அடுக்குமாடி குடியிருப்பைத் (Apartment) தேர்வு செய்வது எப்படி?
வெங்கட்ரமணிDec 6, 2014
தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றும் முருகன் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்க முடிவு செய்தார். அவரிடம் 15 லட்சம் ரூபாய் சேமிப்பு இருந்தது. வங்கிகள் அவருக்கு 35 லட்சம் வரை கடன் கொடுக்க முடியும் என்று உறுதியளித்தன. தென் சென்னை புறநகர் பகுதியில் சில குடியிருப்புகளை முருகன் விசாரித்து வைத்திருந்தார். அவற்றில் ஆறு குடியிருப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்து மூன்றை தேர்வு செய்தார். அவை மூன்றுமே ஒரே பகுதியில் அமைந்திருந்தன. மூன்றுமே 2500லிருந்து 3000 சதுரடி மனைகளில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் ஒன்றாக அமைந்திருந்தது. மூன்றிலிருந்து, நான்கு வருட கட்டுமான அனுபவம் பெற்ற கட்டிட முதலாளிகளால் அவை கட்டப்பட்டிருந்தன.
முருகனின் குடும்பத்தினர் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உடனடியாகப் பணம் கொடுத்து வாங்க நிர்ப்பந்தம் செய்தனர்.
முதலாவது அடுக்குமாடி குடியிருப்பு 1000சதுரடி குடியிருப்பு வீடாகவும்(apartment), இரண்டாவது மாடியிலும் அனைத்து செலவினங்களும் உட்பட சதுரடிக்கு 4800 ரூபாய் என்றும் விலைக்கு வந்தது. அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு 250 சதுரடி பிரிக்கப்படாத மனை ஒதுக்கப்பட்டிருந்தது. மொத்தம் 10 குடியிருப்புகள் கொண்ட அந்த கட்டிடத்தில் இரண்டு மாடிகள் கட்டப்பட்டிருந்தன. அத்துடன் வாகன நிறுத்த வசதியும் இருந்தது.
இரண்டாவது குடியிருப்பானது 900 சதுரடி குடியிருப்பு வீடாகவும்(apartment), முதல் மாடியிலும்,அனைத்து செலவினங்களும் போக சதுரடிக்கு 5000 ரூபாய் என்றும் விலைக்கு வந்தது. பிரிக்கப்படாத மனையளவு 550 சதுரடி கிடைத்தது. ஆறு குடியிருப்புடன் இருந்த அந்த கட்டிடம் வாகன நிறுத்த வசதிகளுடனும் இரண்டு மாடிகளுடனும் கட்டப்பட்டிருந்தது.
மூன்றாவது குடியிருப்பானது 1200 சதுரடி குடியிருப்பு வீடாகவும்(apartment), கீழ்த்தளத்தில் கட்டப்பட்டது மற்றும் சதுரடி 4900 ரூபாய் என்ற விலைக்கு வந்தது. பிரிக்கப்படாத மனையளவு 400 சதுரடியாகவும், 8 குடியிருப்பு கொண்ட மனையாகவும், வாகன நிறுத்தத்துடன் இரண்டு மாடிகளுடனும் கட்டப்பட்டிருந்தது.
இப்பொழுது முருகன் எந்த அடுக்குமாடி குடியிருப்பைத் தேர்வு செய்யவேண்டும்? சில கேள்விகளைக் கேட்போம்?
பொதுவாக மக்கள் எண்ணுவது போல அதிகபட்ச சதுரடி பரப்பளவும் அதேநேரத்தில் குறைந்த விலையும் கொண்ட குடியிருப்பைத் தேர்வு செய்யலாமா?, அந்த வரையறையில் வரக்கூடிய முதலாவது குடியிருப்பு முருகனுக்கு சரியாக இருக்குமா?
பிரிக்கப்படாத மனை என்பது எந்த அளவிற்கு முக்கியமானது?
மிகச்சிறிய நிலப்பரப்பில் (2400 சதுரடி) 10-லிருந்து 12-குடியிருப்புகளைக் கட்டுவது சரியாக இருக்குமா?
பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தப்படாத புறநகர் பகுதிகளில் சமையலறை, கழிவறை, குளியலறை போன்றவற்றிலிருந்து வெளியேறும் நீரை எவ்வாறு வெளியேற்றுவது?
தண்ணீர் பஞ்ச காலங்களில் நகராட்சியிலிருந்து பெறப்படும் தண்ணீரையோ அல்லது வெளியில் வாங்கப்பட்ட தண்ணீரையோ தேக்கிவைக்க தொட்டி உள்ளதா? அந்தத் தொட்டியானது கழிவு நீர் தொட்டிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது? கட்டிடத்தில் நடமாடுவதற்கு தேவையான அளவு இடம் உள்ளதா?
மேலே சொல்லப்பட்ட முதலாவது அடுக்குமாடி குடியிருப்பின் அனுமதிக்கப்பட்ட திட்டமானது(plan) இரண்டாவது மாடியை காலியான மாடியாக சித்தரித்துள்ளது இருப்பினும் அந்த இடங்களில் குடியிருப்புகள் உள்ளனவே அதன் பாதிப்புகள் என்ன?
கடைசியாக எந்த குடியிருப்பை வாங்கினால் முருகனுக்கு நிம்மதியும் தொந்தரவற்ற வாழ்வும் அமையும்?
குறைந்த விலை கட்டிடம் என்று வாங்குவது சரியாக இருக்குமா?
மேலே சொன்ன குடியிருப்புகளை எவ்வாறு ஆய்வு செய்வது?
முருகன் மிக அதிக அளவு பிரிக்கப்படாத மனை (undivided share of land) கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதே அறிவார்ந்த செயலாகும். ஏனென்றால் அத்தகைய குடியிருப்பு பல அனுகூலங்களைக் கொண்டுள்ளது.
ஆய்வின் முடிவைக் கீழே காண்போம்:
முதலாவது குடியிருப்பு- கட்டப்பட்ட ஒவ்வொரு சதுரடிக்கும் பிரிக்கப்படாத மனையானது .25 சதுரடி கிடைக்கிறது: அதாவது ஒவ்வொரு சதுரடி கட்டப்பட்ட இடத்திற்கு 25 சதவிகிதம் பிரிக்கப்படாத மனையானது கிடைக்கிறது.
2வது குடியிருப்பு- கட்டப்பட்ட ஒவ்வொரு சதுரடிக்கும் பிரிக்கப்படாத மனையானது .61 சதுரடி கிடைக்கிறது: அதாவது ஒவ்வொரு சதுரடி கட்டப்பட்ட இடத்திற்கு 61 சதவிகிதம் பிரிக்கப்படாத மனையானது கிடைக்கிறது.
3வது குடியிருப்பு- கட்டப்பட்ட ஒவ்வொரு சதுரடிக்கும் பிரிக்கப்படாத மனையானது .33 சதுரடி கிடைக்கிறது: அதாவது ஒவ்வொரு சதுரடி கட்டப்பட்ட இடத்திற்கு 33 சதவிகிதம் பிரிக்கப்படாத மனையானது கிடைக்கிறது.
ஆக இரண்டாவது குடியிருப்பானது முருகனுக்கு அதிகப்படியான பிரிக்கப்படாத மனையைத் தருகிறது. அப்படிப்பட்ட கட்டிடங்கள் விதிமீறல்கள் குறைவாகவும்,கட்டிடத்தை சுற்றி நடமாட திறந்த வெளி இடங்களுடனும் இருக்கும். மேலும் குறைவான குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதால் அதிக நீரும்,புழங்குவதற்கு அதிக இடமும் கிடைக்கும். இந்தக் குடியிருப்பை கூடுதல் விலை கொடுத்து வாங்கவேண்டி நேர்ந்தாலும் நல்ல ஒரு குடியிருப்பு என்பதால் ஏற்படும் விலை உயர்வும் நல்ல வாழ்க்கைத் தரத்தை கொடுப்பதாகவும் இருக்கும். அதிகப்படியான பிரிக்கப்படாத மனை கிடைப்பதால் சதுரடி 5500 ரூபாய் கொடுத்து வாங்கினாலும் மொத்தத்தில் அந்த பரிவர்த்தனை சரியான ஒன்றேயாகும்.
இவ்வாறு நாம் குடியிருப்புகள்(apartment) வாங்குவதில் உச்சபட்ச கவனம் கொள்ளுதல் வேண்டும்.
BVe Consulting Engineers
Engineering Project Consultancy & Property Advisory Services,
Residential-Commercial-Industrial-Infrastructure Designs
Due-diligence studies -Asset valuation services
Chennai -600 083
bv.consultingengrs@gmail.com
www.bveconsultingengineers.com
வெங்கட்ரமணி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அடுக்குமாடி குடியிருப்பைத் (Apartment) தேர்வு செய்வது எப்படி?”