எதற்கு வேண்டும் கவிதை?! (கவிதை)
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிMar 27, 2021
கண்ணின் மணியைக் காதல் மொழியைக்
காரிருள் அகத்தைக் கசக்கும் சொல்லைக்
கானக உயிர்களைக் கடலின் அலைகளைக்
குயிலின் கானம் கிளியின் பேச்சை
தத்தி தவழும் கிள்ளை அழகைத்
தாவிடும் மானின் துள்ளல் அழகைத்
தாளம் போடும் விரல்களின் அழகைத்
தாகம் தீர்க்கும் அருவியின் அழகை
வாக்கு தவறும் கயவர் கருத்தை
வாகாய் வளையும் மனிதர் உளத்தை
வணங்கும் தலைவர் ஆற்றல் அறிவை
விரித்துப் பறக்கும் பறவை இறகை
வார்த்தை தவறும் நொடியின் கணத்தை
வைரமாய் பாடும் வரிகள் கனத்தை
வீழ்த்திப் போகும் குளிர் காற்றை
வளமாய் வாழும் வாழ்க்கைத் தரத்தை
வாழ்த்திப் பாட வேண்டுமே கவிதை
வைது பாட வேண்டுமே கவிதை
வீழ்த்தலை அறுக்க வேண்டுமே கவிதை
வாழ்தலை ரசிக்க வேண்டுமே கவிதை !
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “எதற்கு வேண்டும் கவிதை?! (கவிதை)”