உலகை அச்சுறுத்தும் தொற்றுநோய்
சிறகு நிருபர்Aug 8, 2020
வைரஸ், பாக்டீரியா போன்ற உயிரினங்களின் காரணமாக நோய் ஏற்படுமானால் அது தொற்றுநோய் எனப்படுகிறது. இந்த தொற்றுநோயானது ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கோ அல்லது ஒரு இனத்திற்குள்ளேயோ பரவுகிறது. காற்று, நீர் போன்றவற்றின் மூலமாக தோற்று ஏற்படுகிறது.
பல ஆண்டுகளாக ஒவ்வொரு விதமான தோற்று நோய்கள் வந்துகொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப தடுப்பு மருந்து கண்டுபிடித்தாலும் புது புது விதமான தோற்று நோய் ஏற்படத்தான் செய்கிறது. தற்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா தொற்று நோய் முதன்முதலில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரத்தில் செயல்படும் இறைச்சி சந்தைகளின் வழியாக மனிதனுக்கு ஏற்பட்டது.
உலகம் முழுவதும் அதி தீவிரமாகப் பரவிக்கொண்டு இருக்கும் கொரோனா தொற்றுநோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் அதிக தீவிரம் காட்டி வருகிறது. தடுப்பு மருந்துக்கு ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் வரை தேவைப்படும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. அதுவரை தொற்று பரவாமல் தடுக்க உலக மக்கள் அனைவரும் முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற அரசு அறிவுறுத்தி வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் இக்கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியை எட்டியுள்ளது.
பல ஆண்டு காலமாக பல்வேறு வகையான கிருமிகள் விலங்குகள் மற்றும் பறவைகளில் வாழ்கின்றன. காடுகளை விட்டு விலங்குகளும் பறவைகளும் வெளிவராதவரை இக்கிருமிகளால் எந்த ஆபத்தும் இல்லை. தற்போது ஏற்படும் காடு அழிப்பால் அங்கு வாழும் விலங்குகளும் பறவைகளும் ஊருக்குள் வரத்தொடங்கியுள்ளன. எனவே கொரோனா போன்ற தொற்று பரவுகிறது.
கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காத சூழலில் நாம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும். காடு அழிந்தால் நாடு அழியும் என்பதை நினைவில் நிறுத்தி இயற்கையைக் காப்போம்; நலமுடன் வாழ்வோம்.
சிறகு நிருபர்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகை அச்சுறுத்தும் தொற்றுநோய்”