உலகநாதர் இயற்றிய உலகநீதி – பாகம் 2
தேமொழிFeb 21, 2015
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் (செயல்)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் (சொல்)
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் (எண்ணம்)
என்று துவங்கும் உலகநீதி பாடல்களின் 66 அறநெறிக் கொள்கைகள் யாவற்றையும் மேற்காட்டிய துவக்க மூன்று வரிகளிலும் காணப்படுவது போலவே “செயல்” “சொல்” “எண்ணம்” ஆகியவற்றில் கடைபிடிக்க வேண்டிய நல்வழிகளாக வகைப்படுத்த இயலும். சிந்தையில் தோன்றும் எண்ணமே சொல்லாகவோ, செயலாக வெளிப்படுகிறது என்ற அடிப்படையில் உலகநாதர் எதையெதை சொல்ல வேண்டாம் என்கிறார், எதையெதை செய்யவேண்டாம் என்கிறார் என்றும் பிரிக்கலாம்.
அவ்வாறு வகைப்படுத்தும் பொழுது பாடல் வரிகளில் 71 விழுக்காடு (47 வரிகள்) “செயல்வகை” என்பதிலும், 29 விழுக்காடு (19 வரிகள்) “சொல்லத் தக்கன” என்ற வகைகளிலும் அடங்கும். வாதத்தின் மறுகோணமாக, நாம் சொல்லும்சொல்கூட ஒரு செயல்தானே என்று வாதிட்டால், அத்தனை அறநெறி அறிவுரைகளுமே எதையெதை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகவே அமையும்.
அறநெறிகள்:
செய்ய வேண்டாம் என்று எதிர்மறையாக அறிவுறுத்தும் அறநெறி வரிகள் எதை செய்வதற்கு அடிகோலிடுகிறது என்பதை பின்வரும் ஒன்பது வகைகளில் உலகநாதரால் உணர்த்தப்படுகிறது, அவை … (1) நல்லொழுக்கம் கடைபிடித்தல், (2) பெண்ணை நடத்தும் முறை, (3) தீயவர் தொடர்பைத் தவிர்த்தல், (4) பெரியோரை மதித்தல், (5) இறையாண்மையை வலியுறுத்துதல், (6) கல்வியின் மேன்மை உணர்த்துதல், (7) பொய் சொல்லாமையை நினைவூட்டல், (8) இன்சொல் கூறுவதை எடுத்துச் சொல்லல், (9) காரியமாற்றும் வழி பற்றி அறிவுறுத்துதல்.
இவ்வாறு நற்செயல்களுக்கான அறநெறிகளை வகைப்படுத்தும் முறை பாடலை வாசிக்கும் ஒவ்வொருவரின் கோணத்திலும் வேறுபடலாம். ஒரு பிரிவில் உள்ளவற்றை மேலும் பிரிப்பதோ அல்லது மற்றொரு பிரிவின் கீழ் சேர்ப்பதோ பாடலை வாசிப்போர் அந்த வரிகளை அணுகும் கோணத்தினால் வேறுபடலாம். காட்டாக, பெண்ணை நடத்தும் முறை என்பதை நல்லொழுக்கத்தின் கீழோ, காரியமாற்றுதல் வகையிலோ கூட வகைப்படுத்த இயலும்.
“கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்”
“வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்”
“மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்”
“இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்”
மேற்கூறிய ஒவ்வொரு அறநெறியும் நல்லொழுக்கம், இன்சொல், காரியமாற்றும் முறை ஆகியவற்றுடன் இணைக்கப்படலாம். எனவே இங்கு கையாண்ட முறை கருத்துக்களை கோர்வையாக ஆய்வுநோக்கில் காண எடுத்துக்கொள்ளப்பட்ட பிரிவுகள் மட்டுமே என்பது கூறாமலே இங்கு விளங்கும்.
பெண்மை போற்றுதல்:
பெண்ணைப் பற்றிய அறநெறிகள்; கற்புள்ள பெண்ணை அணுக நினைக்க வேண்டாம் (அல்லது பிறனில் விழையாமை) என்றும், மனைவியுடன் குடும்ப வாழ்க்கையை நடத்தாமல் இருப்பதைத் தவிர்க்கவும், மனைவியை குற்றம் சொல்வதைத் தவிர்க்கவும், இரு மனைவிகள் வேண்டாம் என்பதைக் கண்டிக்கும் முறையில் அமைந்துள்ளது. இந்தவரிகள் கூறாமல் கூறிச் செல்லும் கருத்துகள்; உலகநீதி பொதுவானது என்றாலும் அவை ஆண்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது என்பதைக் காட்டுகிறது. உலகமறையாம் திருக்குறள் “வாழ்க்கைத் துணைநலம்” என்ற அதிகாரத்தில், வாழ்க்கைத் துணை என்றால் அது மனைவி மட்டுமே என்ற கோணத்தில்,
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை? (குறள் 53)
என்ற குறள் போன்று, அந்த அதிகாரத்தின் பத்து குறட்களுமே மனைவிக்கான நற்பண்புகளை விவரிக்கும். வாழ்க்கைத்துணை என்பது ஆணும்தான் என்ற கோணத்தை வள்ளுவர் தவற விட்டிருப்பார். ஒரு கணவனிடம் எத்தகைய குணங்கள் இருக்க வேண்டும், இல்லறத்தில் அவனது நல்லொழுக்கம் என்ன என்பதை சொல்ல மறந்திருப்பார் வள்ளுவர். குறள் “வாழ்க்கைத் துணைநலம்” அதிகாரத்தைப் பொறுத்தவரை பொதுமறையல்ல, மனைவியாக வருபவளைப் பற்றிய ஆண்களின் எதிர்பார்ப்புகள்.
உலகநாதரும் உலகநீதியை ஆண்களின் கோணத்தில்தான் சொல்லிச் செல்கிறார். ஆனால் மனைவி இவ்வாறெல்லாம் இருக்கவேண்டும், “பெய்யெனப் பெய்யும் மழை” என்று மழையை உருவாக்குபவளாக அவள் இருக்க வேண்டும் என்றெல்லாம் உலகநாதர் சொல்லவில்லை. மாறாக, இவர் கவனம் செலுத்தவது ஆண் தனது வாழ்க்கைத் துணையான மனைவியை எப்படி நடத்துவது என்பதில் அடங்குகிறது. மனைவியை குற்றம் கூறும் பண்பையோ, அவளோடு குடும்ப வாழ்வை சரிவர நடத்தாமல் இருப்பதைக் கண்டிப்பதோடல்லாமல், இருதாரம் என்ற எண்ணமும் வேண்டாம் என்கிறார்.
“இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்” என்ற வரியே ஏன் இவர் முருகனை குறமகள் வள்ளியை மணந்த வள்ளி பங்கனாக, வள்ளி மணாளனாக மட்டுமே பார்க்கிறார் என்பதைக் காட்டுகிறது. முருகனை தெய்வானையின் கணவர் என்று சொல்ல இவரது மனம் இடமளிக்கவில்லை. முருகனுக்கும் இவர் பாடல்களில் இருதாரங்களுடன் வாழ இடமில்லை, அதனால் தெய்வானைக்கும் உலகநீதி பாடல்களில் இடமில்லை. “இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்” என்று சொன்ன கையோடு தெய்வானை, வள்ளி இருவரையும் முருகனின் துணைவியராகக் காட்ட விழைவது அவர் சொல்ல நினைக்கும் கருத்துக்கே முரணாகவும் அமையும்.
அது போன்றே பாடலின் மூன்றாம் வரியிலேயே “மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்” என்று தாய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துபவர், தந்தையைப் பற்றிப் பாடலில் எங்குமே குறிப்பிடவில்லை. “தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதை தமிழகத்தில் அறியாதவர் இல்லை. இருப்பினும் இவர் பாடலில் தந்தைக்கோர் இடமில்லை.
“மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்”
“வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்”
என்று மூத்தோரையும், பெரியோரையும் மதிக்கும் முறையைப் போதிப்பவர், அதிலும் “மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்” என்பவர் அதையே “தந்தை சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்” என்று எழுதவோ, இல்லை தந்தைக்காக மேலும் ஒரு ஆசிரிய விருத்தப்பா பாட முயலாததோ சற்றே வியப்பளிக்கும், கவனத்தைக் கவரும் உண்மை. தந்தையை மூத்தோர் என்ற வகையில் அடங்கும் பலருடன் ஒருவராகப் பார்க்கும் நிலை இவர் பாடல் வழி அமைகிறது.
முருகனைப் புகழுங்கால்…
“மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!”
என்று திருமாலின் தங்கை உமையின் மைந்தனை வாழ்த்தாய் நெஞ்சே என்று நெஞ்சிடம் வேண்டுபவர், எந்த இடத்திலும் “ஆதிசிவனின் அருமை மைந்தனை, பிறைசூடியப் பெருமானின் குமரனை வாழ்த்தாய் நெஞ்சே என்றும் கூறவில்லை. உலகநாதரைப் பொறுத்தவரை முருகன் வள்ளி பங்கன் என்ற கோணமும், உமை மைந்தன் என்ற கோணமும் மட்டுமே காட்டப்படுவதால் இவர் பெண்ணிய சிந்தனையாளரோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.
கல்வியும் இறையாண்மையும்:
உலகநீதி துவங்குவதே கல்வியின் இன்றியமையைக் கட்டும் வண்ணம் முதல் நெறியாக “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்று தொடங்குகிறது.
“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்”
“கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்”
“வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்”
என்று பின்னர் கற்றோரையும், கற்பித்தோரையும் போற்றச் சொல்கிறது.
“கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்”
“தெய்வத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்”
“வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்”
என்ற வரிகளின் மூலம் கடவுளைப் போற்றுதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். உலகநாதரைப் பொறுத்தவரை ஒரு ஊரில் கடவுளை வணங்குவதற்கான கோவில் இல்லை என்றால் அந்த ஊர் வாழுமிடத்திற்கான தகுதியையே இழந்துவிடுகிறது. தெய்வத்தை மறப்பதும் இகழ்வதும் தகாத செயல்களில் அடங்குகின்றன.
சொல்லும் செயலும்:
“இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்” என்று உயிரே போகும் நிலை ஏற்பட்டாலும் உண்மை பேசுவதை வலியுறுத்துகிறார் உலகநாதர்.
“நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்”
“கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்”
“மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்”
“காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்”
“வாதாடி வழக்கு அழிவு சொல்ல வேண்டாம்”
என்று அக்கருத்தை விரிவாக்கி மேற்கூறும் வரிகள் மூலம் பொய் சொல்லுதல், பொய்க்கணக்கு, பொய்சாட்சி, கட்டுக்கதை, பொய்வழக்கு என்று மேலும் பற்பல வகைகளில் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதைத் தவிர்க்கச் சொல்கிறார்.
அத்துடன் புறம் பேசுவது, பொல்லாங்கு பேசுவது, புண்படப் பேசுவது, உதாசினப்படுத்தி இகழ்வாகப் பேசுவது, அரசை எதிர்த்துப் பேசுவது, குற்றங்குறைகள் கூறுவது, கோள் சொல்வது என சொல்லக்கூடாதவற்றைப் பற்றிய பட்டியலையும் தருகிறார்.
“நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்”
“கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்”
“பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்”
என்ற அறநெறிகள், “தெரிந்துசெயல்வகை” குறட்பாக்களை, குறிப்பாக …
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.” (குறள் 467)
குறளின் பொருளை நினைவுபடுத்தும்.
கூடாநட்பும் நல்லொழுக்கமும்:
நல் இணக்கம் இல்லாதவர், முன்கோபம் உள்ளவர், சினம் கொள்பவர், வஞ்சனைகள் கொலை களவு வழிப்பறி ஆகிவற்றை செய்பவர்கள், தீயவர், புறம் சொல்பவர், வீராப்பு பேசுபவர், ஏசுபவர், இழிவான செயல்களை செய்பவர், கெட்ட எண்ணம் கொண்டவர், நமது எதிரிகள், மதியாதவர், வெட்டிபேச்சு பேசுபவர் என யாவருடனும் உறவு கொள்ளுதல் கூடாது என்பது உலகநீதி கூறும் அறநெறிகள்.
நல்லொழுக்கம் உடையவரின் பண்புகளாக உலகநாதர் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்: சினம் தவிர்த்தல், தர்மம் செய்தல், எளியோரிடம் கருணை காட்டுதல், அடிமை மனம் கொள்ளாதிருத்தல், அடுத்தவருக்கு கேடு நினைப்பதையும் குடி கெடுப்பதையும் செய்யாதிருத்தல், பகட்டு வம்பு புறம் கோள் பொல்லாங்கு பொய் ஆகியவற்றைப் பேசுவதை தவிர்த்தல், வலுச்சண்டைக்குப் போகாதிருத்தல், செய் நன்றியுடனும் வீரத்துடனும் இருத்தல், பிறர் நிலத்தை ஆக்கிரமிக்காதிருத்தல், கருமியாக கஞ்சத்தனம் இல்லாதிருத்தல் ஆகியன நாம் கொண்டு ஒழுக வேண்டிய நற்பண்புகளாகும்.
எளிமையாக சுருங்கச் சொல்லி, ஓசை நயத்துடன் கூடிய பாடல் வரிகளின் மூலம் அறநெறிகளை வழங்கும் உலகநாதரின் உலகநீதிக்கு என்றென்றும் தமிழ் அறநெறி நூல்களின் வரிசையில் மங்காப் புகழுண்டு என்றால் அது மிகையான கூற்றல்ல.
[நிறைவுற்றது]
_________________________________________________________________________________
மேலும் தகவலுக்கு பார்க்க:
உலகநீதி: http://www.tamilvu.org/library/l6600/html/l6600ind.htm
தேமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகநாதர் இயற்றிய உலகநீதி – பாகம் 2”