மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஊழலற்ற தேசம்

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Jan 31, 2015

indhiyaavin kolgai8“நாட்டில் எங்கும் ஊழல் மலிந்திருக்கிறது” என்று எல்லாரும் பேசுகிறார்கள். சர்வதேச அறிக்கை ஒன்று ஊழல்மிக்க நாடுகளில் நமதுநாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தில் இருக்கிறது என்று தெரிவிக்கிறது. அடிக்கடி நமது பேச்சிலும் எழுத்திலும் இடம் பெறும் இச்சொல்லின் பொருள் என்ன?

ஊழல்-அர்த்தம்:

சமூக ஒழுங்கிற்கு மாறாக நடத்தல், பிறரை ஏமாற்றுதல், வஞ்சித்தல், பொதுமக்களுக்குரிய பொருளைச் சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் கவர்தல் அல்லது கொள்ளையடித்தல் என்று இச்சொல்லுக்குப் பொருள் கூறலாம்.

தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம் என ஒழுக்கம் இரு வகைப்படும். ஒருவனது தனிமனித வாழ்க்கையை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபடும் போது அவன் தனிமனித ஒழுக்கத்தை மீறுகிறான். உதாரணமாகக் குடிப்பழக்கம், போதை மருந்துப்பழக்கம் போன்றவை ஒருவனை பாதிக்கின்றன. அப்பழக்கங்களில் ஈடுபடுகின்றவனைத் தனிமனித விதிகளை மீறுபவன் என்று சொல்லலாம். தனிமனித விதிகளை அல்லது ஒழுங்குகளை மீறுவது என்பது அப்படி மீறுபவனையும் அவனது குடும்பத்தையும் மட்டுமே பாதிக்கிறது.

சமூக ஒழுக்கம் என்பது இன்னொரு வகை. அதன் விதிகளை மீறுவது பொதுமக்களின் பெரும்பகுதியினரை பாதிக்கிறது. உதாரணமாகப் பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சமூக ஒழுக்கம். இதை மீறுபவர்கள் சமூகத்தில் நோய் பரவுவதற்கும் மற்றவர்கள் பாதிக்கப்படுவதற்கும் காரணமாகிறார்கள். தனிமனித ஒழுக்கத்தை மீறுவதைவிட இது மிகவும் மோசமானது.

ஊழல் என்பது சமூக ஒழுக்கத்தை மீறுகின்ற மிக மோசமான விஷயம். ஒரு நாட்டிற்குரிய அலுவலர்கள் எவராயினும் அந்நாட்டு மக்களுக்கு நன்மை தருகின்ற முறையில் நடந்துகொள்ள வேண்டும். அதனை மீறித்தங்கள் சுயநலத்தை மட்டுமே கருதி நாட்டு மக்களுக்குத் தீமை செய்யும் காரியங்களில் இறங்கும் போது ஊழல் செய்கிறார்கள். ஊழல் நடத்தை என்பது ஒரு மனப்பான்மை.

ஊழல் என்பது தனிமனித ஒழுக்கத்திற்கும் மாறானது. நேர்மை என்பது அடிப்படை மனித ஒழுக்கம். அடிப்படை மனித ஒழுக்கங்கள் மாறாதவை. உதாரணமாக, பிறரைக் கொள்ளையடிப்பவனும் தன்னைப் பிறர் கொள்ளையடிப்பதை விரும்புவதில்லை. பிறருக்குத் தீங்கு செய்பவனும், தனக்குப் பிறர் தீங்கு செய்வதை விரும்புவதில்லை. பிறன் மனைவியைச் சொந்தம்கொண்டாட முனைபவனும் தன்மனைவியைப் பிறர் காணச் சகிப்பதில்லை. மனித ஒழுக்கத்திற்குத் “தன்னைப் போலவே பிறரை நினைக்கவேண்டும்” என்பது அடிப்படையாக அமைகிறது. அடிப்படை மனித ஒழுக்கத்திற்கு மாறாக நடக்கும் போதுதான் ஊழல் ஏற்படுகிறது.

ஊழல் ஒரு மனப்பான்மை:

oolalatra desam5ஊழல் ஒரு மனப்பான்மை, அதைவிட ஒரு மனநோய் என்று கூடச் சொல்லலாம். பலபேர் ஊழல் என்றால், ஏதோ பணத்தைத் திருடுவது, பொதுச் சொத்தைக் கையாடுவது என்று மட்டும் நினைக்கிறார்கள். அவ்வாறல்ல. ஓர் இடத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக வரிசையில் நிற்கிறோம். பின்னால் வரும் ஒருவன் வந்து முறையற்ற விதத்தில் முன்னால்போய் நின்று கொள்கிறான். இதுவும் ஊழல்தான்.

பஸ்ஸில் ஏற நெரிசலாக இருக்கிறது. சிலர் நடத்துநரைக் கேட்டுச் சீட்டு வாங்கிக்கொண்டு ஏறுகிறார்கள். சிலர் வெளியிலிருந்தபடியே துண்டையோ பையையோ உள்ளே எறிந்து ‘இடம் போட்டு’ விட்டுப் பின்னால் ஏறி, ஆனால் “நாங்கள் ரிசர்வ் செய்து விட்டோம்” என்று சொல்லி உட்கார்ந்து கொள்கிறார்கள். இதுவும் ஊழல்தான். இவை எல்லாமே சமூக ஒழுக்கத்தை மீறும் சுயநல நடவடிக்கைகள்.

அரசு அலுவலகத்தில் ஒருவன் முறைப்படி ஒரு காரியத்திற்காகச் செல்கிறான். இன்னொருவனுக்கு அவசரம். அவன் செல் வாக்கு உள்ளவனும் கூட. தனது காரியமே முதலில் ஆகவேண்டும் என்று நினைக்கிறான். உடனே தனது பணத்தைப் பயன்படுத்தி, அரசு அலுவலகருக்கு லஞ்சம் கொடுத்து, தனது சுயநலக் காரியத்தை முடித்துக்கொள்கிறான். முறையான வழியில் வருபவனுக்குக் காரியம் ஆகாமல் போகிறது. இதற்கும் முன்பு கூறியது போல வரிசையில் முறையற்ற வழியில் நுழைந்ததற்கும் வித்தியாசமில்லை. அங்கு உடல் பலம், இங்கே பணபலம். அவ்வளவுதான். நாம் முன்னதைக் குறை சொல்வதில்லை. பின்னதை மட்டும் ஊழல் என்கிறோம்.

ஊழல் என்பது சமூகத்தில் காணப்படும் ஒரு சுயநல மனப்பான்மை. ஒரு மனநோய். அது ஏதோ அரசாங்க அலுவலகங்களில், அரசாங்க ஊழியரிடம் அல்லது அரசியல்வாதிகளிடம் மட்டும் காணப்படும் பண்பு அல்ல.

தகுதிக்கேற்பப் பெறுகிறோம்:

oolalatra desam3மோசமான அரசாங்கம் அமைந்துவிடுகிறது. “உனக்கு எது பொருத்தமோ (ஏற்றதோ) அதை நீ பெறுகிறாய்” என்று ஒரு பழமொழி இருக்கிறது. (You get what you deserve). இது மிகவும் சரியான கூற்றே. பெரும்பான்மை மக்கள் ஊழல் மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கும்போது அவர்களை ஆட்சிசெய்பவர்களும் வேறு எப்படி இருப்பார்கள்? அவர்களும் ஊழல் செய்பவர்களாகத் தானே இருக்கமுடியும்?

சிலஆண்டுகளுக்கு முன்னால் அரசாங்க அலுவலர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். அது மோசமான விதத்தில் ஒடுக்கப்பட்டது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். “இந்த அரசு அலுவலர்களுக்கு நன்றாக வேண்டும். ஊழல் செய்பவர்களுக்கு தங்கள் கடமையைச் செய்யாதவர்களுக்கு ஏற்ற தண்டனைதான் இது” என்று சொன்னார்கள். இந்த தண்டனை சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படிப்பட்ட அரசு அலுவலர்களை உருவாக்கியது யார்? நாம்தானே? அதாவது பொதுமக்கள்தானே?

உதாரணமாக, ஒரு பையன் பிறந்து வளரும்போதே அவன் ஊழல் செய்தாவது நன்றாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையைப் பொது மக்கள்தான் ஏற்படுத்துகிறார்கள். நேர்மையாக நடப்பவர்கள் ஏமாளிகள், எதற்கும் லாயக்கற்றவர்கள், பைத்தியக்காரர்கள் என்கிறார்கள். ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும்போதே மாப்பிள்ளை சம்பளம் குறைவாக வாங்கினாலும், நன்றாக மற்றவழியில் சம்பாதித்துவிடுவான் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு கொடுக்கிறார்கள். இப்படியெல்லாம் பொதுமக்களே, சாதாரண மக்களே, (அதாவது நாமே) எல்லா விதங்களிலும் ஊழலை ஆதரித்துக்கொண்டு, அதை ஏற்றுக் கொண்டு, அதைச் செய்யும் ஒருவனுக்கு தண்டனை கிடைத்தால் சந்தோஷப்படுகிறார்கள். இது எந்தவிதத்தில் நியாயம்?

“நான் ஊழல் செய்யவும் இல்லை, அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை; அப்படியிருக்க நான் எப்படி ஊழலுக்குத் துணை செய்வதாகக் கூறலாம்?” என்று சிலர் கேட்கிறார்கள். நாம் நம் கண்ணெதிரில் ஊழல் நடக்கும்போது தடுக்கவோ தண்டிக்கவோ முனைவதில்லை. பலசமயங்களில் பயப்படுகிறோம். அப்படியானால், நாம் எல்லாரும் ஊழலுக்குத் துணை செய்பவர்கள் என்று தான் அர்த்தம்.

ஊழல் சிறிய அளவிலிருந்துதான் தொடங்குகிறது. உதாரணமாக, ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் செல்லுங்கள், பதிவுக்கான கட்டணத்துடன் அங்குள்ள பதிவாளரிலிருந்து பியூன் வரை அனைவருக்குமான பங்கையும் சேர்த்தே உங்களிடம் முதலிலேயே வாங்கிவிடுவார்கள். பலபேருக்கு இப்படி நடக்கிறது என்று கூடத் தெரியாது. என்ன நடக்கிறதென்று தெரியாதவர்களும், தெரிந்தே ஏற்றுக்கொள்பவர்களும் ஒன்றுதான்.

இப்படி ஒரு தேசத்திலிருக்கும் மிகப் பெரும்பான்மை மக்கள் ஊழல் மனப்பான்மை கொண்டவர்களாக, “என்ன நடந்தால் நமக்கென்ன” என்று இருப்பவர்களாகவோ, தடுக்கச் சக்தியற்றவர்களாகவோ இருக்கும்போது அவர்களுக்கேற்ற ஊழல் ஆட்சியாளர்களும் அலுவலர்களும் அரசியல்வாதிகளும் தானே இருப்பார்கள்? பொது மக்களிலிருந்துதானே இவர்கள் எல்லாரும் உருவாகிறார்கள்?

ஊழலற்ற தேசம்:

ஆகவே ஊழலற்ற தேசம் வேண்டுமானால், பொதுமக்களின் மனப்பான்மை மாறவேண்டும். அதுதான் அடிப்படை. பொதுமக்களின் மனம் ஊழலுக்கு எதிரானதாக, ஊழலை ஏற்றுக்கொள்ளாததாக இருந்தால் ஊழல் புரிபவர்கள் அரசு அலுவலுக்கும் வரமாட்டார்கள், அரசியல்வாதிகளாகவும் மாட்டார்கள். எனவே ஊழலற்ற தேசம் வேண்டும் என்பவர்கள் பொதுமக்களின் மனப்பான்மையை மாற்றுவதற்கு என்ன செய்வது என்பது பற்றித்தான் ஆராய வேண்டும்.

இன்றைய நிலை:

oolalatra desam1ஊழல் மனப்பான்மை என்பது “எந்தவிதத்திலேனும் நான் மட்டும் பயனடைய வேண்டும், மற்றவர்கள் எக்கேடும் கெடட்டும்” என்னும் சுயநல மனப்பான்மைதான். ஊழல் மனப்பான்மை மாறுவது எப்படி?

நேர்மையான விதத்தில் நடந்தாலே நமக்குத் தேவையானது எதுவாயினும், ரேஷன் பொருளானாலும், இட ஒதுக்கீடானாலும், வேலை வாய்ப்பானாலும், டிரைவிங் லைசென்ஸ் ஆனாலும் கிடைத்துவிடும் என்ற நிலை இருந்தால் மக்கள் நியாயத்திற்குப் புறம்பான வழிகளைப் பெரும்பாலும் நாடமாட்டார்கள். நேர்மையாகவே எல்லாம் கிடைக்கும் என்றால் அநியாய வழிக்கு ஏன் போக வேண்டும்?

ஆகவே மக்கள் நியாயமான வழியில் நடந்தாலே அவர்களுக்கு உரிய காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையை அரசாங்கம்தான் ஏற்படுத்தவேண்டும். ஆனால் அரசாங்கம் அப்படிச் செய்யுமா? அரசாங்கமே ஊழல் மிகுந்ததாக இருக்கும்போது நேர்மையான விதத்தில் நடப்பது நன்மை பயக்கும் என்ற உறுதியை, நம்பிக்கையை அது எப்படி அளிக்கமுடியும்? (இதனால்தான் போலும், அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்று பழமொழி இருக்கிறது.)

ஊழல் கூடாது என்று பிரச்சாரம் செய்வதன் வாயிலாக ஊழலை ஒழிக்க முடியாது. சிறிய குழந்தைகளுக்கே இந்தக் காலத்தில் யார் வெறுமனே சொல்கிறார்கள், யார் நடந்து காட்டுகிறார்கள் என்பது நன்றாகப் புரிகிறது. அரசாங்க அலுவலர்களும், அரசியல்வாதிகளும், செல்வாக்கு மிக்கவர்களும், குறிப்பாக ஊழல் உருவாகப் பெரும் காரணமாக இருக்கின்ற முதலாளிகளும் ஊழலற்ற விதத்தில் பெரும்பான்மையும் நடந்துகாட்டுவது வாயிலாகத்தான் ஊழலை ஒழிக்க முடியும். தாங்களே ஊழல் செய்து பல்லாயிரக் கோடிகள் கணக்கில் பணம் சம்பாதித்துக்கொண்டு மக்கள் ஊழல் செய்யக்கூடாது என்று சொல்லும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் யார் நம்புவார்கள்?

நமது அரசாட்சிமுறை ஊழலுக்கு இடமளிப்பதாகவே இருக்கிறது. உதாரணமாகத் தேர்தல். தேர்தலுக்கு நிற்பவர்கள், ஏராளமாகப் பணம் செலவு செய்யவேண்டி இருக்கிறது. நேர்மையானவர்கள் எப்படி இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் தங்கள் தொகுதியில் வெற்றிபெறப் பணம் செலவழிக்க முடியும்? ஆகவே நேர்மையற்ற முறையில் பணம் சம்பாதிப்பவர்கள்-அந்தப் பணம் எப்படிப் போனாலும் சரி, கருப்புப் பணம் வெள்ளையாகட்டும் என்னும் மனப்பான்மை உள்ளவர்கள்தான் தேர்தலில் நிற்க முடியும். ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையே ஊழலை ஆதரிக்கும்விதமாக இருக்கும்போது அவர்கள் ஊழலை எப்படி ஒழிப்பார்கள்?

தேர்தல் செலவுகளுக்காகக் கட்சிகளுக்குப் பணம் வேண்டும். கட்சிகள் பெரிய முதலாளிகளை நாடுகின்றன. முதலாளிகள் கட்சிகளுக்குத் தேர்தல் நன்கொடை (நிதி) தருகிறார்கள். தேர்தலில் அக்கட்சி வெற்றிபெற்ற பிறகு அவர்கள் தங்களுக்குச் சலுகைகள் கேட்கிறார்கள். அரசுப்பொறுப்பை ஏற்ற கட்சிகள் அப்போது மறுக்க முடிவதில்லை. சட்டத்திற்குப் புறம்பாகச் சலுகைகளை அந்த முதலாளிகளுக்குத் தருகிறார்கள். இப்படி அதிகாரமும் முதலாளித்துவமும் இணைந்து ஊழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இப்போது சர்வதேச நாடுகளும் அடுத்த நாடுகளில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த ஊழலைப் பயன்படுத்துகின்றன.

இதையெல்லாம் பார்க்கும்போது, நேர்மையாக இருக்கின்ற, நேர்மை மனப்பான்மை படைத்த ஒருசிலருக்கும் சமூகத்தின்மீது அவநம்பிக்கைதான் தோன்றுகிறது. ஊழலுக்கு ஆதரவாகவே அரசியல்வாதிகளும், அரசாங்கமும், தேர்தல் முறையும், பெரிய அமைப்புகளும், இப்படி எல்லாமே செயல்படும்போது சாதாரண மனிதன் என்ன செய்வது? இந்த அமைப்புகளுக்கு எதிராக எப்படிப் போராடுவது என்னும் சோர்வு ஏற்படுகிறது. இன்று நாம் படித்தவர்களிடமும் பண்புள்ளவர்களிடமும் காண்பது இப்படிப்பட்ட சோர்வுதான்.

விஷச்சுழல்

ஊழல் என்பது மிகப்பெரிய விஷச்சுழல். ஏனென்றால் பணபலமுள்ளவன் ஊழல் செய்து அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற, அரசாங்கம் (தனது தேர்தல் போன்ற விஷயங்களுக்காக) மறுபடியும் அவனை ஆதரிக்க, இப்படி அந்தச்சுழல் விரிந்துகொண்டே போகிறது. இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தாங்கள் அதைச் செய்யும்போது கண்டுகொள்வதில்லை. பிறர் செய்து, நாட்டுக்கு அது மோசமான விளைவை ஏற்படுத்தும் என்னும்போது மட்டும் உச்சநீதி மன்றம், சிபிஐ விசாரணை அது இது என்று கண்துடைப்பு விவகாரங்களில் ஈடுபடுகிறார்கள். ஒரு காலத்தில் ஏதாவது ஊழல் நடந்தால் விசாரணைக் கமிஷன் அமைப்பார்கள். இப்போது விசாரணைக் கமிஷன் என்றாலே கேலிக்கூத்தாகி விட்டது. யாருக்கும் அதில் நம்பிக்கை இல்லை. விசாரணைக் கமிஷன்களால் ஒருவரும் தண்டிக்கப்பட்டதில்லை. மாறாக, இது ஒரு ஒத்திப்போடும் உத்தி, மக்களை மறக்கச்செய்யும் உத்தி என்று எல்லாருக்கும் தெரியும்.

வழிதான் என்ன?

oolalatra desam2இப்படிப்பட்ட மிகச்சோர்வான நிலையில் பொதுமக்கள் என்ன செய்வது? மாணவர்களும் இளைஞர்களும் எப்படி ஒரு ஊழலற்ற தேசத்தை உருவாக்குவார்கள்? ஆர்வமுள்ளவர்கள் சிலஆயிரம் பேரேனும் ஓர் அமைப்பாகச் சேர்ந்து செயல்படுவது ஒரு வழி. உதாரணமாக, ஓர் அரசு அலுவலர் ஊழலில் ஈடுபடுகிறார் என்றால் தனிமனிதன் சென்று நியாயம் கேட்டால் வேலை நடப்பதில்லை. மேலும் அவனை ஒழிக்க முனைந்துவிடுவார்கள். நியாய மனப்பான்மை உள்ள பத்துப்பேர் ஒன்றாகச் சேர்ந்து கேட்டால் நியாயம் கிடைக்கலாம். ஆனால் அதற்கும் தளராத மன உறுதி உள்ள தனிமனிதர்கள் வேண்டும். அந்தப் பத்துப்பேரும் எல்லா ஊர்களுக்கும் செல்லமுடியாது. எனவே ஓர் இயக்கத்தையே உருவாக்கும் உறுதி படைத்த மனிதர்கள் வேண்டும். அதற்கும் தளராத மனமும் பணபலமும் வேண்டும். இல்லை யென்றால், தற்காலிகமாகத் திரளும் மனிதக்குழுவையும் இன்று “தீவிரவாதிகள்” என்று பெயர்சூட்டியே அரசியல்வாதிகள் ஒழித்து விடுவார்கள். எல்லா பலமும் அவர்கள் கையில்!.

ஊழல் என்பது சுயநலம். பொதுநலத்தில் குறுக்கிடாதவரை, சுயநலத்தினால் தவறில்லை. உன் கண்ணைக் குத்தாதவரை நான் குடை வைத்துக் கொள்வதில் தவறில்லை. பொதுநலத்திற்கு மாறான சுயநலம் தீமை பயக்கக்கூடியது. இறுதியாக நாட்டையே (நாட்டையே என்றால் நம் அனைவரையுமே என்றுதான் அர்த்தம்) ஒழித்துவிடும், சீரழித்துவிடும், அடிமையாக்கிவிடும். இதை மக்கள் உணருமாறு செய்யவேண்டும். யார் செய்வது?

இயற்கை இதற்கு எவ்வெவ்வாறோ உதவி செய்கிறது. உதாரணமாக, நிலத்தையும், காற்றையும், நீரையும் மாசுபடுத்தியேனும் தங்களுக்கு ஆயிரமாயிரம் கோடிகள் சேர்த்துக்கொண்டால்போதும் என்று முதலாளிகள் நம்பினார்கள். ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் பொது மக்களை ஓரளவு விழிப்படைய வைத்திருக்கின்றன. (ஓரளவுதான்!) இப்போது சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிராக மக்கள் திரளுகிறார்கள். எனவே இயற்கை நமக்கு உதவிசெய்யும் என்று மக்கள் நம்பவேண்டும்.

ஊழலுக்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்கள், தற்காலிகமாக ஆங்காங்கு ஒன்றுதிரண்டு போராடினால் போதாது, “ஊழலால் கிடைப்பது தற்காலிகத் தீர்வுதானே ஒழிய நிரந்தரத் தீர்வு அல்ல” என்பதை உணருமாறு செய்யவேண்டும். பண்புள்ளவர்கள் சிலரின் தியாகத்தினால்தான் பெரிய காரியங்கள் நிகழுகின்றன. அவர்கள்தான் ஊழலுக்கு எதிரான இயக்கங்களை உருவாக்க வேண்டும். அவற்றை முன்னெடுத்துச் செல்லவேண்டும். தங்கள் நோக்கம் தீவிரவாதமோ அரசியலோ கிடையாது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தி, மக்களுக்கு நன்மை கிடைப்பதே தங்கள் நோக்கம் என்பதை வலியுறுத்தி, இயக்கங்களை உருவாக்க வேண்டும்.

நமது அரசியலமைப்பையும், தேர்தல்முறையையும், பிற தேர்ந்தெடுப்பு முறைகளையும், மக்களுக்கு எதிரான சட்டங்களையும் நீதிமுறையையும் மாற்றமுடியாமல் போனால், பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் ஒன்றுதிரளும் இயக்கங்கள் மட்டுமே எதிர் காலத்தில் நம்பிக்கைதரும் ஒரேவழி. ஊழலற்ற தேசத்தை உருவாக்கும் ஒரே வழி. அம்மாதிரி இயக்கங்களை உருவாக்க ஒன்று திரளுவோம், உண்மையிலேயே சிறந்த (வல்லரசாக அல்ல, அது மேலும் ஊழலில் கொண்டுபோய்விடும்), மனிதத்தன்மை மிக்க இந்தியாவை உருவாக்க!.

(குறிப்பு: இந்தக்கட்டுரை, ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது. அன்னா ஹசாரே முதலியவர்கள் உருவாவதற்கு முன்னால், இந்தியாவிலிருக்கும் பல முதலமைச்சர்கள், கேபினட் அமைச்சர்களே சந்திசிரிப்பதற்கு முன்னால். இன்றும் ஏற்புடையதாக இதன் கருத்துகள் உள்ளன என்பதால் வெளியிடப்படுகிறது.)

ஆனால், உனக்கு எது ஏற்றதோ அதை நீ பெறுகிறாய் என்று ஊழல் சமுதாயத்திடம் நேர்மையானவர்கள் அல்லது நல்லவர்கள் சொல்லிவிட்டுப் பேசாமல் செல்லும்போது தங்கள் பொறுப்பிலிருந்து நழுவுகிறார்கள். அதாவது ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அவர்களுக்கும் ஒரு பொறுப்பு உண்டு. வெறும் விமரிசனம் மட்டும் போதாது.


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஊழலற்ற தேசம்”

அதிகம் படித்தது