மே 30, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

ஊருணி நீர் நிறைந்தற்றே… (சிறுகதை)

மா.பிரபாகரன்

Mar 16, 2019

siragu ooruni neer1

ஒரு ஊரில் இரண்டு செல்வந்தர்கள் இருந்தார்கள். இருவரும் நறுமணப்பொருட்கள் வாசனைத் திரவியங்கள் முதலானவற்றை ஏற்றுமதி செய்து பெருஞ்செல்வம் ஈட்டிவந்தார்கள். இருந்தாலும் முதலாவது செல்வந்தரைக் காட்டிலும், இரண்டாவது செல்வந்தருக்கே ஊர் மக்களிடம் மதிப்பு, மரியாதை இருந்தது. இது குறித்து முதலாவது செல்வந்தர் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தார்.

நாட்கள் நகர்ந்தன. இரண்டாவது செல்வந்தரை சிறந்த சமூக செல்வாக்கு உள்ளவராக அரசன் தேர்வு செய்தான். அதற்கான விருது வழங்கும் விழாவில் முதலாவது செல்வந்தரும் கலந்துகொண்டார். விழாவில் இரண்டாவது செல்வந்தரிடம் மன்னர் காட்டிய பரிவும் அன்பும் முதலாவது செல்வந்தர் மனத்தில் பொறாமையை உண்டு செய்தது. இருவருமே ஏற்றுமதி வணிகத்திற்காக அரசுக்கு வரி செலுத்துகிறார்கள். சொல்லப்போனால் முதலாவது செல்வந்தரே இரண்டாமவரைக் காட்டிலும் கூடுதல்வரி செலுத்துகிறார். அரசுக்குக் கூடுதல் வருவாயை ஈட்டித்தரும் தன்னைக் காட்டிலும் அவர் எந்த விதத்தில் உயர்ந்தவர் என்ற எண்ணம் முதலாவது செல்வந்தருக்கு வந்தது.

மனப்புழுக்கத்தால் அவர் பல நாட்கள் தூக்கம் வராமல் தவித்தார். ஒரு நாள் மாலை காற்று வாங்கிவிட்டு வரலாம் என எண்ணி ஊரணிப்பக்கம் சென்றார். ஊரணியில் நீர் நிறைந்திருந்தது. கரையில் இருந்த திண்ணைக்கல் ஒன்றில் தண்ணீரைப் பார்த்தபடி அமர்ந்தார். மாலைநேர மஞ்சள் வெயிலில் ஊரணி மின்னிக்கொண்டிருந்தது. நீரில் ஏராளம் மீன்கள் கூட்டம் கூட்டமாக அலைந்து கொண்டிருந்தன. அவைகளை இரையாக்க கொக்கு,நாரை போன்றபறவைகள் கரையோரம் காத்துக் கொண்டிருந்தன. நண்டு, நத்தை, தவளை, புழு, பூச்சி போன்ற சிற்றுயிர்கள் அங்குமிங்கும் ஊர்ந்து கொண்டிருந்தன. கரையைச் சுற்றி வளர்ந்து கிடந்த விருட்சங்களிலிருந்து பழுத்தகாய்கனிகள் அவ்வப்பொழுது உதிர்ந்து பொத்பொத்தென்று விழுந்து கொண்டிருந்தன. ஒரு பக்கம் படித்துறையில் மக்கள் நீராடிக் கொண்டிருந்தார்கள். மற்றொரு பக்கம் குடிப்பதற்காக நீரை பெண்கள் குடம்குடமாய் மோந்து சென்று கொண்டிருந்தார்கள். ஒரு வேளை இந்த ஊரணியில் நீர் இல்லாவிட்டால்…? செல்வந்தர் யோசித்தார். நீர் இல்லாவிட்டால் இந்த ஊரணியைச் சுற்றி நடக்கும் அனைத்து இயக்கங்களும் நின்று போய்விடும்.

செல்வந்தருக்கு சட்டென்று ஏதோ பொறி தட்டியது போலிருந்தது. ஊரணியில் நிறைந்திருக்கும் நீர் தான் நாம் பெற்ற செல்வம். இந்த ஊரணி நீர் அனைத்து விசயங்களுக்கும் பயன்படுவது போன்று நாம் பெற்ற செல்வமும் அனைவருக்கும் பயன்படவேண்டும். அவர் (இரண்டாவது செல்வந்தர்) தான தருமங்கள் செய்தார், கொடையளித்தார். பாடசாலைகள், அன்னச்சத்திரங்கள் கட்டி தொண்டுகள் பல செய்தார். அவர் பேரறிவாளன். அதாவது எளியோருக்கும், வறியோருக்கும் உதவி செய்யும் நற்பண்புகள் நிறைய பெற்றவர். அவர் பெற்ற செல்வம் அனைவருக்கும் பயன்பட்டது. அதனால் கீர்த்தி (புகழ்) அவரைத் தேடிவந்தது. ஆனால் நான்? என்னிடம் ஏராளம் செல்வம் இருந்தும் வறியவன் போல் நடந்து கொண்டேன். நீர் அற்ற குளத்தை யார் நாடுவர்? “ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு”-என தான் சிறுவயதில் பயின்ற குறளை ஒரு முறை உரக்கச் சொல்லிப் பார்த்தார். ஏதோ ஒரு நல்ல மாற்றம் மனத்தில் உண்டானது போலிருந்தது. ‘ஒருவன் பொருள் ஈட்டுவது மற்றவர்களுக்கு உதவி செய்ய அதாவது நீர் நிறைந்த ஊரணி ஊருக்கே பயன்படுவது போல’ என்ற உண்மையை உணர்ந்து கொண்டார் செல்வந்தர். மனப்புழுக்கம் நீங்கப் பெற்றவராய் வீடு நோக்கி மிடுக்குடன் நடந்தார்.


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஊருணி நீர் நிறைந்தற்றே… (சிறுகதை)”

அதிகம் படித்தது