மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எனக்கு சமஸ்கிருதம் தெரியும்

இராமியா

Dec 5, 2020

siragu paarppanar1

நாற்பது ஆண்டுகளுக்கு முன் வேலூரில் உள்ள கிறித்தவ ஆற்றுப்படுத்தல் மையத்தில் (Christian Counselling Centre) சமூகவளர்ச்சியில் மனித வளர்ச்சி (Human Development in Community Development) என்ற ஒரு மாதப் பயிற்சி வகுப்பில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது மார்க்சியம், பெரியாரியம் பற்றிய முறையான அறிமுகமே எனக்கு இல்லாமலிருந்தது. முழுக்க முழுக்க காவியாக இல்லாவிட்டாலும் அக்கருத்தியலின் செல்வாக்கில்தான் இருந்தேன்.

அப்பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் இருந்து சுமார் 40 பேர் பயிற்சி பெற வந்திருந்தார்கள். வகுப்பறையில் பாடத்தைப் பற்றி மட்டுமே பேச முடியும். ஆனால், உணவுக் கூடத்தில் பொதுச் செய்திகளைப் பற்றிப்பேசுவோம். பேசுமொழியாக ஆங்கிலம் பயன்பட்டுக் கொண்டிருந்தது.

அப்படிப் பேசும்பொழுது ‘கருவுற்ற பெண்’ என்பதற்கு மலையாளத்தில் ‘கர்ப்பஸ்திரீ’ என்று சொல்வார்கள் என்று கேரளாவிலிருந்து வந்திருந்த பாதிரியார் ஒருவர் கூறினார். உடனே கருநாடகாவில் இருந்து வந்திருந்த பார்ப்பனத்தி ஒருவர் அது மலையாளச்சொல் அல்ல என்றும், சமற்கிருதச்சொல் என்றும் கூறினார். அதற்கு விடையளித்த அந்த பாதிரியார் மலையாளத்தில் சமற்கிருதச் சொற்கள் மிகுதியாகக் கலந்துள்ளன என்றும், ஆகவே அம்மையார் சொல்வது சரியாக இருக்கலாம் என்றும் கூறினார்.

ஆனால், அந்த அம்மையார் விடுவதாக இல்லை. தனக்கு சமற்கிருதம் தெரியுமென்றும், மலையாளம் பேசுவதையும் கேட்டிருப்பதாகவும், ஆனால் அதில் சமற்கிருதம் மிகுதியாக இல்லை என்றும் கூறினார்.

அந்த பாதிரியார், தான் சமற்கிருதம் படிக்கவில்லை என்றும், ஆகவே அந்த அம்மையாருக்கு விடையளிக்க முடியவில்லை என்றும் கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பார்த்தார். ஆனால், அந்த பார்ப்பனத்தி விடாமல், “எனக்கு சமற்கிருதம் தெரியும்” “எனக்கு சமற்கிருதம் தெரியும்” என்று அந்த இரவு உணவு நேர வேளையில் சுமார் பத்துப் பதினைந்து முறை கூறிவிட்டார்.

அடுத்தநாள் காலையில் நான் அந்த பார்ப்பனத்தியிடம் அவர் சமற்கிருதத்தை எதுவரையில் படித்திருக்கிறார் எனக்கேட்டேன். அவர், தான் சமற்கிருதம் படித்திருப்பதாகக் கூறினார். நான் மீண்டும் அதே கேள்வியை கேட்க மீண்டும் மீண்டும் அதே விடையையே அவர் அளித்தார். அதற்கு நான், “நான் சமற்கிருதத்தை ‘விசட்சண’ வரை படித்திருக்கிறேன். நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். உடனே அவர் அதிர்ச்சி அடைந்து விட்டார். முகமெல்லாம் மாறி விட்டது.

சிறிது நேரம் கழித்து, சுதாரித்துக்கொண்டு, “நீங்கள் பார்ப்பனர் இல்லையா?” என்று கேட்டார். நான் “இல்லை” என்று கூறியவுடன் அவர் முகம் மேலும் சுருங்கிவிட்டது. (பார்ப்பனர்கள் மட்டுமே சமற்கிருதம் படிக்கமுடியும் என்பதும், அப்படிப் படித்தவர்களும், சமற்கிருதம் படிக்காதவர்கள்,படித்திருப்பதாகப் பொய்சொல்லுவதைக் கண்டுகொள்ளக்கூடாது என்பதும் அவாளிடைய உள்ள ஒப்பந்தம்போல் இருக்கிறது.)

என் வினாவிற்கு விடையளிக்கும் விதமாக, வீட்டில் சுலோகம் சொல்லி வணங்குவதாகவும், அந்த வகையில் தனக்கு சமற்கிருதம் தெரியும் என்றும் கூறினார்.

நான் விடாமல் “அப்படி என்றால் சுலோகங்களின் பொருள் புரிந்து சொல்வீர்களா?”என்று கேட்டதை இடைமறித்து, “சுலோகங்களின் பொருளைப் புரிந்து கொள்ள முயலக்கூடாது”என்று கூறி விட்டார். அதன்பின் தனக்கு சமற்கிருதம் தெரியும் என்பதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

மார்க்சு,பெரியார்,அம்பேத்கரின் தத்துவங்களைப் புரிந்துகொண்ட நிலையில் இன்று அந்நிகழ்வை நினைத்துப் பார்க்கிறேன். 1920ஆம் ஆண்டுக்கு முன்னால் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமற்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியின் பொருள் உண்மையில் சமற்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, மருத்துவம் படிக்க பார்ப்பனராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். பார்ப்பனராக இருந்தால் சமற்கிருதம் தெரியும் என்று அவாள் சான்று அளித்து விடுவார்கள். வேறு யாரும் அதைச் சரிபார்க்க முடியாது அல்லவா?

பிறகு, பனகல் அரசரின் ஆட்சியில் இவ்விதி நீக்கப்பட்ட பின்னர், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும் மருத்துவக் கல்வியைப் பெறமுடிந்தது. இந்தியர்களில்– இந்துக்களில் பார்ப்பனர்கள் மட்டுமே மருத்துவக்கல்வி பெற்றகாலத்தில் தலைசிறந்த மருத்துவர்கள் யாரும் தோன்றாமல் போனதும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும் மருத்துவக்கல்வி பெற்றகாலத்தில் பூ. பழனியப்பன், வடமலையான், ஏ.ஏ. ஆசீர்வாதம், கே.என். வாசுதேவன் போன்ற மருத்துவ மேதைகள் நமக்குக் கிடைத்ததும் ஏதோ தற்செயலானது அல்ல.

அனைத்து நிலை அறிவும் திறனும் கொண்ட மக்கள், அனைத்து வகுப்பு மக்களிலும் உள்ளனர். பார்ப்பனர்களை / உயர்சாதிக்கும் பலினரை மட்டுமே தேர்ந்தெடுத்த நிலையில், அறிவும் திறனும் குறைந்தவர்களையும் தேர்ந்தெடுப்பது தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. அனைத்து வகுப்பு மக்களையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் போது அந்தந்த வகுப்பில் உள்ள அறிவும் திறனும் மிகுந்தவர்களைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. ஆகவே, அதிக எண்ணிக்கையில் திறமைசாலிகள் கிடைக்கின்றனர். இதுவே கல்வியிலும், தொழில் நுட்பத்திலும் மேதைகள் உருவாவதற்கு வழிவகுக்கிறது.

இதே காரணத்தினால்தான், அதாவது இடஒதுக்கீடு செயல்பட்டு, அனைத்து வகுப்பு மக்களிலும் உள்ள திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்ததனால்தான் இன்று வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இப்படி இடஒதுக்கிடு செயல்படுத்தப்படாமல் பார்ப்பனர்களும், உயர்சாதிக்கும் பலினரும் மட்டுமே உயர்நிலைகளில் இருக்கும், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வட இந்திய மாநிலங்கள் வளர்ச்சியில் இன்றைக்கும் மிகவும் பின் தங்கியே உள்னன.

இதை மாற்றி இந்திய ஒன்றியம் முழுமையிலும் வளர்ச்சி சீராகவும், வேகமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினால் அனைத்து வகுப்புமக்களும், அவரவர் திறமைக்கு ஏற்ப தங்கள் பங்கைப் பெறும் விதமாக விகிதாச்சாரப் பங்கீடு முறையை செயல்படுத்த வேண்டும்.

பார்ப்பனர்கள் இதற்கு எதிராக எவ்விதச் சூழ்ச்சிகளைச் செய்தாலும் அதை முறியடிக்க வேண்டும்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எனக்கு சமஸ்கிருதம் தெரியும்”

அதிகம் படித்தது