எத்தனை விதத்தில்தான் ஏமாற்றுவார்? வீடு, மனை வணிகத்தில் கவனம் கொள்வீர்…
வெங்கட்ரமணிNov 22, 2014
உலகமயமாக்கலுக்குப் பிறகு தமிழகத்தில் வீடு மற்றும் மனை பரிவர்த்தனைகள் மிக அதிக அளவில் நடைபெறுகின்றன. கற்பனைக்கு எட்டாத அளவு பணம் இவ்வணிகத்தில் புழங்குகிறது. மனைகளில் முதலீடு செய்வதை நமது சமூகம் ஒரு கடமையாகவே கருதுகிறது. இந்த சூழ்நிலையில் அவற்றில் நடைபெறும் தகிடுதத்தங்களும், புரட்டுகளும், பொய்களும் பல மனிதர்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. அத்தகைய ஏமாற்றுகளை வெளிப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முயற்சியே இந்தக் கட்டுரை.
1. கணேஷ்,வெளிநாட்டில் வாழும் இந்தியர். இவர் சென்னையின் புறநகரில் மனை ஒன்றை வாங்க முடிவு செய்தார். வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு அந்த மனையில் ஒரு வீட்டைக் கட்டி வாழ்வது அவருடைய யோசனையாக இருந்தது. அப்படி முடியாவிட்டாலும் அந்த மனையின் விலை உயரும். உயர்ந்த பிறகு விற்றால் நகரத்திற்குள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிடலாம் என்று எண்ணினார்.
அவருக்கு சென்னை நகரின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு புறநகரில் உள்ள விற்பனையாளர்களிடமிருந்து அழைப்புகள் வந்தன. அவற்றை ஆய்வு செய்து திருபெரும்புத்தூர் அருகில் ஒரு மனையை தேர்வு செய்தார். அவர் தேர்வு செய்த இடத்தில் 100 மனைகள் இருப்பதாகவும் அவற்றில் வீடுகள் கட்டப்பட்டப் பிறகு அந்த இடமே ஒரு சிறிய நகரமாகிவிடும் என்று சொல்லப்பட்டது. நிலத்தின் விற்பனையாளர் பதிவுக்கட்டணத்தை தாமே ஏற்பதாகவும் மூன்று வருடங்களுக்கு மனையை பாதுகாத்துத் தருவதாகவும் உறுதியளித்தார். கணேஷ் அவர்களும் பெருமகிழ்ச்சியோடு தம் பணத்தை அந்த மனையில் முதலீடு செய்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பிய கணேஷ் வீடுகட்ட விரும்பி கடனுக்காக ஒரு வங்கியை அணுகினார்.
வங்கி அதிகாரிகள் அவரது மனையின் ஆவணங்களையும், மனையையும் ஆய்வு செய்த பிறகு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டனர். என்னவென்றால், அந்த இடத்தில் வீடு கட்டலாம் என்ற அரசின் அனுமதி பெறப்படவில்லை என்பதே அது. கணேஷ் தன்னுடைய ஆவணங்களைப் பார்த்தபோது அதில் அந்தப்பகுதி பஞ்சாயத்துத் தலைவரின் ஒப்புதலும் அந்த மனையில் வீடு கட்டலாம் என்ற அனுமதியும் இருந்தது. இந்த ஆவணத்தை வங்கி அதிகாரியிடம் காட்டி கேட்ட பிறகு பஞ்சாயத்து தலைவருக்கு இத்தகைய அனுமதி வழங்கும் அதிகாரம் இல்லை என்று சொல்லப்பட்டது. கணேஷின் தலையில் மற்றொரு இடி வந்து இறங்கியது. அரசாங்கம் ஒரு பெரிய தொழிற்பேட்டைக்காக அவர் வாங்கிய இடத்தை கையகப்படுத்தப்போகிறது என்பதுவே அது. அவ்விடம் விவசாய இடம் என்பதால் அரசாங்கம் தரக்கூடிய இழப்பீட்டுத்தொகை மிக மிகக் குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தொகையானது அவர் முதலீடு செய்த தொகையை விட மிக மிக குறைந்ததாகும்.
இங்கே யாரைக் குற்றம் சொல்வது?.
கணேஷ் வழக்கறிஞர் ஒருவரை அணுகியபொழுது முழுக்கதையையும் கேட்டுவிட்டு கைவிரித்த வழக்கறிஞர் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பே கவனத்துடன் இருந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மனையை விற்பனை செய்தவர் விவசாய நிலமாக விற்பனை செய்வதால் அந்த விற்பனை சட்டப்பூர்வமானது. அவருக்கு எதிராக வழக்கு எதுவும் தொடுக்க முடியாது என்றார்.
உடனே அந்த மனையை விற்பனை செய்ய முயற்சி செய்த கணேஷ் வாங்குவதற்கு யாருமே இல்லை என்ற கசப்பான உண்மையை உணர்ந்தார். மேலும் அந்தப் பகுதியில் முதலீடு செய்த அனைவருமே கையறு நிலையில்தான் இருக்கின்றனர் என்று தெரியவந்தது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அரசாங்கம் கையகப்படுத்துமேயானால் இருபது லட்சம் ரூபாய் இழப்பு தமக்கு ஏற்படும் என்று உணர்ந்த கணேஷ் வேதனையில் வெம்பினார்.
2. சேகர், ஒரு தனியார் வங்கியில் மூத்த அதிகாரியாக பணியாற்றுபவர். நிலப்பிரச்சனை தொடர்பாக என்னை சமீபத்தில் சந்தித்தார். சேகர் தம்முடைய மனையை, வீடுகளைக்கட்டி விற்கும் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு கொடுத்திருந்தார். அதற்கு ஈடாக வேறு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைப் பெற்றுக்கொள்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் விலை 75லட்சம் என்று கூறப்பட்டது. இந்தப் பணமானது சேகர் விற்ற மனையின் விலையில் தள்ளுபடி செய்துகொள்ளப்பட்டு மீதத்தொகை அளிக்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் முடிவுசெய்து கொள்ளப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பானது சிறந்த கட்டுமானத்துடனும் நகர் பகுதியிலும், மூன்று மாதத்தில் குடியேறத் தக்கதாகவும் ஆக்கப்பட்டு வருகிறது என்று தகவல் தரப்பட்டது. ஒப்பந்ததாரர் அந்த அடுக்குமாடி குடியிருப்பை சேகரை வற்புறுத்தி அவரது பெயரில் பதிவுசெய்து கொள்ளச்செய்தார்.
திடீரென சேகருக்கு ஒரு மனமாற்றம். நகரின் வேறொரு பக்கத்தில் உள்ள பகுதியில் தமது அலுவலகத்திற்கு அருகிலேயே குடியிருக்கலாம் என்று முடிவு செய்தார். அதனால் ஒப்பந்ததாரரிடம் சென்று இந்த அடுக்கு மாடி குடியிருப்பை தாம் திருப்பி தந்துவிடுவதாகவும் அதற்கு இணையான ரொக்கத்தை தம்மிடம் தந்துவிடக்கூறியும் அந்தப் பணத்தைக் கொண்டு தாம் தமது அலுவலகத்திற்கு அருகே குடியிருப்பு வாங்க விரும்புவதாகவும் கூறினார். ஒப்பந்ததாரர் குடியிருப்பை தாம் திருப்பி எடுத்துக்கொள்ள முடியாது எனவும் ஏனென்றால் அதற்குரிய பணத்தைத் தர தம்மிடம் ரொக்கம் இல்லை எனவும் எடுத்துரைத்தார். சேகர் விரும்பினால் அவரே அந்த குடியிருப்பை விற்றுக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த சூழ்நிலையில்தான் சேகர் என்னை வந்து சந்தித்தார். ஆவணங்களையும் திட்டங்களையும் அனுமதிகளையும் பரிசோதித்தப் பிறகு சேகர் ஒப்பந்ததாரரால் வகையாக ஏமாற்றப்பட்டு இருக்கிறார் என்று உணரமுடிந்தது. எப்படி என்றால் சேகருக்குத் தரப்பட்ட குடியிருப்பு முறையாக திட்டமிடப்படாமலும், வாகனம் நிறுத்த வசதி இல்லாமலும், அரசாங்க விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்டு இருந்தது. அதனுடைய சந்தை மதிப்பு ஒப்பந்ததாரர் சொன்ன விலையிலிருந்து 25 சதவிகிதம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் மீறப்பட்ட விதிமுறைகளும், வெளிச்சமின்மையும், வசதியின்மையும் அந்த வீட்டை பிறர் வாங்குவதைத் தடுத்தது.
எளிமையாக காகிதங்களில் எழுதப்படும் பல விசயங்கள், சொல்லப்படும் விலைகள்,உண்மையில் மிகவும் சிக்கலானதாகும். ஆகையால் மனைகள் வாங்கும்பொழுதும், வீடுகளை வாங்கும் பொழுதும் நிபுணர்களைக் கொண்டு முறையாக பரிசீலித்து அதன் பிறகே ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். சேகர் இப்பொழுது 20 லட்சம் ரூபாய் இழந்துவிட்டு விற்கவோ குடியிருக்கவோ முடியாத ஒரு குடியிருப்பை விலைகொடுத்து வாங்கிவிட்டு நிற்கதியாக நிற்கிறார்.
மேற்சொன்ன கதைகள் நம் நாட்டில் தினம் தினம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. நிலத்தில் முதலீடு செய்யும் பொழுது நிபுணர் ஒருவரைக் கொண்டு முறையான ஆய்வுகளை செய்து ஆவணங்களை சரிபார்த்து வாங்குவதே புத்திசாலித்தனமாகும். அதுவே நமது பின்னாளைய தலைவலிகளைத் தவிர்க்கும்.
வீடு, மனை மற்றும் கட்டிடம் தொடர்பான ஆலோசனைகளுக்கு கீழ்க்காணும் முகவரியை அணுகவும்.
BVe Consulting Engineers
Engineering Project Consultancy & Property Advisory Services,
Residential-Commercial-Industrial-Infrastructure Designs
Due-diligence studies -Asset valuation services
Chennai -600 083
bv.consultingengrs@gmail.com
www.bveconsultingengineers.com
வெங்கட்ரமணி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “எத்தனை விதத்தில்தான் ஏமாற்றுவார்? வீடு, மனை வணிகத்தில் கவனம் கொள்வீர்…”