மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா நிகழ்வில் தமிழர் உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்பு

நாக. இளங்கோவன்

Nov 5, 2016

event2

கடந்த 1991 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து தமிழர் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் சிகாகோ நகரில் கூடி உருவாக்கப்பட்ட “உலகத் தமிழ் அமைப்பு” இந்த ஆண்டு வெள்ளி விழா கண்டுள்ளது. “தமிழ் மொழி, தமிழர் நலன், தமிழர் உரிமை” என்ற முழக்கத்துடன் உலகமெங்கும் வாழும் தமிழர் நலனுக்காகவும், தமிழர் உரிமைகளைப் பாதுகாக்கவும் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்து வரும் இவ்வமைப்பின் வெள்ளி விழா நிகழ்வு கடந்த 08 அக்டோபர் 2016 விர்சீனியாவில் உள்ள ஆல்டி நகரில் நடைபெற்றது.

event6

தமிழர்களின் உரிமைக்காகவும், அயல்மொழித் திணிப்பில் இருந்து தமிழ் மொழி காக்கவும் போராடி தன் இன்னுயிரை ஈகம் செய்த தமிழீழ, தமிழக மாவீரர்கள், ஈகியர்களுக்கு விழாவில் கூடியிருந்தவர்கள் அனைவரும் அமைதி அஞ்சலி செலுத்தினர். சிறப்பு அழைப்பாளார்கள் குத்துவிளக்கேற்ற, உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் ஐயா. வைத்தியலிங்கம் க. தேவ் அவர்களின் வரவேற்புரையுடன் விழா தொடங்கியது. விழா ஒருங்கிணைப்பாளர் திரு இரவி சுப்ரமணியம் அவர்கள் மாநாட்டு முன்னோட்டம் குறித்து விளக்கினார். வட அமெரிக்கத் தமிழச் சங்கப் பேரவையின் தலைவர் திருமதி செந்தாமரை பிரபாகர், தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர் திரு. சிவசைலம் தெய்வமணி, அமெரிக்கத் தமிழர் அரசியற் செயலவையின் சார்பாக திரு. எலியாசு அவர்களும் வெள்ளி விழா காணும் உலகத் தமிழ் அமைப்பின் வரலாற்றையும் பணிகளையும் நினைவுகூர்ந்து வாழ்த்துரை வழங்கினர். புரட்சிக்கவி பாரதிதாசன் “சங்கே முழங்கு”, “தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்புவோம்” பாடல்களுக்கு தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் எழுச்சி நடனத்துடன் விழா தொடங்கியது.

“தாய்மொழி பாதுகாப்பு”, “தந்தைப் பெரியார் கண்ட சமூகப் பணிகளின் தேவைகள்”, “தமிழ் கணினியின் எதிர்காலம்”, “நடுவண் அரசின் புதிய கல்விக்கொள்கை”, ”தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு – வேலைத் திட்டம்” என்று பல தலைப்புகளில் அமெரிக்கா, தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் இருந்த செயற்பாட்டாளர்கள், வல்லுநர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

event5

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெள்ளி விழா கண்டுள்ள உலகத் தமிழ் அமைப்பை வாழ்த்திய நாடுகடந்த தமிழீழ அரசின் முதன்மை அமைச்சர் திரு உருத்திரகுமாரன் அவர்கள் தனது சிறப்புரையில்,
”இன அழிப்பு, பொதுவாக்கெடுப்பு தொடர்பான வேலைகளோடு தமிழர்களின் நீண்டகால தேவைக்கான அரசியல், பண்பாட்டு ஆய்வு மற்றும் செயல்பாட்டு நிறுவனங்களை உருவாக்க நாடு கடந்த தமிழீழ அரசு சார்பாக திட்டமிட்டு வருகின்றோம். ஈழத் தமிழர்களின் விடுதலை குறித்து பேசும் பொழுது இந்தியாவின் நிலைப்பாடு என்ன என சர்வதேச தலைவர்கள் பலரும் வினவுகின்றனர். முள்ளிவாய்க்காலில் நடந்த யுத்தம் தமிழர்களுக்கு எதிரான யுத்தம் அல்ல இந்தியாவிற்கு எதிரான யுத்தம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு இந்தியாவின் நிலைப்பாட்டை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்ற வேண்டியது தாய்த் தமிழக உறவுகளின் பங்கு மிக முதன்மையானது. மலரும் தமிழீழம் தமிழீழ மக்களோடு தாய்த் தமிழக மக்களின் உலகமெல்லாம் பரவியுள்ள தமிழர்களின் நலன்களை பாதுகாக்கும் அரசாக அமையும்.  எனவே உலகமெல்லாம் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலையை வெல்வோம் அதற்கான ஆன்ம பலத்தை எமது மாவீரர்கள் எமக்கு அளிப்பார்கள்” என்றார்.

event8

தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த “தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின்” தலைவர் திரு. பெ. மணியரசன் அவர்கள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தாய்மொழித் தமிழை நெஞ்சில் நெருப்புச்சுடராக ஏந்தி இன உணர்வோடு  செயல்பட்டு வரும் “உலகத் தமிழ் அமைப்பை” வெற்றிகரமாக நடத்தி வரும் பெருமக்களுக்கு தனது பாராட்டுக்களையும், தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழீழம் பற்றியும் மிகுந்த பொறுப்புணர்வோடும்  அக்கறையோடும் சிந்திக்கும் உலகத் தமிழ் அமைப்பு உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலிருக்கும் தங்களைப் போன்ற களப்பணியாளர்களுக்கு ஊக்கமளிக்கக் கூடியவையாக உள்ளது என்றார்.

மேலும், “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் – மங்காத தமிழென்று சங்கே முழங்கு! இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்!” என புரட்சிப் பாவலர் பாரதிதாசன் பாடினார். இவ்வரிகள் வெறும் மொழி வாழ்த்தல்ல! பாராட்டு வரிகள் அல்ல! ஆழந்த பொருள் கொண்டவை. தமிழ் வாழ்ந்தால்தான் தமிழினம் வாழும், தமிழர் தாயகம் நிலைத்திருக்கும். தமிழ் அழிந்தால் தமிழினம் சிதறும்; தமிழர் தாயகம் பறிபோகும்; அயலாரிடம் அண்டிப்பிழைக்கும் உதிரிகளாகச் சொந்த மண்ணிலேயே தமிழர்கள் மாறி விடுவார்கள் என்ற பொருளில்தான் பாவேந்தர் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்” என பாடினார். அவரே தான், “இனத்தைச் செய்தது மொழிதான்! இனத்தின் மனத்தை செய்தது மொழிதான்!” என்றும் பாடினார்.

ஒரு தேசிய இனத்தின் உளவியல் உருவாக்கம் – அதாவது நாமெல்லாம் ஓரினம் என்ற உறவு உருவாக்கம் (We Feeling) மொழி வழியாக நடப்பதை பல ஆய்வாளர்கள் கூறினார்கள். பாவேந்தர் பாரதிதாசன் இதைத் தன் வழியில் சிந்தித்துப் பாடினார். எனவே, நம் மொழி நம்மை இணைக்கிறது. அமெரிக்க மண்ணிலே புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் இந்தக் கருத்துகளை நீங்கள் பேசுங்கள். அமெரிக்க நாடு கருணையினால் கதவு திறந்து உங்களை அழைத்துக் கொள்ளவில்லை. உங்களின் அறிவாற்றல், செயல்திறன், உழைப்பு அனைத்தும் தேவை என்று கருதி, உங்கள் தகுதியறிந்து, ஆயிரம் சோதனைகளுக்குப் பிறகு உங்களை அழைத்திருக்கிறது. உங்கள் அலுவலகக் கடமைகளைச் சிறப்பாகச் செய்யுங்கள்; அதேவேளை நீங்கள் பிறந்த இனத்தின் உரிமை மீட்பிற்கான விழிப்புணர்வுப் பணிகளையும் விழிப்புணர்வோடு செய்யுங்கள்!” என்றார்.

event9

மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ப. இராமசாமி அவர்கள் தனது உரையில், இன்று மலேசியாவில் உள்ள “மக்கள் கூட்டணியில்” எங்கள் கட்சி இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் தேர்தலில் ஒரு அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம்.  இந்த மாற்றம் மூலம் மலேசியத் தமிழர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் வரும் என நான் நம்புகின்றேன். அதே போல தமிழகத்திலும் ஈழத்திலும் சரியான அரசியல் தலைமை வழிகாட்டுதல் மூலம் நம்மால் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். நமது இன நலக்கான இந்தப் போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அமெரிக்காவில் இருந்து இத்தனை அரசியல் பணிகளை உலகத் தமிழ் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இங்குள்ள சனநாயகச் சூழலில் இத்தனை ஆண்டு செயல்பட்டு இந்த மாநாட்டை நடத்தியுள்ளீர்கள். இதேபோல் இன்னும் பல மாநாடுகள் நடத்தவும் தொடர்ந்து செயல்படவும் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்” என்றார்.

உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாட்டுத் தீர்மானங்களை முனைவர் தணிகுமார் சேரன் அவர்கள் முன்மொழிந்தார், அமைப்பின் உறுப்பினர்களும், பார்வையாளர்களும் தீர்மானங்களை வழிமொழிந்து ஆதரவு தெரிவித்தனர்.

தீர்மானங்கள்:

“க. தமிழ் நாட்டில் தமிழைப் பயிற்சிமொழியாக்க வேண்டும் என்றும் தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணிகளில் 80 விழுக்காடு வரை  ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றோம்.

உ. ஈழத்தமிழர்களைத் தொடர்ந்து அழித்து தமிழ் இன அழிப்பை நடத்திவரும் இலங்கையுடன் அனைத்து உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ளவேண்டும் என்றும், இலங்கைத் தீவில் தனித் தமிழ் ஈழம் அமைய இந்தியா அனைத்து உதவிகளையும் புரிய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.

ங. பல தேசிய இனங்களும் பல தேசிய மொழிகளும்  கொண்ட இந்தியாவில் இந்தி என்னும் ஒரு மொழியை ஆட்சி மொழியாக வைப்பது இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பெரும்பான்மையான மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் நடத்துவதாக அமையும் என்ற உண்மையையை உணர்ந்து, அனைத்து தேசிய மொழிகளும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக அமைய இந்தியாவின் அரசியல் அமைப்பைத் திருத்தி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

ச. ஆறுகள் பிறக்கும் இடத்தில் இருந்து கடலில் கலக்கும் வரை அவற்றின் பயன்பாட்டில் வாழும் அனைவருக்கும் அவை உரிமையானவை என்ற உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயத்தை நிலைநிறுத்தி, காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு ஆகிய தமிழ்நாட்டில் பயன்படும் ஆறுகளில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் கடமை, ஆகவே இந்தக் கடமையைச் செய்தே ஆகவேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்துகின்றோம்.”

பல்வேறு நாடுகளில் இருந்து வெள்ளி விழா மாநாட்டிற்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு உ.த.அ பொறுப்பாளர்கள் நினைவுக் கேடயம் வழங்கினர். திரு. சான் பெனக்டிட் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

பல நாடுகளில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களும், கலிபோர்னியா, நியூயார்க், நியூசெர்சி, மினசோட்டா, ஓகாயோ, கனக்டிகட், அட்லாண்டா, டெக்சசு, டெலவர், பென்சல்வேன்னியா, மேரிலாந்து, வடகரோலினா, விர்சினியா உள்ளிட்ட மாகாணங்களில் இருந்து ஏராளமானோரும் உ.த.அ வெள்ளி விழா மாநாட்டில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


நாக. இளங்கோவன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா நிகழ்வில் தமிழர் உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்பு”

அதிகம் படித்தது