நவம்பர் 16, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

ஊருக்கெல்லாம் உபதேசி B.E!

ஆச்சாரி

May 10, 2014

தமிழகம் நிறைய நீலிக்கண்ணீரையும் சில அபத்த தற்கொலைகளையும் காணப்போகிறது. காரணம் தமிழகத்தின் பன்னிரெண்டாம் தேர்வு முடிவுகள் வந்து விட்டன. நான் பன்னிரெண்டாம் தேர்வு முடித்து மூன்று வருடங்களாகிவிட்டன. அப்போதும் இந்த எல்லா பிரச்சினைகளும் இருந்தன. அதற்கு முன்பும் இருந்தன. ஏன் இந்த பதற்றம் ?

இதற்கு அம்மாணவர்களை சுற்றியிருக்கும் சூழல் தான் என்று நிதர்சனமாக சொல்வேன். சொற்ப மாணவர்களே மருத்துவம் பொறியியல் என்னும் பெரும்களத்தை கனவாகவோ லட்சியமாகவோ கொண்டிருக்கின்றனர். ஏனையோர் எல்லோரும் வேறு ரகம். மருத்துவத்தை விட்டுவிடுங்கள். அரசு துறையில் மருத்துவ படிப்புக்கு இருப்பதே குறைவான சீட்டுகள் தான். அதற்கொப்ப கலந்தாய்வுகளும் நிகழ்கின்றன. அத்துறையை பொறுத்தவரை சொற்ப கூட்டத்திலிருந்து சொற்பங்களுக்கு மதிப்பெண்களுக்கேற்ப இடம் கிடைத்துவிடுகின்றன.

பொறியியலுக்கு வருவோம். செய்திகளில் இப்போதே கண்டேன், லட்சத்தில் விற்கிறதாம் அண்ணா கலந்தாய்வின் விண்ணப்பப் படிவங்கள். படிவங்கள் மட்டுமா விற்கப்படுகின்றன ? இந்த கூட்டம் தான் என் ஆச்சர்யமே. லட்சத்திற்கு மேற்பட்ட இந்த கூட்டத்தில் பொறியியலை தேடலாய் கொண்டு அடைவோர் சிலர் தான்.

மீதம் பேர் முடிவு செய்து தான் வருகிறார்கள். எப்படிப்பட்ட முடிவுகள் எனில் பணம் சம்பாதிக்க எந்த துறையினை எடுக்கலாம் என்னும் முடிவு. பெரியவர்களிடையே ஆலோசித்து மகன்/மகளின் மூளையை சலவை செய்துவிடுகிறார்கள் முக்கால்வாசி வீட்டில். அவர்களுக்கான என் பதில் கறை நல்லது என்பதே.

சின்ன உதாரணம் சொல்கிறேன். இயற்பியலின் மீது ஒருவன் மிகுந்த ஆசை கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனிடம் சென்று பொறியியலில் வரும் எல்லாமே இயற்பியல் தான் அதனால் எடுத்துக் கொள் என்று சலவை! அவனுக்கு பின்னே சென்று இவனுக்கு இப்ப எதுவும் தெரியாது பெரியவங்க நாம தான் நல்ல வழில அனுப்பி வைக்கணும் என்று பிதற்றல்.

பொறியியல் படிக்கக் கூடாது என்று நான் சொல்லவரவில்லை. அது அற்புதமான துறை. அதை எடுப்பதற்கு முன் அது என்ன என்று அறிதல் முக்கியமான ஒன்று. பொறியியல் சவாலான ஒன்றும் கூட. பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த இயற்பியல் வேதியியல் கணிதம் கணினி உயிரியல் போன்ற பிரிவுகளில் இருந்தே ஏதெனும் ஒரு பகுதியை எடுத்து அதற்குள் இருக்கும் எல்லா தேற்றங்களையும் படிப்பது. இந்த தேற்றங்கள் அனைத்தும் பன்னிரெண்டாவதில் படித்ததை போன்றே தான் இருக்கும். உண்மையில் அதே தான்.

மேலும் பொறியியலில் படிக்கும் எதைவும் அப்படியே நம் வேலைகளில் பிரதிபலிக்கப் போவதில்லை. நான் ஒரு எலக்ட்ரீஷியனை சந்தித்தேன். அவர் சொன்னார் தம்பி கல்லூரில படிக்கறவங்க கலர வச்சு வயர பாப்பாங்க. எங்களுக்கு பழக்கம் பா. பாத்தவுடன எது எங்க போகுதுன்னு கண்டுபிடிச்சிருவோம்னு. இந்த வேகத்தை அல்லது கற்கும் நுண்மையை நாம் செய்முறையில் கொணர வேண்டும். இதை தமிழகத்தில் இருக்கும் எந்த கல்வி முறையும் நமக்கு கற்பிப்பதில்லை. வீட்டில் மின்சாரம் போகா நேரத்தில் மின்விசிறி ஓடாமல் நின்றால்  எந்த ஆளை அழைத்தால் உடனே வருவார் என்று தான் முதலில் யோசிக்கிறேன்.

மேலும் வெறும் பொறியியல் படிப்பை வைத்து அதற்குண்டான நிறுவனங்களில் சேர முடியாது. நம் நாட்டிலேயே நிறைய பணிகள் இருக்கின்றன. என்னிடம் வந்து அந்த துறை வீண் இந்த துறை வீண் என்று சொல்லும் முதியவர்களிடம்(வேறு எப்படி அழைப்பது ?) அப்படியென்றால் எதற்கு அந்த துறையை அரசு உயிருடன் கலந்தாய்வில் வைத்திருக்கிறது என்று தான் பதில் கேள்வி கேட்பேன். பொறியியல் படிப்பவர்களுக்கு அத்துறை சார்ந்த உலகளாவிய வளர்ச்சிகள், அது சார்ந்த மென்பொருள்கள், எந்த எந்த தொழிற்சாலைகளில் எதையெல்லாம் உபயோகிக்கிறார்கள் என்னும் அறிவு என்ற  விசாலமான தேடல் இருக்க வேண்டும்.

இதெல்லாம் இல்லாமல் குறிப்பாக விருப்பமேமே இல்லாமல் ஒரு பொறியியல் துறையை தேர்ந்தெடுத்தால் சம்மந்தமே இல்லாத ஐயாயிரத்திற்கும் ஆராயிரத்திற்குமான ஒரு வேலை நிச்சயம் கிடைக்கும். என் கேள்வி அதற்கு ஏன் லட்சம் லட்சமாய் செலவு செய்ய வேண்டும் ?

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது தொழில்நுட்பம். ஒவ்வொரு துறையிலும் இத்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நாடு நல்கியே இருக்கிறது. உலகத்தில் இருக்கும் எல்லா தொழில்நுட்பங்களும் பயன்படுத்தபட்டும் இன்னமும் மலேசிய விமானம் கண்ணாமூச்சி ஆடுகிறது. இது தொழில்நுட்பத்தின் தேவையை நமக்கு எடுத்துரைக்கிறது. தொழில்நுட்பம் என்னும் நடைமுறை வளர்ச்சிக்கு வித்தாய் இருப்பது பொறியியல். அந்த பொறியியலை விலைபொருளாக முதலீடாக ஆக்க வேண்டாம். ஒருவேளை இப்பத்தியை வாசிக்கும் நபர் விருப்பமின்றி பொறியியல் சேர்வதாக இருப்பின் தயை கூர்ந்து வீட்டில் எடுத்துரைத்து பின்தங்கிவிடுங்கள். தேசத்திற்கு செய்யும் நூதன உதவியாக கொள்ளுங்கள். தாங்கள் சேரவிருந்த இடத்தில் பொறியியல் வேட்கை மிகுந்த ஒருவன் படித்து நாட்டிற்கு வளம் சேர்க்கட்டும்.

இதையெல்லாம் சொல்கிறானே நான் யார் என்று கேட்கலாம். என் பெயர் ஊருக்கெல்லாம் உபதேசி B.E!

பின் குறிப்பு : பொறியியலில் மட்டுமே தொழில்நுட்பத்திற்கான முன்னேற்றம் என்று தவறான கணக்கை போட்டுவிடாதீர்கள். சட்டம் நர்ஸிங் கலை அறிவியல் வேளாண் என்று எல்லாவற்றிலுமே நாட்டிற்கான தேவை இருக்கிறது. தேடல் கொண்டவர்கள் தேடுங்கள், அடையுங்கள்.

If major headings are more than one line, http://www.justdomyhomework.com use the spacing of the text space-and-a-half or double space between the lines

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஊருக்கெல்லாம் உபதேசி B.E!”

அதிகம் படித்தது