மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கியவர் இராமானுசர்

முனைவர் மு.பழனியப்பன்

Aug 12, 2017

Siragu raamaanujar1

நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆழ்வார்களின் வைணவப்பாடல்களை மட்டும் கொண்டதல்ல. அதனுள் இராமானுஜர் பற்றிய பனுவலும் இடம்பெற்றுள்ளது. இராமானுச நூற்றந்தாதி என்னும் அப்பனுவலை எழுதியவர் திருவரங்கத்து அமுதனார் என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் தெரியாத நிலையில் அமுதனார் என்பதே இவர் பெயராக அமைந்தது. திருவரங்கத்துக் கோயில் நிர்வாகப் பொறுப்பில் இவர் இருந்தவர் என்பதால் திருவரங்கத்துடன் இவர் பெயர் இணைந்து திருவரங்க அமுதனார் ஆனார்.

இவர் இராமானுச நூற்றந்தாதி என்ற பெயரில் நூறு பாடல்களை அந்தாதி முறையில் எழுதியுள்ளார். இவரின் ஆயிரக்கணக்கான பாடல்களில் இந்நூறை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை விலக்கி விடுகிறார் இராமானுஜர். இத்தொகுப்பு நாலாயிரத்தில் இணைந்து நாலாயிரம் என்ற தொகையைத் தந்து, நாலாயிர திவ்ய பிரபந்தத் தொகுப்பிற்கு முழுமை தருகிறது.

இந்நூலில் இராமானுசரின் பணிகள், பெருமைகள், வைணவத் தொண்டு ஆகியனவும், தனக்கும் இராமானுஜருக்குமான தொடர்பின் வலிமையையும் திருவரங்கத்து அமுதனார் எடுத்துரைத்துள்ளார். இப்பாடல்கள் வழியாகப் பெறப்படும் இராமானுஜர் பற்றிய செய்திகளை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

திருவரங்கத்து அமுதனார் திருவரங்கம் கோயிலின் வழிபாட்டு முறைகளை மேற்பார்வையிடும் பணியில் இருந்தவர். இவரின் போக்கு சரியில்லாத நிலைக்கு வந்தபோது இராமானுஜர் இந்நிலை கண்டு வருந்துகிறார். கோயில் நிர்வாகங்களில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமுதனாரைக் கேட்டுக்கொள்கிறார். ஆனால் இராமானுஜரை மறுத்து தன் போக்கிலேயே திருவரங்கத்து அமுதனார் கோயில் நிர்வாகத்தைச் செய்கிறார். இதனைக் கண்டு பொறுக்க இயலாமல் காஞ்சிபுரம் சென்றுவிட கூரத்தாழ்வரை அழைக்கிறார் இராமானுஜர். அப்போது கூரத்து ஆழ்வான் திருவரங்கத்து அமுதனாரைத் தான் திருத்தி நல்வழிப்படுத்துவதாக உரைக்கிறார். கூரத்தாழ்வான் மெல்ல மெல்ல இராமானுஜரின் பெருமைகளை எடுத்துரைத்து, அவரின் சீர்திருத்தங்களின் தேவைகளை உணரவைத்து, திருவரங்கத்து அமுதனாரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார். இதன் காரணமாக திருவரங்கக் கோயிலொழுகு முறை இராமானுஜர் வசம் வருகின்றது. எண்ணிய சீர்திருத்தங்களை இராமானுஜர் செய்கிறார். இவருக்கு இயற்பாவை ஆண்டவன் முன்னிலையில் சேவிக்கும் பணி தரப்பெறுகிறது. இதனை முழுமனதுடன் செய்கிறார் திருவரங்கத்து அமுதனார்.

இவ்வகையில் இவர் தன்னைத் திருத்திய இராமானுஜரையும், கூரத்து ஆழ்வானையும் குரு நிலையில் வைத்துப் போற்றுகிறார். இதனைப் பின்வரும் நிலையில் இவரின் அந்தாதிப் பாடல் உரைக்கின்றது.

“மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம்கூரத் தாழ்வான் சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே!” (3899)

என்ற பாடலில் தன் குரு இருவரையும் போற்றுகிறார் திருவரங்கத்து அமுதனார். கூரத்தாழ்வான் தான் உயர்ந்த குலத்தவர் நிறைய படித்தவர் ஒழுக்கத்துடன் வாழ்வை நகர்த்துபவர் என்ற மூன்று குணங்களுக்கு உரியவர் என்றபோதும், இவற்றால் மமதை பெறாதவர் என்று சொல்லி இப்பாடலில் அவரை வணங்குகிறார். இராமனுஜரின் வழிகாட்டுதலின்படி தான் நடப்பதால் எந்த வருத்தமும் தன்னை அணுகாது என்று இராமானுஜரையும் இப்பாடலில் போற்றுகிறார். இவ்வகையில் தன்னை நல்வழிப்படுத்தியோரை வணங்கி, குருபக்தி மிக்கவராக திருவரங்கத்து அமுதனார் விளங்குகிறார்.

தான் இராமனுஜருடன் முரண்பட்டுப் பின் சரண் அடைந்த நிலையை மற்றொரு பாடலிலும் குறிக்கிறார் திருவரங்கத்து அமுதனார்.

“என்னையும் பார்த்து, என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல்குணத்த
உன்னையும் பார்க்கிலருள் செய்வதே நலம் அன்றியென்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே? உன் பெருங்கருணை
தன்னை என் பார்ப்பார்? இராமாநுச உன்னைச் சார்ந்தவரே” (3962)

என்ற இப்பாடலில் திருவரங்கத்து அமுதனார் இராமானுஜரோடு முரண்பட்ட தன்மை தெரிகிறது. என்னையும் ஒரு பொருளாக மதித்து என்னை வழிப்படுத்தியவர் இராமானுஜர். என்னுடைய இயல்புகளையும் அவர் கண்டுள்ளார். பல நற்குணங்களை உடைய இராமானுஜருடன் எனக்கேற்பட்ட இத்தொடர்பினை அறியும்போது என்னிடம் ஏதோ ஒரு நல்ல குணம் இருப்பதால்தான் இது நடைபெற்றது என்பதை உணரமுடிகின்றது. இப்பாடலின் கருத்தில் மறைமுகமாக தன் செயல்களுக்கு வருந்தியுள்ளார் திருவரங்கத்து அமுதனார்.

இராமானுஜரின் சிறப்புகளையும் அவரின் நூற்சிறப்புகளையும், அவரின் கொள்கைகளையும் எடுத்துரைப்பதாகவும் இராமானுச நூற்றந்தாதி விளங்குகிறது.
“தொல்லுலகில்
மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே” (3922)
மண்ணில் தோன்றிய பல்லுயிர்கட்கும் தலைவனாக அமைபவன் மாயன் என்ற திருமால் என்று தன் பாஷ்ய உரையில் அறிந்து உரைத்தவர் இராமனுஜர் என்று அவரின் நூற்சிறப்பினை இப்பாடல் காட்டுகிறது.

மேலும் பாஷ்யத்தில் சொல்லப்படும் மற்றொரு செய்தியை
“சேமநல் வீடும், பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம்பொருள் வீடிதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண்மிசையே” (3932)
என்ற பாடலில் அறம், பொருள், இன்பம், வீடு ( தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்) என்ற நான்கில் கண்ணன் மீது காமம் வைத்து மற்ற மூன்றையும் அவனிடத்திலே விட்டு நிற்கவேண்டும் என்று தன் பாஷ்ய உரையில் உரைத்தவர் இராமானுஜர் என்பது இப்பாடலின் கருத்தாகும்.

மனிதர்களுக்கு உடல் உறுப்புகளை ஆண்டவன் படைத்ததற்கான காரணத்தை மற்றொரு பாடல் குறிக்கிறது.
“சரணமடைந்த தருமனுக்காப்பண்டு நூற்றுவரை
மரணமடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணமிவையுமக் கன்றென்றி இராமானுசனுயிர்கட்கு
அரணங் கமைத்திலனேல் அரணார் மற்றில் வாருயிர்க்கே” (3959)
என்ற பாடலில் மனிதர்க்கு உடல் உறுப்புகள் தரப்பெற்றதற்கான காரணம் இறைவனை வணங்கிச் சேவை செய்வதற்காகவே என்ற கருத்து உரைக்கப்படுகிறது. பாஷ்ய உரைக் கருத்தாக விளங்கும் இதனையும் இந்நூல் காட்டுகிறது.

இவ்வகையில் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்தில் இராமானுச நூற்றந்தாதியும் இணைந்து இராமானுசரின் புகழை, வைணவத் தொண்டினை ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்குத் தொடர்ந்து அமைவதாகக் காட்டியுள்ளது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “என்னைப் புவியில் ஒரு பொருளாக்கியவர் இராமானுசர்”

அதிகம் படித்தது