அக்டோபர் 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

உலகப் பொது நீதி

முனைவர் மு.பழனியப்பன்

Jun 13, 2020

siragu ilakkiyam1

இன்றுதான் உலகம் தோன்றியது என்று உலகம் தோன்றிய காலத்தை, சரியான நேரத்தை, துல்லியமான நொடியைக் கணக்கிட்டு யாராலும் கணித்துக் கூற முடியவில்லை. இனியும் முடியாது. என்றைக்கோ ஒரு நாள், எப்போதோ ஒரு பொழுது, ஏதோ ஒரு நிமிடம் இந்த உலகம் தோன்றியிருக்க வேண்டும். தோன்றிய இந்த உலகில் கல்லும், மண்ணும், நீரும், காற்றும், வானும் உயிர்கள் வாழ இயைபாய் அமைந்தன. இவ்வைந்து இயற்கை கூறுகளின் தன்மையால், சேர்க்கையால் உயிர்கள் தோற்றம் பெறத் துவங்கின. இவ்வுலகில் உயிர்கள் என்றைக்கு வாழத் துவங்கின என்பதையும் யாராலும் சொல்லிவிட முடியாது. சொல்லவும் கூடுவதில்லை.

கால ஓட்டத்தில் உலகம் தோன்றியது. அதனுள் உயிர்கள் வாழும் சூழல் அமைந்தது. உயிர்கள் ஒவ்வொன்றாய்த் தோன்றின. தனித்தனியாய்த் திரிந்தன. பின்பு உயிர்கள் சேர்ந்து வாழலாம் என்ற சிந்தனை தோன்றி சற்று ஒட்டுறவுடன் வாழத் தலைப்பட்டன. அவ்வாறு வாழ்ந்த நிலைகளில் உயிர்கள் ஒன்றை ஒன்று அடுதலும் தொலைதலும் இல்லாமல் அன்பு பெருகி வாழ ஒரு வழி முறை உருவாகி இருக்கவேண்டும். இந்த நற்சிந்தனை எந்த உயிருக்கு எப்போது தோன்றியது என்பதையும் யாராலும் சொல்லிவிட முடியாது. யார் கற்றுக் கொடுத்தது என்பதையும் சொல்லிவிட முடியாது. உலகமும், உயிர்களும், அன்போடு இயைந்த வாழ்க்கை முறையும் இன்றைக்குத்தான் தோன்றியது என்று யாராலும் குறித்துவிட முடியாது. இதனை எண்ணிப் பார்க்கின்றபோது உலகத்தின் தோற்றம், இயக்கம், நிலைப்பாடு போன்றன விசித்திர தன்மைகள் உடையனவாக இன்னும் இருப்பதை உணரமுடிகின்றது.

உலகம் என்ற கட்டமைப்பினை உருவாக்கியது யார்? அதனை இயக்குவது யார்? உயிரை உருவாக்கியது யார்? உயிருக்கான உடலை வடிவமைத்தது யார்? அவ்வப்போது பிறக்கும், இறந்து போகும் உயிர்களின் கணக்கீட்டை யார் குறித்து வைப்பது? பிறக்கும், வாழும், இறக்கும் உயிர்கள் அனைத்தும் ஒரே திறத்தினவா? மனித உயிர்கள் மற்ற உயிர்களை விடச் சிறந்தா? ஏன்? மனித உயிர்களுக்குத் தனித்த வாழ்க்கை முறை உள்ளதா? உயிர்கள் அனைத்தும் ஒன்றே என்றால் மனித உயிருக்கு மட்டும் ஏன் தனித்த வேறுபாடு? மற்ற உயிர்களுக்கு மனித உயிர்களுக்குப் பொன்ற தனித்த வாழ்க்கை முறை உள்ளதா? ஏன் மனிதர் உயிர்களுக்கு மட்டும் வாழ்க்கை இலக்கணம் கொண்டு வரப்பட்டது. மனித உயிர்கள் செய்த நன்மை தீமைகளை யார் அளந்து உரைப்பது? இத்தனை கேள்விகளுக்கும் பதில் யாது? உலகம், உயிர்கள், வாழ்க்கை என எல்லாவற்றுக்கும் மையப்புள்ளியாக அமைவது எது? இயக்குவது எது? இவ்வழி சிந்தித்தால் இன்னும் கேள்விகள் பெருகிக் கொண்டே போகும்.

இதுபோன்ற பல வினாக்கள் எழுகின்றபோது எல்லாவற்றுக்குமான மையப் புள்ளியைத் தேடிப் பயணத்தைத் தொடங்க வேண்டியிருக்கிறது. இந்த மையப் புள்ளியைக் கண்டுவிட பல சிந்தனையாளர்கள் முயன்றுள்ளனர். ஒவ்வொரு சிந்தனையாளரும் தன் அறிவின் தெளிவு, முதிர்ச்சி கருதி விடை காணத் தன் சிந்தனைப் பயணத்தை நடத்தியுள்ளனர். இதன்விளைவாக பற்பல சிந்தனைகள் கிடைக்கப்பெற்றன.

உலகம் இச்சிந்தனைகளை இருகரங்கள் கூப்பி வரவேற்கத் தொடங்கியது. சிந்தனையாளர்களால் காலந்தோறும் தொடர்ந்து சிந்தனைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. காலத்திற்கேற்ற நிலையில் இச்சிந்தனைகள் மக்களால் ஏற்கவும் பெற்றுள்ளன, மறுக்கவும் பெற்றுள்ளன. இவ்வாறு தோன்றிய சிந்தனை அடுக்குகளில் அழியாமல் காலங்கடந்து நிற்கும் சிந்தனைகளும் உண்டு. காலத்தினால் மறக்கடிக்கப்பட்ட சிந்தனைகளும் உண்டு. மக்களால் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் வெற்றிச் சிந்தனைகளும் உண்டு. இவற்றின் அடிநாதம் எதுவெனத் தேட வேண்டியிருக்கிறது.

உலகைக் கடவுள் படைத்தார் என்கிறது ஆன்மீக சிந்தனை. உலகம் தானே தோன்றியது என்கிறது சூழலியல் சிந்தனை. சூரியனில் இருந்து பெயர்ந்து விழுந்த நெருப்புக் கோளம் பூமி என்கிறது வானியல் சிந்தனை. உலகில் ஒரு செல் உயிரினம் தோன்றி அதன்பின் வளர்சிதை மாற்றங்கள் அடைந்து மனித உயிர் தோன்றியது என்பது உயிர்மரபியல் சிந்தனை.

இவ்வாறு சிந்தனைகள், நோக்கங்கள், அறிவியல்கள் உலக இயல்பினை அறிந்துரைக்க முயலுகின்றன. இருப்பினும் இதுதான், இப்படித்தான், இன்றுதான் என்று யாராலும் கண்டறிய முடியாத அநாதி நிலையில் உலகம் நின்று கொண்டிருக்கிறது. எனக்குள் தோன்றிய உங்களால் என் பிறப்பைப் பற்றி, என் வளர்ச்சியைப் பற்றி அறிந்துவிட முடியுமா என்று ஏளனத்துடன் உலகம் பார்க்கிறது.

உலகம் இவ்வளவு காலம் பாதுகாப்பாக இருப்பது எவ்வாறு என்று சிந்தித்துப் பார்ப்பது அவசியம். நிலம், காற்று, நீர், வானம், மண் எல்லாம் நல்ல முறையில் பாதுகாக்கப்படுவதால் உலகம் நிலைத்து நிற்கிறது என்பது பதிலாக இருக்கலாம். இவற்றையெல்லாம் நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லுவது அல்லது சொல்லித் தருவது யார் என்பதே அடிப்படையான ஆழமான வினா.

உயிர்களின் மனதிற்குள் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. நன்மை பெருகின் நலம் பெருகுகிறது. தீமை பெருகின் தீமைகள் பெருகுகின்றன. எது நன்மை, எது தீமை என்று யார் சொல்வது. அப்படியே ஒருவர் சொன்னாலும் அவர் சொல்வதை எவ்வாறு ஏற்பது. அவர் சொன்ன நன்மை இன்னொருவருக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அது நன்மையாகுமா? உலக அளவில் ஏதும் பொது நீதி மன்றம் உள்ளதா?அனைவருக்கும் பொதுவாக தண்டனை வழங்க!! அனைவருக்கும் உரிய நீதியை வழங்க!!

இவை எதுவும் இல்லாதபோதும் உலகம் இனிதாக உயிர்களுக்குப் பொதுவாய் இருக்கிறது. உலக மக்கள் இனிதாக இருக்கிறார்கள், நடக்கிறார்கள், மகிழ்கிறார்கள், தூங்குகிறார்கள், வாழ்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? ‘‘ நன்மை செய். நன்மையின் பக்கம் செல். தீயதன் பக்கம் சென்றுவிடாதே. உண்மையே நன்மை. நன்மையே உண்மை” உண்மையின் வலிமையை நன்மையின் வலிமையை உலகம் முழுவதும் உணர்ந்திருக்கிறது. தீமையின் இழிவை உலகம் நன்கு உணர்ந்திருக்கிறது. பற்பல அனுபவங்கள், போர்கள், கயமைகள் உலகில் நடந்த நிலையில் நன்மைக்கும், தீமைக்குமான இடைவெளி பெரிதும் உணரப் பெற்றிருக்கிறது. இந்த சிந்தனை தொடர்ந்து மக்கள் மனதில் நம்பிக்கை தரும் வகையில் சொல்லப்பட்டு, அல்லது எழுதப்பட்டு வந்துள்ளன. இந்நிலையால் உலகம் முழுவதும் ஒரே நிலைப்பாட்டில் இயங்கும் தன்மை, மேன்மை கிடைத்துவிடுகிறது. இதுவே உலகின் பொதுமை அறம் ஆகின்றது.

உலகிற்கெல்லாம் ஒரே நீதி என்பது அறத்தின் பக்கம் நிற்பது என்ற அடிக்கருத்து உலகம் முழுவதும் எழுந்துள்ளது. உலகம் முழுவதும் பரவலாக்கப் பெற்றுள்ளது. எக்காலத்தும் எல்லாருக்கும் நன்மைசெய்யும் இனிய வழக்கம் அறமென அனைவராலும் ஏற்கப்பட்டு அந்நடைமுறை பின்பற்றப்பெற்றுவருகிறது.

அறம் எனப்படுவது யாதெனின்

அகராதிகள் அறம் என்பதற்குப் பல பொருள்களை எடுத்துரைக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி“ தருமம், புண்ணியம், தகுதியானது, ஞானம்,நோன்பு என்று பல பொருள்களைத் தருகின்றது. சங்கச் சொல்லடைவு அகராதி ”தருமம் ; புண்ணியம் ; அறச்சாலை ; தரும தேவதை ; யமன் ; தகுதியானது ; சமயம் ; ஞானம் ; நோன்பு ; இதம் ; இன்பம் ; தீப்பயன் உண்டாக்கும் சொல் ” என்று பொருள் தருகின்றது. கழகத் தமிழ் அகராதி ‘‘கடமை, நோன்பு, தருமம், கற்பு, இல்லறம், துறவறம், நல்வினை, அறநூல், அறக்கடவுள், தருமதேவதை, தீப் பயன் உண்டாக்குஞ் சொல்” என்று பொருள் தருகிறது. தமிழ் அகர முதலி ‘‘தருமம் ; புண்ணியம் ; அறச்சாலை ; தரும தேவதை; யமன் ; தகுதியானது ; சமயம் ; ஞானம் ; நோன்பு ; இதம் ; இன்பம் ; தீப்பயன் உண்டாக்கும் சொல் ” என்று பொருள் தருகிறது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ‘‘குடும்ப வாழ்வும் பொது வாழ்வும் சீராக இயங்க ஒருவர் கடைப்பிடிக்கும் சமயச் சார்பான அல்லது ஒழுக்கக் கண்ணோட்டத்துடன் கூடிய நெறிமுறைகள் அல்லது கடமைகள்” என்று பொருள் தருகின்றது .

மேற்சுட்டிய அகராதிகளின் கருத்துகளின்வழி அறம் என்பதைத் தகுதியான செயல்பாடு என்று கொள்ளமுடிகின்றது.

அறம் – உலகப் பார்வை

அறம் பற்றிய உலக சிந்தனையாளர்களின் கருத்துகள் பல உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு.

ஆபிரகாம் லிங்கன் ‘‘அறமே ஆற்றல்! அதை நாம் நம்புவோம்! அந்த நம்பிக்கையால் நாம் அறிந்த கடமைகளைச் செய்யத் துணிக! ” என்று குறிப்பிடுகிறார். வில்லியம் ஷேக்ஸ்பியர் ”அறத்தின் வழி நில்! அஞ்சவேண்டாம்! உன் லட்சியமெல்லாம் உன் தேசத்தை-உன் கடவுளை – உண்மையைப் பற்றியதாகவே இருக்கட்டும். அங்ஙனமாயின் நீ வீழ்ந்து விட்டாலும் பாக்கியம் பெற்றுத் தியாகியாகவே வீழ்வாய்” என்கிறார். லியோ டால்ஸ்டாய் ‘‘அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லற்க. ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க” என்கிறார். ஸ்வீடன் பர்க் என்பவர் ‘‘பேரின்ப வீட்டை அடையும் நெறி துறவறம் அன்று; அனவரதமும் அறச்செயல் ஆற்றுவதேயாகும்” என்கிறார். ‘‘மனிதனைப் பூரணமாக்க வேண்டிய குணங்கள் எவை? கலங்காத அறிவு, அன்பு நிறைந்த நெஞ்சு, நீதியான தீர்மானம், ஆரோக்கிய உடல், கலங்காத அறிவு இல்லாவிடில் அவசரமாய் முடிவு செய்துவிடுவோம். அன்பு நிறைந்த நெஞ்சு இல்லாவிடில் சுயநலமுள்ளவராயிருப்போம். நல்லெண்ணம் இருப்பினும் நீதியான தீர்மானம் இல்லாவிடில் நன்மை உண்டாவதினும் தீமையே உண்டாகும். உடற்சுகம் இல்லாவிடில் ஒன்றும் செய்யமுடியாது.” என்கிறார்-ஆவ்பரி.

இவ்வாறு உலகம் முழுவதும் உள்ள சிந்தனையாளர்கள் அறம் பற்றிச் சிந்தித்துள்ளனர். நன்மை சார்ந்த எண்ணமே அறம் என்பது உலக சிந்தனையாளர்களின் கருத்தாக உள்ளது.

உலகம் இன்று வரை நிலைத்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் அறம் சார்ந்து மக்கள் வாழ்ந்துவரும் வாழ்க்கை நடைமுறைதான் என்பதை தெளிவுபட அறிந்து கொள்ளமுடிகின்றது.

சான்றாதாரங்கள்

அறம் என்பதற்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரகராதி தரும்பொருள்கள்.
aṟam
n. அறு1-. [K.aṟa, M.aṟam.]
1. Moral or religious duty, virtue, performance of good works according to the Sāstras, duties to be practised by each caste;
தருமம். (பிங்.)
2. Merit;
புண்ணியம். அறம்பாவ மென்னு மருங்கயிற்றாற் கட்டி (திருவாச.1, 52).
3. That which is fitting, excellent;
தகுதியானது. (இறை, பக்.136.)
4. Religious faith;
சமயம். (சீவக. 544.)
5. Wisdom;
ஞானம். அறத்தின் விருப்புச் சிறப்பொடு நுந்த (நானா. பாயி. 5).
6. Feeding house;
அறச்சாலை. அறத்துக்குப் புறத்தன். (T.A.S. i,9).
7. Fasting
நோன்பு. (சீவக. 386.)
8. Letters or words in a verse which cause harm;
தீப்பய னுண்டாக்குஞ்சொல். அறம்விழப் பாடினான்.
9. Goddess of virtue;
தருமதேவதை. (குறள். 77.)
10. Yama;
யமன். அறத்தின் மைந்தனுக்கு (பாரத. வாரணா. 112)

1. தருமம்: “இவை காண்தோறும் அகம் மலிந்து யானும் அறம் நிலை பெற்றோர் அனையேன்” (நற்:166:5-6). 2. நீதி: “மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து அறம் கெட அறியாதாங்கு” (நற்:400:7-8). 3. அற நூல்: “ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என அறம் பாடின்றே” (புற:34:5-7). 4. தரும தேவதை: “அறம் புரிந்தன்ன செங் கோல் நாட்டத்து” (புற:35:14).

https://tamilpulavar.org/அறம்

https://ta.wikiquote.org அறம்


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகப் பொது நீதி”

அதிகம் படித்தது