நாளொன்றிற்கு 2500 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் எல்லாம் ஏழையாம். இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தான் நியதி. நாள் ஒன்றிற்கு 33 ரூபாய் சம்பாதிப்பவர்களை வறுமைக்கோட்டிற்கான வரையறையில் உட்படுத்திருக்கும் ஒரு நாட்டில், இரண்டரை லட்சம் வைத்திருப்பவர்கள் வருமான வரி கட்டவேண்டும் என்ற விதியுள்ள ஒரு நாட்டில், ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழை என்று சொன்னால், இது ஒரு ஏமாற்று வேலை இல்லாமல் வேறன்ன? இது ஒரு அப்பட்டமான சமூக அநீதி.!
ஆளும் பா.ச.க-விற்கு இது நன்றாகவே தெரியும். இந்த சட்டம் நீதிமன்றத்தில் நிற்காது, ரத்து செய்யப்படும் என்று நன்கு உணர்ந்திருப்பார்கள். நடந்த வரலாறு அதைத்தானே சொல்கிறது. இருந்தும் இதனை இப்போது செய்கிறார்கள் என்றால், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் அமல்படுத்துகிறார்கள். கடந்த ஆண்டு ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மூன்று வடமாநிலங்களில் தோல்வியடைந்த பயத்தில், அம்மாநில உயர்சாதியினரின் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் இதனை, இப்போது கையில் எடுத்திருக்கிறது பா.ச.க.!
எப்போதும் சமூகநீதி என்றால் தமிழ்நாடு தானே முன்னுதாரணமாக இருக்கிறது. இந்த தீர்மானத்தைக் கொண்டுவரும் போதும் தி.மு.க சார்பில் திருமதி. கனிமொழி அவர்களும், மற்றும் அதிமுக சார்பில் திரு. தம்பிதுரை அவர்களும் மட்டுமே எதிர்த்தனர். அதிலும், அதிமுக எதிர்த்து வாக்களிக்கவில்லை. வெளிநடப்பு செய்தது. திமுக மட்டுமே எதிர்த்து வாக்களித்து, தங்களின் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. மேலும் இந்த சட்டத்தை எதிர்த்து, திராவிட முன்னேற்ற கழகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறது. உயர்நீதிமன்றமும், இதற்கு பிப்ரவரி 18-க்குள், பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கு தாக்கீது அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகமும் வழக்கை பதிவு செய்திருக்கிறது. இடஒதுக்கீடு என்ற ஒரு உரிமையை செயல்படுத்தியதும் தமிழ்நாடு தான். தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடந்த போராட்டங்களும், மாநாடுகளும், பொது கூட்டங்களும் என எல்லா இடத்திலும் மக்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி புரியவைத்தார். அதன் நீட்சியாக அப்போதைய நீதிக்கட்சி, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் என வகுப்பு வாரியாக இடஒதுக்கீட்டை அமல்செய்தது!
தற்போதும் தமிழ்நாடு தான் இந்த பொருளாதார ரீதியாக, பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஒரு ஆபத்தான சட்டத்தை கொண்டுவரும் பா.ச.கவின் சதியை முறியடித்து வெற்றி பெறும் என்பது உறுதியான ஒன்று!
சுசிலா
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு என்பது ஒரு சமூக அநீதி!”